கி. வி. வி. கன்னங்கரா

சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா என அழைக்கப்படும் கிறிஸ்தோபர் வில்லியம் விஜயக்கோன் கன்னங்கரா (C. W. W. Kannangara, சிங்களம்: සී.ඩබ්.ඩබ්. කන්නන්ගර, 13 அக்டோபர் 1884 – 29 செப்டம்பர் 1969) என்பவர் ஒரு வழக்கறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆரம்பமான, இலங்கையின் விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த இவர், இலங்கை அரசாங்க சபையின் முதல் கல்வி அமைச்சரானார். மேலும், நாட்டின் கல்வித் துறையில் பாரிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றினார். இவரது சீர்திருத்தங்களால் சமூகத்தின் அனைத்து மட்டத்திலும் இருந்த சிறுவர்கள் கல்வி பெறக்கூடியதாய் இருந்தது.

மேதகு
கி.வி.வி. கன்னங்கர
සි.ඩබ්ලිව්.ඩබ්ලිව්.කන්නන්ගර
வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்
இலங்கை அரசாங்க சபையின் கல்வி அமைச்சர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்டோபர் 13, 1884
ரன்தொம்பே, அம்பலாங்கொட, இலங்கை
இறப்புசெப்டெம்பர் 23, 1969
கொழும்பு, இலங்கை
முன்னாள் கல்லூரிரிச்மண்ட் கல்லூரி
தொழில்வழக்கறிஞர்

இலங்கையின் தெற்கேயுள்ள அம்பலாங்கொடையில் ஒரு கிராமத்தில் பிறந்த இவர், கல்வியில் சிறப்பாகக் காட்டிய திறமை மூலம், அக்காலத்தில் சிறந்து விளங்கிய காலி ரிச்மண்ட் கல்லூரியில் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டார். பாடசாலைக் கல்வியை முடித்துக்கொண்ட அவர் ஆரம்பத்தில் ஒரு வழக்கறிஞராகப் பணியாற்றினார். இலங்கையில் அக்காலத்தில் வலுப்பெற்று வந்த விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டதன் மூலம் அரசியலுக்குள் நுழைந்தார். 1923இல் இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு முதலில் தெரிவான கன்னங்கர, பின்னர் அரசாங்க சபைக்கும் தெரிவு செய்யப்பட்டார். இவர் இலங்கைத் தேசியக் காங்கிரசின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.

1940களில் அரசாங்க சபையில் கல்வி அமைச்சராகப் பணியாற்றிய கன்னங்கர, இலங்கையின் கல்வித்துறையில் பாரிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். கல்வியை இலவசமாக்கியதன் மூலம், நாட்டின் கிராமப்புறங்களிலுள்ள வறிய மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களும் கல்வி பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கினார். மத்திய மகா வித்தியாலயங்கள் எனும் திட்டத்தை ஆரம்பித்ததன் மூலம், நாட்டின் கிராமப் புறங்களில் தரம் வாய்ந்த இரண்டாம் நிலைப் பாடசாலைகளை நிறுவினார். கல்வித்துறையில் கன்னங்கர ஏற்படுத்திய சீர்திருத்தங்களின் விளைவாக, இவர் இலங்கையின் இலவசக்கல்வியின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.[1][2]

இளமைக் காலம்

தொகு

கிறிஸ்தோபர் வில்லியம் விஜயக்கோன் கன்னங்கர, அக்டோபர் 13, 1884இல், இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள ரன்தொம்பே எனும் கிராமத்தில் பிறந்தார்.[2] இவரது தந்தை பலப்பிட்டிய நீதிமன்றத்தில் உதவிப் பிசுக்கால் அலுவலராகப் பணியாற்றிய ஜோன் டானியல் விஜயக்கோன் கன்னங்கர ஆவார். இவரது தாயார் எமிலி விஜயசிங்க ஆவார். கன்னங்கர தனது ஆரம்பக் கல்வியை ரன்தொம்பேயிலுள்ள வெஸ்லிக் கல்லூரியில் பயின்றார்.[3]

 
கன்னங்கர காலியின் பிரசித்தி பெற்ற ரிச்மண்ட் கல்லூரியில் இணைந்தார்.

இளமையில் கன்னங்கர அவர்கள் கல்வியில் சிறந்தமுறையில் திறமைகளை வெளிப்படுத்தினார். ஒருமுறை வெஸ்லிக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவுக்கு பிரதம விருந்தினராக வந்த காலி ரிச்மண்ட் கல்லூரியின் அதிபரான வண. J.H. டரெல் அவர்கள், பரிசளிப்பு விழாவில் அதிகமான பரிசுகளை கன்னங்கரவே பெற்றுக்கொண்டமையை அறிந்து கன்னங்கரவிடம், “தம்பி, நீ பரிசளிப்பு விழாவில் பெற்ற பரிசுகளை வீட்டுக்கு எடுத்துச் செல்ல மாட்டு வண்டியொன்று வேண்டும்” என்று கூறினார்.[4] மேலும் டரெல், கன்னங்கரவுக்கு, ரிச்மண்ட் கல்லூரி நிதியத்தின் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றுவதற்கும் வாய்ப்பளித்தார். பரீட்சையில், கணித பாடத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற கன்னங்கர புலமைப்பரிசிலையும் பெற்றுக்கொண்டார். இதன்மூலம் ரிச்மண்ட் கல்லூரியின் மாணவர் விடுதியில் இலவசமாகத் தங்கவும் வாய்ப்புப் பெற்றார். இங்கு அவர் தனது கிராமப் பாடசாலையிலும் பார்க்க சிறந்த முறையில் கல்வி வழிகாட்டுதல்களைப் பெற்றுக்கொண்டார்.[4]

ரிச்மண்ட் கல்லூரியின் மாணவராக அவர் பல்துறைத் திறமைகளை வெளிப்படுத்தினார். 1903ல் நடைபெற்ற கேம்பிரிட்ச் சீனியர் பரீட்சையில் கணிதப் பாடத்தில் பிரித்தானியப் பேரரசின் பட்டியலிலும், இலங்கைப் பட்டியலிலும் முதல் நிலையில் சித்தியடைந்தார். 1903ல் ரிச்மண்ட் கல்லூரி விளையாடிய முதல் பதினொரு துடுப்பாட்டப் போட்டிகளிலும் அணித்தலைவராகச் செயற்பட்டார். மேலும் அதே வருடத்தில் கல்லூரியின் கால்பந்து அணியிலும் இடம்பெற்றார். இவற்றில் சிறப்பான திறமைகளை வெளிக்காட்டி பாராட்டுதல்களும் பெற்றார்.[4] மேலும் இவர் ஒரு சிறந்த நடிகராகவும் விவாதத் திறமை கொண்டவராயும் விளங்கினார்.[3] பாடசாலைக் கல்வியை முடித்துக்கொண்ட அவர், ரிச்மண்ட் கல்லூரியில் கணித ஆசிரியராகச் சேர்ந்தார். பின்பு மொரட்டுவயிலுள்ள பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரியிலும், கொழும்பு உவெஸ்லிக் கல்லூரியிலும் கற்பித்தார். ஆசிரியராகப் பணியாற்றும் வேளையில் சட்டக் கல்வியை மேற்கொண்டார். 1910ல் ஒரு சட்டத்தரணியாக வெளியேறினார்.[5] அதேவருடத்தில் காலியில் சட்டத்துறையில் பணியாற்றினார்.[2] 1922ல், எடித் டி அல்விஸ் எதிரிசிங்க என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Context of Educational Reforms Then and Now, Dr. Mohottige Upali Sedere, Educational Resource and Information Center
  2. 2.0 2.1 2.2 "The great reformer of education". The Sunday Times. 2006-10-08. http://www.sundaytimes.lk/061008/FunDay/heritage.html. பார்த்த நாள்: 2007-10-07. 
  3. 3.0 3.1 3.2 Wijenayaka, Walter (2003-09-24). "C.W.W. Kannangara: Father of free education". The Daily News இம் மூலத்தில் இருந்து 2005-01-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050122134851/http://www.dailynews.lk/2003/09/24/fea09.html. பார்த்த நாள்: 2007-10-08. 
  4. 4.0 4.1 4.2 Epasinghe, Premasara (2006-09-06). "Father of free education in Ceylon". The Daily Mirror. http://www.dailymirror.lk/2006/09/20/feat/03.asp. பார்த்த நாள்: 2007-10-07. 
  5. Jayetilleke, Rohan L. (2004-10-15). "How C W W Kannangara resisted the Bastions of Reaction". The Daily News இம் மூலத்தில் இருந்து 2005-08-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050825141141/http://www.dailynews.lk/2004/10/15/fea01.html. பார்த்த நாள்: 2007-10-09. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=கி._வி._வி._கன்னங்கரா&oldid=3498752" இலிருந்து மீள்விக்கப்பட்டது