கிழக்கிந்தியப் பகுதிக் கோட்டைகள், நகரங்கள், குடியிருப்புக்களுக்கான நூல்

கிழக்கிந்தியப் பகுதிக் கோட்டைகள், நகரங்கள், குடியிருப்புக்களுக்கான நூல் (போர்த்துக்கேயம்: O Livro das Plantas de todas as fortalezas, cidades e povoaçoens do Estado da Índia Oriental, ஆங்கிலம்: Book of plans of all the forts, towns and villages of East Indies) என்பது போர்த்துக்கேய அரசரின் வேண்டுகோளுக்கு இணங்கத் தயாரித்து அனுப்பப்பட்ட ஒரு கையெழுத்து அறிக்கையைக் குறிக்கும். 1635 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இது போர்த்துக்கேயரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்திருந்த பல்வேறு கோட்டைகள், நகரங்கள், குடியிருப்புக்கள் போன்றவற்றை விளக்கும் உரைப் பகுதியையும், அவற்றைக் காட்டும் தளப்படங்களையும் உள்ளடக்கியது. அந்தோனியோ பொக்காரோ, பெட்ரோ பரேட்டோ டி ரெசென்டே ஆகியோர் இணைந்து இதனை உருவாக்கினர். பொக்காரோ இதன் உரைப்பகுதியை எழுதினார். படங்கள் ரெசென்டேயினால் வரையப்பட்டவை.

பாசயிம் நகரின் படம்.
கண்ணனூர் நகரின் படம்.
கொச்சின் நகரின் படம்.
மாக்கூ நகரின் படம்.
மொம்பாசா.

போர்த்துக்கேய மொழியில் உள்ள இந்த அறிக்கையில் ஆப்பிரிக்கா, இந்தியா, இலங்கை, கிழக்காசியப் பகுதிகள் ஆகிய பகுதிகளில் இருந்த பல்வேறு கோட்டைகள், நகரங்கள் குறித்த தகவல்கள் உள்ளன. இந்த அறிக்கையின் மூலப் படிகளில் ஒன்று போர்த்துக்கலின் எவ்வொராவில் (Évora) அமைந்துள்ள பொது நூலகத்தில் உள்ளது. பிற்காலத்தில் இதிலிருந்து எடுக்கப்பட்ட கையெழுத்துப் படிகள் சில போர்த்துக்கல், ஐக்கிய இராச்சியம், பிரான்சு, இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள சில ஆவணக் காப்பகங்களிலும், நூலகங்களிலும் பாதுகாக்கப்படுகின்றன.

வரலாறு தொகு

17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், போர்த்துக்கேயப் பேரரசுக்குப் பல சோதனைகள் ஏற்படலாயின. எழுச்சிபெற்றுவந்த பிற ஐரோப்பிய நாடுகளிடமிருந்தும், இந்தியாவில் உள்ளூர் அரசர்களிடம் இருந்தும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. போர்த்துக்கேயப் பேரரசின் ஆசியப் பகுதியில் சில இடங்களை ஒல்லாந்தர் கைப்பற்றிக்கொண்டனர். இந்தியாவின் தக்காணப் பகுதியில் முகலாயர்களின் தொல்லைகள் இருந்தன. இலங்கையிலும் கண்டி இராச்சியத்துடன் போரிடவேண்டி இருந்தது. இதனால், ஆசியப் பகுதிகளில் இருந்து கிடைத்துவந்த வருமானம் குறைந்தது. ஐரோப்பாவில் சில முக்கியமான வணிகப் பொருள்களின் விலை வீழ்ச்சியும் போர்த்துக்கேயப் பேரரசைப் பாதித்தது. நிலைமையைச் சரி செய்வதற்கான திட்டங்களைத் தீட்டுவதற்கு, ஆசியப் பகுதிகளில் இருந்த போர்த்துக்கேயரின் நிர்வாக, பாதுகாப்பு, பொருளாதார நிலைமைகள் குறித்த தரவுகள் தேவைப்பட்டன.[1]

1632 ஆம் ஆண்டு, போர்த்துக்கேயப் பேரரசின் ஆளுகைக்கு உட்பட்டுக் கீழைத்தேச நாடுகளில் அமைந்திருந்த நிலப்பகுதிகள், கோட்டைகள், துறைமுகங்கள் போன்றவை தொடர்பான விவரங்களைத் தரும்படி, அக்காலத்தில் போர்த்துக்கேய இந்தியாவின் வைசுராயாக இருந்த டொம் மிகேல் டி நோரொன்யாவுக்கு, அக்காலத்தில் இசுப்பெயின், போர்த்துக்கல் ஆகிய இரு நாடுகளுக்கும் அரசராக இருந்த இரண்டாம் பிலிப்பு கட்டளை இட்டார். அக்காலத்தில் கோவாவில் போர்த்துக்கேயரின் வரலாற்று எழுத்தராகவும், ஆவணக் காப்பகத்துக்குப் பொறுப்பாளராகவும் விளங்கிய "அந்தோனியோ பொக்காரோ"விடம் இவ்விபரங்களைத் தொகுக்கும் பொறுப்பை நோரொன்யா வழங்கினார். பொக்காரோ உரைப்பகுதியை மட்டுமே எழுதினார். வைசுராயின் செயலராக இருந்த "பெட்ரோ பரேட்டோ டெ ரெசென்டே" போத்துக்கேயரின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள இடங்களின் படங்களை வரைவதில் ஆர்வம் உள்ளவராக இருந்தார். இதனால் ஏற்கெனவே இவ்வாறான படங்களை அவர் தயாரித்திருந்தார். எனவே இந்த அறிக்கைக்கான படங்களை வரையும் பொறுப்பை ரெசென்டேயிடம் வழங்குமாறு பொக்காரோ வைசுராயிடம் கேட்டுக்கொண்டார்.[2]

இதன் வேலைகள் 1634 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நிறைவு பெற்றதாகத் தெரிகிறது. 17 பெப்ரவரி 1635 தேதியிட்ட இரண்டு படிகள் அரசருக்கு அனுப்பப்பட்டன.

மூலமும் படிகளும் தொகு

இன்று எவ்வொரா ஆவணக் காப்பகத்தில் உள்ள இவ்வாவணத்தின் படி, கோவாவில் இருந்து 1635 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட மூலப் படிகளில் ஒன்று என உறுதி செய்யப்பட்டு உள்ளது. இரண்டாவது மூலப்படி இப்போது எங்கு இருக்கிறது எனத் தெரியவில்லை. இந்த மூலப் படிகளில் ஒன்றிலிருந்து படி எடுக்கப்பட்ட மூன்று படிகள் உள்ளன. 1635ல் தேதியிட்ட ஒரு படி போர்த்துக்கலில் மாட்ரிட் தேசிய நூலகத்திலும், 1639 தேதியிட்ட இன்னொரு படி லிசுபன் தேசிய நூலகத்திலும் உள்ளன. அதே நூற்றாண்டில் படியெடுக்கப்பட்ட இன்னொரு ஆவணம் கொழும்பில் உள்ள தேசிய சுவடிகள் திணைக்களத்தில் உள்ளது. உள்ளடக்கங்கள் படிக்குப் படி ஓரளவு வேறுபட்டுக் காணப்படுகின்றன. உரைப்பகுதியில் வேறுபாடுகள் அதிகம் காணப்படாவிட்டாலும், வெவ்வேறு ஓவியர்களால் படி எடுக்கப்பட்ட படங்கள் அதிக அளவில் வேறுபட்டுக் காணப்படுகின்றன.

அச்சுப் பதிப்புகள் தொகு

இந்த ஆவணத்தின் முதல் அச்சுப் பதிப்பு 1937-38ல் வெளியிடப்பட்டது. அந்தோனியோ பர்னார்டோ டி பிரகன்சா பெரெய்ரா என்பவர் இதைத் தொகுத்து வெளியிட்டிருந்தார். பின்னர் 1992 ஆம் ஆண்டில் இசபெல் சிட் என்பவர் இரண்டாவது அச்சுப் பதிப்பை வெளியிட்டார். இவ்விரு பதிப்புகளும் எவ்வொராவில் உள்ள மூல ஆவணத்தின் உரைப்பகுதியை அடிப்படையாகக் கொண்டவை. இலங்கையில் இருக்கும் படியை அடிப்படையாகக் கொண்டு, திக்கிரி அபேயசிங்க, அதன் இலங்கை தொடர்பான பகுதிகளை மட்டும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இது 1995 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.[3]

நம்பகத்தன்மை தொகு

இந்த ஆவணத்தின், குறிப்பாக இதில் இணைக்கப்பட்டுள்ள படங்களின் துல்லியத்தன்மை, நம்பகத்தன்மை என்பவை குறித்துப் பலர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறிப்புகள் தொகு

  1. "Antonio Bocarro's Description of Ceylon Translated into English by T. B. H. Abeyasinghe" நூலுக்கு சந்திரா ஆர். டி சில்வா வழங்கிய வரலாற்று அறிமுகம். பக். xii - xiii.
  2. Mendiratta, Sidh, 2011. பக். 51.
  3. "Antonio Bocarro's Description of Ceylon Translated into English by T. B. H. Abeyasinghe" நூலுக்கு சந்திரா ஆர். டி சில்வா வழங்கிய வரலாற்று அறிமுகம். பக். xvi - xvii.

உசாத்துணைகள் தொகு

  • Abeyasinghe, T. B. H. (Translator), De Silva, G. P. S. H., (Honorary Editor), Antonio Bocarro's Description of Ceylon Translated into English, Journal of the Royal Asiatic Society of Sri Lanka, New Series, Volume XXXIX, Special Number, Royal Asiatic Society of Sri Lanka, Colombo, 1996.