கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி

(கொடிகாமம் திருநாவுக்கரசு மகா வித்தியாலயம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருநாவுக்கரசு மத்திய கல்லூரி எனத் தற்போது அழைக்கப்படும் திருநாவுக்கரசு மகா வித்தியாலயம், இலங்கை வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சிப் பிரிவில் கொடிகாமம் கொடிகாமத்தில் உள்ள ஓர் உயர்தரப் பாடசாலை ஆகும்.இக்கல்லூரி கொடிகாமத்தின் சந்தியில் இருந்து தெற்கே கச்சாய் வீதியில் 500 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது.

1928 இல் கொடிகாமம் திருநாவுக்கரசு வித்தியாலயம் எனப் பெயர் பெற்றிருந்த இக் கல்லூரி 2013 ஆம் ஆண்டு திருநாவுக்கரசு மத்திய கல்லூரி ஆக தரமுயர்த்தப்பட்டு தரம் 6 - தரம் 12 வரையான மாணவர்களையும் கலை,வர்த்தகம்,கணிதம்,விஞ்ஞானம்,தொழினுட்பம் ஆகிய துறைகளைக் கொண்டு ஏறக்குறைய 600 மாணவர்களையும் 41 ஆசிரியர்களையும் கொண்டு கல்வித்துறையில் வெற்றி நடைபோடுகிறது.

வரலாறு

தொகு

பாடசாலைக் கீதம்

தொகு

இயற்றியவர்: சி.சரவணபவன்(சிற்பி)

இசையமைத்தவர்: திருமதி.க.மகாலிங்கம்

பல்லவி
திருவோங்கு கொடிகாமம் திருநாவுக்கரசு
மத்திய கல்லூரி வாழியவே (திரு)
அரிதான கலைகளை எளிதாகப் புகட்டியே
அழகோடு திகழ்தாயே நீ வாழ்க (திரு)
அனுபல்லவி
அன்புடன் அறிவும் அடக்கமும் ஒழுக்கமும்
பண்புடன் பணிவும் பாரினில் விளங்க
எண்டிசை புகழ எமக்கறிவூட்டும்
அன்பு சேரதிபரோ டாசிரியர் வாழ்க (திரு)
சரணம்
செந்தமிழ் வி்ஞ்ஞானம் மனையியல் விவசாயம்
சித்திரம் சங்கீதம் சமயம் சுகாதாரம் ஆங்கிலம்
கணிதமும் சமூகக்கல்வியும் சிந்தை மகிழ்ந்திடவே
தந்திடும் தாயே வாழ்க. (திரு)

பாடசாலைச் சின்னம்

தொகு

எந்த ஒரு நிறுவன அமைப்பும் தமது எண்ணங்களை வளர்ப்பதற்கும் தமது செயற்பாடுகளை உறுதிப்படுத்துவதற்கும் சின்னங்களைப் பயன்படுத்துகின்றன.இவ் வகையில் எமது பாடசாலைச் சின்னமும் மாணவர்களின் இலட்சியத்தை வரிந்து ஒன்று திரட்டப்பட்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.எமது பாடசாலையின் அமரர்.பொன்.கந்தையனார் அதிபராக இருந்த 1971-1976 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் திருநாவுக்கரசு நாயனாரின் திருவுருவத்தை தாங்கியதாகவே பாடசாலைச் சின்னம் அமைந்திருந்தது.பின்னர் திரு.க.பேரம்பலம் அவர்கள் அதிபராக இருந்த 1976-1987 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியிலேயே தற்போது உள்ள சின்னம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இச் சின்னத்தில் காணப்படும் கற்றாங்கு ஒழுகுக என்ற மகுட வாசகம் கற்றபடி ஒழுகுதல் வேண்டுமென்ற கல்விச் சிந்தனையை இலட்சியமாகக் கொண்டு பொறிக்கப்பட்டுள்ளது.அத்துடன் இரண்டு புறமும் அமைந்துள்ள நட்சத்திரக்குறியீடு மகுட வாசகத்தின் உயரிய சிந்தனையை வெளிக்கொணர்கிறது.உள்ளே அமைந்துள்ள மூனு்று கோடுகளும் பாடசாலையில் உள்ள மூன்று இல்லங்களையும் எடுத்தியம்புகின்றன.கல்விச் சுடர் ஏற்றுகின்ற தெய்வச் சக்தியான சரஸ்வதியின் உருவப்படம் இலட்சியத்தின் மையப்பகுதியில் பொறிக்கப்பட்டுள்ளது.ஒளி விட்டுப் பிரககசிக்கும் தீப ஒளி பாடசாலையின் இலட்சியத்தை எட்டுத்திக்கும் ஒளிபெறச் செய்யும் செந்தீயாக வளர்ந்து காணப்படுகிறது.மேலும் அதற்கு மெருகூட்டுகின்ற வகையில் இரு புறத்தையம் தொட்டால் போன்று நெல் மணிகள் நிறைந்த இரண்டு நெற்கதிர்கள் ஆராத்தி எடுப்பது போன்று அமைந்து காணப்படுவது பாடசாலையில் பெறவேண்டிய இறுதிப்பயனாகிய கல்விப்பயனை மாணவர்கள் முழுமையாக அடைய வேண்டுமென்ற கருத்தினைத் தாங்கி நிற்கின்றது.கலைத்தெய்வத்தின் செம்மையான பாதாரவிந்தங்களில் காணப்படுகின்ற அழகிய திருஏடு உலகில் பெற வேண்டிய கலைகள் அனைத்தையும் பெறகின்ற இடம் பாடசாலை என்பதை உணர்த்துகின்றது.

இவை எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற் போன்று தெய்வச் சக்தியான சரஸ்வதியையும் ஏனைய விடயங்களையும் உள்ளடக்கி வெளியே வரையப்பட்டுள்ள விளிம்பானது பாடசாலைக்கு அணித்தாக அயற்சமூகத்தை பாடசாலையுடன் இணைத்து பிரிக்க முடியாதவாறு பின்னிப்பிணைந்து இருப்பதை எடுத்தியம்புகின்றது.

பாடசாலைக் கொடி

தொகு

பாடசாலைக் கொடி மாணவர்கள் பெற வேண்டிய நற்பெறுபேற்றின் சின்னமாக விளங்குகின்றது.பாடசாலையின் புதிய வளர்ச்சிப்படியில் மைற்கல்லாக பாடசாலைக்குரிய கொடியினை தேர்வு செய்தமை குறிப்பிடத்தக்கது.குறிப்பாக 1971-1976 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் முழுமையாக ஒழுங்கமைக்கப்பட்ட பாடசாலைக் கொடி உருவாக்கப்பட்டது.இக் கொடியில் சிவப்பு,நீலம்,பச்சை ஆகிய மூன்று நிறங்கள் சம அளவில் வகுக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.இக் கல்லூரிக் கொடியைப் பிரதி பலித்துக் காட்டுகின்ற ஒவ்வொரு வர்ணமும் ஆழமான பொருளினை வெளிக் கொணர்வதாக அமைகின்றது.

பிரகாசிக்கின்ற சிவப்பு நிறமானது மாணவர்கள் அடைய வேண்டிய இறுதி இலட்சியத்தின் உறுதிப்பாட்டை தூபமிடுவதாக அமைகின்றது.மனிதன் கல்வியறிவைப் பெற்று முழுமை அடைவது என்பது இலகுவாக அமைகின்ற காரியமல்ல மிகுந்த உறுதிப்பாடும் பற்றுணர்வும் இன்றியமையாத ஒன்றாகும்.

தென்னை,மா,பலா சூழ்ந்திருக்கின்ற இயற்கை சங்கமத்தில் ஒளி வீசிக் கொண்டிருக்கின்ற இக் கல்லூருயில் பசுமை நிறைந்த பயனை இச்சமூ கம் இனிமையாகப் பெற்று மகிழ்கின்றதென்பதை பச்சை வர்ணம் நினைவூட்டிக் கொண்டிருக்கின்றது.

மனித வாழ்வியலில் நீலவர்ணம் பிரித்து பார்க்க முடியகத ஒன்றாகும். எம்மைச் சூழு்ந்திருக்கின்ற பரந்தபரவையும் அதற்கு மேல் கவிந்திருக்கின்ற காற்று உலா வருகின்ற விண்வெளியும் நீலவர்ணத்தால் அழகுபடுத்தப்பட்டு இருக்கின்றது.மனிதன் உயரிய மனிதனாக மாற்றப்பட வேண்டுமானால் கடல் போல் நீர்மையும் ,விண்போல் பரந்த உள்ளமும், பின்னிப்பிணைந்து இருக்க வேண்டும்.இந்த மகோன்னதமான சிந்தனையை வெளிப்படுத்தவதாக நீலநிறம் அமைந்துள்ளது.இவ்வாறான சிறப்பம்சங்களைக் கொண்ட பாடசாலைக் கொடியை பிரதிபலிப்பதாகவே எமது இல்லங்களுக்குரிய கொடிகளும் அமைந்துள்ளது.

கல்லூரியின் வளர்ச்சி

தொகு

1925 ஆம் ஆண்டு வே.அருணாசலம் என்பவர் திருநாவுக்கரசு நாயனார் மடாலயம் ஒன்றை நிறுவினார்.இன்று இப்பாடசாலையின் நினைவுச்சின்னங்களில் ஒன்றான மடாலயமாக விளங்கிய பழைய மண்டபம் எனப்படும் கட்டிடம் 1924 ல் கட்டப்பட்டது.[1]

இம்மடாலயத்தில் பஐனைகள் அன்னதானம் வழங்கல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வரலாயின.ஆதரவற்றோர் தங்குமிடமாகவும் இருந்தது.

1928 ஆம் ஆண்டில் திருநாவுக்கரசு நாயனார் மடாலயத்தில் சைவப் பாடசாலைகளை நிர்வகிக்கும் பொறுப்புக்களுடைய ‘சைவ வித்தியாவிருத்தி சங்கம்′ இப்பாடசாலையை சைவப் பாடசாலையாக முதன்முதல் ஆரம்பித்து வைத்தது.இப்பாடசாலையின் முதல் அதிபராக ஐ.முருகேசு பணியாற்றினார்.இப்பாடசாலை திருநாவுக்கரசு வித்தியாலயம் என்ற பெயருடன் ஏறக்குறைய 200 மாணவர்கள் கொண்ட பாடசாலையாக விளங்கியது.தொடர்ந்து நுணாவிலைச் சேர்ந்த ஏ. என்.வேலுப்பிள்ளை, மறவன்புலோ வாசியான திரு.எஸ்.பொன்னையா ஆகியோர் அதிபர்களாக கடமையாற்றினார்கள். தொடர்ந்து கொடிகாமத்தை பிறப்பிடமாகக் கொணட திரு.கந்தையா முருகேசு என்பவரை அதிபராக இப்பாடசாலை பெற்றுக்கொண்டது.நீணட காலம் அதிபராக பணிபுரிந்து பாடசாலைக்கு நல்லன செய்து நற்பெயர் பெற்றுக் கொண்ட அதிபர்கள் வரிசையில் இவரும் அடங்குவார்.மாணவர் தொகையைப் பொறுத்த மட்டில் சிறிய பாடசாலையாக இருந்தும் அதிக எண்ணிக்கை கொண்டதாகக் காணப்பட்டது.அத்துடன் பொருத்தமான ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வரவேற்கத் தக்க இடத்தில் அமைந்துள்ளமையும் பாடசாலையின் வளர்ச்சிக்கு காரணமாயிற்று.

1968 ஆம் ஆண்டு கொடிகாமம் வாசியும் பலருக்கு நன்கு தெரிந்தவருமான இசைப்புலவர் திரு.சி.செல்லத்துரை இப்பாடசாலையின் அதிபரானார். இவர் தனது காலத்தில் பாடசாலை வளர்ச்சிக்காக பல முன்னொடித்திட்டங்களை தீட்டினார்.விளையாட்டு மைதானம் ஒன்று அமைப்பது இவரின் முன்னோடித்திட்டங்களில் ஒன்றாகும்.இருந்தும் குறுகிய காலமே கடமையாற்றியமையால் இவரின் திட்டங்கள் இவர் காலத்திலையே ஏற்றம் காணவில்லை.

01.08.1971 ஆம் ஆண்டு கொடிகாமம் வாசியான திரு.பொன்.கந்தையனார் அவர்கள் அதிபராகக் கடமை ஏற்றார்.இவர் காலத்தில் இவருக்கு உறுதுணையாக துணையதிபராக திரு.வ.கனகலிங்கம் அவர்களும் முனைப்பான ஆசிரியராக திரு.க.இராசதுரையும் கடமையாற்றினார்கள். திரு.பொன்.கந்தையனாரது சேவைக்காலம் பாடசாலை வரலாற்றில் முக்கிய காலப்பகுதி ஆகும்.நல்லன பல புரிந்து பாடசாலையின் எழுச்சிக்கும் உயர்ச்சிக்கும் வழி பல வகுத்து பாடசாலை வரலாற்றில் தனக்கென ஒரு தனியிடம் பெற்றவர் திரு.பொன்.கந்தையனார் அவர்கள்.இக்காலத்தில் பாடசாலையின் மாணவர் தொகையை அதிகரித்து பாடசாலையை உயர்த்தும் பொருட்டு வீடு வீடாகப் பிரச்சாரம் செய்தவர் திரு.க.இராசதுரை ஆசிரியர்.இதன் பொருட்டு பிள்ளைப் பிடி வாத்தியார் எனும் பட்டப் பெயரையும் பெற்றுக் கொண்டார்.

பெற்றோர்,இளைஞர்கள்,நலன்விரும்பிகள் எல்லோரது ஒத்துழைப்போடும் விளையாட்டு மைதானம் ஒன்று அமைக்கப்பட்டதும் அதிபர் திரு.பொன்.கந்தையனார் அவர்கள் காலத்தில் ஆகும்.1974 இல் க.பொ.த சாதாரணதர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு கல்லூரி தரமுயர்த்தப்பட்டது.120'*20'அளவுடைய கட்டிடமொன்றுக்குத் தளமிடப்பட்டதும் இவர் காலத்தில் ஆகும்.திரு.கந்தையனார் பணிபுரிந்த காலத்தில் இருந்து பல வழிகளிலும் இப்பாடசாலை 300 மாணவருக்கு மேல் உள்ளதாக தென்மராட்சிப் பிரதேசத்திலுள்ள பல பாடசாலைகளோடு ஒப்பிடக்கூடிய அளவிற்கு உயர்ந்து விட்டது.இக் காலத்தில் திருநாவுக்கரசு நாயனார் மடாலய சபையையும்,பாடசாலையின் உயர்ச்சிக்காக இணைத்து வைத்துக் கொண்ட பெருமை இவருக்குரியது.

20.10.1976 ஆம் ஆண்டு உசன்வாசியான திரு.கந்தையா பேரம்பலம் அதிபராக கடமையை ஏற்றுக் கொண்டார்.திரு.பொன்.கந்தையானார் அவர்கள் இட்ட திட்டங்கள்,கனவுகள் யாவற்றையும் நிறைவேற்றியவர் திரு.க.பேரம்பலம் அவர்களாவர்.இக் கல்லூரியைக் கட்டி வளர்த்தவர் என்று பெருமை பெற்றவர்களில் திரு.க.பேரம்பலமும் ஒருவராவார்.இவர் காலத்தில் 120’*20’ மண்டபம், 50’*25’ மேல்மாடிக் கட்டிடம், கச்சாய் வீதிக்கு கிழக்கேயுள்ள 110’*20’ மண்டபம் ஆகியனவும் கட்டப்பட்டன.

திரு.கந்தையா பேரம்பலம் காலத்தில் 1980 ம் ஆண்டு க.பொ.த உயர்தர வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது.இவர் காலத்தில் பெற்றோர், பழைய மாணவர்கள்,நலன் விரும்பிகள்,மடாலசபையினர் யாபேரும் ஒன்றாக கைகொடுத்துதவினர்.1982 ம் ஆண்டு திருநாவுக்கரசு வித்தியாலயம் மகா வித்தியாலயம் எனும் தரத்திற்கு உயர்த்தப்பட்டது.இதே காலப்பகுதியில் கொடிகாமம் அரசினர் வித்தியாலயம் இக் கல்லூரியுடன் இணைக்கப்பட்டது.சாவகச்சேரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரின் முயற்சியும்,இரு பாடசாலைகளின் பெற்றோர்களின் ஒத்துழைப்பும் சேர்ந்து இரு பாடசாலைகளும் இணைக்கப்பட்டு திருநாவுக்கரசு மகா வித்தியாலயம் என்ற பெயருடன் இரண்டையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் ,ஒரே அதிபரின் கீழ் நிர்வகித்த பெருமை அதிபர் திரு.க.பேரம்பலம் அவர்களுக்குரியது.1987 ம் ஆண்டு சில பெற்றோரின் விருப்பத்திற்கிணங்க இரு பாடசாலைகளும் தனியான நிர்வாகத்தின் கீழ் வந்தன.1982 ம் ஆண்டு மகா வித்தியாலயமாகத் தரமுயர்த்தப்பட்டதிலிருந்து தொடர்ச்சியாக மாணவர் தொகை அதிகரிப்பு,ஆசிரிய ஆளணி அதிகரிப்பு,கட்டட தளபாட அதிகரிப்பு ஏற்பட்டமை வருவது குறிப்பிடத்தக்கதாகும்.திரு.க.பேரம்பலம் அதிபருக்கு துணை அதிபராக பல வழிகளிலும் துணை புரிந்து வந்தவர் திரு.ந.வல்லிபுரம் அவர்களாவார்.

1983 ஆம் ஆண்டில் இது மகா வித்தியாலயமாகத் தரமுயர்த்தப்பட்டது.[2]

போர்ச் சூழலினால் 1987, 1996, 2000 ஆம் ஆண்டுகளில் இப்பாடசாலையின் சொத்துகள் இழக்கப்பட்டதுடன் மாணவர் தொகையிலும் வீழ்ச்சி ஏற்பட்டது. குறிப்பாக 2006 இல் பாடசாலை இடம் பெயர்ந்தது.[2]

1987.07.01 இல் மட்டுவில் வாசியான திரு.ச.சின்னத்னம்பி அவர்கள் கொத்தணி அதிபராக கடமை ஏற்றார்.கொத்தணி மூலாதாரப் பாடசாலை என்ற வகையில் திரு.ச.சின்னத்தம்பி அவர்களின் காலத்தில் ஆற்ற வேண்டிய கடமைகள் எண்ணற்றவையாயின.இந்திய அமைதிப்படை முகாமிட்டு இருந்தமையால் கட்டடத்தளபாடங்கள் சேதமாக்கப்பட்டன.பாடசாலையை புனரமைக்கும் பணியிலும்,புத்துயிர் அளிக்கும் பணியிலும் ஈடுபட்ட பெருமகன் இவராவார்.சகல மாணவருக்கும் தளபாட வசதி பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.90’*25’ மேல் மாடிக்கட்டடம், 40’*20’ விஞ்ஞான அய்வு கூடம் என்பன இவர் காலத்தில் தளமிடப்பட்டன.

அதிபர்.திரு.க.பேரம்பலம் அவர்கள் காலத்தில் ஒரு முன்னோடிப் பாடசாலையாகத் திகழத் தொடங்கிய இக்கல்லூரி திரு.ச.சின்னத்தம்பி காலத்திலும் மேலும் பல்வேறு சிறப்புக்களுடன் வீறு நடை போடத்தொடங்கியது.திரு.ச.சின்னத்தம்பிக்கு துணையதிபராக முற்பகுதியில் திரு.க.வல்லிபுரம்(1980-1988)அவர்களும்,பிற்பகுதியில் இக்கல்லூரிக்கு அதிபராக விளங்கிய திரு.தம்பு.கந்தையா(1988-1992)அவர்களும் உறுதுணையாய் இருந்தனர்.பாடசாலைக்கு மேற்கில் உள்ள காணியைப் பெற வேண்டும் என்று இவர் காலத்தில் திட்டங்கள் பல தீட்டப்பட்டு ஏற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

திரு.ச.சின்னத்தம்பி அவர்கள் காலத்தில் 07.01.1991 இல் சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபராக கடமையாற்றிய இளைப்பாறிய திரு.இ.கைலைநாதன்,கச்சாய் அரசினர் வித்தியாலயத்தில் அசிரியராக கடமையாற்றி அதிபராக பதவி உயர்வு பெற்ற திரு.ஐ.சின்னையா ஆகியோர் துணை அதிபர்களாகப் பதவி ஏற்றுக் கொண்டனர்.

07.09.1991 இல் அனுபவ முதிர்ச்சியும்,ஆற்றல் மிகுதியும் கொண்ட திரு.ச.சின்னத்தம்பி அவர்கள் சாவகச்சேரி கல்வி வலயத்திற்கு பதவி உயர்வு பெற்றுச் செல்ல திரு.இ.கைலைநாதன் அவர்கள் அதிபர் கடமையை ஏற்றுக்கொண்டார்.இக்காலத்தில் திரு.ஐ.சின்னையா அவர்கள் உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்திற்கும் பின்னர் அதிபராக எழுதுமட்டுவாழ் அரசினர் வித்தியாலயத்திற்கும் பதவி உயர்வு பெற்றுச் சென்றார்.நல்லாசிரியராக பல்லாயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய பெருமை கொண்ட திரு.இ.கைலைநாதன் அவர்கள் அதிபராக கடமையை ஏற்றபோதிலும் அவரின் சேவை குறுகிய காலத்தில் நிறைவு பெற்று விட்டது.இக் குறுகிய காலசேவையில் கொத்தணி அங்கத்துவ பாடசாலைகள் உட்பட பல பாடசாலைகள் அவரின் நிர்வாகச் சிறப்புக்கள் பலவற்றை கற்றுக் கொண்டன.22.04.1992 திரு.இ.கைலைநாதன் அவர்கள் தென்மராட்சி கல்வி வலயத்திற்குப் பதவி உயர்வு பெற்றுச் செல்ல அவரின் துணை அதிபரான கல்லூரி மிளிர்வதற்கு அரும்பணி ஆற்றிய 22 வருடங்களாக சேவையை தனதாக்கிக் கொண்ட அதிபர் திரு.தம்பு.கந்தையா அவர்கள் அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார்.[3]

திரு.தம்பு.கந்தையா அதிபர் பதவி ஏற்ற பின்பு இக்கல்லூரியின் முதன் முதல் 1992.10.06 பரிசளிப்பு விழா வெகு விமர்சையாகவும் பல அலங்காரங்களுடனும் பல மக்கள் ஒன்று கூடிய வைபவமாக காட்சி தந்துள்ளமை இக்கல்லூரிச் சமூகம் அறிந்த விடயம்.[4]

திரு.தம்பு.கந்தையா அதிபர் பதவியை ஏற்றுக் கொண்டதன் பின் முன்னைய அதிபர்கள் விட்டுச் சென்ற பணிகளையும் அவர்களின் கனவுகளை நனவாக்கும் பணியையும் செய்ய வேண்டிய நிலமைக்குள்ளானார்.இக் காலகட்டம் போர் சூழ்நிலை என்ற வகையில் அபிவிருத்தி பணிகளைமேற்கொள்ள முடியாதிருந்த வேளையிலும் உள்ள வளங்களை பாதுகாத்தாலே போதுமென்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்.1992 இல் மாணவர் தொகை 700 ஆக காணப்பட்ட நிலையில் காலம் செல்லச் செல்ல மாணவர் தொகை 1000 க்கு மேற்பட்டதாக வளர்ச்சியடைந்தது. அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படாத நிலையில் மாணவர் தொகை அதிகரிப்பால் வகுப்பறைப் பற்றாக்குறை,வளப்பற்றாக்குறை எனப் பல தரப்பட்ட பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. செல்வி.தி.பெரியதம்பி அவர்கள் கல்விப்பணிப்பாளராக இருந்த போது அவர் தனது முயற்சியால் அஸ்பெஸ்டஸ் கூரைத்தகடுகளைப் பெற்றுப் பாடசாலைக்கு வழங்கினார்.இக்கல்லூரியில் அமைக்கப்பட்டு கூரையிடப்படாது இருந்த விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கும் 1997 இல் கூரைத்தகடுகள் வழங்கப்பட்டமையால் பெற்றோரின் உதவியுடன் கூரையிட்டு கூரைத்தகடு பொருத்தப்பட்டது.திரு.தம்பு.கந்தையா அதிபர் பதவி ஏற்ற பின்பு இக்கல்லூரியின் இரண்டாவது பரிசளிப்பு விழா 1997 இல் வெகு விமர்சையாக நிகழ்த்தப்பட்டது.

1997 ஆம் ஆண்டு கல்லூரிக்கு மேற்குப் புறக்காணி திருமதி.யோகரத்தினம் விவேகவதியிடமிருந்து 14 பரப்பு கொள்வனவு செய்யப்பட்டது திரு.தம்பு.கந்தையா அதிபர் காலத்திலே ஆகும்.இதற்குரிய நிதியை பெற்றோர்,ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள்,கொடிகாமம் வர்த்தகர்கள்,தென்மராட்சி கிழக்கு ப.நோ.கூ.சங்கம்,கொடிகாமம் தெங்கு பனம் பொருள் சங்கம் ஆகியோர் வழங்கியுதவினர்.1998 ஆம் ஆண்டு பொது நிதியாக கிடைத்த ரூ13 1/2 இலட்சம் ரூபாவில் 120*20 அளவுள்ள வகுப்பறைக் கட்டிடம் (மக்கள் மண்டபம்2) திறந்த வெளி அரங்கு,சிற்றுண்டிச்சாலை போன்றவை நிர்மாணிக்கப்பட்டன.

அதிபர் திரு.தம்பு.கந்தையா காலத்தில் 1999 ஆம் ஆண்டு மாகாணக் கல்வி அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதியில் செயற்பாட்டு அறை,விவசாய உபகரண அறை,விவசாய நாற்று உற்பத்திக்கான மண்டபம் என்பன அமைக்கப்பட்டன.இதே ஆண்டில் கொடிகாமம் வர்த்தகர்களால் நீர்த்தாங்கி அமைக்கப்பட்டு நீர் விநியோகத்திற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டன.

2000 ஆம் ஆண்டு கல்லூரி இடம்பெயர்ந்து நெல்லியடியில் கிறிஸ்ரல் கல்வி நிலையம், College of commerce கல்வி நிலையம் போன்றவற்றில் இயங்கியது.மீண்டும் 2002 ஆம் ஆண்டு சொந்த இடத்தில் இயங்கத் தொடங்கியது.இக்காலத்தில் மேலும் வகுப்பறைப் பற்றாக்குறை ஏற்பட்டமையால் இடம் பெயர்ந்த பாடசாலைக்காக நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் யுனிசெவ்வால் இடப்பட்ட தற்காலிக வகுப்பறை அவ்வித்தியாலய அதிபரின் அனுமதியுடன்கொண்டு வரப்பட்டது.இது 70*18 அளவுடையதாகும்.மேலும் சாவகச்சேரி இந்துக்கல்லூரி இடம்பெயர்ந்து பயன்படுத்திய தற்காலிக மண்டபம் 100*18 க்குரிய தூண்களும்,மரங்களும் அப்பாடசாலையில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டன.மேலும் சாவகச்சேரி மின்சாரசபையால் வழங்கப்பட்ட வளங்களையும் பெற்று பெற்றோரின் நிதியுதவியுடன் 120*40 கொண்ட தற்காலிக பிரார்த்தனை மண்டபம் நிர்மாணிக்கப்பட்டது.இதற்குரிய கூரைத்தகடு இந்து கலாச்சார அமைச்சர் அமரர்.உயர்திரு.தி.மகேஸ்வரன் அவர்களின் நிதியுதவியால் பெறப்பட்டது திரு.தம்பு.கந்தையா அதிபர் காலத்திலே ஆகும்.திரு.தம்பு.கந்தையா அதிபர் காலத்தில் 2003 ஆம் ஆண்டு இக்கல்லூரியின் 75 ஆவது நிறைவாண்டாகிய பவளவழா கல்லூரிச் சமூகத்தின் ஒத்துழைப்புடன் பவளவிழா மலர் வெளியிடப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

1990 இல் அத்திவாரம் இடப்பட்ட 90*25 அளவுள்ள மேல்மாடிக்கட்டிடத்தின் கீழ் மாடி G.T.Z நிறுவனம் நிதியும்,சீமெந்தும் வழங்க பெற்றோரின் உதவியுடன் பூர்த்தி செய்யப்பட்டது.2004 ஆம் ஆண்டில் இதே கட்டிடத்தில் மாகாணக்கல்வி அமைச்சின் உதவியுடன் கணினிக்கூடம் நிர்மானிக்கப்பட்டது.இக்கணினிக்கூடத்திற்கு மத்திய கல்வி அமைச்சினால் 12 கணினிகள் வழங்கப்பட்டன.அத்துடன் கனடா வாழ் நலன் விரும்பிகளிடமிருந்து நன்கொடையாகப் பெற்று கனடாவிலுள்ள திரு.வே.துரைசிங்கம் அவர்களால் 08 கணினிகளும்,லண்டனில் உள்ள பழைய மாணவன் திரு.சு.சபேசன் அவர்களால் 06 கணினிகளும்,கனடாவிலுள்ள திரு.த.கோபாலகிருஷ்ணன் எனும் பழைய மாணவனால் ஒரு கணினியும் வழங்கப்பட்டு மொத்தமாக 27 கணினிகள் கணினிக்கூடத்திலிருந்தன.

கல்லூரி வைபவங்கள் சிறப்புற திகழ வேண்டும் என்ற எமது ஆவலைப் பூர்த்தி செய்யும் வகையில் அதிபர் கோரிக்கையை ஏற்று மறைந்த இந்து கலாச்சார அமைச்சர் திரு.தி.மகேஸ்வரன் அவர்களால் மேலைத்தேய வாத்தியக்கருவிகள் வழங்கப்பட்டன.ஒலி,ஒளிக்கூடம் (Audio vedio Room) ஒன்றுக்கான அனைத்து உபகரணங்களையும் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ந.ரவிராஜ் அவர்கள் வழங்கி உதவியதன் மூலம் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் இனிதே இடம்பெற்றன.இவ்வாறு பல உதவிகளைப் பெற்று கல்லூரி வளர்ச்சிக்கு திரு.தம்பு.கந்தையா அதிபர் உறுதுணை புரிந்தார்.

2005 இல் இக் கல்லுரியின் பழைய மாணவர் திரு.இ.இரத்தினலிங்கமும் அவரின் இரு சகோதரர்களும் இணைந்து போட்டோ பிரதி இயந்திரம் ஒன்றினை அன்பளிப்புச் செய்தனர்.திரு.கந்தையா மகேந்திரராசா அவர்களால் ஒலிவாங்கிகளும்,ஒலிபெருக்கிப் பெட்டிகளும் அன்பளிப்புச் செய்யப்பட்டன.திரு.ந.இராசகணேசன் அவர்களால் பெறுமதி வாய்ந்த பித்தளைப் பூச்சாடி இரண்டு வழங்கப்பட்டமை திரு.தம்பு.கந்தையா அதிபர் காலத்திலே ஆகும்.

மேலும் S.D.C நிறுவனம் 110*25 மேல்மாடிக் கட்டிடத்தையும்,80*25 கொண்ட வகுப்பறைக்கட்டிடத்தையும் அமைத்துக் கொடுத்தது.2005 ஆம் ஆண்டு கீழ் மாடி மட்டும் பூர்த்தியான நிலையிலிருந்த 90*25 அளவுள்ள மேல்மாடியில் 40*25 பகுதி வரை மாகாணக்கல்வி அமைச்சினால் கூரை மட்டும் அமைக்கப்பட்டுள்ளது.மீதி 50*25 பகுதி இன்னமும்(2005)பூர்த்தி செய்யப்படாத நிலையிலுள்ளது.இக்கட்டிட வேலை 18 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு விட்டது என்பது வருத்தத்திற்குரிய உண்மையாகும்.

2005 ஆம் ஆண்டு கல்விப்பணிப்பாளர் திருமதி.அ.வேதநாயகத்தின் முயற்சியால் மைதானத்தில் நீர் தேங்குவதை தடுக்க சிறுவர் பாதுகாப்பு நிதிய நிதி மூலம் 400 லோட் மண் நிரப்பி உதவியமையால் நீர் தேங்காது தடுக்கப்பட்டது.

1997 ஆம் ஆண்டிலிருந்து இக்கல்லூரியின் வளர்ச்சிப்போக்கு பல்வேறு துறைகளிலும் தீவிரம் அடைந்தது.பௌதீக வள அபிவிருத்தி,கல்வி விருத்தி, இணைபாடவிதான செயற்பாடுகள் விருத்தி என ஏற்பட்டன. இக்காலகட்டத்தில் வலயக்கல்வி அலுவலகத்தில்கல்விப்பணிப்பாளராக கடமையாற்றிய திரு.வ.செல்வராசா,திருமதி.றெ.இருதயநாதன்,திருமதி.அ.வேதநாயகம் ஆகியோர் கல்லூரியின் தேவைகளை உணர்ந்து ஏற்ற அபிவிருத்திகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.கல்விப்பணிப்பாளராக கடமை புரிந்த திரு.கு.பிறேமகாந்தன் அவர்கள் இக்கல்லூரியின் நீண்ட கால வரலாற்றினை தெரிந்து கொண்டவர் என்பதால் இக்கல்லூரியின் வளர்ச்சியில் இடையறாத அக்கறையுடன் செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல்வேறு பணிகளை முன்னெடுப்பதற்கு கல்லூரி அபிவிருத்திச் சபையினரும்,பழைய மாணவர்களும்,கொடிகாமம் வர்த்தகர்களும்,முன்னின்று உழைப்பதைக் காணலாம்.திரு.தம்பு.கந்தையா அதிபர் காலத்தில் பிரதி அதிபர்களாக கடமையாற்றிய திரு.க.அம்பிகைபாகன்,திரு.சி.குலசேகரம்,திருமதி.செ.ஜெகநாதன் ஆகியோர் விசுவாசமாகவும்,உறுதுணையாகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.பகுதித் தலைவர்களாக திரு.வை.மனோகரன்,திரு.வி.இராசநாயகம் ஆகியோர் கடமை புரிந்தனர்.எக்கஷ்டம் வரினும் திரு.தம்பு.கந்தையா அதிபருடன் தாமும் அதில் பங்காளிகள் ஆகவும் இயங்கி நிர்வாகத்தைச் சிறப்புற நடாத்தியமை பாராட்டுக்குரியதாகும்.

திரு.தம்பு.கந்தையா அதிபர் ஓய்வு பெற்ற போது கல்லூரி மாணவர்கள்,ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள்,கல்லூரிச் சமூகம் அனைவராலும் அவரின் மணிவிழா 20.07.2008 இல் நிகழ்த்தப்பட்டது.அவரின் இல்லத்திலிருந்து மேலைத்தேய இசைக்கருவி,மேள தாள ஒலிகளுடன் திரு.திருமதி.கந்தையா அதிபர் கல்லூரிக்கு அழைத்துவரப்பட்டு அனைவராளும் கௌரவிக்கப்பட்டு கலசம் எனும் மணிவழா மலரும் வெளியிடப்பட்டது.அதன் பின் 25.07.2008 மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க திரு.திருமதி.கந்தையா அவர்கள் கல்லூரிக்கு வரவழைக்கப்பட்டு மீண்டும் அவருக்கு மாலையிட்டு பொன்னாடை போர்த்தி பல மாணவர்களால் கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

திரு.கந்தையா அதிபர் 1986.07.07 ஆண்டில் இருந்து ஆசிரியராய்,பிரதி அதிபராய்,அதிபராய் 22 வருட காலம் சேவை ஆற்றியதனால் தான் கல்லூரியின் கற்றல் செயற்பாடுகளுக்கு வேண்டிய அனைத்து வழங்களும் அவரின் அரிய முயற்சியால் பெறப்பட்டது.எதிர்காலத்தில் மத்திய கல்லூரியாக தலைநிமிர்ந்து தென்மராட்சி கல்வி வலயத்தில் அனைவரும் மதிக்கத்தக்க சிறந்த கல்லூரியாக திகழ வேண்டும் என்ற கனவு இன்று(2013) நனவாக்கப்பட்டது.[5][6]

திரு.திருமதி.கந்தையா அவர்கள் காலத்தின் கட்டளையின் பேரில் 20.07.2008 இல் ஓய்வு பெற இக்கல்லூரியின் புதிய அதிபராக 03.11.2008 இல் திரு.வல்லிபுரம் நடராசா அவர்கள் கடமையை ஏற்றுக்கொண்டார்.திரு.வ.நடராசா அதிபர் காலத்தில் 2009 ஆம் ஆண்டு “திருஞானம்” என்னும் செய்திமடல் மாதாந்தம் வெளியிடப்பட்டது. இது இக்கல்லூரியின் மாணவர்களின் சாதனைகளையும் திறன்களையும் வெளிப்படுத்தும் வகையில் பாடசாலை நிகழ்வுகள் சம்பந்தமான முக்கிய தகவல்களையும் வெளிப்படுத்துகின்றன.2009 ஆம் ஆண்டு கல்லூரியின் அருணாசலம் அரங்கு புனரமைக்கப்பட்டமை,கல்லூரியின் கிழக்கே முகவாசல் மதில் புனரமைப்பு பணிகள் திரு.வ.நடராசா அதிபர் காலத்தில் ஆகும்.2003 ஆம் ஆண்டு இடம்பெற்ற பரிசில் நாளைக் கடந்து ஆறு வருடங்களின் பின்னர் 19.09.2009 இல் பரிசில் விழா அனைவரும் விரும்பக்கூடிய வகையில் நடைபெற்றது.

திரு.வ.நடராசா அதிபர் காலத்தில் முன்னாள் அதிபர் திரு.த.கந்தையா ,யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ட பதிவாளர் திரு. ந. இராசவிசாகன் ஆகியோரின் அணுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்ட ”கந்தையா புலமைப்பரிசில் நிதியம்” மாணவரை ஊக்குவிக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது கல்லூரியின் சிறப்பாகும். இக்கல்லூரியின் வளாகத்தை அழகூட்டும் வகையில் திரு.வ.நடராசா அதிபர் காலத்தில் சரஸ்வதி சிலையுடன் கூடிய தடாகம் ஒன்று அமைக்கப்பட்டது. இப் பணியில் கல்லூரியின் பழைய மாணவன் திரு.து.குமரநாதன் அவர்கள் சரஸ்வதி சிலையை இலவசமாக வடிவமைத்து கொடுத்துள்ளமை பாராட்டுக்குரியது.

திரு.வ.நடராசா அதிபர் காலப்பகுதியில் JRS நிறுவனத்தினர் 25 மாணவர்களுக்கு மாதாந்தம் குறிப்பிட்ட தொகையினை கல்வி ஊக்குவிப்பு பணமாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.இவ்வுதவி வறிய மாணவர்களின் கல்வி விருத்திக்கு பேருதவியாக இருந்தது.ஜேர்மனியில் இருந்து முன்னால் ஆசிரியை திருமதி.செல்வச்சிவநாயகி க.பொ.த சாதாரணதரத்தில் கணித பாடத்தில் உயர்சித்தி பெற்ற ஐவருக்கு ஆண்டு தோறும் நேரடியாக ரொக்கப்பரிசினை வழங்கி வருகின்றார்.மேலும் திரு.வ.நடராசா அதிபர் காலத்தில் இலண்டனில் வசிக்கும் பழைய மாணவன் பொறியியலாளர் திரு.சு.சபேசன் அவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்கு வருடாந்தம் பரிசில்கள் வழங்கும் நோக்குடன் நிதியுதவி வழங்கி வருகின்றார்.அத்துடன் முன்னாள் இக்கல்லூரி ஆசிரியர் அமரர்.சு.க.இராசதுரையின் ஞாபகார்த்தமாக அவரது துணைவியார் வருடந்தோறும் க.பொ.த. சாதாரண தரத்தில் உயர் பெறுபேறு பெற்ற இருவருக்கு பணப்பரிசினை வழங்கி வருகின்றார்.

மற்றும் திரு.வ.நடராசா அதிபர் காலத்தில் புலோலி மேற்கைச் சேர்ந்த அமரர்.மு.கதிர்காமத்தம்பி அவர்கள் ஆங்கில அறிவை விருத்தி செய்வதற்கு வழங்கிய ஊக்குவிப்பு நிதி வங்கி மூலம் கிடைத்தமை சிறப்புக்குரியதாகும்.

கல்லூரியின் பழைய மாணவர்கள்

தொகு

திரு.க.பேரம்பலம் அதிபர் காலத்தில் 1985 இல் ஆரம்பித்து வைக்கப்பட்ட பழைய மாணவர் சங்கம் ஏறக்குறைய இரு தசாப்தங்களாக கல்லூரி வளர்ச்சியில் அரும்பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.இச் சங்கத்தின் 1993 அதிபர்.திரு.தம்பு.கந்தையா காலப்பகுதியில் கல்லூரி மைதானத்தை புனரமைத்துக் கொடுத்தமை,பாடசாலைக் காணிக் கொள்வனவிற்குநாடக விழா மூலம் ஒரு பகுதி நிதியை சேகரித்துக் கொடுத்தமை,பாடசாலை புனர்நிர்மான வேலைகளில் பங்காளராக செயற்பட்டமை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

திரு.வ.நடராசா காலத்தில் கல்லூரியின் வளர்ச்சியில் பழைய மாணவர்கள் காட்டி வரும் அக்கறை பாராட்டுக்குரியது.பெற்றோர்,நலன்விரும்பிகளை ஒன்றிணைந்து கல்லூரியின் அபிவிருத்தி நோக்கிய செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தார்.சங்கத்தின் முன்னால் செயலாளராக திரு.யோ.லிங்கேஸ்வரன் அவர்கள் செயலாற்றி வந்தார்.இவரின் முயற்சியால் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் நோர்வே கிளையினரிடமிருந்து டுப்ளோ இயந்திரம் ஒன்றை அன்பளிப்பாக பெற முடிந்தது.

2009ம் ஆண்டு திரு.வ.நடராசா காலத்தில் பழைய மாணவ உறுப்பினர்கள் பல்வேறு சிரமங்கள் மத்தியிலும் தாராள சிந்தை உள்ளவர்களை அணுகி நிதியுதவியும் ,பொருளுதவியும் ஈட்டி கல்லூரியின் முன் மதிலினை மெருகூட்டி அமைத்துள்ளமை பாராட்டுக்குரியதாகும்.

திரு.கு.ரவீந்திரன் அதிபர் காலத்தில் திரு.ம.சசிகரன் அவர்கள் செயலாளராக கடமை புரிந்து கொண்டிருக்கின்றார்.

கல்லூரியின் அபிவிருத்திச் சங்கம்

தொகு

1971 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட கல்லூரி அபிவிருத்திச் சங்கம் கல்லூரி வளர்ச்சியில் கூடுதலான பங்களிப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.அவ்வகையில் மக்கள் மண்டபம் 1,மக்கள் மண்டபம் 2 ஆகியவற்றை அமைத்துக் கொடுத்தமை,பாடசாலை அரங்குக்குரிய கூரைத்தகடு தவிர்ந்த ஏனைய செலவுகளை வழங்கியமை,G.T.Z உதவியுடன் அமைக்கப்பட்ட மேல்மாடிக்கட்டிடத்திற்குரிய கூலிச் செலவுகளைப் பொறுப்பேற்றுக் கொண்டமை என்பனவற்றை விசேடமாக குறிப்பிடலாம்.

2009ம் ஆண்டு இக்கல்லூரியின் அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளராக திரு.த.ரவீந்திரன் அவர்கள் காணப்பட்டார்.இக்கல்லூரி நலன்புரி முகாமாக இயங்கிய பின்னர் ஏற்பட்ட அசாதாரண சுகாதர சூழலில் பெற்றோரின் நிதியுதவியுடன் மணல் ஏற்றிப்பறிக்கப்பட்டு நிலமை சீர் செய்யப்பட்டது.

கொடிகாமம் வணிகர் மன்றம்

தொகு

நீண்ட காலமாக கல்லூரியின் வளர்ச்சியில் கொடிகாமம் வணிகர் மன்றத்தின் பங்களிப்பு முக்கிய இடத்தை பெறுகின்றது. கல்லூரியுடைய காணிக் கொள்வனவிற்கு ஒரு பகுதி நிதியை வழங்கி உதவியமை, கல்லுாரியில் தண்ணீர்த்தாங்கி அமைத்துக் கொடுத்தமை, வருடந்தோறும் இல்ல விளையாட்டுப்போட்டிக்கு பரிசில்களை தாராளமாக மனமுவந்து வழங்கி வருதல் போன்றவற்றை கல்லூரி வளர்ச்சிக்காக மனமகிழ்வுடன் செய்து வருகின்றனர்.

கொடிகாமத்தின் வணிகர் மன்றம் இக்கல்லூரியில் நடைபெறும் இல்ல மெய்வல்லுனர் போட்டி, பரிசில் நாள் வைபவங்கள் அனைத்திற்கும் அன்றிலிருந்து இன்று வரை சிறப்புற நடைபெற துணை நிற்கின்றது.

புலம்பெயர் காலங்களும் ஆவணக்காப்பும்

தொகு

தென்மராட்சியில் உள்ள பாடசாலைகள் போர்ச்சூழல்கள் ஏற்படும் போது புலம்பெயர்ந்து பாதுகாப்பான பிரதேசங்களுக்கு நகர்ந்தமை வரலாற்றுப் பதிவுகளாகும்.கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி ஒரு கேந்திர மையத்தில் இருப்பதால் அடிக்கடி பல்வேறு வகையான இடையூறுகளையும் எதிர்கொண்டு வந்தது.இராணுவ நடவடிக்கைகளின் போது பல தடவைகள் இராணுவ முகாமாக,காவலரன்களாக இது விளங்கியிருக்கிறது.

ஒரு கல்லூரிப் பரிபாலிப்பில் ஆவணக் காப்பு என்பது மிக இன்றியமையாதது.எண்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலான வரலாறு கொண்ட இக்கல்லூரியில் தமக்கு வேண்டிய சான்றிதழ்கள், விடுகைப் பத்திரங்கள், பிறப்புச்சாட்சிப் பத்திரங்கள் என்பவற்றிற்காக நாடி வந்த எவருக்கும் இல்லை என்று சொல்லாமல் எந்த ஆவணத்தையும் கொடுக்கக் கூடிய அளவுக்கு திரு.தம்பு.கந்தையா அவர்கள் ஆவணங்களைப் பேணி வந்துள்ளார்.கல்லூரியினுடைய இடப்பெயர்வு, இராணுவத்தின் பிரசன்னம் போன்ற பல்வேறு நெருக்கடிகள் நிறைந்த சூழ்நிலையில் ஆவணங்கள் தொலைவதற்கும்,பழுதடைவதற்கும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. ஆனால் அவற்றைத் தவிர்த்து கல்லூரிக்குரிய அனைத்து ஆவணங்களையும் மிக பாதுகாப்பாக வைத்திருந்தார்.

2000 ஆம் ஆண்டு மே மாதம் இக் கல்லூரி வரலாற்றில் ஓர் இருண்ட காலம்.சரமாரியான எறிகணை வீச்சு,காதைக் கிழிக்கும் வெடியோசை,இந் நிலையில் உயிராபத்துக்கஞ்சி புகலிடம் தேடி பாடசாலைச் சூழலிலும்,அயற்கிராமங்களிலும் இருந்தவ்கள் மூட்டை முடிச்சுக்களுடன் கால் நடையாகவும்,வாகனங்களிலும் வடமராட்சி மற்றும் ஏனைய இடங்களை நோக்கி நகர்ந்தார்கள்.கல்லூரியோடு சம்பந்தப்பட்ட எல்லோருமே புலம்பெயர்ந்து விட்ட நிலையில் கொடிகாமத்தில் இருந்து இறுதியாக புலம்பெயர்ந்தவர் திரு.தம்பு.கந்தையா அவர்களே.தனது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு நகர்த்தக்கூடிய சொத்துக்களின் பாதுகாப்பு,இவை எல்லாவற்றையும் விட அக்கறையுடனும்,எச்சரிக்கையுடனும் கல்லூரியில் இருந்து எல்லா முக்கிய ஆவணங்களையும் பெயர்த்து தன்னுடன் கொண்டு வடமராட்சிக்குச் சென்றார்.அவருடைய குடும்ப உறுப்பினர்கள் தங்கி வாழ்வதற்கே வீடு வசதிகள் போதாத நிலையிலும் ஏறக்குறைய இரண்டு வருடங்களாக கல்லூரி ஆவணங்களைப் பேணி வந்தார்.

ஆவணப் பிரதிகளை நாடிப் பெற்றோர்,பழைய மாணவர்கள் வரும் வேளைகளிளெல்லாம் இன்முகத்தோடு வரவேற்று அவர்கள் வேண்டியதை வழங்கியதை பலர் நேரில் கண்டிருக்குரார்கள்.பாடசாலை வெவ்வேறிடங்களில் நடைபெற்ற இக்கட்டான நேரங்களில் கூட அவ்வவ்விடங்களில் வைத்தே அந்தக் காரியங்கள் நடந்து கொண்டு தானிருந்தன.

தற்காலிக அமைதி,நிம்மதிப் பெருமூச்சு இவற்றுடன் பெற்றோர் வேண்டிக் கொண்டமைக்கமைய 2002 இல் பாடசாலை மீண்டும் சொந்த இடத்தில் ஆரம்பித்து விட்டது.எவ்வித சேதமுமின்றி அனைத்து ஆவணங்களும் வந்து சேர்ந்தன.தற்காலிக அமைதிக்கும்,நிம்மதிக்கும் குந்தம் விளைவக்கும் போர்ச்சூழல் மீண்டும் 2006 ஆம் ஆண்டு தோன்றியது. இரு தினங்கள் டிறிபேக் கல்லூரியிலும் தொடர்ந்து மீசாலையிலிருக்கும் புதிய கணித நிலையத்திலும் (New Maths Center), மீசாலை மாவடிப்பிள்ளையார் ஆலய மடங்களிலும் ,ஒரு தனியார் வீட்டிலும் பாடசாலை இயங்கிய போது ஒவ்வொரு நாளும் பாடசாலை ஆவணங்களை தனது வீட்டிலிருந்து புதிய கணித நிலையத்திற்கு எடுத்து வரும் காட்சி இன்னமும் சமூகம் மனதில் நினைவிலுண்டு.இவ்வாறு பல இடங்களுக்கும் உலாவி வந்த இவ் ஆவணங்கள் மீண்டும் 18.06.2007 இல் தமது சொந்த அலுமாரிகளுக்கு,பாதுகாப்பாக வந்து சேர்ந்தன.

ஆவணப் பாதுகாப்பினைச் சிறப்புற மேற்கொண்ட திரு.தம்பு.கந்தையா அவர்களுடைய பாரிய பணி இப்பாடசாலை வரலாற்றில் தானாகவே பதிவாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. 2003 ஆண்டு வெளியிடப்பட்ட பவளவிழா மலர்ப் புத்தகம்
  2. 2.0 2.1 "கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலயம்". Archived from the original on 20 மார்ச்சு 2012. பார்க்கப்பட்ட நாள் 15 திசம்பர் 2016.
  3. முதல்வர் திரு.தம்பு.கந்தையா அவர்களின் மணிவிழாமலர்(கலசம் 20.07.2008)
  4. 1992.10.06 நடைபெற்ற பரிசில் நாள் மலர்
  5. 2012 பரிசில் நாள் மலர்
  6. 2009 July வெளியிடப்பட்ட திருஞானம் இதழ்