ஐ. கே. குஜரால்

இந்திய அரசியல்வாதி
(ஐ. கே. குஜ்ரால் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திர குமார் குஜ்ரால் (டிசம்பர் 4 1919 - நவம்பர் 30 2012)[1][2] இந்தியாவின் 12வது பிரதமர் ஆவார். இவர் மேற்கு பஞ்சாபிலுள்ள ஜீலம் நகரில் பிறந்தார். இது இப்போது பாகிஸ்தானில் உள்ளது. இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற இவர் 1942-ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஐ. கே. குஜரால்
12வது இந்தியப் பிரதமர்
பதவியில்
ஏப்ரல் 21, 1997 – மார்ச் 19, 1998
முன்னையவர்தேவகவுடா
பின்னவர்அடல் பிஹாரி வாஜ்பாய்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புடிசம்பர் 4, 1919
பஞ்சாப்
இறப்புநவம்பர் 30, 2012
அரசியல் கட்சிஜனதா தளம்
துணைவர்ஷீலா குஜ்ரால்

இந்திரா காந்தி அரசில் அமைச்சர்

தொகு

சூன் 12, 1975 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அப்போதய பிரதமர் இந்திரா காந்தி 1971 ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றது முறைகேடு உள்ளது என கூறி அவரது வெற்றியை செல்லாதது என்று தீர்ப்பளித்தது. அதைத்தொடர்ந்து இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி பக்கத்து மாநிலமான உத்திரப்பிரதேசத்திலிருந்து வாகனங்களில் மக்களை அழைத்து வந்து டெல்லியில் பேரணிகளை நடத்தினார். அப்பேரணிகளை அரசின் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் முக்கியத்துவம் கொடுத்து காட்டுமாறு தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சரான இந்திர குமார் குஜ்ராலை கேட்டுக்கொண்டார், ஆனால் குஜரால் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனாலயே குஜரால் நீக்கப்பட்டு வித்யா சரண் சுக்லா தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார் என பலர் கருதுகின்றனர். தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சரவையிலிருந்து இவர் திட்டதுறை அமைச்சராக மாற்றப்பட்டார்.[3][4] பின்பு சோவியத் ஒன்றியத்துக்கான இந்திய தூதுவராக நியமிக்கப்பட்டார்.

ஜனதா தளம்

தொகு
  • குஜ்ரால் அவர்கள் 1989 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையில் நடந்த போபர்ஸ் ஊழலை எதிர்த்து வெளியேறிய ராணுவத்துறை அமைச்சர் வி. பி. சிங்குடன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அவரது ஜனதா தளத்தில் இணைந்தார்.
  • 1989 தேர்தலில் ஜலந்தர் நாடாளுமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். வி.பி.சிங் அமைச்சரவையில் வெளியுறவு துறை அமைச்சராக பணி புரிந்தார். 1989 ம் ஆண்டு முப்தி முகமது சயதுவின் மகள் ருபயா சயத் கடத்தப்பட்ட போது கடத்தப்பட்டவர்களுடன் பேசி ருபயாவை மீட்க வி.பி.சிங் இவரை அனுப்பினார். குவைத் மீது ஈராக் படையெடுத்து ஆக்கிரமித்ததும் அதன் விளைவாக 1991ல் ஏற்பட்ட முதலாம் வளைகுடா போரும் இவர் வெளியுறவு துறை அமைச்சராக கையாண்ட பெரிய செயல்.
  • அச்சமயம் ஈராக் அதிபர் சதாம் உசேனை நேராக சந்தித்து பேசினார். 1991 நடுவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாட்னா தொகுதியில் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) வேட்பாளர் யஷ்வந்த் சின்காவை எதிர்த்து போட்டியிட்டார்.
  • எனினும் அதிக அளவு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் வந்ததைத்தொடர்ந்து இத்தேர்தல் இரத்து செய்யப்பட்டது.
  • 1992 ஆம் ஆண்டு குஜ்ரால் இந்தியாவின் மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1996 தேர்தல் முடிந்து மீண்டும் ஜனதா தளம் தலைமையில் அமைந்த ஐக்கிய முன்னணி அரசமைந்த பொழுது இரண்டாம் முறையாக வெளியுறவு துறை அமைச்சராக பணி புரிந்தார். அப்போது இவர் குஜ்ரால் திட்டம் என்பதனை முன்மொழிந்தார், இத்திட்டம் அண்டை நாடுகளுடன் நல்லிணக்கத்தை பேணுவதாக அமைந்தது.

பிரதமர்

தொகு

ஏப்ரல் 1997 இல் தேவகௌடா தலைமையிலான ஐக்கிய முன்னணிக்கு வழங்கி வந்த ஆதரவை காங்கிரஸ் விலக்கி கொண்டதனால் அரசு கவிழும் நிலை தோன்றியது. தேர்தலை தவிர்ப்பதற்காக ஐக்கிய முன்னனிக்கும் காங்கிரஸுக்கும் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி காங்கிரஸ் புதிய தலைமையிலான ஐக்கிய முன்னனி அரசை வெளியிலிருந்து ஆதரிக்க முன்வந்தது. முக்கிய முடிவுகள் எடுக்கும் போது காங்கிரஸை அரசு ஆலோசிக்க வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது. ஐக்கிய முன்னணி குஜ்ராலை புதிய தலைவராக தேர்ந்தெடுத்தது அதைத்தொடர்ந்து குஜ்ரால் 1997 ஏப்ரல் 21 ல் பிரதமராக பதவுயேற்றார்.

காங்கிரஸுக்கும் ஐக்கிய முன்னணிக்கும் கசப்புணர்வு இருந்த போதிலும் குஜ்ரால் காங்கிரஸுடன் நல்லுறவை பேணிவந்தார். பதவியேற்ற சில வாரங்களில் ஜனதா தளத்தினால் இவருக்கு நெருக்கடி ஏற்பட்டது. மத்திய புலனாய்வு துறை மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் பீகாரின் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீது வழக்கு தொடர பீகாரின் ஆளுனர் ஏ.ஆர்.கிட்வாலிடம் அனுமதி கோரியது. ஆளுனர் வழக்கு தொடர அனுமதி அளித்தார். இதனால் ஐக்கிய முன்னணியை சேர்ந்த சிலரும் மற்றவர்களும் லாலு பிரசாத் யாதவ் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கோரினர். ஆனால் யாதவ் அக்கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. பிரதமர் குஜ்ராலும் யாதவை பதவி விலகுமாறு வற்புருத்தினார், ஆனால் யாதவின் அரசுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. யாதவ் மீதான வழக்கை விசாரித்து வந்த மத்திய புலனாய்வு துறை தலைவர் ஜோகிந்தர் சிங் மாற்றப்பட்ட போது அது யாதவை பாதுகாக்க குஜ்ரால் மேற்கொண்ட முயற்சியாக பலர் கருதினர். ஜனதாதளத்தில் தனது செல்வாக்கு குறைந்து விட்டதாக கருதிய யாதவ் ஜனதாதளத்திலிருந்து பிரிந்து இராஷ்டிரிய ஜனதாதளத்தை 1997 ஜூலை 3-ல் தொடங்கினார். மக்களவையின் 45 ஜனதாதள உறுப்பினர்களில் 17 பேர் யாதவை ஆதரித்தனர். அவர்கள் வெளியிலிருந்து குஜ்ரால் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தருவதாக கூறியதால் அரசு கவிழும் சூழலில் இருந்து தப்பியது.

21 அக்டோபர் 1997 ல் உத்திரபிரதேச மாநில சட்டமன்றத்தில் கல்யாண் சிங் தலைமையிலான பாஜக அரசு மீதான நம்பிக்கை கோரும் வாக்கு நடைபெற்றது, அப்போது சபை மாண்பை குறைக்கும் செயல்களும் வன்முறைகளும் நிகழ்ந்தன, அதைத்தொடர்ந்து குடியரசு தலைவர் ஆட்சியை செயல்படுத்த குஜ்ரால் அரசு குடியரசு தலைவரிடம் பரிந்துரைத்தது. எனினும் குடியரசு தலைவர் கே. ஆர். நாராயணன் அப்பரிந்துரையை ஏற்க மறுத்து மறுபரிசீலனைக்கு அரசுக்கு அனுப்பினார். அலகாபாத் உயர் நீதிமன்றமும் உத்திரபிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை செயல் படுத்த தடை விதித்தது.

1997 நவம்பர் மாத தொடக்கத்தில் இராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஜெயின் கமிசனின் சில அறிக்கைகள் ஊடகங்களுக்கு கிடைத்தது. இராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணமாக கருதப்படும் விடுதலை புலிகளுக்கு திமுக ஆதரவு வழங்கி வந்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. திமுக ஐக்கிய முன்னனியில் ஒரு அங்கமாக இருந்ததுடன் அமைச்சரவையில் பங்கு பெற்றிருந்தது. காங்கிரஸ் ஜெயின் கமிசன் அறிக்கையை நாடாளுமன்ற அவையில் வெளியிடுமாறு கோரியதால் 1997 நவம்பர் 19 அன்று அரசு ஜெயின் கமிசன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வெளியிட்டது. இதில் திமுக வை விடுதலைப்புலிகள் அமைப்புடன் ஜெயின் கமிசன் தொடர்பு படுத்தி இருந்தது உறுதியாகியது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ், திமுக அமைச்சர்களை அரசைவிட்டு நீக்குமாறு வலியுறுத்தியது. காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரியும் பிரதமர் குஜ்ராலும் கடிதங்களை பரிமாறிக்கொண்டனர். எனினும் குஜ்ரால் காங்கிரஸின் இந்த நெருக்குதலை ஏற்கமறுத்து விட்டார். 1997 நவம்பர் 23 அன்று கல்கத்தாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாடாளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் வரலாம் என்று சூசகமாக தெரிவித்தார். 1997 நவம்பர் 28 காங்கிரஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டதை தொடர்ந்து குஜ்ரால் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். மற்ற கட்சிகளால் மாற்று அரசு அமைக்க முடியாமல் போனதால் நாடாளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் முடிந்து புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை குஜ்ரால் இடைக்கால பிரதமராக நீடித்தார். இடைக்கால பிரதமராக இருந்த 3 மாதங்களையும் சேர்த்து குஜ்ரால் 11 மாதங்கள் பிரதமராக பதவியில் இருந்தார்.

1998 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் குஜ்ரால் பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் தொகுதியில் அகாலி தளம் ஆதரவோடு போட்டியிட்டார். பிரதமராக இருந்தபொழுது 1980 மற்றும் 1990 தொடக்கத்தில் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கான செலவுகளை பஞ்சாப் அரசுடன் இந்திய நடுவண் அரசும் பகிர்ந்து கொள்ளும் என்று அறிவித்தார். இது பஞ்சாப் மீதான பொருளாதார அழுத்தத்தை பெருமளவு குறைத்தது. இதன் காரணமாக பாஜக கூட்டணியில் இருந்தபோதும் அகாலி தளம் குஜ்ராலை ஆதரித்தது. அத்தேர்தலில் குஜ்ரால் காங்கிரஸின் உம்ராவ் சிங்கை விட 131,000 வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றார்.

தொடர்ந்த 12வது மக்களவையில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசை தீவிரமாக எதிர்த்தார். பொக்ரானில் நடந்த அணு வெடிப்புச் சோதனையின் எதிர் விளைவுகளை 1998 மே 29 ல் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் எடுத்துக்கூறினார். பீகாரில் குடியரசு தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட்டதையும் எதிர்த்தார். எனினும் பிரதமர் வாஜ்பாயி அவர்களின் லாகூர் பயணத்தையும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரிப் உடனான லாகூர் அறிக்கையையும் ஆதரித்தார்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ._கே._குஜரால்&oldid=3958434" இலிருந்து மீள்விக்கப்பட்டது