கருணாகரத் தொண்டைமான்
கருணாகரத் தொண்டைமான் முதலாம் குலோத்துங்க சோழரின் முதலமைச்சர் மற்றும் சிறந்த படைத்தளபதி ஆவார்.[1][2] குலோத்துங்கர் இலங்கை மற்றும் கலிங்கத்தைக் கைப்பற்றியதில் கருணாகரரின் பங்கு மகத்தானது.[3][4] செயம்கொண்டாரின் கலிங்கத்துப்பரணியில் இவரது வீரச்செயல்கள் விவரிக்கப்படுகின்றன.[5][6] முதலாம் குலோத்துங்கரின் காலத்திற்குப் பின்பு அவரது மகன் விக்ரம சோழருக்கும் அமைச்சராகப் பணிபுரிந்தார்.[7].
கருணாகரத் தொண்டைமான் | |
---|---|
திரக்சாரமத்தில் கருணாகரத் தொண்டைமானின் சிற்பம். | |
பிறப்பின்போதான் பெயர் | திருவரங்கன் |
பிறப்பு | கும்பகோணம், இடைக்காலச் சோழர்கள் (தற்கால தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | கங்கைகொண்ட சோழபுரம், இடைக்காலச் சோழர்கள் (தற்கால ஜெயங்கொண்டம், தமிழ்நாடு, இந்தியா) |
சார்பு | இடைக்காலச் சோழர்கள் |
சேவை/ | சோழர் படை |
தரம் | சேனாதிபதி |
கட்டளை | இலங்கை மற்றும் கலிங்க நாட்டில் சோழர் படை |
போர்கள்/யுத்தங்கள் |
|
துணை(கள்) | அழகிய மணவாளனி மண்டையாழ்வார் |
குடும்ப வாழ்க்கை
தொகுகருணாகரர் பல்லவ அரச குடும்பத்தில் பிறந்தவர். கலிங்கத்துப்பரணி இவரின் பிறப்பைக் குறித்து விவரமாக உரைக்கிறது. இவர் கும்பகோணத்தின் நாச்சியார்கோவிலுக்கு அருகே உள்ள தற்காலத்தில் வண்டுவாஞ்சேரி என்று மருவி வழங்கப்படும் வண்டாழஞ்சேரி என்ற ஊரில் பிறந்தார்.[8] இவர் முதலாம் குலோத்துங்கரின் நண்பரும் ஆவார். இவர் மனைவியின் பெயர் அழகிய மணவாளினி மண்டையாழ்வார்.
இலங்கை போர்
தொகுசோழ முடியரசின் கீழ் இலங்கையை ஆண்டு கொண்டிருந்த சிற்றரசர் இலங்கையிலுள்ள சோழ மாகாணத்தின் சுதந்திர அரசராகும் பொருட்டு, சிங்கள அரசரொருவருடன் சேர்ந்து சோழரை எதிர்க்கத் துணிந்தார். இதனையறிந்த குலோத்துங்கர் வெகுண்டெழுந்து அச்சிற்றரசனைச் "சிவ துரோகி" (சைவ மதத்தைச் சேர்ந்த சோழர்களுக்கு துரோகம் இழைத்த காரணத்தால்) என அறிவித்தார்.[9] அரசருக்கு தன் நன்றியுணர்வைக் காட்ட தகுந்த சமயமெனக் கருதிய கருணாகரர், அச்சிற்றரசனைப் போரில் வென்று இலங்கையில் சோழர் ஆட்சியை உறுதியாக்கினார். யாழ்ப்பாணத்தில் உள்ள கருணாகரப் பிள்ளையார் கோவில் இவர் நினைவாகக் கட்டப்பட்டது. இலங்கையில் உள்ள தொண்டைமானாற்றுக்கு இவர் பெயர் சூட்டப்பட்டது.[10][11]
கலிங்கப் போர்
தொகுகலிங்கத்தை ஆண்டு வந்த அனந்தவர்மன் சோடகங்கன் என்ற சூரிய வம்சத்தில் பிறந்த கங்கையன் [12] என்ற மேலை கங்க மன்னனின் புதல்வன்[13][14], முதலாம் குலோத்துங்கருக்கு இருமுறை திறை செலுத்த தவறியதைக் காரணமாக எடுத்துக்கொண்டு, குலோத்துங்கர் கலிங்கத்தைக் கைப்பற்ற கருணாகரரை அனுப்பினார். அனந்தவர்மரை உயிருடன் பிடிக்கவேண்டுமென கருணாகரருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போரின் நுட்பங்களைக் கற்றுக்கொள்ள விக்ரம சோழனும் போருக்கு அனுப்பப்பட்டான். போரில் சோழர் படை பெரும் வெற்றியடைந்தது. இவ்வெற்றியின் நினைவாகக் கலிங்கத்தில் வெற்றித்தூண் அமைக்கப்பட்டது.[15] .
கலிங்கத்துப்பரணி
தொகுகலிங்கப்போர் குறித்து செயங்கொண்டாரால் பாடப்பெற்ற பரணியே கலிங்கத்துப்பரணி ஆகும். இதன் நூற்பொருள் கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தைக் கைப்பற்றிய நிகழ்வு ஆகும்.
கலிங்கத்துப்பரணியிலிருந்து மூன்று பாடல்கள்
- 1
அலகில் செருமுதிர் பொழுது வண்டையர்
- அரச னரசர்கள் நாதன் மந்திரி
உலகு புகழ் கருணாகரன்றன தொருகை
- யிருபணை வேழ முந்தவே!
- 2
கடற்கலிங்க மெறிந்துசயத் தம்ப நாட்டிக்
- கடகரியுங் குவிதனமுங் கவர்ந்து தெய்வச்
சுடர்ப்படைவா ளபயனடி யருளி னோடுஞ்
- சூடினான் வண்டையர்கோன் தொண்டை மானே
- 3
வண்டை வளம்பதி பாடிரே
- மல்லையுங் கச்சியும் பாடிரே
பண்டை மயிலையும் பாடிரே
- பல்லவர் தோன்றலைப் பாடிரே
சிலையெழுபது
தொகுசிலையெழுபது[16] என்பது கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் ஒன்று என்ற கருத்து உள்ளது. கலிங்கப் போர் வெற்றிக்குப் பிறகு, சோழருக்கு அடங்கிய சிற்றரசனாக பல்லவ நாட்டை ஆண்ட, முதற் குலோத்துங்க சோழனுடைய தளபதி (கி.பி.1070 - கி.பி.1118) கருணாகரத் தொண்டைமானின் பெருமையை பற்றி கம்பர் பாடியது இந்நூல் எனப்பகிறது. இதற்குப் பரிசாக தங்கப் பல்லக்கு, அணிகலன்கள் மற்றும் ஒரு செய்யுளுக்கு ஆயிரம் பொன் வீதம் பரிசும் கம்பருக்கு வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது.
அவிக்கா தரங்கூர் புனிதர்மகிழ்ந்
தருள் யாம்புகழ்ச்
செவிக்கா ரமுதமெனக் கேட்டுச்
சிந்தையுவந்து சீர்தூக்கிப்
புவிக்கா யிரம்பொ னிறைநீக்கிப்
பொற்றண் டிகபூடணத்தோடு
கவிக்கா யிரம்பொன் பரிசளித்தான்
கருணாகரத்தொண்டை வேளாளனே.
தற்கால இலக்கியத்தில்
தொகுசாண்டில்யன் எழுதிய மூன்று பகுதிகள் கொண்ட புதினமும் சோழரின் கடற்படையின் கடல்கடந்த வெற்றிகளைக் கூறும் புதினமான கடல் புறாவின் கதைத்தலைவன் இந்த கருணாகரத் தொண்டைமானாவான்
தேற்கோள்கள்
தொகு- ↑ The Imperial and asiatic quarterly review and oriental and colonial record, page 328
- ↑ History of the Eastern Chalukyas of Vengi, 610-1210 A.D., page 446.
- ↑ C.Sivaratnam: The Tamils in early Ceylon, page 116
- ↑ History of the Eastern Chalukyas of Vengi, 610-1210 A.D., page 455.
- ↑ History of medieval Andhradesa, page 25
- ↑ History of the Eastern Chalukyas of Vengi, 610-1210 A.D.
- ↑ The Cholas: mathematics reconstructs the chronology, page 171
- ↑ வைரமுத்து (13 சூலை 2018). "செயங்கொண்டான்: களங்கண்ட கவிஞன்". கட்டுரை. தமிழ் இந்து. பார்க்கப்பட்ட நாள் 14 சூலை 2018.
- ↑ The Tyāgarāja cult in Tamilnāḍu: a study in conflict and accommodation, page 322: சைவ மதத்திற்கும் அரசியலுக்கும் இருந்த நெருக்கத்தை இந்நிகழ்ச்சியின் மூலம் உணரலாம்
- ↑ Tamil culture, Volume 4, page 242.
- ↑ The Tamils in early Ceylon, page 116.
- ↑ http://orissa.gov.in/e-magazine/journal/journal2/pdf/ohrj-03.pdf
- ↑ http://books.google.co.in/books?id=oFBmAAAAMAAJ&q=Coinage+in+Ancient+India:+a+numismatic,+archaeochemical+and+metallurgical+study+of+ancient+Indian+coins,+Volume+2&dq=Coinage+in+Ancient+India:+a+numismatic,+archaeochemical+and+metallurgical+study+of+ancient+Indian+coins,+Volume+2&hl=en&sa=X&ei=52JCVPmAPMWONujOgJAC&ved=0CB8Q6AEwAA
- ↑ http://controversialhistory.blogspot.in/2007/10/origin-of-gangas.html
- ↑ A comprehensive history of India, Volume 4, Part 1, By Kallidaikurichi Aiyah Nilakanta Sastri, Indian History Congress.
- ↑ http://www.tamilkalanjiyam.com/literatures/kambar/silaiyelupathu.html