கல்பனா சக்மா
கல்பனா சக்மா வங்காளதேசத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் மற்றும் பெண்ணியவாதி.[1] மலைவாழ் பெண்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு செயலராக இருந்தார். இவரும் இவரது இரு உடன்பிறப்புகளும் சூன் 12, 1996இல் இலல்லியகோனா சிற்றூரிலிருந்த அவர்களது வீட்டிலிருந்து வங்காளதேச படைத்துறையால் கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. கல்பனா சக்மா இன்றும் காணக் கிடைக்கவில்லை.[2] இவரது கடத்தலுக்காக ஒருவரும் குற்றம் சாட்டப்படவில்லை.[3] கடத்தலுக்குப் பின்னர் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.[4]
இளமைக் காலம்
தொகுகல்பனா சக்மா சிட்டகொங் மலைப்பகுதிகளில் துடிப்பான மனித உரிமை ஆர்வலராக அறியப்பட்டார். வங்காளதேச மலைவாழ் பெண்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணை செயலாளராக செயலாற்றி வந்தார்.[5] உள்நாட்டு ஆண்களையும் பெண்களையும் அடக்கியும் தொல்லைப் படுத்தியும் வந்த வங்காளதேசப் படையினரை கடுமையாக கண்டித்து வந்தார். குறிப்பாக மலையக பெண்களின் உரிமைக்காகவும் படைத்துறையினரின் அத்துமீறல்களுக்கு எதிராகவும் சிட்டகொங் மலைப்பகுதிகளில் மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் சந்திப்புகளை ஒருங்கிணைத்து வந்தார்.[6] சிட்டகொங் மலைப்பகுதி மக்களின் ஆயுதமேந்திய விடுதலை இயக்கமாக விளங்கிய பர்பத்திய சட்டகிராம் ஜன சம்கத்தி சமிதியின் தன்னாட்சி முழக்கத்திற்கு ஆதரவாக இருந்தார்.
1997, திசம்பர் 2 அன்று கையொப்பமிட்ட சிட்டகொங் அமைதி உடன்பாட்டிற்கேற்ப இந்த அமைப்பு தங்கள் ஆயுதங்களை சரணிட்டனர். தற்போது இப்பகுதி மக்களின் நலம் பேணும் அரசியல் கட்சியாக விளங்குகின்றது.[7] 12 சூன் 1996 நடந்த வங்காள தேச நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் பகாரி கன பரிசத்தின் மூத்த தலைவராக இருந்த சுயேட்சை வேட்பாளர் பிஜய் கேத்தன் சக்மாவிற்காக ஆதரவு திரட்டி வந்தார். இந்த ஏழாவது பொதுத்தேர்தல் நடக்க சில மணித்துளிகளே இருக்கையில் கல்பனா கடத்தப்பட்டார்.[8]
கடத்தல்
தொகு1996 சூன் மாதம் 12ஆம் நாள் இரவு 1:00 மணிக்கு, பொதுத் தேர்தல் துவங்க 6 மணி நேரமே இருக்கையில், கல்பனா சக்மா வங்காளதேச படைத்துறையினர் என கருதப்படுபவர்களால் ரங்கமதி மாவட்டத்தில் இலல்லியகோனா என்ற சிற்றூரிலிருந்த அவரது இல்லத்திலிருந்து கடத்தப்பட்டார்.[9] கோஜொய்சாரி படைவீட்டிலிருந்த படைத்துறை லெப்டினென்ட் பெர்டூசு என்பவரும் நூருல் அக், சாலே அகமது என்ற இரு சிற்றூர் பாதுகாப்பு படை உறுப்பினர்களும்[10] கல்பனா வீட்டை கைப்பற்றுகை செய்து கல்பனாவை வலுக்கட்டாயமாக பிடித்துச் சென்றனர். கல்பனாவின் 60 அகவை அன்னை பாதுனி சக்மா நிருபர்களுக்கு கூறுகையில் -
""அந்த நேரத்தில் வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று வெளியில் இருந்து யாரோ அழைத்தார்கள். நாங்கள் அப்போது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தோம். பின்னர் அவர்கள் வீட்டின் பூட்டை வெளியில் இருந்து உடைத்து வீட்டிற்குள் வந்தனர். அவர்கள் எங்கள் முகத்தில் சுடரொளியை ஒளிரச் செய்து என் இளைய மகன் குதிராமை அழைத்துச் சென்றனர். 'சார்' (லெப். பெர்தூசு) பேச விரும்புவதாக அவர்கள் கூறினர். சில நிமிடங்களில், என் மூத்த மகன் காளிசரண் மற்றும் மகள் கல்பனா ஆகியோரும் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது, நானும் காளிசரனின் மனைவியும் மட்டுமே வீட்டில் இருந்தோம்."
குடும்பத் தலைவரும் விவசாயியுமான காளிசரண் கூறுகையில் மூன்று பேருடைய கண்களும் கைகளும் கட்டப்பட்டு வீட்டின் கிணற்றடியில் அமர வைக்கப்பட்டனர். அவர்களில் சிலர் கடைத்துறை சீருடையிலும் வேறு சிலர் லுங்கியிலும் இருந்தனர். முதலில் குதிராம் அழைக்கப்பட்டார். வங்காள மொழியில் பேசினர். கிணறு அருகே நீர்நிலை ஒன்றில் குதிராம் குனிய வைக்கப்பட்டார். அப்போது சுடுங்கள் என்ற ஆணையைக் கேட்ட குதிராம் உடனே தனது கட்டுக்களை கழட்டிக் கொண்டு நீரிலேயே ஓடி தப்பித்துக் கொண்டார். துப்பாக்கி சுட்ட ஒலியையும் கூக்குரலையும் அடுத்து காளிசரணும் தன் கைக்கட்டுகளை விடுவித்துக் கொண்டு ஓடி விட்டார். தாம் ஓடுகையில் பின்னால் கல்பனா "தாதா,தாதா, மாரே பஜா" (அண்ணா,அண்ணா, என்னைக் காப்பாற்று) எனக் கதறுவதைக் கேட்டதாக பின்னாளில் நிருபர்களுக்குக் கூறினார்.
தேடுகை
தொகுஇச்செய்தி சிற்றூரின் அனைத்திடங்களுக்கும் விரைவில் பரவியது. விடியற்காலையில் சாம்ராட் சூர் சக்மா என்ற அமைப்பினரின் உதவியுடன் குதிராம் கோஜொய்சாரி படைவீட்டிற்கு சென்று கல்பனா சக்மா குறித்து விசாரித்தார். முகாம் அதிகாரிகள் அவரை சாந்தி பாகினி என்ற தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினராக குறிப்பிட்டு எச்சரித்தனர். இதனால் ஏமாற்றத்துடன் குதிராம் வீடு திரும்பினார். மற்றொருபுரம் காளிசரண் உள்ளூர் காவல்நிலையம் சென்று குற்றத்தை பதிவு செய்தார். இருப்பினும் காவல்துறையோ படைத்துறையோ கல்பனாவை கண்டறிய எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.[11]
அரசின் பங்கு
தொகுதேசி, பன்னாட்டு ஊடகங்களில் இச்செய்தி வெளிவந்த பிறகு ரங்கமதி காவல்துறைக் கண்காணிப்பாளர் கல்பனா வீட்டிற்கு வந்தார். ரங்கமதி மாவட்டத்தில் மட்டும் 180 படைவீடுகள் இருப்பதாகவும் அங்குள்ள அனைவரையும் விசாரிப்பது இயலாத ஒன்று என்றும் தெரிவித்தார். 14 சூலை 1996 அன்று பல பெண்கள் அமைப்புகள் ஒன்றாக வங்காளதேச உள்துறை அமைச்சருக்கு மனு கொடுத்தனர். உள்துறை அமைச்சர் சிட்டகொங் மலைப்பகுதி சட்டம் ஒழுங்கு தம்முடையதில்லை என்று கூறி பிரதமரிடம் முறையிட பரிந்துரைத்தார். சிட்டகொங் வங்காளதேச படைத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறினார். காவல்துறை விசாரணைகளில் உள்ளூர் சாட்சிகளின் வாக்குமூலங்கள் எடுத்துக் கொள்ளப்படவில்லை. முதன்மைக் குற்றவாளியையும் விசாரிக்க வில்லை.[12]
வங்காளதேச படைத்துறையின் பங்கு
தொகு18 சூலை 1996 அன்று வங்காளதேச படைத்துறை கல்பனா சக்மாவை குறித்த தகவல் தருவோருக்கு டாக்கா 50,000 தருவதாக உலங்கு ஊர்தியிலிருந்து துண்டுப் பிரசுரங்களை வீசியது. படைத்துறையினர் வேண்டுமென்றே உண்மை வெளிவருவதை தடுப்பதாக மனித உரிமை அமைப்பான மலையக மனித உரிமை கண்காணிப்பு மன்றம் குற்றஞ் சாட்டியது. படைத்துறை லெப். பெர்டூசோ மற்ற படைத்துறை அதிகாரிகளோ இதில் ஈடுபடவில்லை என உறுதியாக மறுத்தது. தொடர்ந்த போராட்டங்களுக்கும் கண்டனங்களுக்கும் பின்னர் படைத்துறையினர் இதனை "காதல் விவகாரம்"என மறைக்கப் பார்த்தனர். இதனையும் மாற்றிக்கொண்டு 23 சூலை 1996 அன்று வெளியிட்ட அறிக்கையில் - "கல்பனா சக்மா கடவுச்சீட்டு பயன்படுத்தி வெளிநாட்டிற்கு இரகசியமாக சென்று விட்டார்" எனக் கூறினர். ஆனால் இதனை மறுத்த உள்ளூர் ஆர்வலர்கள் அவரிடம் கடவுச்சீட்டு இல்லாததை உறுதி செய்தனர். குற்றமிழைத்த அதிகாரிகள் இன்னமும் சேவையில் தொடர்வதாக பெண்ணிய குழுக்கள் குற்றஞ் சாட்டியுள்ளன.[13]
மேற்கோள்கள்
தொகு- ↑ Pankhurst, Donna, ed. (2007). Gendered peace : women's search for post-war justice and reconciliation. London: Routledge. p. 198. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0415956482.
- ↑ Ahmed, Hana Shams. "The business of 'othering' and 'othering' as business". The Daily Star. பார்க்கப்பட்ட நாள் 2 January 2016.
- ↑ "Culture of impunity encouraging crimes: Dr Mizan". The Daily Star. பார்க்கப்பட்ட நாள் 2 January 2016.
- ↑ Chakma, Shantimoy; Preetha, Sushmita S. "CID probe vexes all". The Daily Star. பார்க்கப்பட்ட நாள் 2 January 2016.
- ↑ Parker, Lydia. "Kalpana Chakma - Lost But Not Forgotten in Bangladesh". HuffPost. HPMG News. பார்க்கப்பட்ட நாள் 2 January 2016.
- ↑ "Kalpana Chakma". Dhaka Tribune. Archived from the original on 6 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 2 January 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Chowdhury, Elora Halim (2011). Transnationalism reversed women organizing against gendered violence in Bangladesh. Albany: State University of New York Press. pp. 175. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1438437538.
- ↑ Sathi, Muktasree Chakma. "Kalpana abduction: Government backing perpetrators – civil society". Dhaka Tribune. Archived from the original on 1 ஆகஸ்ட் 2013. பார்க்கப்பட்ட நாள் 2 January 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Ramakrishnan, Nitya (30 May 2013). In Custody: Law, Impunity and Prisoner Abuse in South Asia. SAGE Publications India. p. 236. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788132116325. பார்க்கப்பட்ட நாள் 2 January 2016.
- ↑ "Arrest of Kalpana Chakma's abductors demanded". Dhaka Tribune. Archived from the original on 1 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 2 January 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Watch, Human Rights (2009). Ignoring executions and torture : impunity for Bangladesh's security forces. New York, NY: Human Rights Watch. p. 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1564324832.
- ↑ Preetha, Sushmita S. "For the Kalpana Chakma I know and the one I never will". The Daily Star. பார்க்கப்பட்ட நாள் 2 January 2016.
- ↑ "Repression against women to go on if perps not punished". The Daily Star. பார்க்கப்பட்ட நாள் 2 January 2016.
வெளி இணைப்புகள்
தொகு- கல்பனா சக்மா நினைவாக [1] பரணிடப்பட்டது 2011-07-16 at the வந்தவழி இயந்திரம்
- [2]
- கல்பனா சக்மாவின் கடத்தல்
- [3]
- [4]