திருச்சினாப்பள்ளி மாவட்டம்

சென்னை மாகாண மாவட்டம்

திருச்சினாப்பள்ளி ஜில்லா என்று அழைக்கபட்ட திருச்சிராப்பள்ளி மாவட்டம் என்பது பிரித்தானிய இந்தியாவின் முந்தைய சென்னை மாகாணத்தின் ஒரு மாவட்டமாகும். இது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தற்போதைய திருச்சிராப்பள்ளி, கருர், அரியலூர் , பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகமாக திருச்சிராப்பள்ளி நகரம் இருந்தது. இந்த மாவட்டம் 1907 இல் 2,632 சதுர மைல்கள் (6,820 km2) பரப்பளவு கொண்டதாக இருந்தது. இது வடக்கே தென் ஆற்காடு, மேற்கில் சேலம், மேற்கு மற்றும் வடமேற்கில் கோயம்புத்தூர், கிழக்கில் தஞ்சாவூர், தெற்கே மதுரை ஆகிய மாவட்டங்களால் சூழப்பட்டிருந்தது. புதுக்கோட்டை சமஸ்தானம் 1865 முதல் 1947 வரை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் எல்லைக்குள் இருந்தது.

தென்னிந்தியாவில் மக்கள் வசிக்கும் பழமையான பகுதிகளில் திருச்சிராப்பள்ளியும் ஒன்றாகும். தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் வழியாக கற்கால இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.[சான்று தேவை] இந்த மாவட்டத்தின் ஒரு பகுதியாக உள்ள உறையூர், முற்கால சோழர்களின் தலைநகர் ஆகும். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இப்பகுதி மதராசு மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. மேலும் 1801 இல் ஒரு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. 1947 இல் இந்தியா விடுதலைபெற்ற பிறகு, திருச்சினாப்பள்ளி என்ற ஆங்கில மயமாக்கபட்டிருந்த பெயரானது திருச்சிராப்பள்ளி என்று மாற்றப்பட்டது.

வரலாறு

தொகு
 
திருவரங்கம் அரங்கநாதர் கோயிலின் முதன்மைக் கோபுரம்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கற்காலக் கருவிகள் கி.மு. மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு மக்கள் குடியேறி வாழ்ந்திருக்கலாம் என்பதைக் காட்டுவதாக உள்ளன.[சான்று தேவை] சங்க காலத்தில், முற்காலச் சோழர்களின் தலைநகராக திருச்சிராப்பள்ளி மாவட்டத்துக்கு உட்பட்ட உறையூர் இருந்தது. அதே நேரத்தில், மாவட்டத்தின் மேற்குப் பகுதி சேரர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது; அவர்களின் ஆட்சியின் கீழ் இருந்த முக்கியமான ஆற்றுத் துறைமுகமாக முசிறியானது, உரோமம் மற்றும் எகிப்துடனான கடல் வணிகத்தில் ஈடுபட்டு, தழைத்தோங்கியது. மலைக்கோட்டை உச்சி பிள்ளையர் கோயிலுக்கு அடித்தளம் அமைத்த பல்லவர்களின் இராச்சியத்தின் ஒரு பகுதியாக திருச்சிராப்பள்ளி இருந்தது, திருச்சி நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பல கோயில்களிலும் பல்லவர்கள் தங்கள் அடையாளங்களை விட்டுச் சென்றுள்ளனர். பல்லவர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, இந்த மாவட்டம் இடைக்கால மற்றும் பிற்காலச் சோழர்கள், பின்னர் பாண்டியர்கள், தில்லி சுல்தானகம், மதுரை சுல்தானகம் , விஜயநகரப் பேரரசு ஆகியவற்றால் ஆளப்பட்டது. திருச்சி நகரம் விஜயநகரப் பேரரசுக்குப் பின்னர் தனி ஆட்சியாளர்களாக ஆன மதுரை நாயக்கர்களின் தலைநகராகச் செயல்பட்டது. 1736 இல் மதுரை நாயக்கர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர், திருச்சிராப்பள்ளி குறுகிய காலத்தில் ஆற்காடு நவாப் சந்தா சாகிப், தஞ்சாவூர் மராத்தியர்கள் (பார்க்க திருச்சிராப்பள்ளி முற்றுகை), பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி, திப்பு சுல்தான் ஆகியோரால் கைப்பற்றப்பட்டது. இதன் இறுதியாக பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தால் கைப்பற்றபட்டு, 1801 இல் சென்னை மாகாணத்தின் ஒரு மாவட்டமாக உருவாக்கபட்டது. கர்நாடகப் போர்களின் போது திருச்சிராப்பள்ளி ஒரு முக்கியமான பிரித்தானிய கோட்டையாக இருந்தது, மேலும் இங்கு பல மோதல்கள் நடந்தன.[சான்று தேவை]

நிர்வாகம்

தொகு

திருச்சினாப்பள்ளி மாவட்டம் உருவான பிறகு இதன் முதல் மாவட்ட ஆட்சியர் 1801 ஆம் ஆண்டில் பொறுப்பேற்றார். 1907 ஆம் ஆண்டு நிலவரப்படி, மாவட்டத்தில் மூன்று நகராட்சிகள் இருந்தன. அவை கரூர், திருவரங்கம், திருச்சினாப்பள்ளி ஆகியவை ஆகும். மேலும் நான்கு வட்டங்களாக திருச்சினாப்பள்ளி, அரியலூர், கரூர், நாமக்கல் ஆகியவை இருந்தன. இந்த வட்ட அலுவலகங்கள் கிராமப்புறங்களின் நிர்வாகத்தைக் கவனித்தன. இந்த வட்டங்களின் கீழ் 23 ஒன்றியங்கள் இருந்தன: மூன்று ஒன்றியங்கள் திருச்சினாப்பள்ளி வட்டத்திற்கு உட்பட்டும், ஆறு ஒன்றியங்கள் அரியலூர் வட்டத்திற்கு உட்பட்டும் இரண்டு ஒன்றியங்கள் கரூர் வட்டத்திற்கு உட்பட்டும் பன்னிரண்டு ஒன்றியங்கள் நாமக்கல் வட்டத்திற்கு உட்பட்டும் இருந்தன.

திருச்சினாப்பள்ளி நகராட்சி மாவட்டத்தின் மிகப் பழமையான நகராட்சி ஆகும். இது 1866 இல் நிறுவப்பட்டது, அதன்பின்னர் 1871 இல் திருவரங்கமும், 1874 இல் கரூரும் நகராட்சி அந்தஸ்தைப் பெற்றன.

துணைப்பிரிவுகள்

தொகு

1901 நிலவரப்படி, திருச்சிரப்பள்ளி மாவட்டம் ஏழு வட்டங்களாகப் பிரிக்கபட்டிருந்தது.

  • கரூர்
  • குளித்தலை (930 சதுர மைல்) - மாவட்டத்தின் மிகப்பெரிய வட்டம்
  • முசிறி (667 சதுர மைல்கள்)
  • நாமக்கல்
  • பெரம்பலூர் (690 சதுர மைல்கள்)
  • திருச்சினாப்பள்ளி (519 சதுர மைல்கள்)
  • உடையார்பளையம் (777 சதுர மைல்)

பெரம்பலூர் வட்டமானது துவக்கத்தில் தென்னாற்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது; ஆனால் பின்னர் திருச்சினாப்பள்ளி மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டது. நாமக்கல் வட்டம் 1910 இல் சேலம் மாவட்டத்திலிருந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது.

மக்கள்வகைப்பாடு

தொகு
மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
187112,00,408—    
188112,15,033+1.2%
189113,72,717+13.0%
190114,44,770+5.2%
Sources:
  • Imperial Gazetter of India, Volume 24. Clarendon Press. 1908.

திருச்சினாப்பள்ளி மாவட்டமானது 1901 இல் 14,44,770 மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. 1901 ஆம் ஆண்டில், மாகாணத்தின் மக்கள் அடர்த்தியுடன் ஒப்பிடும்போது சதுர மைலுக்கு 400 மக்கள் தொகை அடர்த்தி கொண்டதாக மாகாணத்தின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட ஏழாவது மாவட்டமாக இது இருந்தது. மாவட்டத்தின் மக்கள் தொகை 1871 மற்றும் 1901 க்கு இடையில் 21 சதவீதம் அதிகரித்தது.

மாவட்டதில் தமிழ் பெரும்பான்மையான மக்களால் பேசப்பட்டது. தெலுங்கு 12 விழுக்காட்டினராலும், கன்னடம் 2 விழுக்காட்டினராலும் பேசப்பட்டது. சுமார் ஒரு விழுக்காட்டினர் இந்தி பேசினர். 93 விழுக்காட்டுக்கும் மிகுதியான மக்கள் இந்துக்கள், 4 விழுக்காடு கிறிஸ்தவர்கள் மற்றும் 3 விழுக்காடு முஸ்லிம்கள் வாழ்ந்தனர். பெரும்பாலான கிறிஸ்தவர்கள் ரோமன் கத்தோலிக்கர்கள்.

கல்வி

தொகு

திருச்சினாப்பள்ளி மாவட்டத்தின் கல்வியறிவு விகிதம் சென்னை மாகாணத்தின் சராசரி கல்வியறிவு வீதத்தை விட அதிகமாக இருந்தது. 1901 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஆண்களில் 13 விழுக்காட்டினரும், பெண்களில் 0.8 விழுக்காட்டினரும் கல்வியறிவு பெற்றவர்களாக இருந்தனர். 1907 ஆம் ஆண்டு நிலவரப்படி, திருச்சிராப்பள்ளி நகரில் செயின்ட் ஜோசப் மற்றும் எஸ்.பி.ஜி. ஆகிய இரண்டு கல்லூரிகள் இருந்தன.

பொருளாதாரம்

தொகு

1907 நிலவரப்படி, மொத்த மக்கள்தொகையில் நான்கில் மூன்று பங்கினர் வேளாண்மையில் ஈடுபட்டனர். திருச்சினாப்பள்ளியானது ஒரு முக்கியமான பட்டு-நெசவு மையமாகவும் இருந்தது; அதே நேரத்தில் பருத்தி ஆடைகள் கரூர், உடையார்பாளையம் மற்றும் பெரம்பலூரில் தயாரிக்கப்பட்டன. உலோக பாத்திரங்கள் குளித்தலை, பெரம்பலூர் மற்றும் ஜெயம்கொண்டசோழபுரம் ஆகிய இடங்களில் தயாரிக்கப்பட்டன.

ஆதாரங்கள்

தொகு