காங்கேசன்துறை நடேசுவரா கல்லூரி
காங்கேசன்துறை நடேசுவராக் கல்லூரி இலங்கையின் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் காங்கேசன்துறையில் உள்ள நடேஸ்வராக் கல்லூரி வீதியில் அமைந்துள்ள ஒரு பாடசாலை ஆகும். யாழ்ப்பாணத்தில் மிகவும் புகழ் பெற்ற பாடசாலையாக இது திகழ்ந்தது. குரு வீதிக்கு வடக்குப் பக்கமாகவும் சந்தை வீதிக்குத் தெற்குப் பக்கமாகவும், காங்கேசன்துறை வீதிக்கு அருகாமையிலும் இக்கல்லூரி அமைந்திருந்தது. ஈழப்போர் காரணமாக இப் பகுதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் வந்ததால் இக்கல்லூரி மாணவர்களின் பாதுகாப்புக் கருதித் தெற்கு நோக்கி இடம் பெயரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நேர்மை நெறி நில் என்பது கல்லூரி வாசகம் ஆகும்.
தொடக்கத்தில் தமிழ்க் கலவன் பாடசாலையாக இயங்கியது. இது பாலர் பிரிவு தொடக்கம் உயர்தர வகுப்புகள் வரை கொண்டுள்ளது.
நடேஸ்வராக் கல்லூரி வீதிக்கு வடக்குப் பக்கத்தில் கனிட்ட பாடசாலையும், தெற்குப் பக்கத்தில் உயர்தரப் பாடசாலையும் அமைந்துள்ளன. காங்கேசன்துறை நகரத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்ல, கிழக்கே கீரிமலை, போயிட்டி, மேற்கே மயிலிட்டி, பலாலி, தெற்கே மாவிட்டபுரம், கட்டுவன், குரும்பசிட்டி போன்ற பகுதிகளில் இருந்தும் பல மணவர்கள் இங்கே வந்து கல்வி கற்கின்றனர்.
இலங்கை அரசு இப்பாடசாலையைப் பொறுப்பேற்கும்வரை தம்பிப்பிள்ளை, மாவிட்டபுரத்தைச் சேர்ந்த சிவஞானம் ஆகியோர் தொடக்கத்தில் இக்கல்லூரியின் முகாமையாளர்களாகப் பணியாற்றினர்.
சின்னத்தம்பி, இடையாற்று மங்களம் சுப்ரமணிய ஐயர், இடையாற்று மங்களம் சூடாமணி ஐயர், கந்தசாமி, மார்க்கண்டு, கிருஷ்ணபிள்ளை, சிவப்பிரகாசம், சோமசுந்தரம் போன்றோர் உயர்நிலைப் பாடசாலையில் அதிபர்களாகப் பணியாற்றினர். கனிட்ட பாடசாலையில் அக்காலத்தில் சபாபதிப்பிள்ளை, சிதம்பரப்பிள்ளை, கந்தையா, திருநாவுக்கரசு, மு.அ. குருநாதபிள்ளை ஆகியோர் அதிபர்களாக இருந்தார்கள்.