குஜ்ரால் திட்டம்
குஜ்ரால் திட்டம் என்பது ஐ. கே. குஜ்ராலால் உருவாக்கப்பட்ட வெளியுறவுக் கொள்கையாகும். தேவ கௌடா பிரதமர் பதவியில் இருந்த போது இவர் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது இத்திட்டத்தை உருவாக்கினார். இந்தியாவின் மேற்கிலும் வடக்கிலும் பகைவர்கள் உள்ளதால் இந்தியாவின் மற்ற சிறிய அண்டை நாடுகளுடன் சண்டை சச்சரவு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே இவர் இத்திட்டத்தை உருவாக்கியதற்கான முதன்மை காரணமாகும். இதில் 5 அம்சங்கள் உள்ளன.
- வங்காள தேசம், பூட்டான், மாலைத்தீவுகள், நேபாளம், இலங்கை முதலியவற்றுக்கு இந்தியா அந்த சிறிய நாடுகளால் திருப்பி செய்ய முடியாவிட்டாலும் அவ்வுதவியால் தனக்கு கேடு இல்லை எனும் போது உதவிகள் செய்யவேண்டும்.
- எந்த தெற்காசிய நாடும் தன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியை மற்ற தெற்காசிய நாட்டின் நலன்களுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.
- எந்த தெற்காசிய நாடும் இப்பகுதியில் உள்ள மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது.
- அனைத்து தெற்காசிய நாடுகளும் இப்பகுதியில் உள்ள மற்ற நாடுகளின் இறையாண்மையையும் அவற்றின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளையும் மதித்து நடக்க வேண்டும்.
- தெற்காசிய நாடுகளுக்கு உள்ளே ஏதாவது சிக்கல் வந்தால் அவற்றை இருதரப்பு பேச்சுவார்த்தையின் மூலம் அமைதியாக தீர்த்துக்கொள்ள வேண்டும்.