கிங் நோய்த்தடுப்பு மற்றும் ஆய்வு நிறுவனம்

அமைப்பு

கிங் நோய்த்தடுப்பு மற்றும் ஆய்வு நிறுவனம் (ஆங்கில மொழி: King Institute of Preventive Medicine and Research) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னை நகரில் கிண்டியில் அமைந்துள்ள ஒரு மருந்து ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இது நவம்பர் 7, 1899 ஆம் நாளன்று அப்போதைய சென்னை மாகாணத்தின் சுகாதார ஆணையராக இருந்த டபிள்யூ.ஜி. கிங்[1] என்பவரால் திறந்து வைக்கப்பட்டது. தொற்று நோய்களிலிருந்து தடுத்து காப்பாற்றும் நோக்கில் இது தொடங்கப்பட்டதாகும்.

கிங் நோய்த்தடுப்பு மற்றும் ஆய்வு நிறுவனம்
நிறுவப்பட்டது1899
வகைஆய்வு நிறுவனம்
தலைமையகம்
Director
டாக்டர். பி.குணசேகரன்
வலைத்தளம்[1]

இந்த நிறுவனம் அடையாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இயக்குநர் அலுவலகம் அமைந்துள்ள முதன்மையான சிகப்பு நிறக் கட்டடம் ஒரு பாரம்பரியக் கட்டடம் என்று அடையாளம் காணப்பட்ட நிலையில், அது இந்திய தொல்பொருள் சங்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் மருத்துவ கல்வி இயக்குநரின் கீழ் செயல்பட்டு வருகிறது.[2]

செயல்பாடுகள்

தொகு

தடுப்பூசி முறையின் மூலமாக பெரியம்மையை முற்றிலும் ஒழித்தமைக்குப் பொறுப்பாக இந்தியாவின் அமைந்துள்ள முக்கிய நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது தமிழ்நாட்டில் பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்களுக்கான பரிந்துரை மையங்களில் ஒன்றாகச் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகள் செயலாற்றி வருகின்றன. அவற்றில் சர்வதேச தடுப்பூசி மையம், துணை மருத்துவக் கல்வி வாரியம் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப பள்ளி ஆகியவை அடங்கும். சி & சி 1 மருந்துகளின் தரக் கட்டுப்பாட்டினை தக்கவைத்துக்கொள்ளல், பாம்புக் கடிக்கான எதிர்ப்பு விஷம் தயாரித்தல், எதிர்வினை கண்டறிதல் (ஆன்டிஜென்கள் மற்றும் ஆன்டிசெரா), பாக்டீரியா கலாச்சாரங்கள், சிறிய விலங்குகள், பாக்டீரியா மற்றும் வைராலஜி நோய்களைக் கண்டறிதல் மற்றும் உணவு மாதிரி சோதனை ஆகியவற்றை பராமரித்தல் மற்றும் வழங்குதல் ஆகியவை இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளில் முக்கியமானவை ஆகும்.[3]

சிறப்புகள்

தொகு

கிங் நோய்த்தடுப்பு மற்றும் ஆய்வு நிறுவனம் விளையாட்டுத் துறையைச் சார்ந்த பல வீரர்களை உருவாக்கியுள்ளது. அவர்கள் மாநில அளவிலான பல போட்டிகளில் இந்நிறுவனத்தின் பெயரில் கலந்தகொண்டு விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளனர். இங்கு அமைந்துள்ள ஜென்னர் கூடம் எனப்படுகின்ற கூடம் தடுப்பூசியின் தந்தை என்று பெயர் பெற்ற எட்வர்ட் ஜென்னர் பெயரில் உள்ளதாகும். அந்த கூடத்தில் 250 நபர்கள் அமர வசதி செய்து தரப்பட்டுள்ளது. ஜி.எம்.பி. விதிமுறைகளின் அடிப்படையில் பாம்புக்கடிக்குத் தடுப்பு மருந்து, காலரா மற்றும் டைபாய்ட் தடுப்பூசி போன்றவற்றிற்கான பொதுவான மருந்துகளைத் தயாரிக்கும் நோக்கில் ஒரு உற்பத்திப் பிரிவினை சிறப்பாக அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.[4]

அங்கீகாரம்

தொகு

மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி மற்றும் சான்றிதழை வழங்குவதற்கான உலக சுகாதார அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் ஒன்றாக கிங் நோய்த்தடுப்பு மற்றும் ஆய்வு நிறுவனம் அமைந்துள்ளது.[5]

மூத்தோர் பாதுகாப்பு

தொகு

கிங் நோய்த்தடுப்பு மற்றும் ஆய்வு நிறுவனத்தில் ஒரு மையக் குழுவினர் வந்து ஆய்வு செய்து தேசிய வயதானோருக்கான நிறுவனம் ஒன்றை அமைப்பது குறித்து விவாதித்தனர். அவ்வாறாக அமைக்கப்படவுள்ள அந்த நிறுவனத்தில் வயதானோருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதோடு மேலும் சில வசதிகள் காணப்படும். அதில் முதியோர்களிடையே காணப்படுகின்ற சிறப்புக் கூறுகளைப் பற்றி பயிற்சி அளிக்கப்படும். மேலும் அது தொடர்பான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படும். முதியோரைக் காத்தல் தொடர்பாக 15 முதுநிலை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். மாநிலம் முழுவதும் மருத்துவர்களுக்கும் இதுதொடர்பாக பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு தென் இந்தியாவில் முதன் முதலாக சென்னையில் இது அமையவுள்ளத என்று கூறப்படுகிறது.[6]

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-06-28. பார்க்கப்பட்ட நாள் 2020-01-05.
  2. http://dmetn.org/english/wp-content/uploads/2009/07/introduction.pdf
  3. http://www.thehindu.com/news/national/tamil-nadu/king-institute-looking-to-revive-antisnake-venom-serum-production/article936062.ece
  4. "Belajar Di India". Archived from the original on 2018-10-15. பார்க்கப்பட்ட நாள் 2020-01-05.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-28. பார்க்கப்பட்ட நாள் 2020-01-05.
  6. Institute of Ageing gets Central push, Deccan Chronicle, 26 April 2015