காப்புக் கண்ணாடி
காப்புக் கண்ணாடி என்பது, குறைந்த அளவு உடையும் வாய்ப்புக் கொண்ட அல்லது உடைந்தாலும் அதிகம் பாதிப்புக்களை ஏற்படுத்தாத தன்மை கொண்ட கண்ணாடி ஆகும். செம்பதக் கண்ணாடி, ஒட்டுக் கண்ணாடி, கம்பிவலைக் கண்ணாடி போன்றவை காப்புக் கண்ணாடிக்கு எடுத்துக்காட்டுகள். ஒட்டுக் கண்ணாடியும், கம்பிவலைக் கண்ணாடியும் பிராங்க் சூமன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இம்மூன்று வழிமுறைகளையும் ஒன்றிணைத்தும் காப்புக் கண்ணாடிகளை உருவாக்க முடியும். அதாவது, செம்பதக் கண்ணாடிகளை ஒட்டி அதில் கம்பிவலையையும் உள்ளிட்டுக் கண்ணாடிகளைட்த் தயாரிக்கலாம். எனினும், முதல் இரு வழிமுறைகளுடன் கம்பிவலையைப் பயன்படுத்துவது மிகவும் குறைவு.
செம்பதக் கண்ணாடி
தொகுசாதாரண கண்ணாடிகளைக் கட்டுப்பாடான வெப்பம் அல்லது வேதியியல் முறைகளைப் பயன்படுத்திப் பதனப்படுத்துவதன் மூலம் கூடிய பலம் கொண்ட செம்பதக் கண்ணாடிகள் உருவாக்கப்படுகின்றன. செம்பதம் செய்யும்போது கண்ணாடிக்குள் சமநிலையான உட்தகைப்பு உருவாகிறது. இதனால், கண்ணாடி உடையும்போது பெரிய கூரிய முனைகளைக் கொண்ட துண்டுகளாக உடையாமல் மணியுருவான சிறிய துண்டுகளாக உடைகிறது. இவ்வாறான மணியுருத் துண்டுகளினால் காயம் உண்டாகக் கூடிய வாய்ப்புக்கள் மிகவும் குறைவு.
கூடிய பலம், பாதுகாப்பு என்பன காரணமாகச் செம்பதக் கண்ணாடி பல்வேறு முக்கியமான தேவைகளுக்குப் பயன்படுகின்றது. உந்துகளின் சாளரக் கண்ணாடிகள், கண்ணாடிக் கதவுகள், மேசை மேற்பரப்புகள், குளிர்பதனப் பெட்டித் தட்டுகள், சுழியோடுவோருக்கான முகமூடிகள், சமையல் பாத்திரங்கள் போன்றவை செம்பதக் கண்ணாடி பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான சில எடுத்துக்காட்டுகள். தோட்டா துளையாக் கண்ணாடிகளின் ஒரு கூறாகவும் செம்பதக் கண்ணாடிகள் பயன்படுகின்றன.
ஒட்டுக் கண்ணாடி
தொகுபல கண்ணாடித் தகடுகளை பாலிவைனைல் புயூட்டிரல் போன்ற நெகிழிப் பொருட்களை இடைப்படலமாகப் பயன்படுத்தி ஒட்டுவதன் மூலம் ஒட்டுக் கண்ணாடிகள் பெறப்படுகின்றன. கண்ணாடி உடையும்போது இடைப்படலத்தில் ஒட்டிக்கொண்டு இருப்பதால் துண்டுகள் கீழே விழுவது இல்லை. ஒட்டுக் கண்ணாடிகளில் தேவையைப் பொறுத்துச் சாதாரண கண்ணாடித் தகடுகளையோ செம்பதக் கண்ணாடித் தகடுகளையோ பயன்படுத்தலாம்.
கம்பிவலைக் கண்ணாடி
தொகுமெல்லிய உலோகக் கம்பிகளினாலான வலையை கண்ணாடித் தகட்டினுள் பதிப்பதன் மூலம் கம்பிவலைக் கண்ணாடிகள் உருவாக்கப்படுகின்றன. வலிதாக்கிய காங்கிறீட்டு போன்ற கட்டிடப் பொருட்களில் கம்பிகள் காங்கிறீட்டுக்குக் கூடிய பலம் கொடுப்பதுபோல், கம்பிவலை கண்ணாடிக்குக் கூடிய பலம் கொடுக்கும் எனக் கருதப்பட்டாலும், கம்பிவலைக் கண்ணாடி சாதாரண கண்ணாடியிலும் பலம் குறைந்தது. ஆனாலும், தீத்தடுப்புத் தன்மை தேவைப்படும் இடங்களில் கம்பிவலைக் கண்ணாடிகள் பரவலாகப் பயன்படுகின்றன.