கர்நாடகப் போர்கள்

18 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களுக்கு இடையே நடந்த கர்நாடகப் போர்கள்

கர்நாடகப் போர்கள் (Carnatic Wars) என்பன 18ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் நடைபெற்ற மூன்று போர்களாகும். இந்திய ஆட்சியாளர்களின் போர்களில் பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனங்கள் தலையிட்டு மோதிக் கொண்டன. இப்போர்களின் முடிவில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் தென்னிந்தியாவில் பலம் பொருந்தி ஆதிக்க சக்தியாக உருப்பெற்றது. கர்நாடகம் என்பது தற்கால இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் பகுதிகளைக் குறிக்கின்றது.

கர்நாடகப் போர்கள்

பிளாசி சண்டை சண்டைக்குப் பின், ராபர்ட் கிளைவ்டன் மீர் ஜாபர்
நாள் 1746-1763
இடம் தற்கால ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு
போரில் பிரித்தானியக் கம்பெனிக்கு வெற்றி
பிரிவினர்
முகலாயப் பேரரசு[1]  பிரான்சு பிரித்தானியப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
ஆலம்கீர் II
அன்வருத்தீன் கான் 
நசிர் ஜங் ஜமீர் அகமது  
முசாபர் ஜங்  
சந்தா சாகிப்  
ராசா சாகிப்
முகமது அலி கான் வாலாஜா
முர்டசா அலி
அப்துல் வகாப்
ஐதர் அலி
தளவாய் நஞ்சராஜா
சலபாத் ஜங்
டூப்ளே
புஷ்சி
தாமஸ் ஆர்தர்
பிரான்காய்ஸ் ஜாக்யூஸ் லா
டி லா டச்
ராபர்ட் கிளைவ்
ஸ்ட்ரிங்கர் லாரன்சு
சென்னையின் சரணடைவு - 1746

முதலாம் கர்நாடகப் போர் (1746–1748)

தொகு

முதலாம் கர்நாடகப் போர் 1746–1748 காலகட்டத்தில் நடைபெற்றது. ஆற்காடு நவாப், ஐதராபாத் நிசாம் போன்ற இந்திய ஆட்சியாளர்களிடையே ஏற்பட்ட மோதல்களில் பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனங்கள் தலையிட்டு வந்தன. முகலாயப் பேரரசு வலுவிழந்த பின்னர் கர்நாடகப் பகுதி டெல்லி ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி சுதந்திரமாகச் செயல்படத் தொடங்கியது. பெயரளவில் ஐதராபாத் நிசாம் இப்பகுதியை ஆண்டு வந்தார். ஆனால் உண்மையில் நவாப் தோஸ்த் அலியின் கட்டுப்பாட்டில் கர்நாடகப் பகுதிகள் இருந்தன. அவரது மரணத்துக்குப்பின் யார் இப்பகுதியை ஆள்வது என்பது குறித்த பலப்பரீட்சை உருவானது. நிசாமின் மருமகன் சந்தா சாகிப்பும் ஆற்காடு நவாப் அன்வாருதீன் முகமது கானும் கருநாடக நவாப் ஆக முயன்றனர். இருவருக்குமிடையே மூண்ட போரில் சந்தா சாகிப்புக்கு ஆதரவாக பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பனியும், ஆற்காடு நவாப்புக்கு ஆதரவாக பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியும் களமிறங்கின. 1748இல் ஐரோப்பாவில் மூண்ட ஆசுத்திரிய வாரிசுரிமைப் போரின் பகுதியாக தென்னிந்தியாவிலும் இரு ஐரோப்பிய நிறுவனங்களும் மோதின. ஆளுனர் தூப்ளேயின் பிரெஞ்சுப் படைகள் 1746 இல் சென்னையை மதராஸ் சண்டையில் பிரித்தானியரிடமிருந்து கைப்பற்றின. அடுத்து நடைபெற்ற அடையாறு சண்டையில் ஆற்காடு நவாபின் படைகளைத் தோற்கடித்தன. 1748இல் ஐக்ஸ் லா ஷப்பேல் ஒப்பந்த்தின் மூலம் ஐரோப்பாவில் போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, தென்னிந்தியாவிலும் அமைதி திரும்பியது.

 
அன்வாருதீனின் மரணம் - 1749

இரண்டாம் கர்நாடகப் போர்

தொகு

இரண்டாம் கர்நாடகப் போர் 1749-54 காலகட்டத்தில் நடைபெற்றது. இரு வாரிசுரிமைச் சச்சரவுகள் இதற்குக் காரணமாக அமைந்தன. 1748 இல் ஐதராபாத் நிசாம் நிசாம்-உல்-முல்க் இறந்தார். அவரது மகன் நசீர் ஜங்கும் பேரன் முசாஃபர் ஜங்கும் அடுத்த நிசாமாகப் போட்டியிட்டனர். அதே வேளை சந்தா சாகிப் ஆற்காடு நவாபாக முயன்றார். முசாஃபர் ஜங்கும் சந்தா சாகிப்பும் பிரெஞ்சு ஆதரவைப் பெற்றிருந்தனர். நசீர் ஜங்கும் ஆற்காடு நவாப் அன்வாருதீனும் பிரித்தானிய ஆதரவைப் பெற்றிருந்தனர். போரின் தொடக்கத்தில் பிரெஞ்சு தரப்புக்குத் தொடர் வெற்றிகள் கிட்டின. அன்வாருதீன் 1749 இல் கொல்லப்பட்டார். சந்தா சாகிபும் முசாஃபர் ஜங்கும் முறையே கர்நாடக நவாபாகவும் ஆற்காடு நவாபாகவும் பதவியேற்றனர். ஆனால் 1751 இல் ராபர்ட் கிளைவ் தலைமையிலான பிரித்தானியப் படைகள் ஆற்காட்டைக் கைப்பற்றின. 1754 இல் கையெழுத்தான பாண்டிச்சேரி ஒப்பந்தத்தின் மூலம் அமைதி திரும்பியது. முகமது அலி கான் வாலாஜா ஆற்காடு நவாபானார். இப்போரின் பலனாக பிரெஞ்சு தரப்பு பலவீனமடைந்து பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் நிலை பலப்பட்டது.

மூன்றாம் கர்நாடகப் போர்

தொகு

1758 இல் மூன்றாவது ஆங்கில மைசூர் போர் மூண்டது. இது ஐரோப்பாவில் நடைபெற்ற ஏழாண்டுப் போரின் ஒரு பகுதியாக இரு தரப்பினராலும் கருதப்பட்டது. தென்னிந்தியாவில் பிரித்தானிய ஆதிக்கத்தை முறியடிக்க பிரெஞ்சுப் பிரபு லால்லி இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். புனித டேவிட் கோட்டையை பிரித்தானியரிடமிருந்து கைப்பற்றிய பின்னர் சென்னையை முற்றுகையிட்டார். ஆனால் அதனைக் கைப்பற்றத் தவறிவிட்டார். 1760 இல் பிரித்தானியப் படைகள் வந்தவாசிச் சண்டையில் வெற்றி பெற்றன. காரைக்காலைக் கைப்பற்றின. 1761 இல் பாண்டிச்சேரியும், செஞ்சிக் கோட்டையும் பிரித்தானியரிடம் வீழ்ந்தன. 1763 இல் கையெழுத்தான பாரிசு ஒப்பந்தம், ஏழாண்டுப் போரையும் மூன்றாம் கர்நாடகப் போரையும் முடிவுக்குக் கொண்டு வந்தது. பிரெஞ்சு நிறுவனம் தனது ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் பெரும்பாலானவற்றை இழந்தது.

இவ்வாறு மூன்று கர்நாடகப் போர்களின் முடிவில் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனம் தென்னிந்தியாவில் பலம் பொருந்திய சக்தியாக உருப்பெற்றது.

நான்காம் ஆங்கிலேய மைசூர் போர்

தொகு

மைசூர் இராச்சியத்திற்கு எதிராக பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் ஐதராபாத் இராச்சியம் கொண்ட பிணக்குகளால், 1798 – 4 மே 1799 முடிய இப்போர் நடைபெற்றது.[2]இப்போர் ஆங்கிலேய-மைசூர்ப் போர்களில் நான்காவதும், இறுதியானதும் ஆகும்.

நான்காம் மைசூர் போரின் முடிவில் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனிப் படையினர் மைசூர் இராச்சியத்தைக் கைப்பற்றினர். இப்போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டார். திப்பு சுல்தானின் இளைய மகன் பதே அலி நாடு கடத்தப்பட்டார். பிரித்தானியக் கம்பெனி ஆட்சியாளர்களால், மைசூர் இராச்சியம் மீண்டும் உடையார் அரச குலம் கீழ் கொண்டுவரப்பட்டது.

போரின் முடிவில் மைசூர் இராச்சியத்தின் பழைய பகுதிகளான கோயம்புத்தூர் மாவட்டம், வடகன்னட மாவட்டம் மற்றும் தெற்கு கன்னடம் மாவட்டம் ஆகிய பகுதிகள் ஆங்கிலேயர்கள் சென்னை மாகாணத்துடன் இணைத்துக் கொண்டனர். ஐதராபாத் நிசாம் மற்றும் பேஷ்வாக்கள், திப்பு சுல்தானிடம் தாங்கள் இழந்த பகுதிகளை மீண்டும் தங்கள் இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டனர்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://books.google.com.pk/books?id=Y-08AAAAIAAJ&pg=PA126&dq=chanda+sahib&hl=en&sa=X&ei=GP7GT7CCB8PtOcunpeYO&ved=0CDEQ6AEwAA#v=onepage&q=mogul&f=false
  2. George Childs Kohn (31 October 2013). Dictionary of Wars. Routledge. pp. 322–323. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-135-95494-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்நாடகப்_போர்கள்&oldid=3901264" இலிருந்து மீள்விக்கப்பட்டது