காக்கை பாடினியார் நச்செள்ளையார்

(காக்கைப் பாடினியார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

காக்கை பாடினியார் நச்செள்ளையார் கடைச்சங்ககாலப் பெண்பால் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் 12 உள்ளன.

இவரின் பாடல்கள் எட்டுத்தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன.

நச்செள்ளை என்பது இவரின் இயற்பெயர் ஆகும். இப்பெயரில் பலர் இருந்த காரணத்தால் காக்கையைப் பாடிய இவர் காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் என அழைக்கப்பெற்றுள்ளார். குறுந்தொகையில் இவர் தம் பாடல் ஒன்றில் 'விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே’ என்று குறிப்பிட்டுள்ளமையால் இவரைக் காக்கை பாடினியார் என்று குறிப்பிட்டுள்ளனர். காக்கைக்கு உணவிடும் வழக்கம் சங்க காலத்தில் இருந்தது என்பதற்கு இப்பாடல் சான்று. அக்காக்கைக்கு வைக்கப்படும் சோறு ‘பலி’ எனக்குறிக்கப்பெற்றுள்ளது. காக்கை கத்தும் ஒலியைக் கரைதல் என்றும் இப்பாடல் குறிப்பிடுகிறது.

இவர் தொண்டி என்ற ஊரைப் பாடியதால் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவராக இருக்கலாம். இவர் பதிற்றுப் பத்தில் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பாடியதால் சேர நாட்டைச் சார்ந்தவர் என்ற கருத்தும் உள்ளது. பதிற்றுப் பத்தின் பதிகம் இவரை ‘அடங்கிய கொள்கைக் காக்கைப் பாடினியார்’ என்று குறிப்பிடுகின்றது. இதன்காரணமாக சான்றாண்மைத் தன்மை வாய்ந்தவராக இப்புலவர் அறியப்பெறுகின்றார்.

இவரது பாடல் கூறும் செய்திகள்:

குறுந்தொகை 210

தொகு

திண்தேர் நள்ளி கானத்து அண்டர்
பல்ஆ பயந்த நெய்யின் தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
எழுகலத்து ஏந்தினும் சிறிது – என்தோழி
பெருந்தோள் நெகிழ்ந்த செல்லற்கு
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே

என்பது காக்கைப் பாடினியார் பாடிய பாடல் ஆகும். இப்பாடல் முல்லைத் திணைப் பாடலாகும். இதன் துறை பிரிந்து வந்த தலைமகன் நன்கு ஆற்றுவித்தாய் என்றற்குத் தோழி உரைத்தது என்பதாகும். அதாவது தலைவன் பிரிந்து சென்றுவிட்டான். அவன் வரும்வரை தலைவிக்கு துன்பம் வராமல் பாதுகாத்து வந்தவள் தோழி. அவளின் பாதுகாப்பினைப் பாராட்டிய தலைவனுக்குத் தோழி சொன்ன பாடலாக இது அமைகின்றது. பொருள் தேடிக்கொண்டு தலைவன் திரும்பிவிட்டான். நான் திரும்புவரையில் தலைவியை நன்கு ஆற்றுவித்தாய் என்று தோழியைப் பாராட்டினான். அதற்குத் தோழி சொல்கிறாள். காக்கை விருந்து வரப்போவதை அறிவிக்கும் அறிகுறியாகக் கரையும். (இது ஒரு நம்பிக்கை) இங்குக் காக்கை ஒவ்வொரு நாளும் கரைந்தது. அதைக் காட்டி இதோ வந்துவிடுவரார் என்று கூறித் தலைவியைத் தேற்றிவந்தேன். உண்மையில் நீ அந்தக் காக்கையைத்தான் பாராட்ட வேண்டும். பாராட்டும் முகத்தான் அதற்கு விருந்தாகப் பலியுணவு தரவேண்டும்.

தொண்டி என்ற ஊரில் உள்ள வயல்களில் விளைந்த வெண்மையான நெல் மிகவும் புகழ் வாய்ந்தது. கடையெழு வள்ளல்களுள் ஒருவனான நள்ளி என்பவன் காட்டில் வாழும் பசுக்களின் பால் வழியாகப் பெற்ற நெய்யும் புகழ் வாய்ந்தது. வெண்ணெல்லைச் சோறாக்கி அதனுடன் நெய்யைக் கலந்து நெய்ச்சோறு செய்து ஏழு மண் பானைகளில் அவற்றை வைத்து அதனை காக்கைகளுக்கு படையலாகப் படைத்தாலும் அது அக்காக்கை செய்த உதவிக்குச் சிறிய நன்றியாகவே இருக்கும். ஏனெனில் அக்காக்கை காலையில் தலைவன் வருவான் என்பதைச் சொல்வதாகக் கரைந்தது. மாலை தலைவன் தலைவியை நாடிப் பெரும்பொருளுடன் வந்துவிட்டான். ஆகவே காக்கை செய்த உதவிக்கு எவ்வளவு சோறு கொடுத்தாலும் அது சிறிய அளவினதே ஆகும்.

தோழி காக்கை கரைந்ததை நல்ல நிமித்தமாக எடுத்துக்கொண்டு காக்கைக்கு நன்றி சொல்வதன் வழியாக வந்த தலைவனுக்கு நன்றியைத் தெரிவிக்கிறாள். தலைவனிடம் நேருக்கு நேராக நன்றியைத் தெரிவிப்பது என்பதுகூட ஆண்மகனிடம் பேசுவதில் எல்லை மீறிவிடலாம் என்பதால் தன் நன்றியைக் காக்கையிடம் வைத்து இப்பாடலில் காட்டுகிறாள் தோழி.

பலிச்சோறு

தொகு

நள்ளி கானத்தில் அண்டர் வளர்த்த பசுக்கள் தந்த பாலில் காய்ச்சிய நெய்யில் குழைத்து, தொண்டியில் விளைந்த நெல் முழுவதையும் கொண்டு சோறாக்கிப் பிணைந்து, ஏழு உண்கலங்களில் பலியுணவாக வைத்தாலும் அந்தக் காக்கைகள் நாளும் கரைந்து சொன்ன நற்செய்திக்குச் செயத நன்றி சிறிதேயாகும். - தோழி கூற்று.

புறம் 278

தொகு

நரம்பு எழுந்துஉலறிய திறம்பட மென்தோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
பண அழித்து மாறினன் என்று பலர்கூற
மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின்உண்ட
முலை அறுத்திடுவென் யான் எனச் சினைஇ
கொண்ட வாளொடு படுபியம் பெயரா
செங்களம் துழவுவோள் சிதைந்து வேறுஆகிய
படுமகன் கிடக்ககை காணுஉ
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே"


இப்பாடலின் திணை, தும்பைத் திணையாகும். இரு அரசர்கள், நேருக்கு நேராகப் போர் செய்யும்போது ஏற்படும் விளைவுகளைப் பாடுவது தும்பைத் திணைப் பாடல் என்று குறிப்பிடுவர். இதற்கு அடையாளப் பூ, 'தும்பை' ஆகும். இந்தப் பாடல், 'உவகைக் கலுழ்ச்சி' என்னும் துறையைச் சேர்ந்தது. விழுப்புண் பெற்ற உடலைக் கண்டு மகிழ்ந்து, கண்ணீர் வடிப்பது இத்துறையாகும். உவகைக் கலுழ்ச்சி என்பது ஆனந்தக் கண்ணீர். வீரத்தாய் ஒருத்தி மகிழ்ச்சிக் கண்ணீர் விடுவதை இந்தப் பாடல் தெரிவிக்கிறது.

அந்தத் தாய் நரம்பு தெரியும்படி இளைத்துக் காணப்பட்டாள். அவளது இடுப்பு, முளரி(விறகு) போல் இருக்கிறது. போருக்குச் சென்ற அவளது மகன் திரும்பிவிட்டான் என்று பலர் அவளிடம் கூறினர்.

'படையழித்து மாறினன்' = படையை அழித்துவிட்டுத் திரும்பும்போது கொல்லப்பட்டான்.

இதனைக் கேட்ட தாய் சொன்னவர்கள்மீது சினம் கொண்டாள். என்மகன் போரைக் கண்டு மனம் உடைந்திருந்தால், அவன் பாலுண்ட என் முலையை அறுத்தெறிவேன் என்று சொல்லிக்கொண்டு அறுப்பதற்கான வாளுடன் போர்க்களம் சென்றாள். போர்க்களத்தில் கிடக்கும் பிணங்களில் தன் மகனைத் தேடிப் பார்த்தாள். கண்டாள். அவன் மார்பில் வெட்டப்பட்டுச் சிதைந்து கிடந்தான். அதனைக் கண்டதும் அவளுக்கு மகிழ்ச்சிக் கண்ணீர் பொங்கியது. அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சியில் அவள் அப்போது திளைத்தாள்.

தமிழ்ப் பெண்களின் வீரத்தைக் காட்டும் பாடல் இதுவாகும். இப்பாடலில், தன் மகன் போர் செய்யும் முதுகு காட்டினான் என்று பலர் சொல்ல, அவ்வாறு அவன் முதுகு காட்டியிருந்தால், அவனுக்கு பால் தந்த மார்பினை அறுத்துவிடுவேன் என்ற ஒரு தாய் போர்க்களம் புகுந்த செய்தியைக் குறிப்பிடுகின்றது. இப்பாடலில் அந்த வீரப்பெண்ணை முதியவள் என்று குறிக்கிறது பாடல். அவளின் உடலில் நரம்புகள் வெளிப்பட தெரியும் அளவிற்கு அவள் முதுமை பெற்றவளாக உள்ளாள். தாமரை போன்ற அடிவயிற்றினை உடையவளாக அவள் விளங்கினாள். இப்பாடலில் இடம்பெறும், முதியவள், முலை, துழவுவோள், உவந்தனள் போன்ற சொற்கள் இப்பாடல் ஒரு பெண்பாற் புலவரால் இயற்றப்பெற்றது என்பதற்குச் சான்றுகள் ஆகும். இம்முதியவள் பெற்ற சிறுவன் (போர்க்குரிய வயதினை அடையாதவன்) போரில் முதுகு காட்டினான் எனப் பலர் சொல்ல, இவள் போர்க்களம் புகுந்து பார்த்தாள். அங்கு அவன் வேறு வேறாகச் சிதைந்த தன் மகன் உடலைக் கண்டு, அவன் வீரத்துடன் போர்புரிந்துள்ளான் என்று மகிழ்ந்தாளாம். மகன் இறந்தான் என்ற வருத்தத்தையும் மீறி, அம்மூதாட்டி தன் மகன் நாட்டைக் காக்கப் போர்புரிந்து அழிந்தான் என்று மிக மகிழ்கிறாள். மேலும் பல உடல்கள் போர்க்களத்தில் கிடக்கத் தன் மகன் உடலை அவளால் அடையாளம் காணமுடிகிறது என்றால் அவளின் தாய்மை உணர்வின் கூர்மையை அறிந்து கொள்ள முடிகின்றது.

பதிற்றுப்பத்து ஆறாம்பத்து

தொகு

குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும், வேஅள் ஆவிக் கோமான் தேவிக்கும் பிறந்த மகனான ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைச் சிறப்பித்துப் பத்துப் பாடல்களைக் காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் பாடியுள்ளார். ஆண்கள் தொகுப்பாக பாடும் தொகுப்பு நூல்களில், பெண்களுக்கு இடம் கிடைப்பது என்பது கடினம். இத்தொகுப்பில் காக்கைப் பாடினியார் நச்செள்ளையாருக்குக்குக் கிடைத்துள்ளது.

இவ்வரசன் தண்டகாரணியத்தில் உள்ளவர்களால் கொள்ளையிட்டுச் செல்லப்பெற்ற மலையாட்டுக் கூட்டத்தைத் தடுத்துத் தொண்டிக்குக் கொண்டுவந்தான் என்பதால் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் எனப்பட்டான். இவனைப் பாடியதால் ஒன்பதுகால் பொன்னும், நூறாயிரம் காணமும் பரிசாகப் பெற்றார்.

வடுஅடு நுண் அயிர், சிறு செங்குவளை, குண்டு கண் அகழி, நில்லாத்தானை, துஞ்சும் பந்தர், வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி, சில்வளை விறலி, ஏ விளங்கு தடக்கை, மாகூர் திங்கள், மரம்படு தீங்கனி என்ற பத்துத் தலைப்புகளில் இவர் பாடல்களைப் பாடியுள்ளார்.

இப்பத்துப்பாடல்களில் பெண் எழுத்துக்குரிய தனி அடையாளங்கள் பலவற்றைக் கொண்டு இவர் பாடல்கள் பாடியுள்ளார்.

ஆறாம்பத்து - பதிகம்

தொகு

இது பத்துப்பாட்டு நூலைத் தொகுத்தவர் சேர்த்த செய்தி உரை. இதில் கூறப்படும் செய்திகள்:

பெற்றோர்

தொகு

தந்தை - குடக்கோ நெடுஞ்சேரலாதன். செங்குட்டுவனின் தந்தையும் இவன்தான்.
தாய் - வேள் ஆவிக் கோமான் தேவி (ஆவியர் குடி மக்கள் பழனிமலைப் பகுதியில் வாழ்ந்தனர். அவர்களின் மன்னனுடைய மகள். வேளிர் குடியைச் சேர்ந்தவள்.)

வெற்றிகள்

தொகு
  • தனக்குப் பகையாய் இருந்த மழவர் எண்ணிக்கையைப் போரிட்டுச் சுருக்கினான்.

செயல்கள்

தொகு
  • மழவரோடு போரிடுகையில் தண்டாரணியத்துப் பிடிபட்ட வருடை ஆடுகளைத் தன் தலைநகர் தொண்டிக்குக் கொண்டுவந்து எல்லாருக்கும் கொடுக்க ஏற்பாடு செய்தான்.
  • பார்ப்பார்க்குக் கபிலைப் பசுக்களோடு குடநாட்டில் இருந்த ஓர் ஊரையும் தானமாகக் கொடுத்தான்.

குடிமக்களைப் பேணிய முறை

தொகு
தன் நாட்டுக் குடிமக்களைத் தாய் குழந்தையைக் காப்பாற்றுவது போலப் பேணினான்.

உள்ளம்

தொகு
எதையும் நல்லது செய்து உதவும் நோக்கத்துடன் ஆராய்ந்து பார்க்கும் உள்ளம் கொண்டவன்.

புலவர் காக்கை பாடினியாரின் சிறப்பு

தொகு
'யாத்த செய்யுள்' இவருக்குப் புகழ் சேர்த்தது.
அடக்கமே இவரது கொள்கை.

பாடிப் பெற்ற பரிசில்

தொகு
இந்தப் பதிற்றுப்பத்துப் பாடல்களைப் பாடியதற்காக அரசன் இவருக்குப் பொன்னும், காசும் பரிசாக வழங்கினான்.
வேண்டிய அணிகலன்கள் செய்துகொள்க என்று சொல்லி ஒன்பது கா நிறையளவு கொண்ட பொன் வழங்கினான்.
நூறாயிரம் (ஒரு லட்சம்) காணம் காசாக(பணமாக) வழங்கினான்.

அரசன் அரசு வீற்றிருந்த ஆண்டுகள்

தொகு
38 ஆண்டுகள் அவன் அரசனாக விளங்கினான்.

மேலும் காண்க

தொகு

வெளியிணைப்புகள்

தொகு

http://thamizmandram.blogspot.in/2006/12/blog-post_26.html