கலிங்கத்துப்பரணி

சயங்கொண்டார் பாடியது
(கலிங்கத்துபரணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கலிங்கத்துப்பரணி என்ற நூல் பரணி வகையைச் சார்ந்த சிற்றிலக்கியம் ஆகும். [1] இந்நூல் முதலாம் குலோத்துங்க சோழனின் கலிங்கப் போர் வெற்றி குறித்துப் பாடப்பட்ட நூல் ஆகும். குலோத்துங்கனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டது. அனந்தவர்மன் என்னும் வட கலிங்க மன்னன் திறை கொடாமலிருந்த பிழையின் காரணமாக முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தலைவனும் அமைச்சனுமாயிருந்த கருணாகரத் தொண்டைமான் கி.பி. 1112-ஆம் ஆண்டில் போரில் வென்ற செய்தியே நூற்பொருள். இது செயங்கொண்டார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. இவர் தீபங்குடியைச் சேர்ந்த அருகர் ஆவார். இந்நூலின் காப்புச் செய்யுளால் இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவர் என அறியலாம்.

பெயர் முறை

தொகு

பரணி நூல்களுக்குத் தோற்றவர் பெயரிலேயே தலைப்புத் தரும் வழமைக்கு ஏற்ப தோல்வியடைந்த கலிங்கத்தின் பெயரை வைத்து, இந்த நூல் "கலிங்கத்துப் பரணி" என அழைக்கப்படுவதாயிற்று.தமிழில் முதன் முதலில் எழுந்த பரணி நூல் கலிங்கத்துப் பரணியே ஆகும். இதுவே பிற்காலப் பரணி நூல்களுக்கு வழிகாட்டியாய் அமைந்த நூலாகும். இது கலித் தாழிசையாற் பாடப்பெற்றது. 599 தாழிசைகளை உடையது. காலம் (1078- 1118-குலோத்துங்க சோழன் காலம்) பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதி. சமகாலப் புலவரான ஒட்டக்கூத்தர் இந்நூலைத் தென்தமிழ்த் தெய்வப்பரணி எனப் புகழ்ந்துள்ளார்.

ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி .(இலக்.வி. 839)

(அமர் - போர்; மானவன் - படைவீரன்.) பரணி என்பது போரில் ஆயிரம் யானைகளை வென்ற வீரனைப் பாடும் சிற்றிலக்கிய வகை ஆகும். போரிலிருந்து மீண்ட தலைமகன் பால் புலவியுற்ற தலைமகளது ஊடலைத் தீர்க்க புலவர்கள் வாயிலாவதும், புலவியாற்றிய பின்னர், தலைவன் சென்ற காட்டின் கொடுமையையும் தலைவனின் வீரத்தையும், அக்காட்டிலுள்ள பேய்கள் காளிக்குச் சொல்லுவதையும், காளி பேய்களுக்கு உரைப்பதையும் எடுத்துச் சொல்லும் வடிவுடன் பரணி நூலானது அமையும். பரணி நாளில் பேய்கள் கூடி நிணச்சோறு (இரத்தமும் இறைச்சியும் கலந்த உணவு) அட்டு ( சமைத்து) உண்டு மகிழ்ந்து ஆடிப்பாடிக் களித்துப் போரில் வென்ற மன்னரைப் புகழும் புகழ்ச்சியைக் கூறுவது. காளிக்குக் கூளிகள் கூறுவதாக அமைவது.

நூலாசிரியர்

தொகு

கவிகள் என்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் கவிகளைச் சொல்பவர்கள் ஆவார்கள். அத்தகையவர்களுள் செயங்கொண்டார் மிகவும் குறிப்பிடத்தகுந்தவர். இவர் முதற்குலோத்துங்க சோழனுடைய அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர். குலோத்துங்க சோழனுடைய புகழையும் அவனின் தலைமைப் படைத்தலைவனான கருணாகரத்தொண்டைமானின் சிறப்பையும் கலிங்கத்துப் பரணி என்னும் நூலைப் பாடி நிலை நிறுத்தியவர்.

இவருடைய ஊர், இயற்பெயர், பிறப்பு, வளர்ப்பு இதுவரைத் தெளிவாகத் தெரியவில்லை. தீபங்குடிப்பத்து என்னும் நூலில் உள்ள மூன்றாவது பாடலிலும், தமிழ் நாவலர் சரிதையின் 117-ஆவது பாடலாலும் இவருடைய ஊர் தீபங்குடி அறியமுடிகிறது. இவர் எந்தத் தீபங்குடி என்பதைக் கூற முடியவில்லை. இருப்பினும் சோழநாட்டில் கொராடாச் சேரிக்கு அருகில் உள்ள தீபங்குடி என்பதாகும். இவருடைய காலம் 11-ஆம் நூற்றாண்டின் இறுதியாகவோ 12-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியாகவோ இருக்கலாம். இவரைப் பிற்கால புலவரான பலபட்டடைச்சொக்கநாதர், பரணிக்கோர் செயங்கொண்டார் எனச் சிறப்பித்துக் கூறியுள்ளார்.

இவர் கலிங்கத்துப்பரணி தவிர புகார் நகர வணிகர் பெருமக்களைச் சிறப்பித்து இசையாயிரம் என்ற நூலைப் பாடியுள்ளார். உலா மடல் என்ற பிறிதொரு நூலும் விழுப்பரையர் என்ற தலைவர் மீது பாடியுள்ளார்.

நூலின் அமைப்பு முறை

தொகு

கலிங்கத்துப்பரணியின் நூலமைப்பில் பின் வரும் பொருள்கள் விளக்கப்படுகின்றன.

  • கடவுள் வாழ்த்து

போர்த்தலைவனாகிய குலோத்துங்கன் நெடிது நின்று ஆட்சி செய்ய வேண்டுமெனக் கடவுளைத் துதித்துப் பாடப்படுகிறது.

  • கடை திறப்பு

கலிங்கத்தின் மேல் படையெடுத்துச் சென்ற வீரர்கள் வருவதற்குக் கால தாமதம் ஆனதால் அதனைக் கண்டு மகளிர் ஊடல் கொண்டு கதவை அடைத்ததாகவும், அப்பெண்கள் மகிழுமாறும் ஊடல் நீங்கிக் கதவைத் திறக்குமாறும் செய்ய, தாம் வெற்றி பெற்ற கலிங்கப்போர் பற்றிக் கூறுவது போலவும் அமைந்தது.

  • காடு பாடியது

கலிங்கப் போர்க்களத்தில் நிணக்கூழ் சமைத்த பேய்களின் தலைவியாகிய காளி உறையும் இடமாகிய பாலையைச் சார்ந்த காட்டைப் பற்றிக் கூறுவது. இதில் பாலை நில வெம்மையின் கொடுமை சுவையுடன் கூறப்பட்டுள்ளது.

  • கோயில் பாடியது

காளி உறையும் இடமாகிய காட்டில் நடுவண் அமைந்துள்ள காளிக் கோயிலைப் பற்றிக் கூறுவது. இதில் காளிக் கோயிலின் அடிப்படை (அடிவாரம், அஸ்திவாரம்) அமைத்தது, சுவர் அடுக்கியது, தூண் நிறுத்தியது முதலான செய்திகளைக் கூறுகிறது. குலோத்துங்கன் பல போர்க் களங்களில் பெற்ற வெற்றிச் சிறப்புகள் காட்டில் காணப்படும் பல வகைக் காட்சிகளோடு தொடர்புப் படுத்திக் கூறப்படுகிறது.

  • தேவியைப் பாடியது

காளிக் கோயிலைப் பற்றிக் கூறியபின் காளியைப் பற்றிக் கூறுவது. காளியின் உறுப்புகள் பற்றியும், குலோத்துங்க சோழனின் புகழும் இடைஇடையே கூறப்படுகிறது.

  • பேய்ப்பாடியது

காளியைச் சூழ்ந்திருக்கும் பேய்களின் இயல்புகள் கூறப்படுகிறது. பேய்களின் உறுப்பு நலங்கள் பற்றி நகைச் சுவையோடு விளக்கப்படுகிறது. சில பேய்களின் உறுப்பு நலங்கள் குறைந்து காணப்படுவதாகவும், குலோத்துங்கனின் பல போர்க்கள வெற்றிகள் குறித்தும் கூறப்படுகிறது.

  • இந்திரசாலம்

பேய்கள் சூழ காளி அரசு வீற்றிருந்த அமயத்தே (அவையில்) இமயத்திலிருந்து வந்த முது பேய் ஒன்று தான் கற்று வந்த இந்திர சாலங்களை (மாய வித்தைகள்)க் காட்டுவதாக நகைச்சுவையுடன் கூறப்படுகிறது.

  • இராச பாரம்பரியம்

குலோத்துங்கனின் குடியின் வரலாறு கூறப்படுகிறது. கரிகால் சோழன் தொடங்கிச் சோழ வரலாறு கூறப்படுகிறது

  • பேய் முறைப்பாடு

பரணிப்போர் நிகழ்வதற்கான முற்குறிகளைப் பேய்கள் கண்டதாகக் கூறுவது இப்பகுதி. பேய்களின் பசிக்கொடுமை, அப்பேய்களுக்கு ஏற்படும் சில நல்ல குறிகள், இமயத்தில் இருந்து பேய் தான் வந்த வழியில் கலிங்கத்தில் கண்ட தீக்குறிகள், இவைகளைக் கேட்டு கணிதப்பேய் கனவும் நனவும் கண்டு, குலோத்துங்கனால் பரணிப்போர் உண்டு எனக் கூறுவதும், பின்னர் நிகழப்போவதை முன்னறிவிப்பாகக் கூறும் முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

  • அவதாரம்

கலிங்கப்போர்த் தலைவனான குலோத்துங்கன் சிறப்பைக் காளி பேய்களுக்குக் கூறுவது போல் அமைக்கப்பட்ட இப்பகுதியில் குலோத்துங்க சோழனின் பிறப்பு, வளர்ப்பு, இளவரசுப்பட்டம், முடி சூடியது முதலிய செய்திகள் விளக்கப்படுகிறது. சாளுக்கிய குலத்தில் பிறந்து தாய்க் குலமாம் சோழ குலத்து அரசுரிமை பெற்றது , இளவரசராய் இருந்த போது வட திசை நோக்கிப் போருக்கு எழுந்தது, சோழன் இறந்த சமயத்தில் சோழ நாட்டை நிலைபெறுத்தி முடிசூடியது, பெரு மன்னனாய்ச் சிறப்புற ஆட்சி செய்தது, பாலாற்றங்கரைக்கு நால்வகைப் படையுடனும், தேவியருடனும், சிற்றரசர்கள் சூழவும் புறப்பட்ட சிறப்பு, தில்லையிலும், அதிகையிலும் தங்கிச் சென்று காஞ்சியை அடைந்தது ஆகிய செய்திகள் கூறப்பட்டுள்ளன.

  • காளிக்குக் கூளி கூறியது

காஞ்சியை அடைந்த குலோத்துங்கன் ஒரு சித்திரப் பந்தர் கீழ் அமைச்சர் முதலியோருடன் வீற்றிருந்த சிறப்பும் சிற்றாரசர்கள் பலரும் வந்து திறை செலுத்தியதும், திறை செலுத்தாத கலிங்க மன்னன் மேல் குலோத்துங்கனின் ஆணைப்படி கருணாகரத் தொண்டமான் நால்வகைப் படையுடன் போருக்கெழுந்த இயல்பும் கூறப்படுகிறது. பல ஆறுகளைக் கடந்து கலிங்கம் அடைந்ததும், கலிங்கத்தை எரிகொளுவி அழித்ததும், அது கண்ட கலிங்கமக்கள் அரசனிடம் முறையிட்டதும், அவன் வெகுண்டெழுந்ததும், அமைச்சர் முதலானோர் அவனுக்கு அறவுரைப் பகர்ந்ததும், அதனை மதியாமல் கலிங்க மன்னன் போருக்குச் சென்றதுமான செய்திகள் விளக்கப்படுகிறது.

  • போர் பாடியது

கலிங்கப்பேய் காளிக்குப் போரின் இயல்பைக் கூறுவதாக அமைந்தது. நால்வகைப் படையின் செயல்கள், தீவிரமான போர்முறை, கருணாகரன் தன் களிற்றை உந்தியதும் இரு பக்கப் படைகளும் ஒருவரை ஒருவர் பொருத செய்திகளும், இரு திறத்திலும் நால்வகைப் படைகளும் பல அழிந்ததும், போரின் கடுமைத் தாங்காமல் கலிங்க மன்னன் ஓடி ஒளிந்ததும், அவனைப் பற்றிக் கொணர தன் படைகளோடு ஒற்றர்களையும் கருணாகரத்தொண்டைமான் அனுப்பிய செய்தியும், கலிங்க வீரர்கள் ஒரு மலை உச்சியில் மறைந்து நிற்பதைப் பற்றி அறிந்ததும் அது மாலை வேளை ஆனதால் போரிடாமல், விடியும் வரை காத்துநின்று விடிந்த பின் கலிங்கரை அழித்ததும், கலிங்க வீரர்கள் உருக்குலைந்து நாற்புறமும் ஓடியதும், அங்குத் தன் கவர்ந்த செல்வங்களுடன் குலோத்துங்கன்பால் சென்று பணிந்து நின்றதுமான செய்திகள் அழகுபடக் கூறப்பட்டுள்ளன.

  • களம் பாடியது

போரைப் பற்றிச் சொல்லி முடித்த பேய் காளியைப் போர்க்களம் காணுமாறு அழைக்க காளி வந்து களத்தைக் கண்டு, அக்காட்சிகளைப் பேய்களுக்குக் காட்டுமாறு அமைந்துள்ளது. காட்சிகளைக் காட்டிய பின், நீராடி கூழட்டு உண்ணுமாறுபேய்களைப் பணிக்கிறாள் காளி. அங்கணமே பேய்கள் பல் துளக்கி, நீராடி கூழ் சமைத்து உண்ணும் இயல்பு கூறப்படுகிறது. பேய்கள் பாடும் வள்ளைப் பாட்டில் குலோத்துங்கனின் புகழ் பாடப்படுகிறது. முடிவில் பேய்கள் தங்களுக்குப் பரணிக் கூழ் அளித்த குலோத்துங்கனை வாழ்த்துவதாகக் கலிங்கத்துப் பரணி முடிகிறது.

அரசர் இயல்புகளும் அக்காலப் போர் முறைகளும்

தொகு

இந்நூலில் அக்கால அரசர் இயல்புகளும் அக்காலப் போர் முறைகளும் சமுதாய நிலைகளும் கூறப்பட்டுள்ளன.

படைக்கலப் பயிற்சி

தொகு
  • அக்கால அரசர்கள் தினந்தோறும் படைக்கலப் பயிற்சி பெற்றனர். அவ்வாறு பயிற்சி முடிந்த பின் தம் அரையிலே (இடையில்) உள்ள உறையில் அதனைப் பூணும் வழக்கம் இருந்தது.

அரசவை

தொகு
  • அரசு வீற்றிருக்கும் போது அரசனின் தேவியரும் உடன் இருத்தல் வழக்கம்.
  • அரசனுக்குச் சேவையாற்ற 'அணுக்கிமார்' எனப்படுவோர் இருந்தனர். இவர்கள் நாடகம், நிருத்தம் முதலியவற்றாலும், பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி எனும் நால்வகைப் பண்ணிலும் வல்லவர்களாய் ஆடல் பாடல்களில் சிறந்திருந்தனர். இவர்களும். யாழ், குழல், மத்தளம் முதலிய இசைக்கருவி வல்லார் பலரும் அரசவையில் ஒரு பக்கத்தே இருப்பர்.
  • அரசன் புகழ் பாடுவோராகிய சூதர், மகதர், மங்கலப் பாடகர், வந்தியர், வைதளிகர் என்போரும் அரசவையில் இருந்தனர்.
  • அரசனுக்குப் பிறர் விருப்பத்தை அறிவித்தும், அரசன் கட்டளையைப் பிறர்க்கு அறிவித்தும் ஒழுகுவோன் 'திருமந்திர ஓலையான்' எனப் பெயர் பெற்று அரசவையில் காணப்படுவான்.

பயணம்

தொகு
  • அரசன் நால்வகைச் சேனைகளோடும் ஒன்று குறித்துப் பயணப்படுங்கால் மறையோருக்குத் கொடை முதலிய தருமங்கள் செய்வான். அச்சமயம் கவிவாணர்களுக்குப் பரிசுகள் அளித்துப் புறப்படுவான்.
  • பேரரசர் புறப்படுங்கால் அரசர் வாழ்கவென ஜெயஒலி முழக்கமும், மறையவர் மறைமொழி ஓதுதலும் அக்கால வழக்கமாகும்.
  • பயணம் செய்வோர் யானையூர்ந்தும், தேரூர்ந்தும், சிவிகையூர்ந்தும் செல்வர். சங்கொலி மங்கல ஒலியாகக் கருதப்பட்டது. அரசர் புறப்படும்பொழுது சங்கொலியோடு பல்லியங்களும் முழங்கிச் செல்லும். யானை மீது முரசதிர்ந்து செல்லும்.

அரசர்க்கு வழங்கப்படும் திறைப் பொருட்கள்

தொகு
  • பேரரசருக்குப் பிற மன்னர்கள் திறையாகப் பல பொருட்களையும் கொண்டு வந்து இடுவர். மணி மாலை, பொன்னணி, முடி, பொற்பெட்டி, முத்துமாலை, மணிகள் இழைத்த ஒற்றைச் சரடு, பதக்கம்,மணிக்குவியல், பொற்குவியல், மகரக் குழை முதலியனவும் வழங்கப்பட்டன.
  • திறைப்பொருளாக யானை,குதிரை,ஒட்டகம் முதலியனவும் வழங்கப்பட்டன.
  • இத்திறைப்பொருட்களை எருதுகளின் மீது ஏற்றிக் கொண்டு வந்தனர்.

பிறந்த நாள்

தொகு
  • அரசனுடைய பிறந்த நாளை மக்கள் சிறப்புடன் கொண்டாடினார்கள். அரசனும் மக்கள் மகிழ்ச்சி கொள்ளுமாறு பல செயல்களைச் செய்வான்.
  • அரசனின் பிறந்த நாள் 'வெள்ளணி நாள்' என்றும் 'நாண்மங்கலம்' என்றும் பெயர் பெறும். குலோத்துங்கன் ஆட்சியில் ஒருநாள் போல் எந்நாளும் மக்கள் மகிழ்ச்சி பெருக இருந்தனர்

சிற்றரசர் இயல்புகள்

தொகு
  • பேரரசர் தம் கழலை அடைந்த சிற்றரசர்களுக்கு அஞ்சல் அளித்துத் தம் அடியினை அவர் முடி மீது வைத்து அருள் செய்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
  • பேரரசர் யானை மீது ஏறும் போதும் தம் அடிகளைச் சிற்றரசர் முடிமீது வைத்து ஏறும் வழக்கம் இருந்தது.

அமைச்சர்கள்

தொகு
  • பேரரசர்களின் அமைச்சர்கள் சிற்றரசர்களால் பெரிதும் மதிக்கப்பட்டார்கள். மேலும் சிற்றரசர்கள் அமைச்சர்களிடம் பணிவுடன் ஒழுகி வந்தார்கள் என அறியலாகிறது.

மேற்கோள்

தொகு
  1. வித்துவான் பெ. பழனிவேல் பிள்ளை அவர்கள் எழுதிய உரையுடன் கூடிய கலிங்கத்துப் பரணி. திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். - 1965
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிங்கத்துப்பரணி&oldid=3826965" இலிருந்து மீள்விக்கப்பட்டது