கச்சாய் (Kachchai) இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சியில் சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கும் ஒரு சிறிய ஊர். இக்கிராமத்திற்கு எல்லைகளாக தெற்குப்புறமாக கடல் நீர் ஏரியும், மேற்குப் புறமாக அல்லாரையும், வடக்குப் புறமாக கொடிகாமமும், கிழக்கு புறமாக பாலாவியும் உள்ளன. சாவகச்சேரியில் இருந்து கிழக்கே 4 கிமீ தூரத்தில் கச்சாய் உள்ளது. இந்த ஊரில் கச்சாய் கடல் நீரேரி, கச்சாய் துறைமுகம், கச்சாய் குளம் மற்றும் கச்சாய் வயல் வெளி, கண்ணகை அம்மன் கோவில், தமிழ்க் கலவன் பாடசாலை என பல வளங்கள் உள்ளன. இது ஒரு தமிழ்க் கிராமம் ஆகும். இக்கிராமத்துக்கு போக்குவரத்து வீதிகளாக சாவகச்சேரி-கச்சாய் வீதி, மற்றும் கொடிகாமம்-கச்சாய் வீதிகள் உள்ளன. இதன் தேர்தல் தொகுதியாக சாவகச்சேரி தேர்தல் தொகுதி உள்ளது.

கச்சாய்
கச்சாய் கோவிற்பற்று
நாடுஇலங்கை
மாகாணம்வடக்கு மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலாளர் பிரிவுதென்மராட்சி
தேர்தல் தொகுதிசாவகச்சேரி
கிராம சேவையாளர் பிரிவுயா/324

வரலாறு தொகு

 
கச்சாய் துறைமுகம்

யாழ்ப்பாண அரசு காலத்தில் தென்மராட்சியின் நிலப்பரப்பு மிகப் பெரியதாக இருந்தது. பெருநிலப்பரப்பு, கடல்சார் வாணிகம் என்பவற்றில் 'கச்சாய்த் துறைமுகம்' முக்கிய இடத்தைப் பெற்றதுடன் யாழ்ப்பாண அரசுக்கு உதவியாக தென்னிந்தியாவில் இருந்து வந்த படைகள் இத்துறைமுகத்தையே பயன் படுத்தியதாகவும் கூறப்படுகிறது[1].

'வையாபாடல்', 'கைலாயமாலை' முதலான தமிழ் நூல்கள், யாழ்ப்பாண அரசு காலத்தில் தென்னிந்தியாவில் இருந்து வருவிக்கப்பட்ட தமிழ்க் குடிகளில் ஒரு பிரிவினர் தென்மராட்சிப் பிராந்தியத்திலுள்ள கச்சாய், முகமாலை, கோகிலாக்கண்டி முதலிய இடங்களில் குடியேற்றப்பட்டதாகவும் அவ்விடங்களை நிர்வகிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டதாகவும் கூறுகின்றன[1].

கச்சாய் கோட்டை வரலாறு தொகு

 
கச்சாய் கோட்டை வரலாற்றில் கூறப்பட்டு இருக்கும் ஒல்லாந்தர் காலத்தில் காணபட்ட பாதிரி குளம் மற்றும் கிணறும் இன்று பாழடைந்து காணப்படுகின்றன.

கச்சாயின் பழைய வரலாறுகளை [2] எடுத்துப்பார்க்கையில், கச்சாயில் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் பூதத்தம்பி [3] என்ற ஒரு அரசன் ஆட்சி செய்ததாகவும், அவன் தனது மகாராணிக்காக ஒரு கோட்டை கட்டினான் என்றும், அந்தக் கோட்டையில் மகாராணி தங்கி இருந்த காலப்பகுதியில் ஒல்லாந்தருக்கும் பூதத்தம்பிக்கும் இடையில் போர் ஆரம்பித்ததாகவும், அந்த நேரம் வெளியில் செல்லமுடியாத காரணத்தால் அந்தக் கோட்டைக்கு மேற்கு புறத்தில் அமைந்திருந்த காளி கோவிலைத் தனது ராணி வணங்கச் செல்வதற்காக அந்த காளி கோவிலுக்கும், ராணியின் அரண்மனைக்கும் இடையில் ஒரு சுரங்கப்பாதை அமைத்தான் என்றும் கூறப்படுகின்றது. அதேபோல், தன் ராணி நீராடுவதற்கு அரண்மனைக்கு வடக்கு பக்கமாக ஒரு குளம் கட்டி, அங்கிருந்து ராணியார் அரண்மனை திரும்புவதற்காக அந்தக் குளத்துக்கும் கோட்டைக்கும் இடையில் ஒரு சுரங்கப்பாதை அமைத்ததாகவும், ராணி குளத்தில் நீராடி முடிந்ததும் அத்தர், மஞ்சள் போன்றன பூசி நீராடுவதற்கு சுரங்கப் பாதையின் முடிவில் சிறு கிணறு ஒன்றையும் கட்டியதாகவும் ஒரு வரலாறு பேச்சு வழக்கில் உள்ளது.

அதே சமயம் கச்சாயில் தற்போதும் ஒரு பகுதியாக உள்ள கோட்டையடி[4] என்ற இடத்திற்கு இன்னுமொரு வரலாறும் உண்டு. அதாவது ஒல்லாந்தருக்கும் பூதத்தம்பிக்கும் இடையில் நடந்த யுத்தத்தில் பூதத்தம்பி தோல்வி அடைந்தபோது அவனை சிறைப்பிடித்த ஒல்லாந்தர் அவனைக் கச்சாய் கடல் கரையில் கொண்டு போய் வெட்டும் போது அவன் எட்டு துண்டுகளாக வெட்டப்பட்டான் என்றும், அதன் பிறகு பூதத்தம்பியின் ராணியை வசீகரித்து தன் ராணியாக்கிக்கொண்ட ஒல்லாந்த அரசன் ராணியை யாழ்ப்பாணக் கோட்டைக்குக் கொண்டு சென்றதாகவும், அதன் பின் தம் மதமான கிறிஸ்த்தவ மத பாதிரிமார்களுக்கு ஒல்லாந்த அரசன் கச்சாயிலிருந்த கோட்டையை வழங்கினான் என்றும், அதில் இருந்த கிறிஸ்தவ பாதிரியார் அந்த ராணி நீராடிய அதே குளத்தில் நீராடியதாகவும், அதனால் அந்த குளத்துக்கு பாதிரி குளம் என்றுபெயர் வந்ததாகவும், ஒரு வரலாறு தற்போதும் பேச்சு வழக்கில் உள்ளது. இங்கே குறிப்பிட்டுள்ள இந்த கோட்டை இப்போது அழிந்திருந்தாலும், இதன் எச்சங்கள் இப்போதும் கானபடுகின்றன. அதில் பாதிரி குளம், மற்றும் கிணறு, மண்ணால் கட்டபட்ட அந்த கோட்டை இப்போது மண்மேடாக காட்சி அளிக்கிறது. இருக்கும் இடம்: கொடிகாமம் கச்சாய் வீதி மற்றும் சாவகச்சேரி கச்சாய் வீதி இணையும் கச்சாய் சந்தியில் இருந்து சாவகச்சேரி போகும் பக்கமாக 500 மீ தூரத்தில் காணப்படுகின்றன.

ஈழப்போராட்ட வரலாற்றில் தொகு

 
ஈழப் போரில் பாதிக்கப்பட்ட ஒரு வீடு

ஈழப்போரினால் உயிர்ச் சேதங்கள் பெரிய அளவில் இல்லையெனினும், கச்சாய் பெரிதும் பாதிக்கப்பட்டது. பொருளாதாரத்தை பொறுத்த வகையிலும், மனம் சார் வகையிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடற் தொழிலை நம்பி இருந்த மக்கள் பல ஆண்டுகளாக கடல் தொழில் செய்ய முடியாமையும், மற்றும் விவசாயிகள் தங்கள் அன்றாட வேளாண்மைத் தொழில்களை செய்ய முடியாமல் இருந்ததே இதற்கான காரணங்கள். அதேவேளை ஈழப்போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலை புலிகளின் தளபதிகளில் ஒருவரான சார்ல்ஸ் அன்டனி (சீலன்) இந்த ஊரின் அல்லாரை எல்லைப்பகுதியில் 1983 இலங்கை இராணுவத்துடனான சண்டையில் இறந்தார். கச்சாய் ஊரில் இருந்து பல போராளிகளும் ஈழப்போராட்டத்தில் இறந்துள்ளார்கள்.

மக்கள் வகைப்பாடு தொகு

கச்சாய் ஆனது கச்சாய் தெற்கு, கச்சாய் வடக்கு என இரு பிரிவுகளையுடையது. கச்சாயில் (2012) கிட்டத்தட்ட 673 தமிழ் குடும்பங்கள் வசிக்கின்றன, ஒரு மூன்று ஆண்டுகளுக்கு (2009) முன்பு 540 குடும்பமாக இருந்தது.

சமூகக் கட்டமைப்பு தொகு

கச்சாயில் யாழ்ப்பாணத்துச் சாதியமைப்பு கட்டமைப்பை ஒத்த சமூகக் கட்டமைப்பு உள்ளது. அவற்றில் பின்வருமாறு: கோவியர், சான்றார், நளவர், முக்கியர், வெள்ளாளர்/(வேளாளர்) ஆகிய சாதிய அடையாளங்கள் இங்கு உள்ளன. அதே வேளை கோவில், பாடசாலை, விளையாட்டு போன்ற பொது இடங்களில் இவர்களுக்கிடையில் வேற்றுமை இல்லை.

பண்பாடு தொகு

 
கச்சாயில் யாழ்ப்பாணத்து ஒடியல் கூழ்

இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்களின் பண்பாடு யாழ் மாவட்டத்தைப் போல்தான். இருந்தாலும் கச்சாய்க் கிராமத்து மக்கள் நகர்ப்புற மக்களை விடச் சற்று வேறுபட்டவர்கள். இந்தக் கிராமத்தில் ஆண்களும், பெண்களும் வேலை செய்தாலும், பெண்கள் சிறு கைத்தொழில் சார் தொழில்களே பொதுவாகச் செய்கின்றனர். உறவு முறைகளில் திருமணம் செய்வதும் இங்கு அதிகமாக காணலாம். கச்சாய் ஊரில் நூறு வருடத்துக்கு உட்பட்ட காலங்களில் காரைநகர், கோயிலாக்கண்டி, நவாலி, மண்டைதீவு, பூநகரி, மீசாலை, போன்ற பிற பிரதேசத்து மக்கள் குடியேறி வாழ்கிறார்கள்.

வாழ்க்கை முறை தொகு

கச்சாய் ஊரைச் சேர்ந்தவர்கள் வேறு சாதி/மதம் இனத்தவருடனான திருமணங்கள் இங்கு அரிதாகவே உள்ளன, ஒரு நபர் திருமணம் செய்வதற்கு முன் தனது பெற்றோருடனேயே வாழ்கிறார், திருமணம் முடிந்த அன்றைய நாளில் இருந்து தனிக் குடித்தன வாழ்வில் இறங்குகிறார்கள். இந்த ஊரின் கோடை காலத்தில் அதி சிறப்பு உணவாக யாழ்ப்பாணத்து கூழ் பெரும்பாலும் அனைத்து குடும்பங்களிலும் தயாரிக்கப்படும்.

கல்வி தொகு

 
யாழ் கச்சாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை

பாடசாலைகள் தொகு

கச்சாய் தமிழ் கலவன் பாடசாலை தற்போது பத்தாம் வகுப்புவரை நடத்தபடுகிறது. இப் பாடசாலையில் இப்பொழுது இருபத்தியொம்பது ஆசிரியர்கள் பணி புரிகின்றனர்(2012). அதே வேளை இப் பாடசாலை மகாவித்தியாலம் ஆக்க வேண்டும் என்று இருபது வருடங்களாக(1992) முயற்சி செய்து வந்தாலும் இதுவரை அது சாத்தியம் அற்றதாகவே உள்ளது. கச்சாயில் இருக்கும் மாணவர்களில் பலர் சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கும், கொடிகாமம் திருநாவுக்கரசு மகா வித்தியாலயத்துக்கும் போவதே இதற்கான காரணமாக அமைந்துள்ளது.

பொருளாதாரம் தொகு

கச்சாய் ஊரைப் பொறுத்த வரையில் பொருளாதாரம் உயர்ந்த நிலையிலேயே உள்ளது. அதற்கான காரணங்கள் உள்ளூர் உற்பத்தியாக மரக்கறி வகைகள் இந்த ஊரில் அதிகளவு காணப்படுவதும், மீன்பிடித் தொழில் இங்கு அதிகளவாக நடைபெறுவதும் அதற்கான காரணங்களாகும். கச்சாய் கடல் நீரேரியில் பிடிக்கப்படும் இறால், நண்டு என்பன வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதை அடுத்து இந்த ஊரைச் சேர்ந்த பல தமிழர்கள் புலம்பெயர் நாடுகளில் வாழ்வதனால் அவர்களின் பொருளாதார உதவியும் இந்தக் கிராமத்துக்கு அதிகளவில் கிடைக்கின்றன. பொதுவாக நடுத்தர மக்கள் இங்கு வாழ்கிறார்கள் என்று சொல்லலாம்.(2012)

புலம் பெயர் தமிழர் தொகு

கச்சாயின் புலம் பெயர் தமிழர்கள் பல மேற்கத்தேய நாடுகளில் வாழ்கின்றனர். அவை பின் வருமாறு: டென்மார்க், சுவீடன், யேர்மனி, நெதர்லாந்து, பிரான்ஸ், பிரித்தானியா, சுவிஸ், இத்தாலி, அமெரிக்கா, கனடா, மற்றும் அரபு நாடு போன்ற நாடுகளில் வாழ்கிறார்கள். இவர்களின் பொருளாதார உதவி இந்த கிராமத்துக்கு பெருமளவில் கிடக்கின்றன என்பது இங்கு குறிப்பிட தக்கது.

இயற்கை வளம் தொகு

 
கச்சாய் நீர்வளம், இது ஒரு கேணி

நீர் வளம் தொகு

இந்த பிரதேசத்தின் நிலம் நீர் மட்டத்தில் இருந்து பத்து, பதினைந்து, அடிகளே உயரமானது, அதனால் இந்த கிராமத்தைப் பொறுத்தவரையில் நீர் வளத்துக்குக் குறைவில்லை என்றுதான் சொல்ல முடியும், அதே வேளை இக் கிராமத்திலும், இந்த ஊரைச் சுற்றியுள்ள அயல் ஊர்களிலும் பல குளங்கள் உள்ளனவும் இதுக்கு ஒரு சிறந்த உதாரணமாகும், நீர் வளம் என்பது இந்த ஊரைப் பொறுத்த வரையில் அளவுக்கு அதிகமாகவே உள்ளன என்றுதான் கூறவேண்டும். ஒவ்வொருவர் வீட்டிலும் நீருக்காக ஒரு கிணறு கட்டி இருப்பார்கள் அதன் மூலம் தங்கள் நீரின் தேவையைப் பூர்த்தி செய்கிறார்கள். இவ் ஊரின் குடிநீரிலோ அல்லது குளத்து நீரிலோ உவர் தன்மை இல்லை என்பது குறிப்பிட தக்கது. இங்கு வாழும் வேளான்மை/விவசாயம் செய்பவர்கள் கிணறு, கேணி, குளம் போன்றவற்றில் இருந்து தங்கள் நீர் தேவையை பெறுகின்றனர்.

மண் வளம் தொகு

 
கச்சாயின் இயற்கை வளம் மற்றும் குருமணல்

இந்த கிராமத்து மண் பார்ப்பதற்கு குருமணல் போன்றுதான் இருக்கும், அதேவேளை இந்த மண் விவசாயத்துக்கு ஏற்ற மண்ணாக இல்லாவிட்டாலும் விவசாயிகள் தங்கள் விவசாயத்துக்கு ஏற்றால் போல் தமது விவசாய நிலங்களை பண்படுத்தி வைத்துள்ளனர். அதே வேளை இந்த கிராமத்தில் அனைத்து பயிரினங்களும் பயிரிட முடியாமலும் உள்ளது, உதாரணமாக, உருளைக் கிழங்கு, வெங்காயம், கோவா, தக்காளி, பீட்ரூட், போன்ற பயிர்களை இந்த மண்ணில் பயிரிட முடியாது, இந்த கிராமத்து மண் குருமணல் போல் இருப்பதால் பயிரிடப்படும் பயிர்களுக்கு அதிக அளவான தண்ணீர் பாய்ச்சவேண்டி உள்ளது. நீர் வளம் இங்கு தாராளமாக கிடைப்பதனால் விவசாயிகளுக்கு இது ஒரு பெரிய பிரச்சனை இல்லை. அதே வேளை யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளுக்கு வீடு கட்டுவதற்கான மணல் இந்த கிராமத்தில் இருந்துதான் சென்றடைகின்றன.

காற்று தொகு

 
கச்சாய் குளம் மற்றும் வயல்வெளி

கச்சாய் கிராமத்தில் காற்றுக்குப் பஞ்சம் இல்லை. கச்சாய் கடல் நீர் ஏரி இருப்பதனால் கடலில் இருந்து அதிகளவான காற்று வீசிக் கொண்டே இருக்கும், அதே வேளை இந்த கிராமத்திலும், இக் கிராமத்தைச் சுற்றியும் வயல்வெளிகளும் அதிக அளவில் காணப்படுவதனாலும் காற்று இங்கு அதிகம். இருந்தாலும் கோடை காலத்தில் வரும் ஆடி மாதத்தில், இந்த ஊரில் காற்று குறைவாகவே இருக்கும். இவ் ஊரின் அதிகக் காற்று கூடிய காலங்களாக பங்குனி, சித்திரை, வைகாசி, கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்கள் உள்ளன. அதே வேளை இந்த ஊரின் மாரிகாலம் என்றால் காற்றோடு சேர்ந்த மழையினால் வெள்ளம் வருவது உண்டு.(2012)

இந்த ஊருக்கு மட்டும் இல்லாது யாழ் மாவட்டத்துக்கே இருக்கும் காற்றின் பண்புகளாவன:

தொழில்கள் தொகு

 
மிளகாய் செடி
 
கச்சாய் துறை முகத்தில் படகில் மீன்கள்
 
பனை தென்னை
 
கிடுகு பின்னல்

இந்த ஊரில் பலவகையான தொழில்கள் செய்கிறார்கள். விவசாயம், மீன்பிடித்தல், தென்னை, பனை மதுபான உற்பத்தி, போன்றவை முக்கிய தொழில்களாக உள்ளன. இக்கிராமத்தில் பாடசாலை ஒன்றும் உள்ளது, யாழ் கச்சாய் கலவன் பாடசாலையில் பத்தாம் வகுப்பு வரை பாடம் சொல்லி கொடுக்கப்படுகிறது.

இந்த ஊரில் மா, பலா, தென்னை, பனை, வேம்பு, நாவல்,முருங்கை போன்ற மரங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. 2012 ஆம் ஆண்டுப் பகுதியில் இது சிறு வணிக மையமாகவும் உருவெடுத்துள்ளது. அதாவது சிறிய பலசரக்கு கடைகள், வீடு கட்டுமான கடை, சாப்பாட்டுக்கடை, மில், மது பான உற்பத்தி, சிறிய கைத்தொழில் என்பன போன்றவை இக்கிராமத்தில் இப்போது காணப்படுகின்றன. புலம்பெயர் நாடுகளிலும் இந்த ஊரை சேர்ந்தவர்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.

விவசாயம் தொகு

இந்த கிராமத்தில் விவசாயம் மூன்று விதமானவை அதில் ஒன்றான மரக்கறி வகைகளைக் கோடைகாலத்திலும், மாரி காலத்திலும் பயிரிடுவார்கள். அதே வேளை வயல் நிலங்களில் மாரிகாலத்தில் நெற் பயிரும், கோடைகாலத்தில் பயறு, உழுந்து, கடலை வகை பயிர் போன்ற தானிய வகைத் தாவரங்களை பயிரிடுவார்கள். மற்றும் மரக்கன்று வகைகளும் இந்த கிராமத்தில் பயிரிடப்படுகின்றன.

இங்கு பயிரிடப்படும் மரக்கறிகளில் பின்வருவன அடங்கும்: பயற்றம் கொடி , புடோல், பாகல், மிளகாய், சர்க்கரை பூசணி, நீத்துப்பூசணி, கத்தரி, முருங்கை, கீரை வகை.

இங்கு பயிரிடப்படும் மரக் கன்று வகைகளில் பின்வருன அடங்கும்: மா, பலா, மாதுளை, கொய்யா, தோடை, எலுமிச்சை, பப்பாசி, வாழை, தென்னை, பனை, பூ மரங்கள்.

பழங்கள் தொகு

மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், மாதுளைம்பழம், நாவல்பழம், தோடம்பழம், கொய்யாப்பழம், பப்பாளிப்பழம், வெள்ளரிப்பழம்,(2012)

கடற்றொழில் தொகு

இந்த ஊரைச் சேர்ந்த மீனவர்களிடம் இப்போது (2012), 47 வெளி இயந்திர சிறிய படகுகள் மற்றும் நான்கு மர வள்ளங்கள் (08/2012) உள்ளன இந்த படகுகள் மூலம் கச்சாய் கடல் நீர் ஏரி பகுதிகளில்தான் பலர் சிறியமீன், நண்டு, இறால் போன்றவற்றைப் பிடிக்கின்றனர், ஆனால் ஒரு சிலர் மட்டும் பாக்கு நீரிணைப் பகுதியில் பெரிய வகை மீன்களைப் பிடிக்கின்றனர். அந்த பெரிய மீன்கள் உடனடியாக கொழும்புக்கு ஏற்றுமதி செய்யபடுகின்றன. இந்த பிரதேசத்தில் பெயர் பெற்ற கடல் உணவாக நாச்சிக் குடா நீலக்கால் நண்டு பெயர் பெற்றது.

இங்கு பிடிக்கப்படும் இறால்கள் இந்த ஊரிலே இறால் கருவாடு போட்டு யப்பான் போன்ற வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன என்பதும் குறிப்பிட தக்கது. இங்கு பிடிக்கப்படும் மீன்கள் கச்சாய் துறைமுகத்தில் யப்பானால் கட்டி கொடுக்கப்பட்ட மீன் சந்தையிலும், கொடிகாமம், சாவகச்சேரி மீன் சந்தைகளிளும், விற்கப்படுகின்றன. மீன்/கடல் உணவு வகைகளில் பின்வருவன அடங்கும்:

கொய்மீன், திரளிமீன், கெளிறுமீன், மணலைமீன், கலவாய்மீன், பாலைமீன், ஒட்டிமீன், எறியாள்மீன் (உழுவை மீன்), காரல்மீன், இறால், நண்டு. போன்ற பலவகையான மீன்கள் பிடிக்கப்பட்டாலும், இங்கு பிடிக்கப்படும் நண்டு, இறால் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது, அதேவேளை இந்த தொழிலை நம்பி 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. எது எவ்வாறு இருப்பினும் இங்கு உள்ள கடல் தொழிலாளிகளுக்கு போதிய வசதி எதுவும் அரசாங்கத்தலோ, வேறு வெளிநாட்டு நிறுவனங்களாலோ வழங்கப்படவில்லை என்பது வருத்தத்துக்கு உரியதாகும்.

தென்னை, பனை சார் தொழில்கள் தொகு

 
ஒலைப்பட்டை

இந்த கிராமத்தில் அதிகளவான தென்னை மரம், பனை மரம் காணப்படுகின்றன, இவற்றில் இருந்து கள்ளு உற்பத்தி செய்யப்படுகின்றன, இங்கே பெறப்படும் மதுபானம் (கள்ளு) கொடிகாமம், சாவகச்சேரி போன்ற இடங்களில் விற்பனை செய்யப்படுகின்றன, மீதி உள்ளவை பனை, மற்றும் தென்னம் கள்ளை சாராயம் செய்வதற்காகக் கொடிகாமம் பனஞ்சாராயம் தயாரிப்பதற்கு சாராய வடிசாலைக்குக் அனுப்பப்படுகின்றன. கோடை காலங்களில் பனம் கட்டி உற்பத்தியும் இங்கு அதிகளவாக செய்யப்படுகின்றன.

கைத்தொழில்கள் தொகு

இந்த கிராமத்தில் வாழும் பெண்கள் பொதுவாக கைத்தொழிலே செய்கின்றனர். கிடுகு(பன்னாங்கு), பின்னல், ஒலைப்பட்டை கொளுதல், கடகம், தொப்பி, பாய், தமிழர் மூங்கில்வேலை கூடை இளைத்தல், பாக்குச்சீவல், கயிறு திரித்தல், பனாட்டு போடுதல், மீன்பிடி வலை பின்னுதல் போன்ற பல சிறு சிறு கைத்தொழில் புரிகின்றனர்.

கூலித்தொழில் தொகு

கச்சாயில் வாழும் மக்கள் கூலி தொழில் செய்பவர்களும் இருக்கிறார்கள், இம் மக்கள் தங்கள் வாழ்க்கையில் குறைந்த வருமானத்தை கொண்டவர்களாகவும் உள்ளனர், இங்கு ஆண்களும் பெண்களும் கூலித்தொழில் செய்து வருகிறார்கள். அவையாவன: நெல் வெட்டுதல், களை பிடுங்குதல், கட்டுமான பணிகளில், வீட்டு வேலைகள், மற்றும் வேளாண் தொழில்கள் போன்றவற்றை கூலித்தொழிலாக செய்து வருகின்றனர்.(2012)

ஊர்வனங்கள் தொகு

இந்த ஊரில் பலவகை ஊர்வனங்கள் இருக்கின்றன, அவைகளில் பெரும்பாலானவை கொடிய விசம் கொண்டனவாக உள்ளது. அதே வேளை இந்த கொடிய விசம் கொண்ட ஊர்வனங்களின் தாக்கம் அவ்வப்போது இந்த கிராமத்தில் வசிப்பவர்களுக்கு தாக்கமாகவே உள்ளன. இந்த ஊர்வனங்களின் தாக்குதலால் ஆண்டுக்கு குறைந்தது ஐந்து நபர்கள் தாக்கப்படுகிறார்கள். இருந்தாலும் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு சிலரே. இக் கிராமத்தில் பெரிதும் அரிதானவகை பாம்புகளையும் காணலாம். அவை பின் வருமாறு: நாகப்பாம்பு வெள்ளை நாகம், தங்க நாகம் (மஞ்சள் நாகம்), கரு நாகம், பற நாகம், செட்டி நாகம், முத்திரை புடையன், இரத்தப்புடையன், கண்ணாடி விரியன், மணல் புடையன், சுருட்டை புடையன், சாரை பாம்பு, கோடாலிப்பாம்பு, கொம்பறி மூக்கன், பச்சிலிப்பாம்பு, நீர்ப்பாம்பு, ஓணான், அறணை, பல்லி, சிலந்தி, தேள் வகைகள், நட்டுவக்காளி, பூரான், பூச்சி வகைகள் என்பன இந்த கிராமங்களில் அதிகமாக காணப்படுகின்றன.(2012)

அரசியல் தொகு

இந்தக் கிராமத்தைப் பொறுத்தவரையில், தற்போது அரசியல் செயல்பாடுகள் அரிதாகவே காணப்படுகின்றன. ஆனால் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் காலத்தில், அரசியல் நடவடிக்கைகள் பெரிய அளவில் காணப்பட்டன.

சமயம் தொகு

 
கச்சாய் கண்ணகை அம்மன் கோவில்

இந்த சிறிய கிராமத்தில் வாழுபவர்கள் பொதுவாக இந்து மதத்தைச் சார்ந்தவர்கள். தற்போது ஒரு சிலர் கிறிஸ்தவ மதத்தில் இணைந்திருக்கிறார்கள்.

இந்துக் கோவில்கள் தொகு

இந்த கிராமத்தின் விசேட நிகழ்வான கச்சாய் கண்ணகை அம்மன் கோவில் வைகாசிப் பொங்கல் (விசாகப் பொங்கல்),காவடிகள்: பறவைக் காவடி, செடில் காவடி பால்க்காவடி, போன்றவையை இங்கு காணலாம். இங்கு காணப்படும் இந்துக் கோவில்கள்:

 
கச்சாய் கண்ணகை அம்மன் பறவைக் காவடி

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 தென்மராட்சியின் தொன்மையும் பெருமையும்[தொடர்பிழந்த இணைப்பு], பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்
  2. http://noolaham.net/project/45/4499/4499.pdf
  3. http://www.yarlmann.lk/viewsingle.php?id=118
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-12-18. பார்க்கப்பட்ட நாள் 2012-12-18.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கச்சாய்&oldid=3792947" இலிருந்து மீள்விக்கப்பட்டது