குமணன் சங்ககால மன்னர். முதிரம் இவர் நாடு. இவர் சிறந்த கொடையாளி. பெருஞ்சித்திரனார், பெருந்தலைச்சாத்தனார் ஆகிய புலவர்கள் இவரைப் பாடியுள்ளனர். இவர் கடையெழு வள்ளல்கள் காலத்துக்குப் பின்னர் வாழ்ந்தவர். இவரது தம்பி இளங்குமணன்.

யானைப்பரிசில்

தொகு

குமணன் அரசனாக விளங்கியபோது பெருஞ்சித்திரனார் தன் வறுமை நிலையைக் கூறிக் குமணனிடம் தான் யானைமீது செல்லும் வகையில் பரிசில் தருமாறு வேண்டினார். அவனும் அவ்வாறே கொடுத்தான். தன் இல்லம் திரும்பும் வழியில் இளவெளிமான் நாட்டுக்கு வந்து தன் பெருமிதம் தோன்றத் தன் யானையை அவனது காவல்மரத்தில் கட்டிவிட்டு, அவனிடமே சென்று தன் பெருமிதத்தை வெளிப்படுத்தினார்.

வாள் தந்தனன்

தொகு

குமணனை அவன் தம்பி இளங்குமணன் நாடுகடத்திவிட்டான். குமணன் காட்டில் தலைமறைவாக வாழ்ந்துவந்தான். குமணனிடம் பரிசில் பெறச் சென்ற புலவர் பெருந்தலைச்சாத்தனார் நிலைமையைத் தெரிந்துகொண்டு காட்டிற்குச் சென்று குமணனைப் பாடினார். புலவருக்குத் தரக் குமணனுக்குத் தன்னைத் தவிர வேறொன்றும் இல்லை. குமணன் தன் வாளைப் புலவர்க்குக் கொடுத்தான். குமணன் தலையைக் கொண்டுவருவோருக்குத் தக்க பரிசில் வழங்கப்படும் என்று இளங்குமணன் அறிவித்திருந்தான். குமணன் தன் வாளைப் புலவருக்குக் கொடுத்தது, தன் தலையையே வெட்டியெடுத்து எடுத்துச் செல்வதற்காகவே. குமணன் தந்த வாளே தனக்குப் போதும் என்று வாளைமட்டும் எடுத்துக்கொண்டு புலவர் இளங்குமணனிடம் வந்து வாளைக் காட்டி நிகழ்ந்ததைக் கூறினார். இளங்குமணன் புலவர்க்குப் பரிசில் நல்கியிருக்கலாம். அதைக்கொண்டு புலவர் தன் வறுமையைப் போக்கிக்கொண்டிருக்க வேண்டும்.[1]

சான்றடைவு

தொகு

புறநானூறு தரும் பாடல் வாரியான செய்திகள்

 • குமணன் கடையெழு வள்ளல்களுக்குப் பின்னர் வாழ்ந்தவர்.[2]
 • குமணன் மேம்பட்ட குடியில் பிறந்தவர்.[3]
 • நண்பர் சூழ முதிரமலைப் பகுதியில் வாழ்ந்தவர்.[4]
 • மார்பில் சந்தனம் பூசிக்கொண்டு மகளிர் மகிழ்வு தர வாழ்ந்து வந்தான். முரசு முழங்கும் அவன் வளமனைக்கு வரும் அவரது குடிமக்கள் பெருஞ்செல்வம் பெற்று மகிழ்ந்தனர். இவரது வாள்-படை மிகவும் பெரியது.[5]
 • இவர் வழங்கும் கொடையானது கொடையைப் பெற்றவர் பிறருக்கெல்லாம் வழங்கி மகிழும் அளவுக்கு மிகுதியாக இருந்தது.[6]
 • அவ்வப்போது பசுமையான கோலை வளைத்துச் செய்துகொண்ட யாழை மீட்டிப் பாடும் வயிரியரின் வறுமையைப் போக்கும் குடியில் பிறந்தவர்.[7]
 • பாடுவோருக்கெல்லாம் யானைகளைப் பரிசிலாக வழங்கி மகிழ்ந்தவர் இவர். இவரைப் பெருந்தலைச் சாத்தனார் காட்டில் தலைமறைவாக வாழ்ந்துவந்த காலத்தில் பாடினார். அவர் தன் தலையை வெட்டி எடுத்துக்கொண்டு போய்த் தன் தம்பியிடம் கொடுத்து அதன் விலையாக அவன் தரும் பரிசிலைப் பெற்றுக்கொள்ளும்படி வாளைப் புலவருக்கு வழங்கினார்.[8]

சிவாலயம்

தொகு

குமணன் என்பவர் பழனிமலைத் தொடரினை ஆண்டு வந்த அரசனாவார். இவர் முதிரம் எனும் ஊரை தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தார். இவர் குறுநில மன்னர். கடையேழு வள்ளல்களின் காலத்திற்குப் பிற்பட்டவர் என்பதும், தலையேழு வள்ளல்களில் ஒருவர் என்பதும் செய்தியாகும். பழநிக்கும் உடுமலைப்பேட்டைக்கும் இடையே குமணமங்கலம் என்று ஊர் இவரது பெயரில் அழைக்கப்படுகிறது. கொமரமங்கலம் காசி விசுவநாதர் கோயில் என்பதை இவர் உருவாக்கினார்.[9] மன்னர் காசிக்கு சென்று காசி விசுவநாதரை தரிசித்து வந்தார். தன்னுடைய மக்களுக்கும் காசிக்கு சென்று வழிபட முடியாது என்பதால் அங்கிருந்து சிவலிங்கத்தினை பெற்று தன்னுடைய ஊரிலேயே காசிவிசுவநாதருக்கு கோயில் அமைத்தார். அம்மன்னருடைய பெயரே ஊரின் பெயரானது.

இவற்றையும் காண்க

தொகு

வெளிப் பார்வை

தொகு

கொங்கு மண்டல சதகம் பாடல் 41

அடிக்குறிப்பு

தொகு
 1. புறநானூறு 164, 165
 2. பெருஞ்சித்திரனார் பாடல் புறநானூறு 158
 3. வசை இல் விழுத் திணைப் பிறந்த, இசை மேந் தோன்றல் - பெருஞ்சித்திரனார் பாடல் புறநானூறு 159
 4. நட்டோர் நட்ட நல் இசைக் குமணன், ட்டு ஆர் மறுகின், முதிரத்தோனே; - பெருஞ்சித்திரனார் பாடல் புறநானூறு 160
 5. சாந்து அருந்திப்
  பல் பொறிக் கொண்ட ஏந்து எழில் அகலம்
  மாண் இழை மகளிர் புல்லுதொறும் புகல,
  நாள் முரசு இரங்கும் இடனுடை வரைப்பில் நின்
  தாள் நிழல் வாழ்நர் நன் கலம் மிகுப்ப,
  வாள் அமர் உழந்த நின் தானையும்,
  சீர் மிகு செல்வமும், - பொருஞ்சித்திரனார் பாடல் புறநானூறு 161
 6. எல்லோர்க்கும் கொடுமதி மனை கிழவோயே!
  பழம் தூங்கு முதிரத்துக் கிழவன்
  திருந்து வேல் குமணன் நல்கிய வளனே. - பெருஞ்சித்திரனார் பாடல் புறநானூறு 163
 7. ண் அமை நரம்பின் பச்சை நல் யாழ்,
  மண் அமை முழவின், வயிரியர்
  இன்மை தீர்க்கும் குடிப் பிறந்தோயே. - தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த குமணனைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது. புறநானூறு 164
 8. கேடு இல் நல் இசை வய மான் தோன்றலைப்
  பாடி நின்றனெனாக, 'கொன்னே
  பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என
  நாடு இழந்ததனினும் நனி இன்னாது' என,
  வாள் தந்தனனே, தலை எனக்கு ஈய, - தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த குமணனைக் கண்டு, அவன் தன் வாள் கொடுப்பக் கொண்டு வந்து, இளங் குமணற்குக் காட்டி, பெருந்தலைச் சாத்தனார் பாடியது. புறநானூறு 165
 9. குமுதம் பக்தி ஸ்பெசல் கொங்கு நாட்டு காசி – பக்கம் 30-33
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமணன்&oldid=4014854" இலிருந்து மீள்விக்கப்பட்டது