யோசப் பிரான்சுவா தூப்ளே

யோசப் பிரான்சுவா, மார்க்கி தூப்ளே (Joseph-François, Marquis Dupleix, 1 சனவரி 1697 – 10 நவம்பர் 1763) இந்தியாவின் பிரெஞ்சு குடியேற்றங்களின் தலைமை ஆளுனராக இருந்தவர். இவர் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் ராபர்ட் கிளைவிற்கு எதிரியாக விளங்கினார்.

யோசஃப் பிரான்சுவா தூப்ளே
பிரெஞ்சு இந்தியாவின்
தலைமை ஆளுனர்
பதவியில்
14 சனவரி 1742 – 15 அக்டோபர் 1754
ஆட்சியாளர்பதினைந்தாம் லூயி
முன்னையவர்பியரி பெனுவா தூமா
பின்னவர்சார்லஸ் கொடெகு
தலைமை ஆளுனர் பொறுப்பில்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சனவரி1697
லாண்ட்ரெசீஸ், பிரான்சு
இறப்பு10 நவம்பர் 1763 (அகவை 66)
பாரிசு, பிரான்சு
புதுச்சேரியில் உள்ள தூப்ளே சிலை

வாழ்க்கை வரலாறு

தொகு

ஜோசெப் பிரான்சுவா தூப்ளேக்ஸ், ஜனவரி 1, 1697 வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் பிறந்தார். செல்வந்தரான அவரது தந்தை பிரான்சுவா  தூப்ளே மகனின் அறிவியல் நாட்டத்தைத் திசைதிருப்பி வணிகத்தில் ஈடுபடுத்த பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனத்தின் கப்பலொன்றில் 1715-ல் இந்தியாவிற்கு அனுப்பினார். அவர் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் பல கடற்பயணங்கள் மேற்கொண்டார். 1720-ல் பாண்டிச்சேரியின் பிரெஞ்சு கவுன்சில் அவையில் உறுப்பினராக அறிவிக்கப்பட்டார். மிகுந்த வணிக நாட்டத்தை வெளிப்படுத்திய தூப்ளேக்ஸ் தனது அலுவல்களுக்கு தவிரவும் தனக்காகவும் வணிக முயற்சிகளை மேற்கொண்டு 1730-ல் பெரும் செல்வம் ஈட்டினார். கல்கத்தா அருகில் உள்ள சந்திர நாகூர் நகரில் பிரெஞ்சு விவகாரங்களுக்கான மேலதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவரது நிர்வாகத் திறமையால் சந்திர நாகூர் பெரும் வளர்ச்சி கண்டது.

தூப்ளேக்சின் சிறப்பான பணியால் 1742-ல் இந்தியக் குடியேற்றங்களுக்கான தலைமை ஆளுனராக நியமிக்கப்பட்டார். பிரெஞ்சு ஆட்சிப்பகுதியின் எல்லைகளை விரிவாக்குவதை தமது நோக்கமாக கொண்டு தமது நடை, உடை, பாவனைகளில் இந்தியப் பண்பாட்டை கடைபிடித்தார். இந்திய சிற்றரசுகளுடன் நட்புறவாடி பிரெஞ்சுச் செல்வாக்கை உயர்த்தினார். இந்திய குடிமக்களைக் கொண்ட "சிப்பாய்கள்" எனப் பெயரிட்ட இராணுவப்படையை உருவாக்கினார். மைசூரின் ஹைதர் அலியும் இவரது சேவையில் இருந்தார். இவற்றால் பிரித்தானியர் பெரும் கலக்கமடைந்தனர். ஆனால் தூப்ளேவுக்கும் லேபூர்தனேக்கும் இடையே நிலவிய பொறாமை அவர்களுக்குத் துணையாயிற்று.

 
தூப்ளே முர்சஃபா ஜங்கை சந்தித்தல்

லேபூர்தனே தலைமையிலான பிரெஞ்சு படையினர் 1746-ல் மதராஸ் சண்டையை அடுத்து மதராசைக் கைப்பற்றிய பின்னர் கோட்டையை மட்டும் வைத்துக்கொண்டு நகரத்தை பிரிட்டிஷாருக்கு திருப்பிக் கொடுப்பதாக உறுதியளித்தார். இதனை புதுச்சேரியலிருந்த தூப்ளேக்ஸ் எதிர்த்தார். அக்டோபரில் லேபூர்தனே புதுச்சேரிக்குத் திரும்பிய பின்னர் தூப்ளேக்ஸ் மற்றொரு படையை சென்னைக்கு அனுப்பி அங்கிருந்த பிரிட்டிஷாரை சிறை பிடித்தார். புனித ஜார்ஜ் கோட்டையைத் தரைமட்டமாக்கும் திட்டத்தையும் நிறைவேற்ற முயன்றார். இவரால் சிறைபிடிக்கப்பட்ட பிரிட்டிஷாரில் அப்போது அலுவலக உதவியாளராக (குமாஸ்தா) இருந்த ராபர்ட் கிளைவ் இந்தியர்களைப் போன்று மாறுவேடமணிந்து கடலூரில் உள்ள தேவனாம்பட்டினம் புனித டேவிட் கோட்டைக்குத் தப்பி வந்து வெளியுலகிற்கு பிரெஞ்சுத் துரோகத்தை வெளிப்படுத்தினார். தூப்ளேக்ஸ் 1747-ல் புனித டேவிட் கோட்டையையும் கைப்பற்ற படைகளை அனுப்பினார்; இதனை பிரிட்டிஷாருடன் நட்பு பாராட்டிய ஆற்காடு நவாப் தடுத்தார். நவாபை சம்மதிக்க வைத்த தூப்ளே மீண்டும் எடுத்த முயற்சிகள் தோல்வியுற்றன. நள்ளிரவில் கடலூர் மீது போர் தொடுத்த தூப்ளேக்சுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.

1748-ம் ஆண்டில் பிரிட்டிஷார் புதுச்சேரியை முற்றுகையிட்டனர். இந்நிலையில் ஆஃகனில் பிரிட்டிஷாருக்கும் பிரான்சிற்கும் அமைதி உடன்பாடு ஏற்பட்டதால் முற்றுகை விலக்கிக்கொள்ளப்பட்டது. இதன்பிறகு தென்னிந்தியாவை தன்வசமாக்க கர்நாடக மற்றும் தக்காண பகுதிகளின் ஆட்சி உரிமை பெற்றவர்களுக்கு துணை நிற்க பெரும்படை ஒன்றை அனுப்பினார். பிரித்தானியர் எதிரிகளுடன் இணைந்து கொண்டு தூப்ளேக்சின் இந்தத் திட்டத்தைத் தடுத்தனர்.

1750-ல் தக்காண சௌதாபர் ஆலம்பரை கோட்டையை பிரெஞ்சுப் படையினருக்கு கொடையளித்தது. இது தூப்ளேக்சும் அவரது பிரெஞ்சுப் படையினரும் ஆற்றிய சேவைகளுக்காகக் கொடுக்கப்பட்டது. இதனைப் பின்னர் பிரித்தானியர் கைப்பற்றி அழித்தனர்.

1751-ல் பர்மாவில் பிரெஞ்சு செல்வாக்கை நிலைநிறுத்த தனது தூதராக சியூ டெ புரூனோவை அனுப்பி பர்மியர்களுக்கு எதிராக மொங் மக்கள் சண்டையிட இராணுவ உதவி புரிந்தார்.[1]

பிரித்தானியருக்கும் பிரெஞ்சுப் படையினருக்குமான மோதல்கள் 1754 வரை நீடித்தது. இதனால் அமைதியை விரும்பிய பிரான்சு தூப்ளேக்சுக்கு மாற்றாக இந்தியாவிற்கு ஓர் சிறப்பு ஆணையரை அனுப்பியது. தூப்ளேக்ஸ் கட்டாயமாக அக்டோபர் 12, 1754-ல் தாய்நாட்டிற்கு கப்பலில் ஏற்றப்பட்டார். துணைவியார் ழான் ஆல்பெர்ட் டிசம்பர் 2, 1756 சனிக்கிழமை அன்று மறைந்தார்.

நிறுவன முன்னேற்றத்திற்காக தனது சொந்த உடமைகளை செலவிட்ட தூப்ளேக்ஸ் பெரும் நட்டத்திற்கு உள்ளானார். அவருக்கு நிதி உதவி வழங்க பிரான்சு அரசு மறுத்தது. வறிய நிலையில் எவரும் அறியாது நவம்பர் 10, 1763 வெள்ளி கிழமை அன்று தூப்ளேக்ஸ் மரணமடைந்தார்.

திருமண வாழ்க்கை

தொகு

ஏப்ரல் 17, 1741 வெள்ளி கிழமை அன்று தனது நண்பர் வின்சென்டின் மனைவியான விதவை ழான் ஆல்பெர்ட்டை திருமணம் புரிந்தார். அப்போது ழான் 11 குழந்தைகளின் தாயாவார். பேரழகியான ழானை, 11 குழந்தைகளின் தாயாக இருந்தும் திருமணம் செய்துகொண்டார். ழான் எந்த புதுச்சேரியில் சாதாரண வணிகரின் மனைவியாக இருந்தாரோ அந்த ஊருக்கே கவர்னரின் மனைவியாக வந்தார். கணவரின் பதவியை பயன்படுத்தி ஊரையெல்லாம் வளைத்துப் போட்டார், பிரபலமான சிவன் கோயிலை இடிக்க தூப்ளேக்ஸ் ஆணையிட்டதுக்கு பின்புலமாக இருந்தவர் அவருடைய மனைவி  ழான். பின்பு 12வது குழந்தை தூப்ளேக்சுக்கு பிறந்து ( அன்றே இறந்ததாகவும் ஒரு தகவல் உண்டு ) சில நாட்களில் இறந்தும் போனது. பின்பு சில நாட்களில் அரசியலில் எதிர்பாராத வீழ்ச்சியை டூப்லெக்ஸ் சந்தித்தார். பெரும் முறைகேடுகளை செய்ததாக பிரான்சுக்கு விசாரணைக் கைதியாக அழைத்து விசாரிக்கப்பட்டார். ழானை உடன் வரவேண்டாம் என்று தூப்ளேக்ஸ் கூறியதை ஏற்காமல் ழானும் கூடவே சென்றார். பிரான்சில் வறுமையில் வாடினார் ழான். எப்படியாவது மீண்டும் புதுச்சேரிக்கு சென்றுவிடவேண்டும் என்று எண்ணிய ழானின் எண்ணம் நிறைவேறாமலேயே தனது 50-வது வயதில் 1756-ம் வருடம்  பிரான்சில் காலமானார்.

நினைவுச்சின்னங்கள்

தொகு
 
இந்தோசீன வங்கியின் செலாவணியில் தூப்ளே

இவரது நினைவாக:

  • பாரிசில் ஓர் சதுக்கம், சாலை மற்றும் பாதாள தொடர்வண்டி நிலையம் இவர் பெயரைக் கொண்டுள்ளது.
  • நான்கு பிரெஞ்சு கடற்படைக் கப்பல்கள் இவர் பெயரைத் தாங்கியுள்ளன (இரு வணிக கப்பல்கள் தவிர).

சிலை இந்திய நடுவண் அரசின் பகுதியான புதுச்சேரி கடற்கரை சாலையில் அமையப்பெற்றுள்ளது. (தற்போது சிறுவர்கள் பூங்காவாக இருக்கும்) தென்பிராந்தியத்தில் தூப்ளே சிலையின் அமைவிடம் 1870-ம் ஆண்டு சூலை 16-இல்[2] பிரான்சு அரசால் நிறுவப்பட்டது.

2.88 மீட்டர்கள் உயரமுள்ள இச்சிலை, 1742-ம் ஆண்டு முதல், 1754-ம் ஆண்டுவரை பிரெஞ்சு புதுச்சேரியின் ஆளுநராக இருந்த தூப்ளேயின் சேவையை போற்றி கௌரவிக்கும் வகையில் பிரான்சு அரசாங்கம் இந்த சிலையை நிறுவியது. பிரான்சு நாட்டின் காலனியாதிக்கம் இந்தியாவில் முளைவிட துவங்கியிருந்த ஆரம்ப காலங்களில் இந்தியாவின் பிரெஞ்சு ஆளுநராக இருந்த தூப்ளே, பிரான்சு ஆட்சியை இந்தியாவில் அமைக்க பெரும்பங்காற்றியதோடு சிறந்த நிர்வாகியாகவும் அறியப்படுகிறார்.[3]

இதனையும் காணக

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. British Empire History. Burma' Editor Sir Reginald Coupland, K.C.M.G., C.I.E., M.A., D.LITT. Late Bcit Professor of the History of the British Empire in the University of Oxford, p78-82 [1] பரணிடப்பட்டது 2008-12-19 at the வந்தவழி இயந்திரம்
  2. Men Whom India Has Known: Biographies of Eminent Indian Characters By J. J. Higginbotham பக்கம்:115
  3. டூப்ளிக்ஸ் சிலை, பாண்டிச்சேரி

மேலும் அறிய

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
அரசு பதவிகள்
முன்னர்
பியரி பெனுவா தூமா
பிரெஞ்சு இந்தியாவின் தலைமை ஆளுனர்
14 சனவரி 1742 – 15 அக்டோபர் 1754
பின்னர்
சார்லசு கோடெகு (ஆணையர்)
(பொறுப்பு)
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோசப்_பிரான்சுவா_தூப்ளே&oldid=3824732" இலிருந்து மீள்விக்கப்பட்டது