தமிழர் மூங்கில்வேலை

தமிழர் மூங்கில் தொழிற்கலை என்பது மூங்கில் மரம், மூங்கில் ஓலை போன்ற மூங்கில் கூறுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் கூடை, முறம், தட்டு, தட்டி போன்ற கைவேலைப் பொருட்களையும், அது தொடர்பான கைவேலைத் தொழிற்கலையையும் குறிக்கும். தமிழர் பண்பாட்டுக் கூறுகளின் படிநிலை வளர்ச்சிகளுள் மூங்கில் கலையும் ஒன்றாகும்.

மூங்கில் கூடை முடைதல்

தொழில் நடைபெறும் இடங்கள்

தொகு

தமிழ்நாட்டின் பல இடங்களில் இத்தொழில் நடைபெற்று வந்தாலும், தஞ்சை, திருச்சி, ஈரோடு, நாகை, கடலூர், விழுப்புரம் திண்டுக்கல் மாவட்டம்(வேம்பார்பட்டி முரம் மற்றும் ஏனைய கூடைகிடைக்க பெருகின்ரன இன்ரைய வரையும்)~வட்டாரங்களில் குறிப்பிட்ட அளவில் நடைபெறுகிறது.

தொழில் செய்வோர்

தொகு

தமிழ்நாட்டில் குறவர் பழங்குடியினரும் ஆந்திராவில் இருந்து இங்கு வந்து குடியேறிய மகேந்திரா மேதரா மரபு வழி என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் பழங்குடியின மக்களும் இம்மூங்கில் தொழிற்கலையில் வழிவழியாக ஈடுபட்டு வருகின்றனர். [1] எனினும் இவர்களுக்குள் எவ்விதமான உறவுமுறைகளும் இல்லை. ஆண்களோடு பெண்களும் சரிசமமாக இக்கலைத் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

மூங்கிலைத் தேர்ந்தெடுத்தல்

தொகு

வெட்டுவதற்கும், பிளப்பதற்கும், பளாச்சிகள் எனப்படும் மூங்கில் குச்சிகளை(கழி) வேண்டிய அளவுகளில் எடுக்கவும், பட்டையை எளிதாக உரிக்கவும் உதவுவது பச்சை(இளம்) மூங்கிலே. மூங்கில் காய்ந்துவிட்டாலும் தண்ணீரில் ஊறவைத்துப் பயன்படுத்துவர். ஆயினும் இதில் செய்யப்படும் பொருட்கள் தரமுடையனவாகக் கருதப்படுவதில்லை. எனவே தரமான மூங்கில் கழிகளைத் தேர்வு செய்வதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளப்படுகிறது.

கணுக்கள் நெருக்கமாக இருந்தால் அதில் வேலை செய்தல் இயலாது. கணுக்கள் இல்லாத மூங்கில் உடைந்துவிடும். எனவே மூங்கிலின் கணுக்களுக்கு இடையில் அதிக இடைவெளி (ஓட்டம்) இருக்க வேண்டும். அப்போதுதான் அதனை வேண்டுமாறு வளைக்க இயலும். கல் மூங்கில், கூட்டு மூங்கில், மலை மூங்கில் என்னும் மூன்றுவகை மூங்கில்கள் இக்கைவினைக் கலைஞர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

ஈடுபடும் முறை

தொகு

மூங்கில் கழிகளின் மேற்புறத்தில் உள்ள கணுக்களை நன்கு செதுக்கிய பின்பு தேவையான அளவுகளில் துண்டுகளாக்குவர். இந்தத் துண்டுக்கழிகளைப் பிளந்து பளாச்சிகளாகச் செய்வர். பளாச்சிகளை மெல்லிய பட்டைகளாக உரித்துக் கொள்வர். இந்தப்பட்டைகள் செதும்புகள் எனப்படும் பிசிறுகளின்றி சீவியிருக்க வேண்டும். பின்பே முடைதல் வேலை தொடங்குகிறது. கவனக்குறைவினால் செதும்புகள் கைகளில் குத்தி புண் ஏற்படலாம். இதற்காகக் கையாளப்படும் கருவிகள் பட்டைக்கத்தி, அம்புவடிவிலான கைக்கருவி ஆகும்.

மூங்கில் விசிறி உருவாக்கம்

வெட்டுதல், செதுக்குதல், பிளத்தல், உரித்தல் ஆகியவை ஒருநிலை, முடைதல் என்பது மற்றொருநிலை என இருநிலைகளில் இத்தொழில் இயக்கம் பெறுகிறது. கூடைகள், தட்டுகள் போன்றவற்றை முடைவதற்கு அடிப்பகுதியில் முறையே பன்னிரண்டு, எட்டு என பட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை மேல்நோக்கி வரும்போது பிரித்துவிடுதல் மூலம் இரட்டிப்பாகின்றன.

உருவாகும் பொருட்கள்

தொகு

பண்பாடு

தொகு

சீர்கூடைகள்

தொகு

துணிகள், பழங்கள், இனிப்புகள் ஆகியவற்றை வைத்துக் கொடுப்பதற்கென்றே சீர்கூடைகள் கடந்த காலத்தில் தயாரிக்கப்பட்டன. இது தற்போது அருகிவிட்டது.

நோன்பு முறம்

தொகு

நோன்பு முறம் என்பது வழிபாட்டில் மட்டுமே பயன்படுத்தப்படும் முறமாகும். தானியங்களைப் புடைக்கவோ, தூற்றவோ, காயவைக்கவோ, அள்ளவோ இதனைப் பயன்படுத்தக்கூடாது. மற்ற முறங்களைக் காட்டிலும் இதன் விலை அதிகமானது. முடையும்போதே அதிகக்கட்டுகளைக் கொண்டிருக்கும். வெற்றிலை, பாக்கு, பூ, பழம் என இருபத்தியோரு வகையான பொருட்களை இம்முறத்தில் வைத்துப் படைப்பதும், அம்முறத்தை ஆண்டுமுழுவதும் பாதுகாப்பாக வைத்திருந்து பின்னர் ஆறு அல்லது கடலில் விட்டுவிட்டு வேறு நோன்புமுறம் வாங்கி பழைய இடத்தில் வைப்பர். கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி பேசும் அந்தணர்களின் குடும்பங்களில் திருமணத்தின் போது மணப்பெண் இம்முறையில் வழிபாடு செய்து, வந்துள்ள சுமங்கலிப்பெண்களுக்கு 5 அல்லது 7 என்ற எண்ணிக்கையில் மடிகட்டுதல் என்னும் சடங்காகச் செய்வது வழக்கம். கௌரி விரதம், வரலட்சுமி விரதம் போன்ற நோன்புகளிலும் இம்முறை பின்பற்றப்படுகிறது

மணப்பந்தல்

தொகு

திருமண விழாக்களின் போது மணவறை பூக்களால் ஒப்பனை செய்யப்படுகிறது. இதற்கு உதவியாக உள்ள பூக்கள் வைத்துக் கட்டும் பூக்குச்சிகள் மூங்கில்களால் தயாரிக்கப்படுகின்றன.

இன்றைய நிலை

தொகு

அதிக உழைப்பும் குறைந்த வருவாயும் கொண்ட இக்கலையானது, நெகிழிப்பொருட்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் தற்போது நலிவடைந்து வருகிறது.

படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. எழிலன், 'தமிழகத்தின் மரபுக் கலைகள்', பிளாக்ஹோல் மீடியா வெளியீடு. பக்.139
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழர்_மூங்கில்வேலை&oldid=3772850" இலிருந்து மீள்விக்கப்பட்டது