குசேலர்

(குசேலன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்து தொன்மவியலில் சுதாமா எனப் பெயர் கொண்ட குசேலர் கிருஷ்ணரின் இளமைக் கால நண்பர்.

குசேலரை வரவேற்கும் கிருஷ்ணர் (17ம் நூற்றாண்டு ஓவியம்)

தொன்மக் கதை

தொகு

உஜ்ஜையினில் உள்ள சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் இருவரும் குருகுலக் கல்வி பயின்றவர்கள். குசேலர் இன்பங்களில் பற்று அற்றவர். புலனடக்கம் மிகுந்தவர். குருகுலக் கல்வி முடிந்தவுடன் இருவரும் பிரிந்து தத்தமது இருப்பிடங்களுக்கு சென்றனர்.

குசேலர் பரம ஏழை. குசேலர், தனது மனைவி மக்களுடன் பல நாட்கள் அன்னமின்றி பட்டினியாக வாழ்க்கை நடத்தினர். வீட்டின் பரிதாபமான நிலையை கணவருக்கு எடுத்துச் சொல்லி, துவாரகை நகரில் இருக்கும் ஸ்ரீகிருஷ்ணரை பார்த்து வாருங்கள் என்று வேண்டிக் கொண்டாள். பொருட்செல்வத்திற்காக தன் நண்பரான கிருஷணரிடம் செல்ல முடியாது என்று குசேலர் மறுத்து விட்டார். ஆனால் குசேலரின் மனைவியோ, எனக்காக இல்லாவிட்டாலும், பசியால் வாடித் துடிக்கும் நமது குழந்தைகளின் பசிப்பிணியை நீக்குவதற்காகவது நீங்கள் அவசியம் கிருஷ்ணரை ஒரு முறையாவது பார்த்து விட்டு வாருங்கள் என்றாள். தயங்கிய குசேலர், இதைக் காரணமாகக் கொண்டு, கிருஷ்ணரின் பெறுதற்கரிய தரிசனம் கிடைக்குமே என்று துவாரகைக்குப் புறப்பட முடிவு செய்தார். வெறுங்கையுடன் எவ்வாறு கிருஷ்ணரை சந்திப்பது என்று கேட்டார் குசேலர். உடனே அவரது மனைவி பக்கத்து வீடுகளில் சென்று நான்கு பிடி அவல் பெற்றுக் கொண்டு வந்து அதை ஒரு கந்தல் துணியில் சிறு மூட்டையாகக் கட்டி, ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் என்று கூறிக்கொண்டே குசேலரிடம் கொடுத்து அனுப்பினாள்.

குசேலர் துவாரகை நகருக்கு நடைபயணமாக சென்றார். அங்கு கிருஷ்ணரின் மாளிகையின் வாசலில் வந்து சேர்ந்தார். அரண்மனை வாயிற்காப்பாளர்கள் குசேலர் அரண்மனை வாயிலில் காத்திருக்கும் செய்தியை கிருஷ்ணரிடம் கூறினார்கள். ’குசேலர்’ என்ற பெயரைக் கேட்டவுடன் தம்மை மறந்த நிலையில் கீரிடம், பட்டுப்பீதாம்பரம், காலணிகள் கூட அணிய மறந்து, ஓடோடிச் சென்று குசேலரைக் காண அரண்மனை வாசலுக்கே வந்து குசேலரை வரவேற்று அரண்மனைக்கு உள்ளே அழைத்து சென்றார். ஸ்ரீகிருஷ்ணர் தனது நண்பர் குசேலரை உயர்ந்த ஆசனத்தில் அமர வைத்து, அவரது உடலில் நறும் மணம் கமழம் சந்தனம் பூசி, நெற்றியில் கஸ்தூரி குங்குமம் இட்டார். அகர்மணம் நிறைந்த தூபம் மற்றும் நெய் தீபம் காட்டிப் பூசை செய்தார். சிறப்பான விருந்து அளித்து, தாம்பூலம் வழங்கினார். கிருஷ்ணரின் மனைவி ருக்மணிதேவி தனது பணிப்பெண்களுடன் வந்து, இரத்தினம் பதித்த பிடி உடைய விசிறியை கையில் ஏந்தி குசேலருக்கு வீசி குளிர்ச்சி அடையச் செய்தாள். நண்பர் குசேலரை பார்த்து, எனக்கு அளிக்க எதாவது கொண்டு வந்திருப்பீரே என்று கிருஷ்ணர் கேட்டார். கிருஷ்ணரின் எல்லையற்ற செல்வத்தைப் பார்த்த குசேலர், அவருக்காக கொண்டு வந்த அவலைத் தரத் தயங்கினார்.

அப்போது எல்லோருடைய உள்ளங்களில் உள்ள விசயங்களை அறியும் கிருஷ்ணர், குசேலர் தம்மிடம் வந்த காரணத்தைத் தெரிந்து கொண்டார். குசேலர் தன்னுடைய நிஷ்காம்ய பக்தர். அன்புள்ள நண்பர். செல்வம் வேண்டி ஒரு நாளும் என்னை வழிபட்டவர் அல்ல. தன்னுடைய மனைவியின் தூண்டுதலின் பேரில் என்னிடம் வந்திருக்கிறார். ஆகவே, இவருக்கு அனைத்து செல்வங்களையும் தருவேன். முக்தியும் அளிப்பேன். தேவர்களுக்கும் கிட்டாத அருள்புரிவேன் என்று எண்ணினார் கிருஷ்ணர்.

நண்பரே, நீங்கள் எனக்கு அன்புடன் கொடுத்த அவல் என்னை மிகவும் மகிழச்செய்கிறது என்று கூறிக் கொண்டே ஆங்காங்கே சிதறிய அவலை பொறுக்கி எடுத்து கிருஷ்ணர் வாயில் போட்டுக் கொண்டு சுவைக்க ஆரம்பித்தார். பக்தன் அன்போடு கொண்டு வந்த காணிக்கையை இவ்விதம் சாப்பிட்டு கிருஷ்ணர் தமது ஒப்பற்ற அன்பை பக்தனிடம் காட்டினார்.

சில நாட்கள் மிகவும் ஆனந்தத்துடன் கிருஷ்ணரின் அரண்மனையில் தங்கிய குசேலர், ஸ்ரீகிருஷ்ணரிடம் பிரியா விடைப் பெற்றுக் கொண்டு வெறுங்கையுடன் தன் ஊரை நோக்கிப் புறப்பட்டார். கிருஷ்ணரின் லீலையால் தனது குடிசை வீடு தங்க மாளிகையாக காட்சி அளித்தது. மனைவி மக்கள் நல்லாடைகளுடன், உயர்ந்த நகைகளுடன் காட்சி அளித்தனர். தம் மனைவி மக்கள் உயர்ந்த உணவுகளை உண்டு வாழ்ந்த காட்சியைக் கண்ட சுதாமன் என்ற குசேலர் எல்லாம் கிருஷ்ணரின் செயல் என்று உணர்ந்தார்.

தனக்கு கிருஷ்ணர் இந்த செல்வங்கள் தராமல் இருந்திருந்தால் நன்மையாக இருந்திருக்கும். செல்வம் ஒரு மனிதனுக்கு கர்வத்தை கொடுத்து வீழ்ச்சி அடையச் செய்யும் என்று உணர்ந்த குசேலர் பற்று அற்ற மனப்பாங்குடன் கிருஷ்ணரை வழிபடுவதிலே தம் காலம் முழுவதும் கழித்தார்.

ஆதார நூல்

தொகு

ஸ்ரீமத் பாகவதம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=குசேலர்&oldid=3801540" இலிருந்து மீள்விக்கப்பட்டது