கிரெனேட் நடவடிக்கை

கிரெனேட் நடவடிக்கை (Operation Grenade) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. இது ஜெர்மானியப் படையெடுப்பின் ஒரு பகுதியாகும். இந்த நடவடிக்கை வெரிடபிள் நடவடிக்கையின் ஒரு பகுதியாகத் திட்டமிடப்பட்டது.

கிரெனேட் நடவடிக்கை
இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையின் பகுதி
Veritable grenade.png
நடவடிக்கைகள் வெரிடபிள் மற்றும் பிளாக்பஸ்டர் (மஞ்சள்); கிரனேட் நடவடிக்கை (பச்சை)
நாள் பெப்ரவரி 22 – மார்ச் 11, 1945
இடம் ஜெர்மனி
நேச நாட்டு வெற்றி
பிரிவினர்
ஐக்கிய அமெரிக்கா அமெரிக்கா செருமனி நாசி ஜெர்மனி
பலம்
அமெரிக்க 9வது ஆர்மி

1945 பெப்ரவரி முதல் வாரம் நேச நாட்டுப் படைகள் ஜெர்மனியின் மேற்கு திசையிலிருந்து அதைத் தாக்கின. இத்தாக்குதலுக்கு நேசநாட்டு ஐரோப்பிய முதன்மைத் தளபதி டுவைட் டி. ஐசனாவர் ஒரு பரந்த முனையில் ஜெர்மனியின் மேற்கு எல்லையெங்கும் தாக்க வேண்டுமென்று திட்டமிட்டிருந்தார். அத்திட்டத்தின் பகுதியாக ஜெர்மனியின் வடமேற்கு எல்லையில் பிரிட்டானிய ஃபீல்டு மார்ஷல் பெர்னார்ட் மோண்ட்கோமரி தலைமையிலான நேச நாட்டு 21வது ஆர்மி குரூப் ஒரு பெரும் கிடுக்கிப்பிடித் தாக்குதலை (pincer encirclement) நடத்துவதாக இருந்தது. இக்கிடுக்கி வியூகத்தின் தெற்குக் கரம் 9வது அமெரிக்க ஆர்மியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் தெற்குக் கிடுக்கிக் கரம் தாக்கத் திட்டமிட்டிருந்த பகுதிகள் ரூர் ஆற்றின் குறுக்கே அமைந்திருந்த அணைகளை ஜெர்மானியப் படைகள் திறந்து விட்டதால் வெள்ளக்காடாயின. இதனால் வடக்குக் கிடுக்கிப் படைப்பிரிவுகள் மட்டும் திட்டமிட்ட படி முன்னேறின. இரு வாரங்கள் கழித்து பெப்ரவரி 23ம் தேதி வெள்ளம் வடிந்தபின் 9வது ஆர்மியால் முன்னேற முடிந்தது. திட்டமிட்டபடி மியூசே ஆற்றுக்கும் ரைன் ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதிகளை நேசநாட்டுப் படைகள் கைப்பற்றின. இந்த இருவாரங்களில் இப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஜெர்மானியப் படைப்பிரிவுகள் ரைன் ஆற்றைக் கடந்து பின் வாங்க ஜெர்மானிய மேற்கு முனைத் தளபதி ஃபீல்டு மார்ஷல் கெர்ட் வான் ரன்ட்ஸ்டெட் ஹிட்லரிடம் அனுமதி கோரினார். ஆனால் ஹிட்லர் இருந்த இடத்திலிருந்தே இறுதிவரை போராடும்படி உத்தரவிட்டார். இதனால் சுமார் மூன்று லடசத்துக்கும் மேற்பட்ட ஜெர்மானியப் படைகள் பத்திரமாகத் தப்பிச் செல்லும் வாய்ப்பு நழுவியது. இதனால் அடுத்து நிகழ்ந்த சண்டைகளில் ஜெர்மானியர்களுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரெனேட்_நடவடிக்கை&oldid=2975665" இருந்து மீள்விக்கப்பட்டது