காஞ்சி மணிமொழியார்

காஞ்சி மணிமொழியார் (9 மே 1900 - 7 ஜூன் 1972) - தமிழ் அறிஞர், பதிப்பாளர், அரசியல்வாதி, சமூகத் தொண்டாளர் ஆவார். திராவிடர் இயக்கக் கருத்துக்களைக் கொண்ட 'போர் வாள்' என்ற இதழின் ஆசிரியராவார்.[1] சுயமரியாதை செம்மல் என்று பல பட்டங்களைப் பெற்றவர்.

காஞ்சி மணிமொழியார்
பிறப்பு9-மே-1900
காஞ்சிபுரம்
இறப்பு7-ஜூன்-1972
சென்னை
மற்ற பெயர்கள்மாணிக்கவாசகம்
பணிசமூகத் தொண்டாளர், பதிப்பாளர், அரசியல்வாதி, சீர்திருத்தவாதி
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்ற கழகம்
அரசியல் இயக்கம்இந்தி எதிர்ப்பு போராட்டம், சுயமரியாதை இயக்கம்
சமயம்நாத்திகர்
வாழ்க்கைத்
துணை
அபிராமி அம்மையார்

வாழ்க்கைக் குறிப்புதொகு

காஞ்சி மணிமொழியார் - தொண்டை நாட்டின் தலைநகராகிய காஞ்சிபுரத்தில் தமிழ் புலவரும் நூல் வணிகருமாகிய பெருநகர் செங்கல்வராய முதலியாரின் கடைசி மகனாக 09.05.1900 இல் பிறந்தவர் ஆவார்.[2]. காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் பயின்றார். இவருடைய துணைவியார் அபிராமி அம்மையார். இவருடைய மூத்த மகன் பேராசிரியர் மா. இளஞ்செழியன், இளைய மகன் மா. நடராசன், கட்டிட ஒப்பந்தக்காரர் மற்றும் மகள் மா. தமிழ் செல்வி, உயர்நிலைப்பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர். ந. இளவரசு இவரின் பேரனாவார், மற்றும் ந. கலைச்செல்வி, ந. தேன்மொழி, ந. வசந்தி இவருடைய பேத்திகள். . இவர் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்.[3] 1962 தேர்தலில் தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தமிழகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] [5] [6]

பதிப்பாளர்தொகு

காஞ்சி மணிமொழியார், 1947 ஆகஸ்டு 16 ஆம் நாள் "போர்வாள்" வார இதழை தொடங்கினார், இணை ஆசிரியராகவும் பணியாற்றினார். [7] . 1947 ஆகஸ்டு 16 முதல் ஆகஸ்டு 8, 1954 வரை ஏழு ஆண்டுகளும், சிறிய  இடைவெளிக்கு பிறகு, ஜனவரி 5, 1957 முதல் மே 3, 1958 வரை ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தில் போர்வாள் இதழ் வெளிவந்தது. "உண்மையை ஓளிக்காது எடுத்துச் சொல்வதே நமது இலட்சியம். அது யாருக்கு எவ்வளவு குமட்டலாக இருந்தாலும் சரி, அதைப்பற்றி நமக்கு கவலையில்லை. நெஞ்சில் பட்டத்தைப் பட்டாங்கு உரைக்கும் நேரிய வழி ஒன்றுதான் நமக்கு தெரியும். அது ஒன்றே போதும். புத்துலகப் பாடையில் தமிழகத்தைச் செலுத்தும் சீரிய பணியை மேற்போட்டுக் கொண்டுள்ள நமக்கு வேறு வழிகள் ஏனோ ?" என்கிற இவ் வாக்கியங்கள் அந்தப் பத்திரிகையின் முதல் இதழ் தலையங்கத்தில் காணப்பட்டவையாகும். [8][9]. [10] 1947 முதல் 1949 வரை திராவிடர் கழகத்தின் வளர்ச்சிக்காகவும், 1949ல் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப் பட்டதிலிருந்து அந்தக் கழகத்தின் செழிப்புக்காகவும், "போர்வாள்" சிறப்பாக பணியாற்றியிருக்கிறது. 1948ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை வளர்ப்பதற்காக சிறந்த எழுத்தோவியங்களை வழங்கியது. எழில் குலுங்கும் மலர்களை வெளியிட ஒரு குறிப்பிட்ட சமூகத்தாரால் நடத்தப்பட்ட பத்திரிகைகளால் மட்டுமே முடியும் என்ற நிலையை மாற்றி பலப்பல மலர்களை சிறந்த முறையில் வெளியிட்டது. அவற்றுள் சில - பெரியார் பிறந்த நாள் மலர் (1947 செப்டம்பர் ), பொங்கல் மலர்கள் (1948, 1951, 1958), திமுக முதலாண்டு நிறைவு மலர்(1950), "பராசக்தி" திரைப்பட வெற்றிவிழா மலர்(1952 டிசம்பர்), கலைவாணர் N. S. கிருஷ்ணன் நினைவு மலர்(1957 செப்டம்பர்) போன்றவை மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றன.

பத்திரிகை நடத்துவதில் இளமைப் பருவத்திலிருந்தே நிறைந்த ஆர்வம் இருந்ததால் அதில் தேர்ச்சியும் அனுபவமும் பெற்றிருந்தார். 1924-27ஆம் ஆண்டுகளில் வாலாஜா பாத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோதே காஞ்சிபுரம் யுனைடெட் அச்சகத்தில் நடத்தப்பட்ட "பாரதம்" என்னும் திங்கள் இதழின் ஆசிரியராக இருந்து திறம்பட நடத்தினார்.1929 முதல் "செங்குந்த மித்திரன் " திங்கள் இதழின் துணையாசிரியராகவும், 1934 முதல் அதன் ஆசிரியராகவும் அந்த இதழை பதினைந்து ஆண்டுகள் ஏற்றம்மிகு முறையில் நடத்தியவர் மணிமொழியார். 1937ல் அறிஞர் அண்ணா அவர்களை ஆசிரியராகக் கொண்டு "நவயுகம்" என்னும் வார இதழை நடத்திய பெருமையும் சிறப்பும் மணிமொழியாருக்கு உண்டு. அறிஞர் அண்ணா ஆற்றல் மிக்க ஓர் எழுத்துச் சிற்பியும் ஆவார் என்பதை உணர்ந்து அவருக்கு வாய்ப்பை முதன் முதலில் அளித்தது அந்த ஏடே ஆகும்.[11]

"போர்வாள்" கிழமை இதழைத் தமிழகமே வியந்து போற்றும் முறையில் சிறப்பாக நடத்திவந்த அதே சமயத்தில் "பகுத்தறிவு பாசறை" என்னும் புத்தக வெளியீட்டு நிறுவனம் ஒன்றை நிறுவி, அதன் வாயிலாகத் தமிழ் மக்களின் முன்னேற்றத்துக்காகவும் நல்வாழ்வுக்காகவும் பெருந்துணை புரியவல்ல அருந்தமிழ் நூல்கள் பலவற்றை வெளியிட்டார். "பகுத்தறிவு பாசறை"ல் வெளியிடப்பட்ட நூல்கள் சில - பேராசிரியர் க. அன்பழகன் இயற்றிய "வகுப்புரிமைப் போராட்டம் ", இராதாமணாளன் இயற்றிய "மனப்புயல்", "இளவரசி", "தேன்மொழி", "புதுவெள்ளம்", "பொற்சிலை", பேராசிரியர் மா. இளஞ்செழியன் இயற்றிய "தமிழன் தொடுத்த போர்", "ஈரோட்டு பாதை", "அறிஞர் அண்ணாதுரை", இந்திய அரசியல் சட்டம்". [12] அறிஞர் அண்ணாதுரை எழுதிய "அண்ணா கண்ட தியாகராயர்" [13]

மணிமொழியார் பதிப்பாளராக செய்த மற்றொரு புதுமை, "திராவிடர் நாட்குறிப்பு" என்னும் டைரியை வெளியிட்டதாகும். 1950 முதல் 1958 வரை, வெளியிடப்பட்டுவந்த நாட்குறிப்பில் - திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டதிட்டங்கள், சொற்பொழிவாளர்களின் முகவரிகள், திமுக பற்றிய தொகுப்பு நூலாக அது விளங்கி வந்தது. மேலும் பேரறிஞர் அண்ணாதுரை அவர்களின் அமுத மொழிகளையும், உலக அறிஞர்கள் பொன்மொழிகளையும், ஒரு நாளைக்கு ஒன்று என்னும் முறையில் அளித்து, அறிவுக்கருவூலமாகவும் அது திகழ்ந்தது.[14] [15]

செங்குந்த சமூக தொண்டுதொகு

அவருடைய காலத்தில் செங்குந்த சமூகத்தார் படிப்பு மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் தாழ்ந்த நிலையில் இருப்பதை கண்டு தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் வாயிலாக பல தொண்டுகளை புரிந்தார். சங்கத்தின் செயலாளராக இருந்த போது செங்குந்தர் கல்வி நிதி என்னும் அமைப்பை உருவாக்கினார். பட்டப்படிப்பு படிக்க முயலும் மாணவர்களுக்கு உபகார்ச் சம்பளம் அளிக்கப்பட்டது. 1928 முதல் 1938 வரை நாடெங்கும் செங்குந்த சமூகத்தார் வாழும் ஊர்களுக்குச் சென்று சங்கம் வளர உறுதுணையாக இருந்தார். செங்குந்த சமூக குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து படிக்க ஊக்கப்படுத்தினார். 1932ல் யாழ்ப்பாணத்தில் நடை பெற்ற இலங்கை செங்குந்தர் மாநாட்டில் கொடியேற்றி உரையாற்றினார். இரண்டு மாதங்கள் இலங்கை சுற்று பயணம் செய்து ஏராளமான கூட்டங்களில் சொற்பொழிவாற்றினர்.[16]. செங்குந்த சமூக மாணவர்கள் தங்கி படிப்பதற்காக ஒரு விடுதி கட்ட பெரும் முயற்சிகள் எடுத்தார். திராவிட முன்னேற்ற கழகத்திடமிருந்து அதன் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களிடமிருந்து, சென்னை சேத்துப்பட்டில் ஆரிங்டன் சாலையில் 35 ஆம் எண் உள்ள காலி மனையை, தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தினரால் வாங்கப்பட்டது. இதற்கு பேருதவி புரிந்தவர் காஞ்சி மணிமொழியார் ஆவார் [17]. 24-2-1929 முதல் "செங்குந்த மித்ரன்" மாத வெளியீட்டின் துணையாசிரியராக இருந்து அந்த இதழின் செழிப்புக்கும் சிறப்புக்கும் உறுதுணை புரிந்தார் மணிமொழியார். 1934 முதல் 1941 வரை அதன் ஆசிரியராக பணியாற்றி "செங்குந்த மித்ரன்" இதழ் ஒரு குறிப்பிட்ட சமூகத்தாருக்கு மட்டும் தோன்றினாலும் , தமிழ் மக்கள் சாதி வேறுபாடின்றிப் படித்து மகிழத்தக்க செந்தமிழ் இதழாக அது புகழ்பெற்றுத் திகழ்ந்தது. [18][19]

இந்தி எதிர்ப்பு போராட்டம்தொகு

1938 ஆம் ஆண்டுல் தமிழகத்தில் இந்தி கட்டாய பாட மொழியாக ஆக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து தமிழகம் எங்கும் போராட்டம் நடந்திற்று. மணிமொழியார் சென்னையில் நடைபெற்ற முதல் இந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடத்தினார். சென்னையை சுற்றிலும் நூற்றுக்கணக்கான இந்தி எதிர்ப்பு கூட்டங்களை நடத்தி அதில் விரிவுரை ஆற்றி இந்த இயக்கம் வளரச் செய்ததார். அரசாங்க அடக்குமுறை காரணமாக, இந்தி எதிர்ப்புப் போர் பற்றிய அறிக்கைகளையும் நூல்களையும் அச்சிட பல அச்சக உரிமையாளர்கள் அஞ்சிய போது, மணிமொழியார் அவர்களே தம் அச்சகத்தில் அவற்றை அச்சிட்டு தந்தார். சுவாமி அருணகிரிநாதர் அவர்களால் இயற்றப்பட்ட "தமிழ் தாய் புலம்பல்" மற்றும் நாவலர் சோமசுந்தர பாரதியார் எழுதிய " An Open Letter to C. Rajagopalachari" (ஆச்சரியாருக்கு ஓர் திறந்த மடல் ) என்ற ஒரு ஆங்கில நூலை தன் சொந்த செலவில் 10000 படிகளை அச்சிட்டு விரைவாக வெளியூர்கட்கு அனுப்பிவைத்தார் மணிமொழியார். [20] 3-6-38 சென்னை கோடம்பாக்கத்தில் இந்தி ஒழிப்பு மாநாடு மறைமலை அடிகளார் தலைமையில் நடைபெற்றது. அன்று முதலமைச்சர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருந்த பல்லடம் பொன்னுசாமி சிறைபிக்கப்பட்டார். இதை அறிந்ததும் மாநாடு ஊர்வலமாகமாறி "தமிழ் வாழ்க , இந்தி ஒழிக" என்னும் பேரொளியுடன் முதலமைச்சர் வீட்டை அடைந்தது. மூன்று மணிநேரம் செ. தெ. நாயகம், காஞ்சி மணிமொழியார், சாமி சண்முகானந்தம் மூவரும் பேசினர். [21] 22-8-1948 மற்றும் 7-9-48ல் கழக தலைவர்களுடன் மணிமொழியாரும் கைது செய்யப்பட்டு ஒரு வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தார்.

அரசியல்வாதிதொகு

1917ல் சர். பி. தியாகராயருக்கு காஞ்சி நகரில் அளிக்கப்பட்ட வரவேற்பால் கவரப்பட்டு, தியாகராயரின் கொள்கைகளை நன்கு அறிந்து, அதுமுதல் அக்கொள்கைகளை பரப்பும் பெரும்பணியில் மும்முரமாக ஈடுபட்டார். தன்னுடைய 17ம் வயதில் (1917ல் ) சர். பி. தியாகராயர் வாசக சாலை ஒன்றையும், பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கம் ஒன்றையும் தொடங்கி, 1930 வரை செயலாளராக இருந்து நடத்திவந்தார். [22]. முதலில் நீதி கட்சிக்கும், பின்னர் தந்தை பெரியார் தலைமையிலான திராவிட கட்சிக்கு தொண்டு செய்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்த அதன் தலைவர்களில் ஒருவராகிய மணிமொழியார், அந்தக் கழகம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து அவருடைய இறுதி வரை அதன் செல்வாக்கும் புகழும் தமிழ்நாடெங்கும் பரவுவதற்காக ஓயாமல் உழைத்துவந்தார். கழகம் தொடங்கப்பட்ட 1949முதல் மூன்று ஆண்டுகள் அதன் தலைமை கழகத்தின் நிதிக்குழு செயலாளராக இருந்து கட்சியின் தலைவரான அறிஞர் அண்ணாவுக்கு பேருதவியாக இருந்தார்.1952ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் திமுக தன் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. ஆனால் அதன் கொள்கைகளோடு இசைவாக இருந்த சுயேட்சை வேட்பாளர்களை ஆதரித்து பண்ணியாற்றியது. மணிமொழியார் சென்னை, மற்றும் சுற்றுப்புறங்களில் நின்ற அத்தகைய வேட்பாளர்களுக்கு அயராது பணிபுரிந்தார். 1957ல் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் அறிஞர் அண்ணா போட்டியிட்டபோது மணிமொழியார் அவர்கள் பல நாட்கள் காஞ்சிபுரத்திலே தங்கி இருந்து வீடு வீடாக சென்று அண்ணா அவர்களுக்காகத் தேர்தல் பிரசாரம் செய்தார்.

1962ல் நடைபெற்ற பொது தேர்தலில் தமிழகச் சட்டமன்றத் தொகுதிகள் அத்தனையிலும் மிகப் பெரியதாக விளங்கிய இந்தத் தொகுதியிலிருந்து கஞ்சி மணிமொழியார் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராகப் போட்டியியிட்டு ஏறத்தாழ 9000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். மணிமொழியார் சட்டமன்ற கூட்டங்கள் ஓவ்வொன்றிருக்கும் தவறாமல் சென்று அங்கு நடைபெற்ற விவாதங்களில் முழு பங்கு ஏற்றார். அரசு ஆரம்ப ஆசிரியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டியதன் அவசியத்தையும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கையை வதைத்து வரும் தொல்லைகளையும் துயரங்களை அகற்ற வேண்டியதன் அவசியம் , சென்னை நகரத்தின் குடிநீர் பஞ்சத்தை நீக்குவதற்றகான ஏற்ப்பாடுகளை மாநில அரசு முழு கவனம் செலுத்தியாக வேண்டும் மற்றும் குடுசை வாழ் மக்கள் வாழ்வுக்கான ஆலோசனை'முதலிய கருத்துக்கள் அவருடைய சட்டமன்ற சொற்றப்பொழிவுகளில் சேர்ப்பிடம் பெற்றன.[23]. தியாகராய நகர் தொகுதிவாழ் மக்களுக்காக ஓயாமல் பாடுபட்டு அனய்வரின் பாரட்டையம் முழு அளவில் பெற்றிருந்தார். 1967 பொதுத் தேர்தலின் போது, கலைஞர் கருணாநிதிக்காக அந்தத் தொகுதியை முழு மனதுடன் விட்டுக்கொடுத்த தியாக உணர்வு படைத்தவர். அறிஞர் அண்ணா அவர்கள் மணிமொழியாரை அழைத்து, சில காரணங்களால் கலைஞர் கருணாநிதியை சைதாப்பேட்டை தொகுதியின் தி.மு.க வேட்பாளராக நிறுத்த வேண்டியிருக்கிறது என்றும், அன்புகூர்ந்து மணிமொழியார் அவருக்கு உரிய அத்தொகுதியை வீட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டபோது, தனக்கு முழு ஆதரவு தொகுதி மக்களிடம் இருப்பதரறிந்தும் தினையளவும் தயங்காமல் தன் ஒப்புதலை உடனே தந்தார் மணிமொழியார்.[24] 1969ல் தி.மு.க தலைமை கழகத்தின் துணை பொதுச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுத் தலைமைக் கழகப் பொறுப்புகளைத் தன இறுதி காலம் வரை திறமையாக நிறைவேற்றிவந்தார்.

மணிமொழியார் ஆறு முறை சிறைவாசம் செய்தார். 1948,1965ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம், 1951, 1958ல் மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்ட ஏற்பாடு செய்ததற்காகவும், 1962ல் விலைவாசி போராட்டத்தின் போதும் சிறையில் அடைக்கப்பட்டார்.

தமிழ்தொண்டு / சமூகத்தொண்டுதொகு

செங்குந்தர் இயக்கம், நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம் ஆகியவற்றில் அரும்பணனிகள் ஆற்றியபோதும், பற்பல பொதுநலப் பணிகளிலும் தன்னுடைய நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டார். ஆரம்பக்கல்வியின் அவசியத்தை உணர்ந்து, மணிமொழியார் 1921ம் ஆண்டு காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தவள் கோயில் தெருவில், தம்முடைய சொந்தத் செலவில் கலைமகள் துவக்கப்பள்ளி என்னும் ஆரம்பப் பள்ளிக்கூடம் ஆரம்பித்து, 9 ஆண்டுகள் அதை திறம்பட நடத்திவந்தார். 1930ல் செங்குந்தர் சங்கத்தின் பிரசாகராகப் பணியேற்றுக்கொண்டதால் பள்ளியை நகராட்சி பள்ளியோடு இணைத்துவிட்டார். 1935 ஏப்ரல் திங்களில் சைவசித்தானந்த நாற்பதிப்புக் கழக நிர்வாகத் தலைவர் வ. சுபையாய் பிள்ளை அவர்களுடைய பெருமுயற்சியால், தமிழ் அறிஞர்கள் கா. நமசிவாய முதலியார் தலைவராகவும், திரு. வி.க, ரெவரண்ட் பாப்ளி, ச. சச்சிதானந்தம் பிள்ளை பி.ஏ. எல். டி ஆகியோர் துணைத் தலைவர்களாகவும் கொண்டு, திருவள்ளுவர் திருநாட் கழகம் என்னும் அமைப்பில் அனைவருடன் இணைந்து, மணிமொழியார் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடி திருக்குறளின் சிறப்பை மக்களுக்கு விளக்கும் பணி செய்தார்.

சீர்திருத்தவாதிதொகு

வடமொழி மந்திரங்களோ தேவையற்ற சடங்குகளோ இல்லாத பல சுயமரியாதைத் திருமணங்களை மணிமொழியார் நடத்தி வைத்துள்ளார். [25]

மேற்கோள்கள்தொகு

 1. wikisource:ta:இதழியல் கலை அன்றும் இன்றும்/சமுதாய விடுதலைப்
 2. "காஞ்சி மணிமொழியார் அவர்களின் 120ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா 'மீண்டும் கவிக்கொண்டல்' சிறப்பிதழை தமிழர் தலைவர் வெளியிட்டார்". www.viduthalai.in. 27 July 2020 அன்று பார்க்கப்பட்டது.
 3. திராவிட இயக்கத் தூண்கள்
 4. https://en.wikipedia.org/wiki/1962_Madras_Legislative_Assembly_election
 5. "Government webpage giving details of 1962 Madras Assembly Election details". https://eci.gov.in/. External link in |website= (உதவி)
 6. http://www.annavinpadaippugal.info/sorpozhivugal/kaanchi_manimozhiyar.htm
 7. " தலையங்க இலக்கியம் " ஆசிரியர் மா. இளஞ்செழியன், "போர்வாள்", முதல் தலையங்கம், 16.8.1947.
 8. " தலையங்க இலக்கியம் " ஆசிரியர் மா. இளஞ்செழியன், "போர்வாள்" பத்திரிகையில் எழுதப்பட்ட சிறப்பான 30 தலையங்கங்கள் அடங்கிய புத்தகம்.
 9. "இதழாளர் இளஞ்செழியன்" - நூல் ஆசிரியர் டாக்டர் தொ. சின்னபழனி; சௌபாக்கியம் பதிப்பகம், 2008,chapter 4, பக்கம் 68, 69.
 10. https://twitter.com/kryes/status/820155369599238144
 11. wikisource:ta:இதழியல் கலை அன்றும் இன்றும்/சமுதாய விடுதலைப்
 12. "வாழ்க்கை பாதை", ஆசிரியர் மா. இளஞ்செழியன், தன் வரலாற்று நூல். முதல் தொகுதி
 13. https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt7l0I0#book1/
 14. https://ta.wikisource.org/s/7len (படதில் குறிப்பிடப்பட்டுள்ளது)
 15. https://tamildigitallibrary.in/admin/assets/periodicals/TVA_PRL_0003714_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20(%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%2017,%201950).pdf திராவிடர் நாட்குறிப்பு விற்பனை விளம்பரம்
 16. காஞ்சி மணிமொழியார் 71வது ஆண்டு பிறந்தநாள் மலர்
 17. http://sengunthamithiran.in/aboutus-vallal.asp
 18. காஞ்சி மணிமொழியார் 71வது ஆண்டு பிறந்தநாள் மலர்
 19. https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/197093/14/14_appendix.pdf
 20. காஞ்சி மணிமொழியார் 71வது ஆண்டு பிறந்தநாள் மலர்
 21. "தமிழன் தொடுத்த போர்", - 1938, 1939 ஆகிய ஆண்டுகளில் தமிழ் மக்கள் திரண்டெழுந்து கட்டாய இந்தி திணிப்புக்கு எதிராக நடத்திய அறப் போராட்டத்தின் முழு வரலாறுதான் இந்த நூல். Page 58.
 22. காஞ்சி மணிமொழியார் 60வது ஆண்டு பிறந்தநாள், மணிவிழா மலர்
 23. காஞ்சி மணிமொழியார் 71வது ஆண்டு பிறந்தநாள் மலர்
 24. "வாழ்க்கை பாதை", Chap 28, ஆசிரியர் மா. இளஞ்செழியன், தன் வரலாற்று நூல். முதல் தொகுதி
 25. https://groups.google.com/forum/#!searchin/mintamil/$27%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D$20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF$27$20%7Csort:date/mintamil/eMpJAuCsI9E/roud4MlxvdcJ
"https://ta.wikipedia.org/w/index.php?title=காஞ்சி_மணிமொழியார்&oldid=3050312" இருந்து மீள்விக்கப்பட்டது