காந்தாரி பேகம்
காந்தாரி பேகம் (Kandahari Begum; 1593 - ?) காந்தஹாரி பேகம் எனவும் காந்தாரி மகால் ("காந்தாரத்தின் பெண்") எனவும் அழைக்கப்படும் இவர் முகலாய பேரரசர் ஷாஜகானின் முதல் மனைவியும், அவரது முதல் குழந்தை, இளவரசி பர்கெசு பானு பேகத்தின் தாயுமாவார்.
காந்தாரி பேகம் قندهاری بیگم | |
---|---|
சபாவித்து வம்சத்தின் இளவரசி Zan-i-Kalan | |
பிறப்பு | 1593கள் காந்தாரம், ஆப்கானித்தான் |
புதைத்த இடம் | காந்தாரி தோட்டம், ஆக்ரா |
துணைவர் | ஷாஜகான் |
குழந்தைகளின் பெயர்கள் | பர்கெசு பானு பேகம் |
மரபு | சபாவித்து (பிறப்பினால்) தைமூர் (திருமணத்தினால்) |
தந்தை | சுல்தான் முசாபர் உசேன் மிர்சா சபாவி |
மதம் | சியா இசுலாம் |
பிறப்பால், இவர் ஈரானின் (பெர்சியா) முக்கிய சபாவித்து வம்சத்தின் இளவரசியும், சபாவித்து இளவரசர் சுல்தான் முசாபர் உசேன் மிர்சா சபாவியின் இளைய மகளும் ஆவார். உசேன் மிர்சா பெர்சியாவின் சபாவித்து வம்சத்தின் நிறுவனரான முதலாம் ஷா இஸ்மாயிலின் மகன் பஹ்ராம் மிர்சாவின் மகன் சுல்தான் உசைன் மிர்சாவின் மகன் ஆவார்.
மிர்சா முசாபர், சபாவித்து ஆட்சியாளர்களுடன் சில பிரச்சனைகளைக் கொண்டிருந்தார். மேலும், காந்ததாரத்தைக் கைப்பற்றும் அழுத்தத்தை உணர்ந்ததால் அதை முகலாயர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் சரணடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் இவர் தனது தந்தையுடன் இந்தியாவுக்குச் செல்ல தனது சொந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அக்பரின் ஆட்சியின் போது 1595ஆம் ஆண்டின் இறுதியில் இவரது தந்தையும் தனது நான்கு சகோதரர்களான பஹ்ரம் மிர்சா, ஐதர் மிர்சா, அல்காஸ் மிர்சா ஆகியோர் இந்தியாவுக்கு வந்தார். இவர்களுடன் 1000 கஜில்பாஷ் வீரர்களும் இந்தியா வந்தனர். முசாபர் கான் அக்பரிடமிருந்து பர்சாந்த் (மகன்) என்ற பட்டத்தைப் பெற்றார். மேலும் ஐந்தாயிரம் பேர் அடங்கிய படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டார். மேலும் சம்பல் பகுதியை சாகிராகப் (சொத்து) பெற்றார். இது "அனைத்து கந்தாரத்தை விடவும் அதிக மதிப்புடையது."
ஷாஜஹானுடனான திருமணம்
தொகுதிருமணம்
தொகுகாந்தாரி பேகம் இளவரசர் குர்ரமை ( வருங்கால ஷாஜஹான் )28 அக்டோபர் 1610 அன்று ஆக்ராவில் மணந்தார். இவர்களின் இரு குடும்பங்களுக்கும் இடையே பல குடும்ப தொடர்புகள் இருந்தன. குர்ரமின் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றாசிரியர் முகம்மது அமீன் கசுனி, திருமணத்தைப் பற்றிய அவரது விளக்கத்தில் மிகவும் விரிவாக எழுதியுள்ளார்.[1]
21 ஆகத்து 1611இல், [2] இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் தாத்தா, பேரரசர் ஜஹாங்கீரால் "பர்கெசு பானு பேகம்" என்று பெயரிடப்பட்டார். இருப்பினும், மாசீர்-இ-ஆலம்கிரியில், அவர் புருஹனர் பானு பேகம் என்று குறிப்பிடப்படுகிறார்.[3] அவர் தன் தந்தையின் மூத்த குழந்தையாவார். ஆனால் அவருடைய தாயின் ஒரே குழந்தை. அக்பரின் முதல் மற்றும் முக்கிய மனைவியாக இருந்த குர்ரமை வளர்த்த தோவஜர் பேரரசி ருக்கையா சுல்தான் பேகத்தின் பராமரிப்பில் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.[4]
கல்லறை
தொகுஇவரது இறபிற்குப் பிறகு ஆக்ராவில் இவரால் நிறுவப்பட்ட 'காந்தாரி தோட்டம்' என்று அழைக்கப்பட்ட ஒரு தோட்டத்தின் மையத்தில் அடக்கம் செய்யப்பட்டார். இவர் ஒரு பள்ளிவாசலையும் கட்டினார். அது ஆக்ராவில் உள்ள காந்தாரி தோட்டத்தின் மேற்குப் பகுதியில் மூன்று வளைவுகளுடன், ஒற்றை குவிமாடத்தைக் கொண்டிருந்தது. இது இப்போது இல்லை. 1707இல் ஔரங்கசீப்பின் மரணத்தைத் தொடர்ந்து நடந்த தாக்குதல்களால் இவரது கல்லறையின் மீது இருந்த கட்டிடம் பெருமளவில் அழிக்கப்பட்டது. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் அதை பரத்பூர் அரசனுக்கு விற்று அதில் சில நவீன கட்டிடங்களை எழுப்பியது. இந்த கலவை குடியேற்ற காலத்தில் பரத்பூர் ஆட்சியாளர்களின் சொத்தாக மாறியது. மேலும் மத்திய கல்லறைக்கு பதிலாக ஒரு மாளிகை கட்டப்பட்டது. அங்கிருந்து இது "பரத்பூர் மாளிகை" என்று பிரபலமானது. அசல் தோட்டத்தின் ஒரு வாயிலும் சில மூலையில் உள்ள குவிமாடங்களும் மட்டுமே தப்பிப்பிழைத்துள்ளன..
மேற்கோள்கள்
தொகு- ↑ Nicoll 2009, ப. 64-5.
- ↑ Nicoll 2009.
- ↑ Shah Jahan and his paradise on earth : the story of Shah Jahan's creations in Agra and Shahjahanabad in the golden days of the Mughals. K.P. Bagchi & Co.
- ↑ Nur Jahan, empress of Mughal India. Oxford University Press.
உசாத்துணை
தொகு- Beale, Thomas William (1881). The Oriental Biographical Dictionary. Asiatic Society.
- Havell, Ernest Binfield (1904). A Handbook to Agra and the Taj: Sikandra, Fatehpur-Sikri and the Neighbourhood. Longmans, Green, and Company.
- Indica, Volume 40. Heras Institute of Indian History and Culture, St. Xavier's College. 2003.
- Latif, Syad Muhammad (1896). Agra, Historical & Descriptive: With an Account of Akbar and His Court and of the Modern City of Agra.
- Mundy, Peter (1967). The Travels of Peter Mundy, in Europe and Asia, 1608-1667 ... Hakluyt society.
- Mubārak, Abū al-Faz̤l ibn (1873). The Ain i Akbari, Volume 1. Rouse.
- Nicoll, Fergus (2009). Shah Jahan: The Rise and Fall of the Mughal Emperor. Penguin Books India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-670-08303-9.
- Singh, Nagendra Kr (2001). Encyclopaedia of Muslim Biography: Muh-R. A.P.H. Pub. Corp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-176-48234-9.