சேலம் மாவட்டம் (சென்னை மாகாணம்)

சேலம் மாவட்டம் என்பது பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தின் மாவட்டங்களில் ஒன்றாகும். இது தற்கால தற்கால சேலம் மாவட்டம், தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம், நாமக்கல் மாவட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது.[1] இதன் மொத்தப் பரப்பளவு 18,000 சதுர கிலோமீட்டர்களாக (7,063 ச மைல்) இருந்தது. இந்த மாவட்டத்தில் பன்னிரண்டு வட்டங்கள் இருந்தன. இதன் நிர்வாகத் தலைநகரமாக சேலம் நகரம் இருந்தது. பெரும்பாலான மாவட்டவாசிகள் தமிழர்களாக இருந்தபோதும் தெலுங்கர்கள், கன்னடியர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருந்தனர்.

தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் வரைபடம்
சேலம் மாவட்டத்தின் 1965 ஆண்டைய வரைபடம்

வரலாறு

தொகு

சேலம் மாவட்டத்தின் சில பகுதிகள் எட்டாம் நூற்றாண்டில் பல்லவர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. 10-ஆம் நூற்றாண்டில் சேலம் மாவட்டத்தின் பகுதிகள் சோழர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக மாறியது. 17-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இம்மாவட்டத்தின் வட பகுதியானது மைசூர் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டது. திருமலை நாயக்கர் காலத்தில் இம்மாவட்டத்தின் பெரும்பகுதியானது மதுரை நாயக்கர்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக ஆனது. மதுரை நாயக்கர்களின் பிரதிநிதிகளாக சேந்தமங்கலத்தில் இராமச்சந்திர நாயக்கரும், தாரமங்கலத்தில் கெட்டி முதலிகளும் ஆட்சி செய்துவந்தனர். நாயக்கர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்த மாவட்டத்தில் மைசூர் பேரரசு செல்வாக்குப் பெற்றது. மைசூர் ஆட்சியில் இம்மாவட்டம் பாலகாட், பாராமகால், தலாகாட்'' என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. பாலாகாட் என்பது ஓசூர் வட்டம், பாராமகால் என்பது தருமபுரி வட்டம், அரூர் வட்டம், கிருஷ்ணகிரி வட்டம், திருப்பத்தூர் வட்டம் தலாகாட் என்பது ஏனைய வட்டங்களைக் கொண்ட பகுதியாகும். ஐதர் அலிக்கும் அவருக்குப் பிறகு அவரது மகன் திப்பு சுல்தானுக்கும் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கும் இடையில் பல தசாப்தங்கள் போர்கள் நடந்தன. 1792 மார்ச் 16-இல் திப்பு சுல்தானுடன் கும்பெனியார் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி (ஒசூர் வட்டம் தவிர) சேலம் மாவட்டப் பகுதிகள் கும்பெனியாரின் வசமானது. இதனையடுத்து 1792-இல் சேலம் மாவட்டம் உருவாக்கபட்டது. என்றாலும் மாவட்ட தலைநகரமாக ஒசூர் உள்ளிட்ட நகரங்கள் இருந்தன. திப்பு சுல்தான் கொல்லப்பட்டதற்குப் பிறகு 1799 ஒசூர் வட்டமும் ஆங்கிலேயர் வசமானது. 1804-இல் சேலத்தைத் தலைநகராகக் கொண்ட மாவட்டமாக உருவாக்கப்பட்டது. பின்னர் சில மாற்றங்கள் செய்யப்பட்டு சேலம் மாவட்டதிலிருந்து திருப்பத்தூர் வட்டம் வட ஆற்காடு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டது.[2] 1965இல் தருமபுரி மாவட்டம் தனியாகப் பிரிக்கப்பட்டது. 1997-இல் நாமக்கல் மாவட்டம் பிரிக்கப்பட்டது.

வட்டங்கள்

தொகு

சேலம் மாவட்டம் பன்னிரண்டு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன அவை:

 • ஆத்தூர்
 • சேலம்
 • ஏர்க்காடு
 • நாமக்கல்
 • இராசிபுரம்
 • திருச்செங்கோடு
 • சங்ககிரி
 • ஒசூர்
 • கிருஷ்ணகிரி
 • தருமபுரி
 • அரூர்
 • ஓமலூர்

மேற்கோள்கள்

தொகு
 1. Madraspresidency 1862, ப. 33–34
 2. சோமலெ (1961). சேலம் மாவட்டம். சென்னை: பாரி நிலையம். pp. 5–7.