மாம்பழம்

மாம்பழம் என்பது மாமரத்தில் இருந்து பெறப்படும் ஒரு பழமாகும்

மாம்பழம் மாமரத்தில் இருந்து பெறப்படும் ஒரு பழமாகும். மாம்பழங்கள் வடகிழக்கு இந்தியப் பகுதியிலிருந்து தோன்றியதாக அறியப்படுகின்றது. உலகம் முழுவதும் பல மாம்பழ வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. வகையை பொறுத்து மாம்பழத்தின் அளவு, வடிவம், இனிப்புத்தன்மை, தோல் நிறம் மற்றும் சதை நிறம் ஆகியவை மாறுபடும். மாம்பழங்கள் பொதுவாக வெளிர் மஞ்சள், தங்க நிறம் அல்லது பச்சை மற்றும் இளஞ்சிவப்பு கலந்த நிறத்தில் இருக்கலாம்.

மாம்பழம்

மா, பலா, வாழை ஆகியவை தமிழ் இலக்கியத்தில் முக்கனிகள் என அறியப்படுகின்றன. மாம்பழமானது இந்தியா, பாக்கித்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவற்றின் தேசியப் பழமாக உள்ளது. மா மரம் வங்காளதேசத்தின் தேசிய மரமாகும்.[1][2][3]

சொற்பிறப்பியல் தொகு

தமிழ் மொழியில் "மா" ("மாம்பழ மரம்") மற்றும் "காய்" ("பழுக்காத பழம்") என்பதிலிருந்து மாங்காய் என்ற வார்த்தை உருவானது. ஆங்கில வார்த்தையான மாங்கோ ("மாம்பழம்") 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசிய வார்த்தையான மாங்கா என்பதிலிருந்து வந்தது. இந்த போர்த்துகீசிய வார்த்தை தமிழ் மொழியிலிருந்து மலாய் மொழி வழியாகப் பெறப்பட்டதாகும். [4][5]

மா மரம் தொகு

 
பூத்துக் குலுங்கும் மாமரம்

மா மரங்கள் 40 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. இவற்றின் விட்டம் 15 மீட்டர் வரை இருக்கும். இந்த மரங்கள் நீண்ட காலம் காய்க்கக்கூடியவை. சில மாமரங்கள் 300 ஆண்டுகளுக்குப் பிறகும் காய்க்கின்றன.[6] மண்ணில் ஏறத்தாழ 20 அடி (6 மீட்டர்) ஆழத்திற்கு இதன் வேர்கள் பாய்கின்றன. அதிக அளவில் சிறிய வேர்கள் மண்ணுக்குள் ஆழமாக ஊடுருவுகின்றன.[7] இதன் இலைகள், எப்போதும் பசுமையாகவும் மாற்றடுக்காகவும் அமைந்துள்ளன. இவை 15 – 35 செ.மீ நீளமும், 6 – 16 செ.மீ அகலமும் கொண்டிருக்கும். கொழுந்து இலைகள் கருஞ்சிவப்பாகவும், வளர வளர பச்சையாகவும் மாறுகின்றன.[7]பூக்கள் கிளை நுனியில் கொத்தாகத் தோன்றுகின்றன. இவை மிகச்சிறியதாக, 5 – 10 மி.மீ. நீளமுடைய இதழ்களையும், மிதமான நறுமணத்தையும் கொண்டுள்ளன.[7] 500க்கும் மேற்பட்ட மாமர வகைகள் உள்ளன, இவற்றில் பெரும்பாலானவை கோடை காலத்தில் பழங்களை ஈனுகின்றன.[8] பூத்து, மூன்று முதல் ஆறு மாதங்களில் பழங்கள் முற்றுகின்றன.[7]

மாம்பழம் தொகு

 
குறுக்கில் வெட்டப்பட்ட ஒரு மாம்பழம்

மாம்பழம் நீண்ட காம்புகளுடன் மரக்கிளைகளில் கொத்தாய் தொங்கும். வகையை பொறுத்து மாம்பழத்தின் அளவு, வடிவம், இனிப்புத்தன்மை, தோல் நிறம் மற்றும் சதை நிறம் ஆகியவை மாறுபடும்.[7]

பழத்தின் நடுவில் கடின ஓடுடைய ஒற்றை விதை காணப்படும்.[9] இரகத்தைப் பொருத்து இந்த ஓடு நார்களுடனோ வழுவழுப்பாகவோ இருக்கும். விதை 4 – 7 செ.மீ நீளமும், 3 – 4 செ.மீ அகலமும், 1 செ.மீ தடிமனும் கொண்டு, ஒரு மெல்லிய விதை உறையுடன் இருக்கும்.[7] இந்த விதையை சுற்றி சாற்றுள்ள பழப்பகுதி இருக்கும். அதை சுற்றியுள்ள தோல் மெழுகு போன்று வழுவழுப்பாக இருக்கும். மாம்பழ தோல் பொதுவாக வெளிர் மஞ்சள், தங்க நிறம் அல்லது பச்சை மற்றும் இளஞ்சிவப்பு கலந்த நிறத்தில் இருக்கலாம்.[7] பழுத்த பழம் இனிய மணம் கொண்டிருக்கிறது.[7] மா மரங்கள் விதைகளிலிருந்து நேரடியாக வளரும்.[7]

வரலாறு தொகு

மாம்பழங்கள் வடகிழக்கு இந்தியப் பகுதியிலிருந்து தோன்றியதாக அறியப்படுகின்றது.[10][11] பரிணாம வளச்சியின் போது, மாம்பழ விதைகள் பெரும்பாலும் அழிந்து போன பண்டைய காலத்து பெரிய மிருகங்கள் மற்றும் பறவைகளால் பரப்பட்டிருக்கக்கூடும்.[12] இவற்றின் தோற்றத்திலிருந்து, மாம்பழங்கள் மரபணு ரீதியாக துணை வெப்பமண்டல இந்திய வகை மற்றும் வெப்பமண்டல தென்கிழக்கு ஆசிய வகை என இரண்டு வேறுபட்ட வகைகளாகப் பிரிந்தன:[10][11]

ஆசியாவிலிருந்து, ஒன்பதாம் மற்றும் பத்தாம் நூற்றாண்டுகளில் அரபு மற்றும் பாரசீக வர்த்தகர்களால் கிழக்கு ஆப்பிரிக்காவிற்கு மாம்பழங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.[13] காலனித்துவ ஆண்டுகளின் போது உலகெங்கிலும் உள்ள மற்ற பகுதிகளில் இது மேலும் பரவியது. போர்த்துகீசியப் பேரரசு மாம்பழத்தை இந்தியாவிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவுக்கு பரப்பியது. மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து, 16 முதல் 17 ஆம் நூற்றாண்டில் இதை பிரேசிலுக்கு அறிமுகப்படுத்தினர். பிரேசிலில் இருந்து, இது 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் பிற்பகுதி வரை வடக்கு நோக்கி கரீபியன் மற்றும் கிழக்கு மெக்சிகோ வரை பரவியது. எசுப்பானியப் பேரரசு பிலிப்பைன்ஸிலிருந்து மேற்கு மெக்ஸிகோவிற்கு மாம்பழங்களை அறிமுகப்படுத்தியது.[11][14]

மாம்பழ விளைச்சல் தொகு

மாம்பழ விளைச்சல் – 2022[15]
நாடு உற்பத்தி (மில்லியன் டன்கள்)
  இந்தியா 26.3
  இந்தோனேசியா 4.1
  சீனா 3.8
  பாக்கித்தான் 2.8
  மெக்சிக்கோ 2.5
  பிரேசில் 2.1
மொத்த உலக உற்பத்தி 59.2

பல நூற்றுக்கணக்கான மாம்பழ சாகுபடி வகைகள் உள்ளன. ஒரு காலநிலையில் காய்க்கும் மாம்பழ வகைகள் மற்ற பகுதிகளில் விளைச்சல் தராமல் போகலாம்.[16] பொதுவாக, பழுத்த மாம்பழங்கள் சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும். அதே சமயம் ஏற்றுமதி செய்யப்படும் பழங்கள் பெரும்பாலும் பச்சைத் தோல்களுடன் பழுக்காத நிலையில் பறிக்கப்படுகின்றன. சில சமயங்களில் பழுக்க வைக்கும் போது எத்திலீன் என்ற இரசாயனப் பொருள் பயன்படுத்தப்படுகின்றது.

மாம்பழம் இப்போது பெரும்பாலான உறைபனி இல்லாத வெப்பமண்டல மற்றும் வெப்பமான மிதவெப்ப மண்டல காலநிலைகளில் பயிரிடப்படுகிறது. இது தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா, அமெரிக்கா ஆகிய இடங்களில் பரவலாகப் பயிரிடப்படுகிறது.[17] மாம்பழங்கள் எசுப்பானியா மற்றும் ஆசுத்திரேலியா ஆகிய நாடுகளில் சிறிய அளவில் பயிரிடப்படுகின்றன.[18]

மாம்பழம்
உணவாற்றல்250 கிசூ (60 கலோரி)
15 கி
சீனி13.7 கி
நார்ப்பொருள்1.6 கி
0.38 கி
நிறைவுற்றது0.092 கி
ஒற்றைநிறைவுறாதது0.14 கி
பல்நிறைவுறாதது0.071 கி
0.051 கி
0.019கி
0.82 கி
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
உயிர்ச்சத்து ஏ
(7%)
54 மைகி
(6%)
640 மைகி
தயமின் (B1)
(2%)
0.028 மிகி
ரிபோஃபிளாவின் (B2)
(3%)
0.038 மிகி
நியாசின் (B3)
(4%)
0.669 மிகி
(4%)
0.197 மிகி
உயிர்ச்சத்து பி6
(9%)
0.119 மிகி
இலைக்காடி (B9)
(11%)
43 மைகி
கோலின்
(2%)
7.6 மிகி
உயிர்ச்சத்து சி
(44%)
36.4 மிகி
உயிர்ச்சத்து ஈ
(6%)
0.9 மிகி
உயிர்ச்சத்து கே
(4%)
4.2 மைகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(1%)
11 மிகி
இரும்பு
(1%)
0.16 மிகி
மக்னீசியம்
(3%)
10 மிகி
மாங்கனீசு
(3%)
0.063 மிகி
பாசுபரசு
(2%)
14 மிகி
பொட்டாசியம்
(4%)
168 மிகி
சோடியம்
(0%)
1 மிகி
துத்தநாகம்
(1%)
0.09 மிகி
நீர்83.5 கி

சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

பயன்பாடு தொகு

மாம்பழம் பெரும்பாலும், அப்படியே பழமாக உண்ணப்படுகிறது. தோலையும், விதையையும் நீக்கிய பிறகு, பழச்சதை துண்டு செய்யப்பட்டு உண்ணப்படுகிறது.[19] பழச்சதை நன்றாக கூழாக்கப்பட்டு, மாம்பழச்சாறாகவும் பருகப்படுகிறது. இந்தியாவின் சில இடங்களில், மாம்பழக்கூழில் சர்க்கரை சேர்த்து உலர்த்தப்பட்டு சிறு துண்டுகளாக மிட்டாய் போலவும் உண்ணப்படுகிறது. மாம்பழச்சாறு பாலுடன் கலந்தும் பருகப்படுகிறது அல்லது ஐஸ் கிரீம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில், மற்றொரு பிரபலமான பானம், மாம்பழத்தையும் தயிரையும் கலந்து செய்யப்படும் மாம்பழ லஸ்ஸி ஆகும்.

 
உப்பு, மிளகாய் சேர்க்கப்பட்ட மாங்காய்த் துண்டுகள்

மாங்காயும், பலவிதமாக உலகெங்கும் உண்ணப்படுகிறது. இந்தியாவில், மாங்காய் துண்டுகள் மிளகாய்த் தூள் அல்லது உப்பு சேர்த்து உண்ணப்படுகின்றன.[20][21] மேலும் மாங்காயைக் கொண்டு குழம்புகள், ஊறுகாய்கள், பச்சடிகள் ஆகியவையும் தயாரிக்கப்படுகின்றன. [22] இந்தோனேசியாவிலும், மலேசியாவிலும், மாங்காய்கள் ருஜக் அல்லது ரொஜக் எனப்படும் புளிப்பு பச்சடி செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. [23][24] பிலிப்பைன்ஸ் நாட்டில், மாங்காய்கள் 'பகூங்க்' எனப்படும் மீன் அல்லது இறால் கொண்டு தயாரிக்கபடும் கூழுடன் உண்ணப்படுகின்றன.[25][26] மாங்காய் கொண்டு தயாரிக்கப்படும் சட்னி இனிப்பாகவோ, புளிப்பாகவோ, காரமாகவோ பல நாடுகளில் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில், மாங்காயைக் காயவைத்து அரைத்து 'அம்ச்சூர்' என்ற சமையல் பொடியாக பயன்படுத்தப்படுகிறது.

ஊட்டச்சத்துகள் தொகு

மாம்பழச்சதையில் 15% சர்க்கரை, 1% புரதம், பெருமளவு உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி ஆகியவை உள்ளன.

நச்சுத்தன்மை தொகு

மாங்காயின் பால் சிலருக்கு தோலில் எரிச்சலும், கொப்புளங்களும் உண்டாக்கலாம்.[7][22][27] வசந்த காலத்தில் மா மரங்கள் பூக்கும் போது, ​​பூவின் மகரந்தம் காற்றில் பரவுவததால் சுவாசிப்பதில் சிரமம், கண்களில் அரிப்பு அல்லது முக வீக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தலாம்.[7]

மேற்கோள்கள் தொகு

 1. "Mango tree, national tree". 15 November 2010. பார்க்கப்பட்ட நாள் 16 November 2013.
 2. "Pakistani mango: The king of fruits". ArabNews. 13 August 2019.
 3. "Mangoes In The Philippines". CropLife.
 4. Fabricius, J. P. (1972). "J. P. Fabricius's Tamil and English dictionary. 4th ed., rev.and enl". dsal.uchicago.edu. பார்க்கப்பட்ட நாள் 2023-12-15.
 5. Prakash, Om (2005) (in en). A Tryst with Mango: Retrospect, Aspects, Prospects. APH Publishing. பக். xiv. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7648-912-6. https://books.google.com/books?id=UAc_Pp6ahK8C&dq=mango+tamil+manga&pg=PR14. 
 6. "Mango". California Rare Fruit Growers. Archived from the original on 19 October 2020. பார்க்கப்பட்ட நாள் 4 November 2015.
 7. 7.00 7.01 7.02 7.03 7.04 7.05 7.06 7.07 7.08 7.09 7.10 Morton, Julia Frances (1987). Mango. In: Fruits of Warm Climates. NewCROP, New Crop Resource Online Program, Center for New Crops & Plant Products, Purdue University. பக். 221–239. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-9610184-1-2. https://www.hort.purdue.edu/newcrop/morton/mango_ars.html. 
 8. "Mango (Mangifera indica) varieties". toptropicals.com. பார்க்கப்பட்ட நாள் 2 January 2014.
 9. Marcos-Filho, Julio. "Physiology of Recalcitrant Seeds" (PDF). Ohio State University. Archived from the original (PDF) on 24 January 2014. பார்க்கப்பட்ட நாள் 3 December 2014.
 10. 10.0 10.1 Kuhn, David N.; Bally, Ian S. E.; Dillon, Natalie L.; Innes, David; Groh, Amy M.; Rahaman, Jordon; Ophir, Ron; Cohen, Yuval et al. (20 April 2017). "Genetic Map of Mango: A Tool for Mango Breeding". Frontiers in Plant Science 8: 577. doi:10.3389/fpls.2017.00577. பப்மெட்:28473837. 
 11. 11.0 11.1 11.2 Warschefsky, Emily J.; Wettberg, Eric J. B. (June 2019). "Population genomic analysis of mango (Mangifera indica) suggests a complex history of domestication". New Phytologist 222 (4): 2023–2037. doi:10.1111/nph.15731. பப்மெட்:30730057. 
 12. Spengler, Robert N. (April 2020). "Anthropogenic Seed Dispersal: Rethinking the Origins of Plant Domestication" (in en). Trends in Plant Science 25 (4): 340–348. doi:10.1016/j.tplants.2020.01.005. பப்மெட்:32191870. 
 13. Watson, Andrew J. (1983). Agricultural innovation in the early Islamic world: the diffusion of crops and farming techniques, 700–1100. Cambridge, UK: Cambridge University Press. பக். 72–3. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-24711-5. 
 14. Gepts, P. (n.d.). "PLB143: Crop of the Day: Mango, Mangifera indica". The evolution of crop plants. Dept. of Plant Sciences, Sect. of Crop & Ecosystem Sciences, University of California. Archived from the original on 6 December 2013. பார்க்கப்பட்ட நாள் 8 October 2009.
 15. "FAOSTAT". www.fao.org. பார்க்கப்பட்ட நாள் 24 March 2024.
 16. Hunsberger, Adrian; Balerdi, Carlos (February 2012). "DOORYARD DISEASE CONTROL FOR MANGOS IN FLORIDA" (PDF). University of Florida/IFAS Miami-Dade County Extension. பார்க்கப்பட்ட நாள் 10 March 2023.
 17. Altendorf, S. (2019). Major Tropical Fruits: Market Review 2018. Rome: Food and Agriculture Organization of the United Nations. http://www.fao.org/3/ca5692en/ca5692en.pdf. 
 18. Litz, Richard E. (2009). The Mango: Botany, Production and Uses. Wallingford, UK: Cambridge University Press. பக். 606–627. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84593-489-7. https://archive.org/details/isbn_9781845934897. 
 19. Melissa Clark (1 April 2011). "For everything there is a season, even mangoes". The New York Times. https://www.nytimes.com/2011/04/06/dining/06appe.html. 
 20. (in en-US) The Complete Guide to Edible Wild Plants. New York: Skyhorse Publishing. 2009. பக். 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-60239-692-0. இணையக் கணினி நூலக மையம்:277203364. https://www.worldcat.org/oclc/277203364. 
 21. Valente, Anabela (2 April 2020). "Oh, the Fruits in Southeast Asia!". Diaries of Travel Inspirations. https://www.diariesofmagazine.com/fruits-southeast-asia/. 
 22. 22.0 22.1 Sareen, Richa; Shah, Ashok (2011). "Hypersensitivity manifestations to the fruit mango". Asia Pacific Allergy 1 (1): 43–9. doi:10.5415/apallergy.2011.1.1.43. பன்னாட்டுத் தர தொடர் எண்:2233-8276. பப்மெட்:22053296. 
 23. Pedrosa, Kannalyn Joy (25 February 2020). "Green Mangoes and Shrimp Paste (The mouth-watering food tandem)". The VA Collections. Archived from the original on 9 May 2021. பார்க்கப்பட்ட நாள் 9 May 2021.
 24. "Green Mango & Bagoong". Market Manila. 5 October 2008. பார்க்கப்பட்ட நாள் 9 May 2021.
 25. Tan, Joanne Catherine (5 June 2015). "Top 12 Cakes To Try In The Philippines". When in Manila. பார்க்கப்பட்ட நாள் 15 May 2019.
 26. Maryanne (15 June 2017). "Mango Royale (Mango Icebox Cake)". The Little Epicurean. பார்க்கப்பட்ட நாள் 2 December 2018.
 27. "Anaphylactic reaction after eating a mango". British Medical Journal 297 (6664): 1639–40. 1988. doi:10.1136/bmj.297.6664.1639. பப்மெட்:3147776. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாம்பழம்&oldid=3937290" இலிருந்து மீள்விக்கப்பட்டது