கல்பகாலம்
இந்து சமய நூல்களில் கல்பகாலம் என்பது படைப்புக் கடவுள் பிரம்மனின் ஒரு பகலின் கால அளவைக் குறிக்கும்.
ஆயிரம் மகாயுகங்கள்
தொகுபகவத்கீதை[1] 'ஆயிரம் யுகங்களின் கால அளவு பிரமனின் ஒரு பகல் அளவு' என்று குறிப்பிடுகிறது. இங்கு 'யுகம்' என்பது 'மகாயுகம்' என்பதைக் குறிக்கிறது என்பதை உரையாசிரியர்கள் அனைவரும் சுட்டிக் காட்டுகிறர்கள். ஒரு மகாயுகம் என்பது தொடர்ந்து வரும் நான்கு யுகங்களின் கால அளவு. அதாவது வடமொழியில் 'சதுர்யுகம்' என்று வழக்கில் இருப்பது. இதன் அளவு கீழே காட்டியபடி:
யுகம் | ஆண்டுகள் |
---|---|
கிருத யுகம் அல்லது ஸத்யயுகம் | 17,28,000 |
திரேதா யுகம் | 12,96,000 |
துவாபர யுகம் | 8,64,000 |
கலி யுகம் | 4,32,000 |
ஆக ஒரு மகாயுகம் என்பது 43,20,000 மானிட ஆண்டுகள் கொண்டது. ஆயிரம் மகாயுகங்கள் 432 கோடி மானுட ஆண்டுகளுக்குச் சமம்.
பதினான்கு மன்வந்தரங்கள்
தொகுஒரு கல்பகாலத்திற்குள் பதினான்கு 'மனு'க்களும் பதினான்கு இந்திரர்களும் வந்து செல்கிறார்கள். 'மனு' என்பவர் பூமி அனைத்துக்கும் மன்னராவார். இந்திரன் தேவலோகத்திற்கு மன்னராவார். ஒரு மனுவின் காலம் 71 மகாயுகங்கள். இந்திரனின் கால அளவும் அவ்வளவே. இக்கால அளவிற்கு 'மன்வந்தரம்' என்று பெயர். இரு மன்வந்தரங்களுக் கிடையில் ஒரு இடைவேளை ('ஸந்தியா காலம்') நான்கு கலியுககால அளவு கொண்டதாக இருக்கும். அதாவது 17,28,000 மானிட ஆண்டுகள். 14 மன்வந்தரங்களும் முடிந்தவுடன் ஒரு இடைவேளை இருக்கும். ஆக, பிரமனின் ஒரு பகலில், 71 மகாயுகங்களும். 15 ஸந்தியாகாலங்களும் இருக்கும்.
- 14 மன்வந்தரங்கள் = 71 × 14 மகாயுகங்கள் = 994 மகாயுகங்கள்.
- 15 ஸந்தியாகாலங்கள் = 15 × 17,28,000 ஆண்டுகள் = 6 × 43,20,000 ஆண்டுகள் = 6 மஹாயுகங்கள்.
ஆக பிரமனின் ஒரு பகலில் ஆயிரம் மகாயுகங்கள்.
மன்வந்தரங்களின் பெயர்கள்
தொகுமன்வந்தரங்கள் கீழேயுள்ள வரிசையின்படி ஒன்றன்பின் ஒன்றாக வரும். ஒவ்வொரு மன்வந்தரமும் அப்பொழுதுள்ள மனுவின் பெயரைத் தாங்குகின்றது. இப்பொழுது நடப்பது ஏழாவது மன்வந்தரமான வைவஸ்வத மன்வந்தரம். சூரியனுடைய மைந்தனான வைவஸ்தமனு இப்பொழுதுள்ள மனு ஆவார். முதல் ஏழு மன்வந்தரங்கள் பின்வருமாறு.
- சுவாயம்புவ மன்வந்தரம்
- சுவாரோசிஷ மன்வந்தரம்
- உத்தம மன்வந்தரம்
- தாமச மன்வந்தரம்
- ரைவத மன்வந்தரம்
- சாக்ஷுஷ மன்வந்தரம்
- வைவஸ்வத மன்வந்தரம்
தற்போதைய மன்வந்தரம் முடிந்தபின் வரப்போகும் ஏழு மனுக்களின் பெயர்களும் புராணங்களில் கூறப்பட்டிருக்கின்றன. அவை:
- ஸாவர்ணி
- தக்ஷஸாவர்ணி
- பிரம்மஸாவர்ணி
- தர்மஸாவர்ணி
- ருத்ரஸாவர்ணி
- தேவஸாவர்ணி
- இந்திரஸாவர்ணி
இன்றைய மன்வந்தரம்
தொகுஇன்றைய மன்வந்தரமான வைவஸ்வத மன்வந்தரத்தில் 27 மகாயுகங்கள் சென்றுவிட்டன. இப்பொழுது நடப்பது 28-வது மகாயுகம். இதனுள் மூன்று யுகங்கள்—அதாவது, கிருதயுகம், திரேதாயுகம், துவபரயுகம்—சென்றுவிட்டன. இப்பொழுது நடப்பது கலியுகம். இதனுள் பொ.ஊ. 2011க்குச்சரியான கலியுக ஆண்டு 5112-13.
இன்றைய கல்பம்
தொகுஇப்பொழுது நடந்துகொண்டிருக்கும் கல்பம் அல்லது பிரம்மாவின் பகலுக்கு 'சுவேத வராஹ கல்பம்' என்று பெயர். இக்கல்பத்தினுள், 7-வது மன்வந்தரமான வைவஸ்வத மன்வந்தரத்தில், 28-வது மகாயுகத்தில், கலியுகம் நடந்துகொண்டிருக்கிறது.
பிரம்மாவின் இரவு
தொகுபிரம்மாவின் இரவில் இந்திரனோ, மனுவோ, பூலோகமோ எதுவும் இருக்காது. பிரம்மாவும் தூங்கும் நிலையில் இருப்பார். பிரம்மாவின் அடுத்த நாள் காலையில் அவர் மறுபடியும் முன்போல் படைப்பைத் தொடங்குவார். அந்த நாள் முடிவில் ஊழிக்கால சம்பவங்கள் நடந்து எல்லாம் இறைவனிடத்தில் ஒடுங்கும். இப்படி ஒவ்வொரு கல்பத்திலும் நடக்கும். இதுதான் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் பிரம்மாவின் வாழ்க்கை. இவ்விதம் 360 நாட்கள் கொண்ட ஆண்டுகளாக, நூறு ஆண்டுகள் இந்த பிரம்மா இருப்பார். அவர் ஆயுள் முடியும்போது, இன்னும் பெரிய பிரளயம் ஏற்பட்டு அவரும் இறைவனிடம் ஒடுங்குவார்.
மற்ற சில கல்பங்கள்
தொகுபிரம்மாவின் ஆயுட்காலம் 100 பிரம்ம ஆண்டுகள். அந்தக் காலத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு 'பரார்த்தங்கள்' என்று புராணங்களில் சொல்லப்படுகின்றன. இப்பொழுது முதல் பரார்த்தம் முடிந்து இரண்டாவது பரார்த்தத்தின் முதல் கல்பம் சென்றுகொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்குமுன் முடிந்து போன முதல் பரார்த்தத்தின் கடைசி நாள் 'பாத்ம' கல்பம் எனப்படும். முதல் பரார்த்தத்தின் முதல் நாள் 'பிராம்ம' கல்பம் எனப்படும். இவையிரண்டு கல்பத்தைப் பற்றியும் புராணங்களில் சில சம்பவங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன.
'பரார்த்தம்' என்ற சொல் கணிதத்தில் 1017 என்ற எண்ணைக் குறிக்கும். பிரம்மாவின் ஆயுட்காலத்தின் பாதியிலும் ஏறக்குறைய அத்தனை மனித ஆண்டுகளே எனப் புராணங்கள் கொள்கின்றன.ஆனாலும் கணக்கிட்டுப் பார்க்கும்போது இதில் வேறுபாடு தெரிகின்றது.
- ஒரு மகாயுகம் = 432 × 104 மனித ஆண்டுகள்.
- ஒரு கல்பம் அல்லது பிரம்மாவின் ஒரு பகல் = 432 × 107 மனித ஆண்டுகள்.
- ஒரு பகலும் ஓரிரவும் சேர்ந்தது = 864 × 107 மனித ஆண்டுகள்
- இப்படி 360 நாட்கள் கொண்ட பிரம்மனின் ஓர் ஆண்டு = 360 × 864 × 107 மனித ஆண்டுகள்
- இப்படி 50 பிரம்ம-ஆண்டுகள் = 50 × 360 × 864 × 107 .
இது ஏறக்குறைய 1014 × 1.5 மனித ஆண்டுகளாகின்றது. இது கணிதப்படி பரார்த்தம் ஆகாவிட்டாலும் இதையே பிரம்மனின் பரார்த்தம் என்று புராணங்கள் சொல்கின்றன.
ஆதாரம்
தொகுபுராணங்களில் சொல்லப்பட்டுள்ளது ஓர் ஆதாரம். காலகதியின் ஒவ்வொரு அளவிற்குமுள்ள முடிவான ஆதாரம் அக்காலத்தில் வசித்தவர்களின் வாக்குமூலமே. இந்தியாவில் தொன்றுதொட்டு நடந்துவந்த மணம் முதலிய அத்தனை சுபகாரியங்களிலும், ஈமக்கிரியைகள் முதலிய அத்தனை அமங்கலச்சடங்குகளிலும் அன்றுள்ள நேரம் காலம் முதலிய கணக்கீடுகளைச் சொல்லாமல் ஒரு செயலும் நடந்ததில்லை என்பதால் சென்றகாலத்துக் கணக்கீடுகள் பஞ்சாங்கங்கள் என்று புழங்கப்படும் ஏடுகளில் குறிக்கப்பட்டு வருகின்றன எனக் கொள்ளலாம்.
உசாத்துணைகள்
தொகு- ஸ்ரீமத் பாகவத மகாபுராணம், எட்டாவது ஸ்கந்தம், அத்தியாயம் 13, 14.
மேற்கோள்கள்
தொகு- ↑ ஸஹஸ்ரயுகபர்யந்தம் அஹர்யத் பிரம்மணோ விது: -- பகவத் கீதை 8 - 17