கைலாசநாதர் கோயில், நெடுங்குடி

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

நெடுங்குடி கைலாசநாதர் திருக்கோயில் இந்தியாவில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுங்குடி, கைலாசபுரம் எனும் முத்தரையர் மக்கள் வாழும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். [1]

கைலாசநாதர் கோயில், நெடுங்குடி
புவியியல் ஆள்கூற்று:10°10′52″N 78°50′20″E / 10.180985°N 78.838755°E / 10.180985; 78.838755
அமைவிடம்
ஊர்:நெடுங்குடி, கைலாசபுரம்
மாவட்டம்:புதுக்கோட்டை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா

அமைவிடம்

தொகு

காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில் கீழாநிலைக்கோட்டையிலிருந்து மேற்கில் 1 கிமீ தொலைவில் இக்கோயில் உள்ளது. [2] கடல் மட்டத்திலிருந்து சுமார் 112 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 10°10'51.6"N, 78°50'19.5"E (அதாவது, 10.180985°N, 78.838755°E) ஆகும்.

புராணம்

தொகு

புராண காலத்தில் நெடுங்குடியில் வில்வ மரங்கள் நிறைந்த மண்மலை குன்றுகள் இருந்தது. இங்கு வந்த பெருஞ்சீவி, சிரஞ்சீவி என்னும் சகோதரர்கள் சிவபெருமானை வழிபட விரும்பினர். அண்ணன் பெருஞ்சீவி தன் தம்பி சிரஞ்சீவியிடம் வழிபாட்டிற்காக காசியிலிருந்து புனித லிங்கம் எடுத்து வர கூறினார். அண்ணன் உத்தரவை ஏற்று தம்பி காசிக்கு சென்றார். பூஜைக்கு உரிய நேரத்தில் அவர் வராததால், அண்ணன் தானாகவே ஒரு சிவலிங்கத்தைச் செய்து சிவ வழிபாடு செய்தார். தாமதமாக வந்த தம்பி சிரஞ்சீவி தான் கொண்டுவந்த சிவலிங்கத்தை வைத்து மீண்டும் பூசை செய்ய சொன்னபோது அண்ணன் மறுக்கவே, ஆத்திரமடைந்த தம்பி திருமாலை தியானித்து தவமிருந்தார். அசுர சகோதரர்களுக்கு அருள் புரிய விரும்பிய திருமால் அவர்களிடம் ஒற்றுமையாக இருந்து வழிபடும்படியும், அவர்கள் பூசை செய்யும் இத்தலம் புகழோடு திகழும் என்றும் கூறினார்.[3]

மூலவர்

தொகு

இக்கோயிலின் மூலவர் கைலாசநாதர் என்றும் காசிநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி பிரசன்னநாயகி ஆவார். கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், இறைவி சன்னதி மற்றும் பிற சன்னதிகள் உள்ளன. [1] இக்கோயில் மண் மலை மீது அமைந்துள்ளது. அக்காலத்தில் இங்குள்ள மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பால் காசி கோயிலின் படியில் இருப்பதாகக்கூறுவர்.அதனால் இவரை படிக்காசிநாதர் என்றும் அழைப்பர். கோயிலில் உள்ள லிங்கம் காசியிலிருந்து பெருஞ்சீவி, சிரஞ்சீவி என்னும் அசுரர்களால் வழிபடப்பட்டதாகும். அம்மன் சன்னதி கி.பி.13ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனால் திருப்பணி செய்யப்பட்டது.[2] கோயிலின் தல மரம் வில்வம் ஆகும்.[3]

விழாக்கள்

தொகு

பௌர்ணமி, அமாவாசை மற்றும் மாதப்பிறப்பு நாள்களில் கிரிவலமும், பிரதோஷ நாள்களில் நந்திக்கு சிறப்பு அபிஷேகமும் நடத்தப்பெறுகின்றன. இக்கோயிலின் அடிவாரத்தில் கிரிவல வீதியில் ஈசான்ய வடகிழக்கு திசையில் உள்ள பாம்பாறு நதியில் நீராடி மூலவரை வணங்கினால் பிரார்த்தனை நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். [1] ஆடிப் பூரத்தன்று இறைவிக்கு திருவிழா நடைபெறுகிறது.[3]

திறந்திருக்கும் நேரம்

தொகு

காலசந்தி (காலை 8.30 மணி), உச்சிக்காலம் (நடுப்பகல் 12.00 மணி), சாயரட்சை (மாலை 6.00 மணி), அர்த்தசாமம் (இரவு 8.00 மணி) என்ற வகையில் நான்கு கால பூசைகள் இங்கு நடத்தப்பெறுகின்றன.இக்கோயில் காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 8.30 வரையிலும் திறந்திருக்கும். வைகாசி விசாகம் 10 நாள்கள், புரட்டாசி மாதத்தில் நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்பெறுகிறது.[2]

  1. 1.0 1.1 1.2 அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் நெடுங்குடி, வலைத்தமிழ்
  2. 2.0 2.1 2.2 புதுக்கோட்டைக் கோயில்கள், புதுக்கோட்டை மாவட்டத் திருக்கோயில்கள் பயணியர் கையேடு, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, 2003
  3. 3.0 3.1 3.2 அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், தினமலர் கோயில்கள்