கிள்ளு
கிள்ளு என்பது பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக 1800 களில் தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட புரட்சியாளர்களிடையே தகவல்களைப் பரிமாறிக்கொள்ள உதவும் ஒரு குழூஉக்குறியாகும். பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராகத் தமிழகத்தின் பழனி, சிவகங்கை, இராமநாதபுரம், சிவகிரி, பாஞ்சாலங்குறிச்சி, திருநெல்வேலி, ஆகிய இடங்களில் புரட்சிக்குழுக்கள் தோற்றுவிக்கப்பட்டன. 1800-ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் நாள் புரட்சிப்படையினர் தமது செயல் திட்டத்தை வகுப்பதற்காக பழனியில் கூடினர். அதன்படி கோயமுத்தூர் கோட்டையைத் தாக்குவதற்காக பழனிமலைகளில் ஒளிந்து கொள்வதென்றும், திண்டுக்கல்லில் இருந்து புரட்சியாளர்களும், தூந்தாஜி வாக்கின் குதிரைப்படைகளும் உதவிக்கு வந்து சேர்ந்தவுடன் அனைத்துப் படைகளும் ஒரே நேரத்தில் கலகத்தில் இறங்கவும் தீர்மானிக்கப்பட்டது. இக்கலகத்தில் சிற்றூர்களின் பங்கேற்பினை உறுதி செய்வதற்காக கிள்ளு என்ற செயல்முறை திட்டமிடப்பட்டது. வெற்றிலையை நகத்தால் கிள்ளி அனுப்பியவுடன், அதனையே அவசர அழைப்பாணையாக ஏற்று புரட்சியாளர்கள் உதவிக்கு விரைந்து வரவேண்டும் என்பது அத்திட்டம் ஆகும்.[1]
மேற்கோள்
தொகு- ↑ கே. ராஜய்யன், 'தென்னிந்தியப் புரட்சி' தமிழாக்கம் எஸ். ஆர். சந்திரன். (விடுதலை வேள்வியில் தமிழகம். பாகம்-1 மனிதம் பதிப்பகம். பக் 19 )