கீற்று முடைதல்

கீற்று முடைதல், கிடுகு முடைதல், ஓலை பின்னுதல் எனப்படுவது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் குடிசைத் தொழிலாக மேற்கொள்ளப்படும் ஒரு கைத்தொழில் ஆகும். தமிழர்கள் தாங்கள் கொண்டாடும் அனைத்து விழாக்களிலும் முடைந்த கீற்றுகளைப் (கிடுகு) பயன்படுத்தியே பந்தல், மேடைகள், கொட்டகைகள், வீட்டின் கூரைகள் போன்றவற்றை அமைப்பார்கள். பண்டைக்காலத்தில் விழா அலங்காரங்கள் அனைத்தையும் பல மரங்களின் இலைகள், பூக்கள், காய்கள் ஆகியவற்றை வைத்தே வடிவமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் கீற்று முடையும் தொழில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

இலங்கையில் பெண்கள் கீற்று முடையும் ஒரு காட்சி

வரலாறு

தொகு

முடைதல் சொல்லுக்குப் பின்னுதல், கட்டுதல், நிரைத்தல் என்ற பொருள்கள் உண்டு. கீற்று முடை தொழில் சுமார் ஆயிரத்து இருநூற்று ஆண்டுகளுக்கு முன்னரே தென் இந்தியாவில் இருந்திருக்கிறது. கிடுகினால் குடிசைகளும், பனை ஓலைகளினால் பறைகளும் கூரைகளும் செய்திருக்கிறார்கள். இதனைக் கிடுகு கொட்டின (பாரத. அணி. 15) (கிடுகு = வட்ட வடிவான பறை வகை ) என்ற இலக்கியச் சான்றினிலிருந்து காண முடிகிறது [1] . ஒரு வீட்டைச் சுற்றி வேலிகள் அமைப்பதற்கும் கிடுகுகள் பயன்படுத்தப்படுகிறது. இதனைக் கிடுகு வேலி என்று கூறுவது வழக்கம்.

மூலப்பொருள்

தொகு

தென்னை ஓலை, பனை ஓலை போன்றவை இந்தத் தொழிலின் மூலப்பொருட்கள் ஆகும். தென்னை ஓலைகளில் பட்டை பட்டையான பல கீற்றுகள் (இலை) இருபுறமும் இருக்கும். இவ்வகையான கீற்றுகள் இரண்டு நீளப் பட்டைகளை ஒரு குச்சியால் இணைக்கப் பட்டது போன்று இருக்கும். கீற்றுகள் முதலில் அகலமானதாகவும் கடைசியில் ஊசி போன்று சுருங்கியதாகவும் இருக்கும். ஒவ்வொரு கீற்றும் ஒன்று முதல் மூன்று முழம் வரை நீண்டு இருக்கும். ஒரு ஓலை மட்டையோ 10-12 முழம் நீளம் கொண்டதாகும்.

சிலர் இந்தத் தொழிலில் சிறியக் கத்திகளையும் பயன்படுத்துவர். இந்தக் கத்திகள் மட்டை பின்னும் பொழுது சில நுனிகளை வெட்ட அல்லது நறுக்க பயன்படுத்துவர்.

மூலப்பொருட்கள் பயன்பாடு

தொகு
 
கீற்றுகளால் வேயப்பட்ட ஒரு குடிசை
 
கீற்றுகளால் அமைக்கப்பட்டுள்ள ஒரு படல்

தென்னங்கீற்றுகளை பல வகைகளில் பயன்படுத்துவார்கள். அவை,

  • பச்சை மட்டையை அப்படியே தண்ணீரில் நனைத்து பின்னுதல். ( பச்சை மட்டை )
  • பச்சையை மட்டையைச் சில நாட்கள் தண்ணீரில் ஊறவைத்து பின்பு அதைப் பின்னுதல். ( காய்ந்த மட்டை )
  • தோரணக் கீற்று பின்னல் : இது கீற்றினை கொழுந்திலேயே பிரித்து தனித்தனியாகப் பின்னுதல்.

கீற்றுமுடையும் முறை

தொகு

கீற்று பின்னும் பொழுது, பச்சை மட்டையானாலும், காய்ந்ததானாலும் ஒரே வகையில் தான் பின்னுவார்கள். பின்னுதலை மட்டையின் தடித்த பகுதியிலிருந்து தொடங்க வேண்டும். அதில் முதல் இரண்டு கீற்றை விடுத்து மூன்றாம் கீற்றை கால் விரல் தூரத்தில் தடித்த மட்டை பகுதியை (அடிமட்டை) நோக்கிக் கீற்று ஈரை ஒடித்து மடக்க வேண்டும். அவ்வாறு ஒடிக்கையில் கீற்றுகள் கிழிந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பின் அதனை இரண்டாம் கீற்றின் மேல் பகுதியிலும், முதல் கீற்றின் கீழ் பகுதியிலும் செல்லும் மாறு 25-30 கோண அளவில் (மட்டையிலிருந்து ) பின்ன வேண்டும். அடுத்து நான்காம் கீற்றை விடுத்து ஐந்தாம் கீற்றை, முன்னர் மூன்றாம் கீற்றை பின்னியது போல், ஒரு கீற்றின் மேற் புறமும், மறு கீற்றின் கீழ் புறமும் செல்லும் மாறு பின்ன வேண்டும். அனைத்து கீற்றுகளும் இறுக்கமாகப் பின்னி, கடைசியில் நான்கு புறமும் கொசுறு போன்று உள்ளதை முடுச்சு போட்டுப் பின்னிய ஓலையைச் செவ்வக வடிவில் அமைக்க வேண்டும். ஆனால் தோரண கீற்றை முற்றிலும் வேறு வகையாகப் பின்னுவார்கள்.

பயன்கள்

தொகு

தோரணம்

தொகு
 
தென்னை ஓலையால் பின்னப்பட்ட தோரணம்

தோரணம் திருமணம், திருவிழா க்களில் பயன்படுத்தும் ஒரு வகை அணிசெய் பொருள் ஆகும். கொழுந்தில் பறித்த தென்னங் கீற்றினை (பச்சை மஞ்சள் நிறத்தில் உள்ள ) நடுவிலே கீறி, கீறிய கீற்றை முடித்துப் போட்டு வைப்பார்கள். இவ்வகையான் பின்னல் முறை தோரணங்களுக்குப் பயன்படுவதினால், இதனைத் தனித்தனி கீற்றுகளாகவே பயன்படுத்துவார்கள்.

கூடைகள்

தொகு

கூடைகள் பன ஓலை அல்லது மட்டையை உரித்துச் செய்த பண்டங்கள் வைப்பதற்கு பயன்படுத்தும் ஒரு பொருளாகும். ஓலைப் பெட்டிகளும் இதில் இருந்தே செய்கிறார்கள். கூடைகளுக்கு கைப்பிடி இருக்கும். பெரும்பாலான பெட்டிகளுக்குக் கைப்பிடி இருக்காது.

விசிறிகள்

தொகு
 
தென்னை ஓலையில் செய்யப்பட்ட விசிறி
 
பனை ஓலையில் செய்யப்பட்ட வட்டவடிவ விசிறி

விசிறிகள் தென்னை ஓலையிலும், பனை ஓலையிலும் செய்வார்கள். தென்னை ஓலையில் செய்யும் விசிறிகள் சதுரமாக இருக்கும், பனைவோலையில் செய்யும் விசிறிகள் வட்ட வடிவிலும் சதுர வடிவிலும் இருக்கும்.

விளையட்டுப் பொருள்கள்

தொகு

ஊதுகுழல், கைக்கடிகாரம் போன்ற விளையட்டுப் பொருள்கள் ஓலையினால் செய்யப்படுகின்றன.

வேறு பயன்பாடுகள்

தொகு
  • படல்
  • பாடை
  • தடுக்கு
  • புறக்காணி (பொடக்காளி)
  • வேலி
  • குடிசை
  • கூரை
  • சாளை
  • முற்றம்

பண்பாடு

தொகு

வாழ்வின் பிறப்பு இறப்பு முதலான வாழ்க்கை வட்டச் சடங்குகளில் கீற்று முக்கியப் பங்காற்றுகிறது. ஒரு வாழ்வியல் சடங்கான பூப்புச் சடங்கில் தாய் மாமன் பூப்படைந்த பெண்ணிற்குப் பச்சை ஓலைகளால் குச்சில் கட்டுதல் (குடிசை கட்டுதல்) என்பது முக்கிய நிகழ்வாகும்.[2] திருமணத்திற்கான தொடக்க நிலைச் சடங்காகப் பச்சைக் கீற்றுகளாலான திருமணப்பந்தல் அமைப்பது தமிழர்களிடம் இன்றும் வழக்கிலுள்ளது. இறந்த பின்னர் பச்சை ஓலைகளால் 'பாடை கட்டுதல்' என்ற வழக்கமும் சில தமிழ் இனக்குழுமத்தாரிடம் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. கிடுகு கொட்டின[தொடர்பிழந்த இணைப்பு] (பாரத. அணி. 15)
  2. "வாழ்க்கை வட்டச் சடங்குகள்". தமிழ் இணையப் பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 04 மே 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீற்று_முடைதல்&oldid=3576978" இலிருந்து மீள்விக்கப்பட்டது