கூழமந்தல் கங்கைகொண்ட சோழீசுவரர் கோவில்
கூழமந்தல் கங்கைகொண்ட சோழீசுவரர் கோவில் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், கூழமந்தல் கிராமத்தில் அமைந்துள்ளது. இவ்வூருக்குக் கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் விக்கிரம சோழபுரம் ஆகிய பெயர்களும் உள்ளன.[1] இக்கோவில் தமிழ் நாடு அரசு தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது.[1]
அமைவிடம்
தொகுஇவ்வூர் உத்தரமேரூரிலிருந்து 20.0 கி.மீ. தொலைவிலும், செய்யாரிலிருந்து 19.0 கி.மீ. தொலைவிலும், கவந்தண்டலத்திலிருந்து 18.3 கி.மீ. தொலைவிலும், காஞ்சிபுரத்திலிருந்து 15.8 கி.மீ. தொலைவிலும், மாகரலிலிருந்து 14.9 கி.மீ. தொலைவிலும், செவிலிமேட்டிலிருந்து 13.7 கி.மீ. தொலைவிலும், குரங்கணில்முட்டத்திலிருந்து 12.0 கி.மீ. தொலைவிலும், தூசி மாமண்டூரிலிருந்து 7.2 கி.மீ. தொலைவிலும், உக்கலிலிருந்து 2.2 கி.மீ. தொலைவிலும், அமைந்துள்ளது. இவ்வூரின் அஞ்சல் குறியீட்டு எண் 631701 ஆகும். இவ்வூரை மக்கள் தொகை 1750 ஆகும். [2]
கோவில் அமைப்பு
தொகுசோழர் காலத்திய கலைப்பாணியில் அமைந்த கங்கைகொண்ட சோழீசுவரர் கோவில் தற்போது ஜெகன்னாதேசுவரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது.[3] இக்கோவில் மூலவர் கங்கைகொண்ட சோழீசுவரர் ஆவார். [3] கூழமந்தல் என்றும் கூழம்பந்தல் என்றும் அழைக்கப்பட்டுவரும் இவ்வூர், இக்கோவில் மூலவரின் பெயர்தாங்கி ‘கங்கைகொண்ட சோழீஸ்வரமுடையார் கோயில்’ என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.[1][4]
தமிழக அரசின் தொல்லியல் துறையின் இயக்குனரான, ஆர்.நாகசுவாமியின் வழிகாட்டுதலின் கீழ், இக்கோவில் அறிவியல் ரீதியாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. [4]
இக்கோவில் கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம், இடைநாழி, மகாமண்டபம் என்ற அமைப்பில் அமைந்துள்ளது. மூலவர் கங்கைகொண்ட சோழீசுவரர், சதுர வடிவக் கருவறையில், இலிங்க வடிவில் காட்சி தருகிறார். [3][1] அர்த்தமண்டபத்தின் கருவறை நுழைவாயிலில் வாயிற்காப்போர்களின் (துவாரபாலர்கள்) சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.[4]
மூலவரின் முத்தள விமானம், உபானம் - அதிட்டானம் முதல் தூபி வரை, கருங்கல்லால் கட்டடப்பட்ட கற்றளி ஆகும். [1][4] விமானத்தின் கிரீவம் என்னும் கழுத்துப் பகுதியும், சிகரமும் வேசர (வட்ட) வடிவிலும், இதற்கு கீழே அமைந்துள்ள பகுதிகள் நாகரமாகவும் (நாற்கரமாகவும்) அமைந்துள்ளன. இதனை கலப்பு விமானம் என்று அழைப்பார்கள்.[4]
உபபீடம் (உபானம்) பத்ரபீட வகையைச் சேர்ந்தது. விமானம், அர்த்தமண்டபம் ஆகியவற்றின் அதிட்டானம் பத்மபந்த வகையைச் சேர்ந்தது. பத்மவரி, உருள்குமுதம், யாளிவரி ஆகிய கூறுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மகாமண்டபம் மற்றும் அம்மன் கருவறையின் அதிட்டானம் பாதபந்த வகையைச் சேர்ந்தது. பத்ம வரிக்கு ஈடாக ஜகதி, உருள்குமுதம், கண்டம் பட்டிகை ஆகிய கூறுகளுடன் திகழ்கிறது.[5]
விமானத்தின் கீழ்த் தளத்தின் ஒவ்வொரு வெளிப்பக்கச் சுவரின் பத்ரப் பகுதியில் ஒன்றும், அகாரைப் பகுதியில் இரண்டும் என்று மொத்தம் மூன்று தேவகோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விமானத்தின் மூன்று பக்கங்களிலும் ஒன்பது தேவகோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அர்த்தமண்டபச் சுவரில் பக்கத்திற்கொன்றாக இரு தேவகோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.[5]
விமானத்தின் தெற்குக் கோட்டங்களில் பிச்சாடனர், தட்சிணாமூர்த்தி மற்றும் ஹரிஹரர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்; மேற்குக் கோட்டங்களில் விட்ணு, லிங்கோத்பவர் மற்றும் (மீண்டும்) ஹரிஹரர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்; மற்றும் வடக்குக் கோட்டங்களில் சுப்பிரமணியர் மற்றும் பிரம்மா, ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்; மூன்றாவது வடக்கு கோட்டம் வெறுமையாக உள்ளது; அர்த்தமண்டபத்தின் வடக்குக் கோட்டத்தில் துர்கையும்ம் தெற்குக் கோட்டத்தில் நின்றநிலையில் கணபதியும் இடம்பெற்றுள்ளனர்.[5]
விமானத்தின் முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் கர்ணக்கூடு, அகாரை, சாலை, அகாரை, கர்ணக்கூடு என்னும் வரிசையில் உறுப்புகள் இடம் பெற்றுள்ளன. விமானத்தின் முதற்றளத்திலும் இரண்டாம் தளத்திலும் மொத்தம் ஏழு தேவகோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை பத்ர, கர்ணப் பகுதிகளிலும், அகாரைகளிலும் இடம்பெற்றுள்ளன. மாதொருபாகன் சிலை ஒரு கோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. சில கோட்டங்களில் சிலைகள் இல்லை. சில கோட்டங்களின் சிலைகளை அடையாளம் காண இயலவில்லை. மூன்றாம் தளத்தில் நான்கு மூலைகளில் கர்ணக் கூடுகளும், மூலைக்கு இரண்டிரண்டாக எட்டு நந்திகள் இடம்பெற்றுள்ளன.[5]
விமானத்தின் கிரீவம் என்னும் கழுத்துப் பகுதியும், சிகரமும் வேசர (வட்ட) வடிவில் அமைந்துள்ளன. வட்ட வடிவ கிரீவத்தின் நான்கு திசைகளிலும் கிரீவ கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரைக்கோள வடிவிலான சிகரத்தின் அடிப்பகுதி குழிவாக அமைக்கப்பட்டுள்ளது. சிகரத்திற்கு மேலே தூபி இல்லை.[5]
கருவறையை அடுத்து வடகுப்பக்க இடைநாழியில் ஒரு நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் முகமண்டபத்தின் தரை சுமார் ஒரு மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. கிழக்கு மற்றும் தெற்கு திசைகளில் நுழைவாயிகள் அமைக்கப்பட்டுள்ளன. நுழைவாயிலில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தெற்கு நுழைவாயிலில் பக்கத்திற்கொன்றாக இரண்டு வாயில்காப்போர் (துவாரபாலர் - திரிசூலநாதர் – மழுவுடையார்) சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.[6]
முகமண்டபத்திற்குக் கிழக்கே நந்தி சிலை உள்ளது. இதற்கும் கிழக்கே பதினாறு கால் மண்டபத்திற்கான தரைத்தளமும், தூண்களும் காணப்படுகின்றன. மேற்கூரை காணப்படவில்லை.[6]
கல்வெட்டு
தொகுஇக்கோவில் "ஜெயங்கொண்ட சோழமண்டலத்து காலியு+ர் கோட்டத்து பாகூர் சாட்டு கங்கைகொண்ட சோழபுரத்தில்" அமைந்துள்ளதாக கல்வெட்டு குறிப்பிட்டுள்ளது. [1] முதலாம் இராஜேந்திர சோழனின் 22 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (ARE 414 of 1902: SII, VII, 1047) விமானத்தின் சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது. குரு ஈசான சிவ பண்டிதர் என்பவரால் இக்கோவில் கட்டப்பட்டதாகவும், இக்கோவில் கங்கைகொண்ட சோழீசுவரம் என்று அழைக்கப்பட்டதாகவும் இக்கல்வெட்டு பதிவு செய்துள்ளது. [4] தஞ்சாவூரின் இராஜராஜேசுவரத்துடன் தொடர்புடைய சைவ ஆச்சாரியர்களின் புகழ்பெற்ற பரம்பரையிலிருந்து இது தொடர்ந்து வந்திருக்கலாம் என்று எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் கருதுகிறார்.. இதன் கட்டுமானம் முதலாம் இராஜேந்திரனின் பதினோராவது மற்றும் இருபத்தி இரண்டாம் ஆட்சி ஆண்டுகளுக்கு இடையில் நடந்திருக்க வேண்டும்.[4]
இக்கோவிலில் முதலாம் இராஜாதிராஜன் மற்றும் கிருஷ்ணதேவராயரின் கல்வெட்டுகளும் கண்டறியப்பட்டுள்ளன.[1] முதலாம் இராஜாதிராஜனின் கல்வெட்டு, இக்கோவில் மூலவருக்கு ‘அதிகாரிகள் பராசரியன் வாசுதேவ நாராயணனான உலகளந்த சோழபிரம்மராயன்ளூ’, ஒரு நந்தா விளக்கு அமைத்து எரிப்பதற்கான நெய் அளிப்பதற்கான ஏற்பாடாக தொண்ணூறு சாவாமுவா பேராடு வழங்கிய செய்தியினைப் பதிவு செய்துள்ளது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 Gangaikonda Choleeswarar Temple - Koozampandal Government of Tamil Nadu, Department of Archaeology
- ↑ [1] Onefivenine
- ↑ 3.0 3.1 3.2 அருள்மிகு கூழம்பந்தல் ஜகந்நாதீஸ்வரர் திருக்கோயில் தமிழ் இணையக் கல்விக்கழகம்
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 Jagannathesvarar Temple. SR Balasubramaniyam. Middle Chola Temples. 1975. பக். 309
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 Jagannathesvarar Temple. SR Balasubramaniyam. Middle Chola Temples. 1975. பக். 310
- ↑ 6.0 6.1 Jagannathesvarar Temple. SR Balasubramaniyam. Middle Chola Temples. 1975. பக். 311
உசாத்துணை
தொகு- Jagannathesvarar Temple (Gangaikonda-Cholisvaram) In Middle Chola Temples; Rajaraja I to Kulottunga I (AD 985-1070) S. R. Balasubrahmanyam Thomson Press, Haryana. 1975 பக். 309 - 311
வெளி இணைப்புகள்
தொகு- கங்கைகொண்டசோழீச்வரம் | Gangaikonda Choleeswarar | Koozhamandal | Rajendra Chola I Chithiram Pesuthada YouTube