கல்லடி வேலுப்பிள்ளை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கல்லடி வேலுப்பிள்ளை (மார்ச் 7, 1860 - 1944) 'ஆசுகவி' என ஈழத்தமிழர்களால் அன்புடன் போற்றப் பெற்ற ஈழத்துக் கவிஞர்.
கல்லடி வேலுப்பிள்ளை | |
---|---|
பிறப்பு | மார்ச் 7, 1860 வயாவிளான், யாழ்ப்பாண மாவட்டம் |
இறப்பு | 1944 வசாவிளான் |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
பெற்றோர் | கந்தப்பிள்ளை, வள்ளியம்மை |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுயாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பகுதியில் ஒரு சிற்றூரான வயாவிளான் என்னும் ஊரில் கந்தப்பிள்ளை - வள்ளியம்மை தம்பதிக்கு 1860 ஆம் ஆண்டு வேலுப்பிள்ளை பிறந்தார். வசாவிளான் கிராமத்தில் வேலுப்பிள்ளை பிறந்த வீட்டினருகே ஒரு பெரிய கல் மலை இருந்தது. கல் மலைக்கு அருகேயிருந்த வீட்டில் தோன்றிய வேலுப்பிள்ளை, இளமைக் காலத்திலிருந்தே கல்லடி வேலுப்பிள்ளை எனக் குறிப்பிடப் பெற்றார்.
அகஸ்டீன் என்பவரிடம் தொடக்கக் கல்வி பயின்ற வேலுப்பிள்ளை, பின்னர் பெரும்புலவர் நமசிவாயம், அறிஞர் நெவின்சன் சிதம்பரப்பிள்ளை, புன்னாலைக்கட்டுவன் வித்துவான் கதிர்காம ஐயர் ஆகிய தமிழ்ச் சான்றோர்களிடம் தமிழ் மொழியை முறையாகக் கற்றுப் புலமை பெற்றார். வடமொழி ஆர்வத்தால், அம்மொழியைப் பண்டிதர் ஒருவரிடம் கற்றுக் கொண்டார்.
குடும்பம்
தொகுவேலுப்பிள்ளை உரும்பிராயைச் சேர்ந்த ஆச்சிக்குட்டி என்பாரைத் திருமணம் புரிந்தார். சில ஆண்டுகளில் ஆச்சிக்குட்டி காலமாகி விடவே, அவரது உடன் பிறந்த சகோதரியான ஆச்சிமுத்து என்பவரை மனம் புரிந்தார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள். இவர்களில் மூத்தவர் க. வே. சுப்பிரமணியம் (கல்லடி மணியம்). இவர் யாழ்ப்பாணத்தில் பிரபல சமூக சேவகராக விளங்கியவர். இரண்டாவது புதல்வர் க. வே. நடராசா ஒரு சட்ட மேதை. இவர் இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தலில் பண்டாரவளை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மூன்றாமவர் எழுத்தாளர் க. வே. சாரங்கபாணி. நான்காமவர் நயினார் க. வே. இரத்தினசபாபதி. இவர் இலங்கை இராணுவத்தில் பணி புரிந்தவர். ஆங்கிலத்தில் சிறந்த எழுத்து வன்மை கொண்டவர்.
இதழியல் துறையில் ஆர்வம்
தொகுபல்வேறு பணிகளில் ஆசுகவி வேலுப்பிள்ளை, தமது நாற்பதாம் வயது வரை கவனமும் கருத்தும் செலுத்திவரினும், இளமைக் காலம் முதலாகவே, ஓர் இதழினைத் தொடங்கி நடத்த வேண்டுமென்ற அவரது கனவு நாற்பது வயதிற்குப் பின்னரே நனவானது. ஒரு சில அன்பர்களின் உதவியுடன் தமிழ் நாட்டுக்கு வருகை புரிந்து, சென்னையில், ஓர் அச்சு இயந்திரத்தை வாங்கிச் சென்று, யாழ்ப்பாணத்தில் சுதேச நாட்டியம் இதழைத் தோற்றம் பெறச் செய்தார் வேலுப்பிள்ளை.
தமிழ் மொழியில் வசன நடையை வளம் கொழிக்கச் செய்த சான்ரோர்களில் ஆசுகவியும் ஒருவரென்பதை 'சுதேச நாட்டிய'த்தில் அவர் எழுதிய கட்டுரைகளிலிருந்து தெளிவாக அறிய முடிகிறது. 'சுதேச நாட்டியம்' பன்னெடுங்காலம், ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின் உள்ளக் கருத்துகளை வெளிப்படுத்தும் அரியதோர் இதழாகத் திகழ்ந்து, அவரது பன்முகத் தமிழ்த் திருப்பணிகளைத் தமிழுலகம் உணர்ந்து போற்றுமாறு செய்வித்தது.
ஆசுகவி
தொகுநினைக்கின்ற நேரமெல்லாம், அருவியாய்க் கவிதையைக் கொட்டும் ஆற்றலை இளமைக்காலத்திலிருந்தே பெற்றிருந்த வேலுப்பிள்ளையை, மக்கள் ஆசுகவி என அழைத்தனர். பல்லாயிரக்கணக்கான பாடல்களை, ஆசுகவி வேலுப்பிள்ளை பாடி வழங்கியிருப்பினும், அவரது கவிதை நூல்களுள் கதிர மலைப் பேரின்பக் காதல், மேலைத் தேய மதுபான வேடிக்கைக் கும்மி, உரும்பிராய் கருணாகர விநாயகர் தோத்திரப் பாமாலை ஆகியன பெரும் பெயர் பெற்றன.
உரைநடை
தொகுகவியாற்றலில் வல்லமை கொண்டிருந்த வேலுப்பிள்ளை, உரைநடை எழுதுவதில், இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே, திறமும் உரமும் பெற்றுத் திகழ்ந்தார். ஈழத்தில் ஆறுமுக நாவலருடைய காலத்திற்குப் பின்னர், அப்பெருமானின் வழி நடந்து, தமிழ் வசன நடைக்குச் செழுமையூட்டச் செழிக்கச் செய்தவர் கல்லடி வேலுப்பிள்ளை ஆவார்.
ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை கண்டன நூல்கள் சில எழுதினார். கடவுள் துதி நூல்கள் சில உருவாக்கினார். வரலாற்று ஆய்வு நூல்களும் படைத்தளித்தார். ஏறத்தாழ இருபது நூல்கள் படைத்த அப்பெருந்தகை, தமது நூல்களில் கையாண்டுள்ள வசன நடை, தமிழின் உரைநடைச் செல்வத்தை ஒளிபெறச் செய்தது. அவரது திறமிக்க ஆய்வுப் புலமைக்கு எடுத்துக் காட்டாக விளங்குவது யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
எழுதிய நூல்கள்
தொகு- யாழ்ப்பாண வைபவ கௌமுதி
- கதிர மலைப் பேரின்பக் காதல்
- மேலைத் தேய மதுபான வேடிக்கைக் கும்மி
- உரும்பிராய் கருணாகர விநாயகர் தோத்திரப் பாமாலை
உசாத்துணை நூல்கள்
தொகு- குன்றக்குடி பெரியபெருமாள் (1994), தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள், சென்னை: காமதேனு பதிப்பகம்