குழந்தை பிரான்சிசு

குழந்தை பிரான்சிசு (Kulandei Francis, பிறப்பு:1947) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் தன்னார்வலத் தொண்டு நிறுவனர். ஒருங்கிணைந்த சிற்றூர் மேம்பாட்டுத் திட்டம் (Integrated Village Development Project) என்ற அரசுசாரா தன்னார்வல அமைப்பை நிறுவி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வறியவர்களுக்கு தமது சொந்தக் கால்களில் நிற்கத் துணை நின்றவர். 2012க்கான ரமன் மக்சேசே பரிசு பெற்றவர்களில் ஒருவராவார்[1].

குழந்தை பிரான்சிசு
பிறப்பு1946
சேலம் மாவட்டம் தமிழ்நாடு
படித்த கல்வி நிறுவனங்கள்அண்ணாமலை பல்கலைக்கழகம்
அமைப்பு(கள்)ஒருங்கிணைந்த சிற்றூர் மேம்பாட்டுத் திட்டம் (Integrated Village Development Project)

சேலம் மாவட்டத்தில் காரிப்பட்டி சிற்றூரில் ஓர் வறிய குடும்பத்தில் தந்தை குழந்தை மற்றும் தாய் மதலை மேரிக்கு மகனாகப் பிறந்தார். தங்கள் மகன் நன்கு கற்றுத்தேற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரான்சிசின் பெற்றோர் தங்களிடமிருந்த ஒரே நிலத்துண்டையும் விற்று அவரை அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பு படிக்க உதவினர். ஓர் கிறித்தவப் பாதிரியாக விரும்பிய பிரான்சிஸ் 1970இல் திருச்சிலுவைத் துறவியர் சபையில் இணைந்தார். அவர்களால் மகாராட்டிராவிலுள்ள புனேயில் இறையியல் படிக்க அனுப்பப் பட்டார். அந்தப் படிப்பின் தொடர்பாக 1971ஆம் ஆண்டு வங்காளதேச போரில் துயர் துடைப்பு பணிகளில் ஈடுபட்டார். 1972ஆம் ஆண்டு புனேயில் ஏற்பட்ட வறட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு துயர் துடைப்புப் பணிகளிலும் பங்கேற்றார்.

வறியவர்களின் வாழ்நிலையை ஏற்றிட விருப்பமுற்ற பிரான்சிஸ் கனடாவிலுள்ள கோடி பன்னாட்டு கழகத்தில் சமூக மேம்படுத்தல் கல்வியையும் பிலிப்பைன்சு நாட்டில் ஊரக மேலாண்மை கல்வியையும் கற்றார்.

கோசலை மேரியை மணமுடித்துள்ள பிரான்சிசுக்கு சுனிதா நந்தினி எஸ்தர் என்ற பெண் உள்ளார். இவரது தன்னார்வலத் திட்டப்பணிகளில் மனைவியும் மகளும் துணை நிற்கின்றனர்.[2][3][4]

ஒருங்கிணைந்த சிற்றூர் மேம்பாட்டுத் திட்டம்

தொகு

1979இல் பிரான்சிசு ஒருங்கிணைந்த சிற்றூர் மேம்பாட்டுத் திட்டம் (Integrated Village Development Project - IVDP) என்னும் தன்னார்வல தொண்டு நிறுவனத்தை கிருஷ்ணகிரியில் நிறுவினார். இரவு பள்ளிக்கூடம், முதல் உதவி நிலையம் போன்ற சிறு திட்டங்களோடு அது தொடங்கியது. பின்னர், மண்ணரிப்பைக் குறைப்பதற்காக நீர் ஓடும் ஓடைகளின் குறுக்கே கட்டப்படுகின்ற தடுப்பணைகள் கட்டும் பணியை அந்நிறுவனம் மேற்கொண்டது. 60 கிராமங்களில் இத்தகைய 331 தடுப்பணைகள் கட்டப்பட்டு, 40 ஆயிரம் மக்களுக்குப் பயன் ஏற்பட்டுள்ளது.[3]

தன்னுதவிக் குழுக்கள் ஏற்படுத்தல்

தொகு

ஒருங்கிணைந்த சிற்றூர் மேம்பாட்டுத் திட்டத்தின் முயற்சியால் 1989இல் பெண்களுக்கான தன்னுதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டன. 2011ஆம் ஆண்டளவில் இத்தகைய தன்னுதவிக் குழுக்கள் 8231 நிறுவப்பட்டு, 153,990 உறுப்பினர்கள் பயன்பெறுகின்றனர். அவர்களது சேமிப்பு நிதி 40 மில்லியன் டாலர், மொத்த கடன்தொகை அளிப்பு 435 மில்லியன் டாலர், மற்றும் ஒதுக்கு நிதி சுமார் 9 மில்லியன் டாலர்.[5]

ரமோன் மக்சேசே விருது வழங்கப்படுதல்

தொகு

குழந்தை பிரான்சிசு தொடங்கி நடத்துகின்ற ஒருங்கிணைந்த சிற்றூர் மேம்பாட்டுத் திட்டத்தின் சேவையைப் பாராட்டி 2012ஆம் ஆண்டுக்கான ரமோன் மக்சேசே விருது வழங்கப்பட்டது. பரிசுப் பட்டயத்தில் பின்வரும் கருத்துகள் குறிக்கப்பட்டன:

  • குழந்தை பிரான்சிசு தொடங்கிய திட்டம் நிதிமுறையில் கட்டுப்பாடு, தன்னிறைவு கொண்டு, உறுப்பினருக்கு உரிமையானதாகவும் உறுப்பினரால் நடத்தப்படுவதாகவும் இருப்பது சிறப்பு.
  • நலவாழ்வு, வீட்டுவசதி, வாழ்க்கைத் தேவை, குழந்தைக் கல்வி, கல்வி உதவி, மாணவரின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சி, பழங்குடிக் குழந்தைகளுக்குக் கல்விக்கூடம், 5000க்கும் மேலான மாணவர்களுக்குப் பயிற்சியளித்துள்ள கணினி பயிற்சிமையம் போன்றவை இந்த நிறுவனத்தின் சாதனைகள்.[6]
  • குழந்தை பிரான்சிசு கொண்டுள்ள தொலைநோக்குப் பார்வை, மக்கள் சக்தியில் அவர் வைத்துள்ள நம்பிக்கை, மற்றும் மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகத் தம் திட்டங்கள் வழியாக அவர் எண்பித்துள்ள உறுதிப்பாடு ஆகியவற்றைப் போற்றி, அவருக்கு மக்சேசே பரிசு வழங்கப்பட்டுள்ளது.

குழந்தை பிரான்சிசு நிறுவி நடத்திவருகின்ற திட்டம் இன்று தமிழ்நாட்டில் தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது.[7]

குறிப்புகள்

தொகு
  1. "குழந்தை பிரான்சிசுக்கு ரமோன் மக்சேசே விருது வழங்கப்படுகிறது". Archived from the original on 2012-12-28. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 20, 2013.
  2. "Integrated Village Development Project - Krishnagiri".
  3. 3.0 3.1 "'Poverty is a crime; it needs to be eliminated'". The Indian Express. August 12, 2012. http://www.indianexpress.com/news/poverty-is-a-crime--it-needs-to-be-eliminated/986145/0. 
  4. "Kulandei Francis: Who is he?". India Today. பார்க்கப்பட்ட நாள் 26 July 2012.
  5. "India's Kulandei Francis wins Ramon Magsaysay Award". India Today. July 26, 2012. http://indiatoday.intoday.in/story/indian-kulandei-francis-wins-ramon-magasaysay-award/1/210253.html. 
  6. "மக்சேசே பரிசுப் பத்திரம்". Archived from the original on 2012-12-28. பார்க்கப்பட்ட நாள் 2013-03-19.
  7. "Kulandei Francis' visionary zeal fetches him the Magsaysay". The Hindu. July 26, 2012. http://www.thehindu.com/news/national/article3683671.ece. 

வெளி இணைப்புகள்

தொகு
  • About The Founder president ஒருங்கிணைந்த சிற்றூர் மேம்பாட்டுத் திட்ட வலைத்தளத்தில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=குழந்தை_பிரான்சிசு&oldid=3550836" இலிருந்து மீள்விக்கப்பட்டது