கலா மோகினி (இதழ்)

தமிழ் சிற்றிதழ்

கலா மோகினி என்பது பிரித்தானிய இந்தியாவின், சென்னை மாகாணத்தின், திருச்சினாப்பள்ளி மாவட்டத்தில் வெளிவந்த தமிழ்ச் சிற்றிதழ் ஆகும். இதன் முதல் இதழ் சித்ரபானு ஆண்டு ஆனி மாதம் 15 ஆம் நாள் (1942 ஜூலை 1) வெளியானது. இதன் ஒவ்வொரு இதழும் தமிழ் வருடம், மாதம், தேதியைத்தான் தாங்கி வந்தது. இது ஒரு மாதமிருமுறை வெளிவந்தது. இதன் ஆசிரியர் வி. ரா. ராஜகோபாலன் ஆவார். இது சிறுகதை, கவிதை, கட்டுரைகளை வெளியிட்டது.

தனித்தன்மைகள் தொகு

கலாமோகினியின் முதல் 13 இதழ்கள் 'டிம்மி அளவில்' (ஆனந்த விகடனின் பழைய அளவில்) வந்தன. 14ஆம் இதழ் முதல் 'கிரவுன் அளவில்' (கொஞ்சம் சிறிய அளவு) வெளிவந்தது. இந்த அளவு கடைசி இதழ் வரை இந்த அளவு நீடித்தது.

கலாமோகினியில் மணிக்கொடி எழுத்தாளர்களின் புதிய படைப்புகளும் இளைய படைப்பாளிகளின் விதம் விதமான சிறுகதைகளும், கவிதைகளும் மிகுதியாக வந்தன. இது எழுத்தாளர்களின் இதழ் என்பதைப் பல விஷயங்கள் நிரூபித்தன. இதன் முதல் இதழின் அட்டையில் ந. பிச்சமூர்த்தியின் உருவப் படம் வெளியாகியிருந்தது. தொடர்ந்து ஒவ்வொரு இதழும் ஒரு எழுத்தாளரின் படத்தையே அட்டைப் படமாகக் கொண்டிருந்தது. கடைசிவரை கலாமோகினி இந்த நியதியை கடைபிடித்தது குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய அம்சம் ஆகும். அட்டையில் ஒரு எழுத்தாளரின் படத்தைப் பிரசுரித்து மட்டுமல்லாமல். இவர் நம் அதிதி என்று உள்ளே ஒரு பக்கம் அவரைப் பற்றி சுவாரஸ்யமாக எழுதும் வழக்கத்தை ஆசிரியர் வி. ரா. ரா. மேற்கொண்டிருந்தார். அந்த எழுத்தாளரின் கதை அல்லது கட்டுரை அல்லது கவிதையை வாங்கி அதே இதழில் வெளியிடுவதும் அவரின் வழக்கமாக இருந்தது.

கலாமோகினி தனது பிறப்புக்கான காரணத்தையும், தன் நம்பிக்கை யையும் முதலாவது இதழிலேயே இவ்வாறு அறிவித்திருந்தது—

‘யுத்த பீதி, காகிதப் பஞ்சம், கட்டுப்பாடு இந்த நெருக்கடிகளுக்கு இடையில் இன்னுமொரு பத்திரிகையா என்ற நிர்த்தாக்ஷண்யமான கேள்வி நிச்சயம் பிறக்கும்.

அதற்குப் பதில் இது :

இந்தத் தமிழ்நாட்டில் எத்தனை காலம் வாழ முடியுமோ அத்தனை காலம் வாழ்ந்து, தமிழ் பாஷையின் புனருஜ்ஜீவனம் என்ற சேது பந்தனத்திற்கு இந்த அணிலும் தன்னாலான சேவையைச் செய்ய வேண்டுமென்றே கலாமோகினி பிறந்துள்ளது.

தமிழ் மக்களின் ஆதரவையும், தமிழன்னையின் கருணையையும், எல்லாவற்றிற்கும் மேலாக ஈஸ்வரனின் அருளையும் நம்பித்தான் கலா மோகினி பிறக்கிறது.

இவை எந்த அளவில் கிடைக்கிறது என்பதைப் பொறுத்ததே கலாமோகினியின் வாழ்வு, வெற்றி, லட்சியசித்தி எல்லாம்.

படைப்புகள் தொகு

முதல் இதழிலேயே தொடர்கதையும், தொடர் நாடகமும் இடம் பெற்றன. ஐரோஸ்லாவ் ஹாஸ்க் எழுதிய புதினம் ஒன்றின் கதையைச் சுருக்கி மொழிபெயர்த்து, 'சூரப்புலி ஷீக்' என்ற தலைப்பில் வெளியிட்டார் வி. ரா. ராஜகோபாலன். 'விக்ரமாதித்தன்’ என்ற புனைபெயரை அதற்கு அவர் பயன்படுத்தினார். ‘சாலிவாகனன்' என்ற புனைபெயரில் அவர் கவிதைகள் எழுதி வந்தார்.

கலாமோகினி இலக்கியத்தில் மட்டுமே ஆர்வம் காட்டியது, துவக்கத்தில், அதில் அரசியலுக்கு இடம் இல்லை என்று உறுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அரசியல்துறையில் பணியாற்ற ஏற்கனவே தமிழ்நாட்டில் தேவைக்கதிகமான சகோதரப் பத்திரிகைகள் இருக்கும்போது நாமும் அந்தக் குட்டையைக் குழப்புவது அனாவசியம். தமிழ்ப் பணி ஒன்றே நமக்குப் போதுமான இலட்சியமாகக் கொள்ளலாம் என்பது நமது தீர்மானம் என்று மூன்றாவது இதழில் ஆசிரியர் கருத்து தெரிவித்தார்.

அரசியலை ஒதுக்கி வைத்த கலாமோகினி பின்னர் அரசியல் தலையங்கங்களும், கருத்துகளையும் வெளியிட முன்வந்தது. 'ஆய கலைகள்' என்ற தலைப்பில் இசை, நாட்டியம், நாடகம், சினிமா பற்றியும் கட்டுரைகள் வெளியிட்டது. புத்தக மதிப்புரையை எப்போதாவது பிரசுரித்தது. காம இலக்கியப் பிரசுரம் ஒன்றைக் கண்டித்து 'மதிப்புரை மறுப்பு' என்று ஒரு கட்டுரை எழுதியது.

டி. கே. சிதம்பரநாத முதலியார் செல்வாக்கு பெற்றிருந்த காலம் அது. அவர் கம்பராமாயணத்தில் திருத்தங்கள் செய்து, கம்பர் தரும் ராமாயணம் என்ற புதிய பதிப்பை வெளியிட்டார். அதைக் கண்டித்து, ஐந்தாம் படை ரசிகர்கள் என்ற தலைப்புடன் காரசாரமான கட்டுரை ஒன்றை எழுதினார் கலாமோகினி ஆசிரியர்.[1]

இடப்பெயர்ச்சி தொகு

கலாமோகினி மூன்றரை ஆண்டு காலம், திருச்சிராப்பள்ளி மட்டக்காரத் தெருவிலிருந்து வெளிவந்து கொண்டிருந்தது. திருச்சியிலிருந்து செயல்புரியக்கூடிய சூழ்நிலை காலப்போக்கில் மிகுந்த சிரம சாத்தியமாகியிருந்ததால், தலைநகரான சென்னைக்குப் போய் இலக்கிய முன்னணியின் வளர்ச்சிக்கு வழிகாண இயலும் என்று அதன் ஆசிரியர் கருதினார்.

அதை சம்பிரதாயம் என்ற சுவடுபட்ட பாதையில் இலக்கியம் சென்று கொண்டிருப்பது தமிழ் ரசிகர்கள் அறிந்ததொரு விஷயம்தான். இந்தச் சுவட்டிலிருந்து விலகிப் புதுப் பொருள்கள், புதிய பல கோணங்கள் ஆகிய பல புதுப் பிரதேசங்களுக்கு இலக்கிய முன்னணி செல்வதால் நமது வாழ்க்கை, கலை, சமூகம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள தேக்கம் சற்றே சலனமுறும் என்று நம்புகிறோம் என்று அவர் அறிவித்தார்.

முடிவு தொகு

கலாமோகினி சென்னைக்கு இடம்பெயர்ந்து மேற்கொண்ட புதிய முயற்சிகள் அதன் வளத்துக்கும் வளர்ச்சிக்கும் துணைபுரியவில்லை. இதழ் காலம் தவறாது வர இயலவில்லை. பொருளாதார பலத்தை உத்தேசித்து ‘லிமிடெட் கம்பெனி' சோதனை கூடச் செய்து பார்த்தார் ஆசிரியர். அதுவும் வெற்றி பெறவில்லை.

1946 ஏப்ரல் மாதம் 18ஆம் நாள் சென்னையிலிருந்து கலா மோகினியின் புதிய வடிவ இதழ் வந்தது. அதே ஆண்டு செப்டம்பர் 20இல் வந்ததே அதன் கடைசி இதழ் ஆக அமைந்தது.[2]

இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலா_மோகினி_(இதழ்)&oldid=3320405" இருந்து மீள்விக்கப்பட்டது