வரலட்சுமி நோன்பு

இறைவி மகாலட்சுமியை வீடுகளில் எழுந்தருளச் செய்ய, இந்து சுமங்கலிப் பெண்கள் அனுஷ்டிக்கும் பூசை
(வரலட்சுமி விரதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வரலட்சுமி நோன்பு (தமிழில்:வரலட்சுமி விரதம் அல்லது மகாலட்சுமி விரதம்) என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி, இந்துக்கள் நோன்பு இருத்தலாகும். ஆடி மாதம் வளர்பிறையில் முழுநிலவு வருவதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில், சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடு இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த நோன்பை சுமங்கலிப் பெண்கள் கடைபிடிக்கின்றனர்.

வரலட்சுமி நோன்பின்போது வீட்டு பூசையறையில் அம்மன் அலங்கரிக்கப்படுதல்

இந்நாளில், வீட்டைச் சுத்தம் செய்து, விளக்கேற்றி, வாசனைப் புகையினால் இல்லத்தை நிறைத்து, கலசம் ஒன்றில் லட்சுமியை வைத்து வணங்கித் தொடங்குவர். கலசத்தினுள், பச்சரிசி, எலுமிச்சை, பொற்காசு போன்றவற்றை இட்டு, கலசத்தைப் பட்டாடையால் அலங்கரித்து, தங்கம், வெள்ளி அல்லது பஞ்ச உலோகங்களினால் ஆன இலட்சுமியின் உருவச்சிலையை அல்லது படத்தை, கலசத்திலுள்ள தேங்காயில் வைப்பர். மஞ்சள் சரட்டை, குங்குமத்தில் வைத்துக் கலசத்தில் அணிவித்து, வரலட்சுமியைக் கிழக்குப் பக்கமாக வைத்து வணங்குவர்.

தீப ஆராதனை செய்து, இனிப்பான பலகாரங்களைப் படைப்பர். பின்னர், கலசத்தில் வைத்த மஞ்சள் சரட்டை, விரதமிருந்தவர் கையில் கட்டுவர். பின்னர், படைக்கப்பட்ட பொருட்களுடன், தாம்பூலம், மஞ்சள், புடவை போன்றவற்றை, சுமங்கலிகளுக்குத் தானமாகக் கொடுத்து ஆசி பெற்று, காலை முதல் உண்ணாநோன்பிருந்ததை முறித்து, தாமும் உண்டு விரதத்தை நிறைவேற்றுவர்.

அன்று முழுவதும் அஷ்டலட்சுமி தோத்திரம், லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வர். மாலை வேளைகளில் உற்றார், சுற்றார் வீடுகளுக்குச் சென்று, ஒருவருக்கொருவர் தாம்பூலம் பரிமாறிக் கொள்வர்.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரலட்சுமி_நோன்பு&oldid=3227975" இலிருந்து மீள்விக்கப்பட்டது