கிடங்கில் என்பது சங்ககாலத்து ஊர்களில் ஒன்று ஆகும். இதைப்பற்றி சிறுபாணாற்றுப்படை அடி எண் 160, நற்றிணை பாடல் எண் 65 ஆகியவை குறிப்பிடுகின்றன.

கிடங்கில் இருப்பிடம்

தொகு

இப்போதுள்ள திண்டிவனம் என்னும் ஊர்தான் கிடங்கில் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[1]

கிடங்கில் அமைப்பு

தொகு

'கிடங்கில் அன்ன இட்டுக்கரைக் கான் யாற்றுக், கலங்கும் பாசி நீர் அலைக் கலாவ' என்று பாடல் கிடங்கில் அகழியைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அருவி ஒன்றின் துறை இவ்வாறு இருந்ததாம். கிடங்கில் அகழியில் காட்டாற்றுப் பருவகால வெள்ளம் பாய்ந்ததாம். வெள்ள வரத்து இல்லாத காலத்தில் அந்தக் கிடங்கில் நீரில் பாசி படிந்திருந்ததாம். (நற்றிணை 65)

சிறுபாணாற்றுப்படை தரும் செய்தி

தொகு

மதிலொடு பெயரிய பட்டினம் சென்றால் என்ன பெறலாம் என்று புலவர் விளக்குகிறார்.

கிடங்கில் அரசன்

தொகு

பத்துப்பாட்டு தொகுப்பில் இடம் பெற்றுள்ள 10 நூல்களில் ஒன்று சிறுபாணாற்றுப்படை. அதில் சிறப்பிக்கப்பட்டுள்ள அரசன் ஓய்மான் நாட்டு நல்லியக் கோடன். இவன் 'கிடங்கிற் கோமான்' என்று சிறப்பிக்கப்பட்டுள்ளான். இந்த அரசனின் தலைநகர் மாவிலங்கை. இது தொண்டை நாட்டின் ஒரு பகுதியான ஓய்மான் நாட்டின் தலைநகர். இந்த அரசன் ஓவியர் பெருமகன் என்று கூறப்படுவதால் இவனது நாட்டு மக்கள் ஓவியர் எனப்பட்டனர் என்பது தெரியவருகிறது.

'மணிநீர் வைப்பு மதிலொடு பெயரிய பனிநீர்ப் படுவின் பட்டினம்' - சிறுபாணாற்றுப்படை 152-3

தொகு

கிடங்கு என்னும் சொல் அகழியைக் குறிக்கும். அகழியால் பாதுகாக்கப்பட்டுள்ள இடம் கிடங்கில். கிடங்கை உடைய இல் என்பது பொருள். இதனைச் சிறுபாணாற்றுப்படை தெளிவாக்குகிறது.

சோபட்டினம்

தொகு

சோ என்னும் சொல் மதிலரணைக் குறிக்கும். எனவே இந்த ஊரின் பெயர் 'சோபட்டினம்' என்பதாகும்.

சோபட்னா
தொகு

கிரேக்க மாலுமிகள் இதனைச் சோபட்னா என்று குறிப்பிட்டுள்ளனர்.

கிடங்கில் காவிதி

தொகு

கிடங்கில் அரசர்கள் சிறந்த உழவர்களுக்குக் 'காவிதி' என்னும் விருது வழங்கிப் பாராட்டினர். அப்படிப் பாராட்டப்பட்ட இருவர் புலவர்களாகவும் விளங்கியுள்ளனர். கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார், கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார் ஆகியோர் காவிதி விருது பெற்ற புலவர்கள்.

கிடங்கில் குலபதி

தொகு

குறுந்தொகை 252ஆம் பாடலைப் பாடிய புலவர் குலபதி நக்கண்ணனார் இந்தக் கிடங்கில் ஊரில் வாழ்ந்தவர்.

உசாத்துணை

தொகு
  1. டாக்டர் மா.இராசமாணிக்கனார். பத்துப்பாட்டு ஆராய்ச்சி. சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிடங்கில்&oldid=1722404" இலிருந்து மீள்விக்கப்பட்டது