கிரக ஷட் பலம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சோதிட முறையில் கிரக ஷட் பலம் என்பது, கிரகங்களின் வலிமையை, ஆறு விதங்களில் கணக்கிட்டு, அவற்றில் அதிக வலிமையான கிரகம் எது, மிகவும் வலிமை குன்றிய கிரகம் எது என்பதை கண்டறிவது ஆகும். வடமொழியில் "ஷட்" என்றால் "ஆறு" என பொருள்படும். "பலம்" என்றால் "வலிமை" எனப் பொருள்படும். "ஷட் பலம்" என்றால் "ஆறு வித வலிமை" எனப் பொருள்படும்.
பராசரர் சோதிட முறையில் பாவங்களின் (Bhava) வலிமை அஷ்டக வர்க கணிதம் மூலமாகக் கணக்கிடப்படுகிறது. ஷட் பல கணக்கீடு ராகு, கேதுக்களுக்கு கிடையாது. மற்ற ஏழு கிரகங்களுக்கு மட்டுமே உண்டு. கீழ்க்கண்ட ஆறு விதமான பலங்கள் கிரகங்களின் ஷட் பலம் எனப்படுகிறது.
- ஸ்தான பலம்
- திக் பலம்
- கால பலம்
- சேஷ்ட பலம்
- நைசார்கிக பலம்
- த்ருக் பலம்
ஸ்தான பலம் என்பதில் கிரகங்களின் உச்சபலம், சப்த வர்கீய பலம், ஒஜ-யுக்ம ராசி பலம், கேந்திர பலம், திரேக்காண பலம் என ஐந்து விதமான பலங்கள் அடங்கியுள்ளன.
கால பலம் என்பதில் கிரகங்களின் நதோன்னத பலம், பக்ஷ பலம், த்ரிபாக பலம், வருச பலம், மாச பலம், தின பலம், ஹோரா பலம், அயன பலம், யுத்த பலம் என ஒன்பது விதமான பலன்கள் அடங்கியுள்ளன.
ஏழு கிரகங்களுக்கு ஷட் பலம் கணக்கிட்டு, கிரகங்களை, அவைகளின் வலிமையின் அடிப்படையில் வரிசைப்படுத்துவது வழக்கம். அதில் அதிக வலிமையுடைய கிரகத்திற்கு முதலிடம் வழங்கப்படும். மிகவும் வலுக்குன்றிய கிரகத்திற்கு கடைசி இடமான ஏழாமிடம் வழங்கப்படும். ஷட் பலத்தில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த கிரகங்கள் சாதகத்தில் அதிக வலிமையுடைய கிரகங்களாகும். மூன்று, நான்கு, ஐந்தாம் இடங்களைப் பிடித்த கிரகங்கள் சராசரி வலிமையுடைய கிரகங்களாகும். ஆறு, ஏழாமிடங்களைப் பிடித்த கிரகங்கள் மிகவும் வலுக்குன்றிய கிரகங்களாகும்.
ஒரு நபரின் சாதகத்தில் (Natal Chart), ஷட் பலத்தால் அதிக வலிமை பெற்ற கிரகங்கள், அவற்றின் தசா-புக்தி (Dasa - Bukthi) காலங்களில் அனுகூலமான பலன்களைத் தரும். மிகவும் வலுக்குன்றிய கிரகங்கள் தங்கள் தசா-புக்தி காலங்களில் பிரதிகூலமான பலன்களைத் தரும்.
ஷட் பலத்தால் வலுக்குன்றிய கிரகங்களுக்குப் பரிகாரங்கள் செய்வதன் மூலம், அந்தக் கிரகங்களை வலிமைப்படுத்தலாம். வலுக்குன்றிய கிரகங்கள் சம்பந்தப்பட்ட எந்த ஒரு பொருளையும் பிறரிடமிருந்து தானமாகவோ, இலவசமாகவோ பெறக்கூடாது. ஆனால் சாதகர் பிறருக்கு அப்பொருட்களை தானமாகவோ, இலவசமாகவோ கொடுக்கலாம்.
ஷட் பல கணிதம் கணக்கிடுவதற்கு அதிக கவனமும், ஈடுபாடும், அதிக கால அவகாசமும் தேவைப்படும். ஒரு சிலருக்கு ஷட் பல கணிதம் செய்வது சிரமமாகவும் இருக்கலாம்.