மாங்கனீசு (ஆங்கிலம்: Manganese, (IPA: /ˈmæŋgəniːz/) என்பது Mn என்னும் வேதியியல் குறியீடு கொண்ட பிறழ்வரிசை மாழை வகையைச் சேர்ந்த ஒரு தனிமம். இதன் அணுவெண் 25. இத்தனிமம் பெரும்பாலும் இரும்பு உள்ள கனிமங்களோடு சேர்ந்து இயற்கையில் கிடைப்பது. இம் மாழை பார்ப்பதற்கு வெண் சாம்பல் நிறத்தில், இரும்பு போலத் தோற்றம் அளிக்கும் கெட்டியான பொருள். இம் மாழை பெரும்பாலும் இரும்பு போன்ற மாழைகளுடன் சேர்ந்து பல்வேறு எஃகு, மற்றும் மாழைக்கலவைகளாக தொழிலகங்களில் பயன்படுகின்றது. எஃகு உற்பத்தியில் ஆக்சிசனை நீக்குவதற்கும் கந்தகத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. மாங்கனீசு மின்மவணுக்கள் (ions) பல்வேறு நிறங்கள் ஊட்டவல்லன, எனவே அவை நிறமிகளாகப் பயன்படுகின்றன. மாங்கனீசு (II) மின்மவணுக்கள் பல நொதியங்களில் கூட்டுடன்கரணிகளாகப் (cofactors) பயன்படுவதால், இவை அறியப்பட்ட எல்லா உயிரினங்களிலும் அடிப்படைத்தேவையான இம்மியப் பொருளாக (மிகச்சிறிதே காணப்படும்/தேவைப்படும் பொருளாக (trace elements)) உள்ளது.

மாங்கனீசு
25Mn
-

Mn

Tc
குரோமியம்மாங்கனீசுஇரும்பு
தோற்றம்
வெள்ளிபோன்ற உலோகம்
A rough fragment of lustrous silvery metal
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் மாங்கனீசு, Mn, 25
உச்சரிப்பு /ˈmæŋɡənz/ MANG-gən-neez
தனிம வகை பிறழ்வரிசை மாழை
நெடுங்குழு, கிடை வரிசை, குழு 74, d
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
54.938045(5)
இலத்திரன் அமைப்பு [Ar] 4s2 3d5
2, 8, 13, 2
Electron shells of manganese (2, 8, 13, 2)
Electron shells of manganese (2, 8, 13, 2)
இயற்பியற் பண்புகள்
நிலை திண்மம்
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) 7.21 g·cm−3
திரவத்தின் அடர்த்தி உ.நி.யில் 5.95 g·cm−3
உருகுநிலை 1519 K, 1246 °C, 2275 °F
கொதிநிலை 2334 K, 2061 °C, 3742 °F
உருகலின் வெப்ப ஆற்றல் 12.91 கி.யூல்·மோல்−1
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் 221 கி.யூல்·மோல்−1
வெப்பக் கொண்மை 26.32 யூல்.மோல்−1·K−1
ஆவி அழுத்தம்
P (Pa) 1 10 100 1 k 10 k 100 k
at T (K) 1228 1347 1493 1691 1955 2333
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் 7, 6, 5, 4, 3, 2, 1, -1, -2, -3
(ஆக்சைடுகள்:
காடி, கார, (அல்)
ஈரியல்பு
ஆக்சைடாகும் நிலையைப்
பொறுத்தது
)
மின்னெதிர்த்தன்மை 1.55 (பாலிங் அளவையில்)
மின்மமாக்கும் ஆற்றல்
(மேலும்)
1வது: 717.3 kJ·mol−1
2வது: 1509.0 kJ·mol−1
3வது: 3248 kJ·mol−1
அணு ஆரம் 127 பிமீ
பங்கீட்டு ஆரை 139±5 (low spin), 161±8 (high spin) pm
பிற பண்புகள்
படிக அமைப்பு body-centered cubic
மாங்கனீசு has a body-centered cubic crystal structure
காந்த சீரமைவு paramagnetic
மின்கடத்துதிறன் (20 °C) 1.44 µΩ·m
வெப்ப கடத்துத் திறன் 7.81 W·m−1·K−1
வெப்ப விரிவு (25 °C) 21.7 µm·m−1·K−1
ஒலியின் வேகம் (மெல்லிய கம்பி) (20 °C) 5150 மீ.செ−1
யங் தகைமை 198 GPa
பரும தகைமை 120 GPa
மோவின் கெட்டிமை
(Mohs hardness)
6.0
பிரிநெல் கெட்டிமை 196 MPa
CAS எண் 7439-96-5
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: மாங்கனீசு இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
52Mn செயற்கை 5.591 d ε - 52Cr
β+ 0.575 52Cr
γ 0.7, 0.9, 1.4 -
53Mn trace 3.74 ×106 y ε - 53Cr
54Mn செயற்கை 312.3 d ε 1.377 54Cr
γ 0.834 -
55Mn 100% Mn ஆனது 30 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
·சா

குறிப்பிடத்தக்க வேதியியல் பண்புகள் தொகு

 
மான்கனீசு

மாங்கனீசு இரும்பைப் போன்ற தோற்றம் அளிக்கும் வெண்-சாம்பல் நிற மாழை. இது கெட்டியான ஆனால் உடையத்தக்க (brittle) (குறைந்த தகடாக்குந்தன்மை கொண்ட) மாழை. எளிதாக ஆக்சைடாக வல்லது. மாங்கனீசு மாழையும் அதன் மின்மவணுக்களும் (ions) நிலைக்கா மென்காந்தத் தன்மை (paramagnetic) கொண்டது. அதாவது புறக் காந்தப்புலத்தில் இருக்கும் பொழுதுமட்டும் சிறிதளவு காந்தத்தன்மை கொள்ளும் தன்மை உடையது. புறக் காந்தப்புலம் நீங்கியவுடன் மாங்கனீசு நிலையான காந்தத்தன்மை ஏதும் கொள்ளாத பொருள்.

மிகவும் பரவலாகக் காணப்படும் மாங்கனீசின் ஆக்சைடு நிலைகள் 2, +3, +4, +6 , +7, என்பதாகும். ஆனால் +1 முதல் +7 வரையிலான ஆக்சைடு நிலைகளும் அறியப்பட்டுள்ளது. Mn2+ என்னும் மின்மவணு மக்னீசிய மின்மவணுவாகிய Mg2+ உடன் உயிரியல் முறை இயக்கங்களில போட்டியிடுகின்றது. ஆக்சைடு நிலை +7ல் உள்ள மாங்கனீசு வலிமையான ஆக்சைடாக்கியாகும்.

பயன்பாடுகள் தொகு

மாழைக்கலவை தொகு

மாங்கனீசு, இரும்பு எஃகு உற்பத்தியில் அடிப்படையாகத் தேவைப்படும் ஒரு பொருள். எஃகு உற்பத்தியில் ஆக்சிசனை நீக்கவும், கந்தகத்தை கட்டுப்படுத்தவும் மாங்கனீசு பயன்படுகின்றது. மாங்கனீசு உற்பத்தியில் 85%-90% பங்கு இரும்பு-எஃகு உற்பத்திக்கே செல்வாகின்றது. பிற பயன்பாடுகளில் விலைக் குறந்த துருப்பிடிக்கா எஃகுக் கலவைகள் செய்யவும் சிலவகையான அலுமினியக் கலவைகள் செய்யவும் பயன்படுகின்றது.

இம் மாழை மிகச் சில நேரங்களில் நாணயம் செய்யவும் பயன்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் 1942-1945 காலப்பகுதியில் செய்ய்ப்பட்ட "போர்க்கால" 5 செண்ட் ("நிக்கல்") நாணயத்திலும், 2000 ஆண்டுக்குப் பிறகு ஐக்கிய அமெரிக்க தாலர் நாணயத்திலும் மாங்கனீசு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் 1 மற்றும் 2 யூரோக்களில் பயன்படுத்தப்படுகின்றது.

சேர்மங்கள் தொகு

சில மாங்கனீசுச் சேர்மங்கள் ஊர்திகளில் பயன்படுத்தப்படும் எரியெண்ணயில் (பெட்ரோல்/காசோலின்) சேர்க்கப்படுகின்றது. இதனால் உள் எரி பொறிகளில் பயன்படும் எரியெண்ணெயின் ஆக்டேன் மதிப்பு கூடுகின்றது(சீராக முழுதுமாக எண்ணெய் எரிந்து உந்தம் தருகின்றது). கரிம வேதியியலில் பென்சைலிக்குச் சாராயம் (benzylic alcohols) முதலியவற்றை ஆக்சைடாக்க மாங்கனீசு பயன்படுகின்றது. கண்ணாடி செய்யும் பொழுது ஏற்படும் சிறிதளவு இரும்பு இருப்பதால் பச்சை நிறத்தை தோன்றுவதை நீக்க மாங்கனீசு பயன்படுகின்றது. மாங்கனீசின் அளவு கூடினால், இளம் சென்னீலம் (சிவப்பு-நீலம்) நிறம் இளம் கத்தரிப்பூ நிறம் (அமெத்திசிட்டு-நிறம் amethyst-colour) தரவல்லது. மாங்கனீசு ஆக்சைடு பழுப்பு நிறமியாகவும் பயன்படுகின்றது (சில வகையான களிமண்ணின் பழுப்பு நிறம் இதனால்தான்). இந்த பழுப்பு நிறமிகள் நீர்மநிறப் பூச்சுகளில் (பெயிண்ட்டுகளில்) பயன்படுகின்றது. பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு (Potassium permanganate) என்னும் வேதியியல் பொருள் திறமான ஆக்சைடாக்கி. இதனை வேதியியல், மருத்துவம் ஆகிய துறைகளில் நோய்த்தடுப்பு தூய்மைப்படுத்திகளாகப் பயன்படுத்துகின்றனர். மாங்கனீசு பாசுபேட்டாக்குதல் என்னும் முறை இரும்பு-எஃகுப் பொருட்களை துருப்பிடிக்காமல் இருக்கச் செய்யும் ஒரு முறையாகும்.

மாங்கனீசு (IV) ஆக்சைடு (மாங்கனீசு ஆக்சைடு) உலர்வகை மின்கலத்தில் பயன்படுத்தப்பட்டது. இதுவே கை மின்விளக்குகளில் (flashlight) பயன்படும் கரிம-துத்தநாக வகை மின்கலங்களை உடைத்து பிரித்து பார்த்தால் கறுப்பாக தெரியும் பொருள். இன்று இது கார மின்கலங்களில் வேறு வகையான மின்கரைசல்கள் வழி வேதியியல் வினைப்படும் முறையில் பயன்படுகின்றது.

வரலாறு தொகு

மாங்கனீசு என்னும் சொல்லின் பெயர் வரலாறு சற்று குழப்பம் தருவது. பழங்காலத்தில் இன்றைய கிரீசு நாட்டில் உள்ள மக்னேசியா என்னும் இடத்தில் இருந்து இரண்டு கரிய நிற கனிமங்கள் கிடைத்தன. இரண்டையுமே மக்னேசு (magnes) என்றே அழைத்தனர். ஆனால் இவை இரண்டில் ஒன்று ஆண்பால் என்றும் ஒன்று பெண்பால் வகை என்றும் நினைத்தனர். ஆண்பால் வகையான மக்னேசு இரும்பை ஈர்த்தது (இதுதான் இன்று உலோடுசுட்டோன் (loadstone) எனப்படும் காந்தக்கல் அல்லது மாக்னட்டைட்டு (magnetite) ). பெண்பால் மக்னேசு கனிமம் இரும்பை ஈர்க்கவில்லை, ஆனால் கண்ணாடிகளில் (இரும்பு இருந்ததால்) தோன்றும் பச்சை நிறத்தை நீக்கப் பயன்பட்டது. இந்தப் பெண்பால் மக்னேசு பின்னர் மக்னேசியா (magnesia) என்று அழைக்கப்பட்டது. இதுவே தற்காலத்தில் பைரோலூசைட்டு (pyrolusite) என்று அழைக்கப்படும் மாங்கனீசு ஆக்சைடு உள்ள கனிமம். இக்கனிமம் காந்தத்தன்மை ஏதும் இல்லாதது, ஆனால் அதில் உள்ள மாங்கனீசு நிலைக்காத மென்காந்தத் தன்மை உடையது. 16 ஆவது நூற்றாண்டில் கண்ணாடி வினைஞர்கள் இதனை மாங்கனேசம் (manganesum) என்று அழைத்தனர். பின்னர் மெதுவாக கண்ணாடி வினைஞர்களும், ஆல்கெமிசிட்டு எனப்பட்ட முற்கால வேதியியலாளர்களும் இரு வேறு பொருள்களையும் வேறுபடுத்தினர். ஒன்றை கறுப்பு மக்னேசியா (மக்னேசியா நேக்ரா magnesia negra) என்றும், மக்னேசியா என்னும் அதே இடத்தில் இருந்து பெற்ற மூன்றாவதொரு கனிமத்தை வெள்ளை மக்னேசியா (மக்னேசியா ஆல்பா, magnesia alba) என்றும் அழைத்த்னர். இந்த வெள்ளை மக்னேசியாவும் கண்ணாடி செய்வதில் பயன்பட்டது. மெர்க்காட்டி என்பார் கறுப்பு மக்னேசியாவை மாங்கனேசா (Manganesa, ) என்று அழைத்தார். இதிலிருந்து மாங்கனீசு பிரித்தெடுக்கப்பட்டது. (இடாய்ச்சு (செர்மன்) மொழியில் மாங்கன் (Mangan) ). பின்னர் மக்னேசியா என்னும் பெயர் மாங்கனீசு ஆக்சைடு கொண்ட வெள்ளைக் கனிமத்தைக் குறிக்கப் பயன்பட்டது. மக்னீசிசியம் என்னும் தனிமத்தின் பெயர் பின்னர் அது பிரித்தெடுக்கப்பட்டபோது ஏற்பட்ட்டது [1]

மாங்கனீசுச் சேர்மங்கள் 17,000 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்காலங்களிலேயே பயன்பட்டிருந்தது என்பதை நிறம் தீட்டப்பட்ட பொருள்களில் நிறமிகளாக இருந்துள்ளதில் இருந்து அறிய முடிகின்றது. எகிப்தியரும் உரோமானியரும் கண்ணாடி செய்யும் தொழிலில் குறிப்பிட்ட சில நிறங்கள் ஊட்டுவதற்கும், சில நிறங்களை நீக்குவதற்கும் பயன்படுத்தினர். எசுப்பார்ட்டன் என்போர் பயன்படுத்திய படைக்கருவிகளின் மிகு வலிமையும், தற்செயலாய்ச் சேர்ந்த இந்த மாங்கனீசு-இரும்புக் கலவைகளால் இருக்கும் என்று கருதுகின்றனர்.

17 ஆவது நூற்றாண்டில் யோகான் கிளவுபர் (Johann Glauber) என்னும் இடாய்ச்சுலாந்து (செருமானிய) வேதியியலாளர் முதன்முதலாக பெர்மாங்கனேட்டு என்னும் சேர்மத்தை உருவாக்கினார் (சிலர் இதனை 1770ல் இக்னைட்டெசு கைம் என்பார் கண்டுபிடித்தார் என்பர்). 18 ஆவது நூற்றாண்டில் மாங்கனீசு ஆக்சைடு (மாங்கனீசு (IV) ஆக்சைடு), குளோரின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டது. (ஐதரோ குளோரிக்குக் காடியுடன் மாங்கனீசு ஆக்சைடைக் கலப்பதால் தோன்றுவது)

சுவீடன் நாட்டு வேதியியலாளர் கார்ல் வில்லெம் சீல் (Carl Wilhelm Scheele) என்பார்தான் முதன்முதலாக மாங்கனீசு என்பது ஒரு தனிமம் என்று உணர்தார், ஆனால் 1774ல் அவரின் உடன்வேதியலாளர் யோகான் காட்லீபுக் கான் (Johan Gottlieb Gahn) என்பார் மாங்கனீசு தனிமத்தை, மாங்கனீசு டை-ஆக்சைடை கரிமத்தால் ஆக்சிசனை நீக்கிப் பிரித்தெடுத்தார்.

19 ஆம் ஆண்டு துவக்கத்தில் எஃகு உருவாக்குவதில் மாங்கனீசின் பயன்பாடு பற்றி அறிவியலாலர்கள் அறியத் தொடங்கினர். இது பற்றிய புதுமுறைக்கான காப்புரிமங்கள் அப்பொழுதே வழங்கப்பட்டது. 1816ல், இரும்புடன் சிறிதளவு மாங்கனீசு கலந்தால் இரும்பானது வளையும் தன்மையுடன் வலிமை மிக்கதாக இருபதைக் கண்டறிந்தனர். 1837ல் பிரித்தானிய கல்வியாளர், சேம்சுக் கூப்பர் (James Couper]) என்பார், மாங்கனீசைத் தோண்டி எடுக்கும் சுரங்கங்களில் அதிக அளவு மாங்கனீசுடன் நேரடியாக வேலை செய்யும்பொழுது தொடர்பு இருப்பதையும் அவர்களில் சிலருக்கு ஒருவகையான பார்க்கின்சன் நோய் வருவதையும் கண்டறிந்தார்.

1912,ல் கைத்துப்பாக்கி முதலிய பொருட்கள் துருப்பிடிக்காமல் இருக்கவும் தேய்மானத்தைக் குறைக்கவும் மின்வேதியியல் முறைப்படி ஒருவகையான பூச்சு கொடுப்பதைப்பற்றிய மாங்கனீசு பாசுபேட்டாக்குதல் என்னும் முறைக்கான காப்புரிமம் ஒன்று வழங்கப்பட்டது. அதிலிருந்து இம்முறை பரவலாக வரவேற்பு பெற்றுள்ளது.

20 ஆம் நூற்றாண்டில் உலர் மின்கலங்களிலும், இருவகையான (சாதாரண கரிம-துத்தநாக மின்கல வகை, கார மின்கல வகை), மின்கலங்களிலும், எதிர்மின்மங்களை ஈர்க்கும் அல்லது நேர்மின்மங்களை உமிழும் (நேர்மின்மங்களின் வாய்) காத்தோடு (= நேர்மவாய்) ஆக மாங்கனீசு-டை-ஆக்சைடு பெருமளவில் பயன்படுகின்றது.

உயிரியலில் மாங்கனீசின் பங்கு தொகு

மாங்கனீசு உயிரினங்கள் பலவற்றிலும் இன்றியமையாது இருக்க வேண்டிய இணுக்கூண்டு (மிகச் சிறிய அளவு) இம்மிய ஊட்டப்பொருள்.

பரந்த்துபட்ட பல வகையான நொதியங்களில் மாங்கனீசு இணைகாரணிகளாக (cofactors) உள்ளன. அவற்றுள் ஆக்சிடோரிடக்டரேசுகள் (oxidoreductases), திரான்சுவெரேசுகள் (transferases), ஐதரோலேசுகள் (hydrolases), லையேசுகள் (lyases), ஐசோமெரேசுகள் (isomerases), இலிகேசுகள் (ligases) இலெக்டின்சுகள் (lectins), இன்ட்டெகிரின்சுகள் (integrins) ஆகியவற்றை சுட்டலாம்.

மாங்கனீசு உள்ள பாலிப்பெப்டைடுகளில் (polypeptides) நன்கு அறிந்தவை ஆர்கினேசு (arginase), டிப்தீரியா நச்சுனி (diphtheria toxin), யூக்கார்யோடிக் மைட்டோகோன்றியாவில் உள்ள நொதிமத்திலும் பிற பாக்டீரியாவிலும் உள்ள மாங்கனீசு இருக்கும் டைமியூட்டேசு சூப்பராக்சைடு (superoxide dismutase, (Mn-SOD)) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இந்த மாங்-சூ-ஆ-டை (Mn-SOD) நொதியம் ஏறத்தாழ எல்லா உயிரினங்களிலும் உள்ள மிகப்பழைய பொருள். ஏனெனில் இது ஆக்சிசன் சூழலில் வாழும் எல்லா உயிரினன்ங்களும் ஈரணு ஆக்சிசனின் ஒரு எதிர்மின்னி இழப்பால் ஏற்படும் ஏற்படும் சுப்பராக்ஃசைடின் நச்சுத் தன்மையை எதிர்கொள்ள உதவுகின்றது.

கனிமங்களில் மாங்கனீசு தொகு

 
மாங்கனீசு கனிமம்

மாங்கனீசு பெரும்பாலும் பைரொலூசைட்டாகக் (pyrolusite) (MnO2) கிடைக்கின்றது. சிறுபான்மை ரோடோகுரோசைட்டு (rhodochrosite) (MnCO3) ஆகக் கிடைக்கின்றது. நிலத்தடியில் உள்ள இருப்பு அதிகம், ஆனால் அதன் பரவல் சீராக இல்லை. உலகின் கிடப்பிருப்பு மாங்கனீசில் பெரும்பான்மையான அளவு (80%) தென் ஆப்பிரிக்காவிலும் உக்ரைனிலும் உள்ளது. மற்ற குறிப்பிடத்தக்க இருப்புகள் சீனா, ஆஸ்திரேலியா, பிரேசில்,காபோன், இந்தியா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் உள்ளன.

ஐக்கிய அமெரிக்க இறக்குமதி (1998-2001): மாங்கனீசுக் கனிமங்கள்: காபான், 70%; தென் ஆப்பிரிக்கா 10%; ஆத்திரேலியா, 9%; மெக்சிகோ, 5%; மற்றநாடுகள், 6%. இரும்பு-மாங்கனீசு (Ferromanganese): தென் ஆப்பிரிக்கா, 47%; பிரான்ஸ், 22%; மெக்சிகோ, 8%; ஆத்திரேலியா, 8%; மற்ற இடங்கள், 15%. இறக்குமதியாகும் கனிமங்களில் உள்ள மாங்கனீசு: தென் ஆப்பிரிக்கா, 31%; காபான், 21%; ஆத்திரேலியா, 13%; மெக்சிகோ, 8%; மற்ற இடங்கள், 27%.

மாங்கனீசு ஆப்பிரிக்காவில் பர்க்கினா ஃபாசோ என்னும் நாட்டிலுள்ள சுரங்கத்திலும் காபான் (Gabon) நாட்டில் உள்ள சுரங்கத்தில் இருந்தும் எடுக்கப்படுகின்றது.

கடலுக்கடியில் மாங்கனீசு உள்ள மாங்கனீசு கட்டிகளில் பெரிய அளவில் மாங்கனீசு உள்ளதென்று அறிந்துள்ளனர். ஆனால் செலவு-குறைவான முறைகளில் அவற்றை சேகரித்து அதிலிருந்து மாங்கனீசை எடுப்பதை 1970-களில் கைவிட்டனர்.

சேர்மங்கள் தொகு

 
ஆக்சைடாக்கியாகிய பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு (இதனை காண்டியின் படிகம் (Condy's crystals) என்றும் கூறுவர்.

பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு என்னும் மாங்கனீசுச் சேர்மம் ஒரு நல்ல ஆக்சைடாக்கி இதனை காண்டியின் படிகம் (Condy's crystals) என்றும் கூறுவர். இது வேதிச் செய்முறைச் சாலைகளிலும், தொழிலகங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது.

நிலைப்புத் தன்மை அதிகம் கொண்ட மாங்கனீசின் ஆக்சைடு நிலை +2. பல மாங்க்னீசு (II) சேர்மங்கள் அறியபப்டுகின்றன, எடுத்துக்காட்டாக மாங்கீசு (II) சல்பேட்டு (MnSO4), மாங்கீசு (II) குளோரைடு (MnCl2). இந்த ஆக்சைடு நிலையை கனிம ரோடொகுரோசைட்டிலும் (rhodochrosite) (மாங்கனீசு(II) கார்போனேட்டு). ஆக்சைடு நிலை +3 என்பதும் அறியப்பட்டுளது, எடுத்துக்காட்டாக மாங்கனீசு (III) அசிட்டேட்டு, ஆனால் இவை மிகவும் வலிமையான ஆக்சைடாக்கி (ரெடாக்ஃசு (Redox)).

மாங்கனீசு பற்றிய முன்காப்புக் குறிப்புகள் தொகு

மாங்கனீசுச் சேர்மங்கள் இரும்பு, நிக்கல், செப்பு போன்ற மற்ற மாழைகளை ஒப்பிட்டுப் பார்கையில் பெரும்பாலும் அதிகம் நச்சுத்தன்மை கொண்டதல்ல. என்றாலும் மாங்கனீசு கலந்த தூசி, புகை, வளிமங்கள் போன்றவற்றுடன் அதிகம் நேரடியாக சிறிது நேரமே தாக்குற்றாலும் கெடுதல். அதிக அளவாக ஒரு கன மீட்டர் (பரும மீட்டர்) இடத்தில் 5 மில்லி கிராம் (5 mg/m3) மட்டுமே இருக்கலாம். குழந்தைகளுக்குக் குறிப்பாக கெடுதல் வாய்ப்பு அதிகம், ஏனென்றால் CH-7 ஈர்ப்பிகளுடன் (CH-7 receptors.) இணையும் தன்மை அதிகம். அதிகம் மாங்கனீசுத் தாக்கம் இருந்தால் உடல் புற உறுப்பகளின் அசைவைக் கட்டுறுத்தும் திறமைகளும், வேறுபாடுகளை உணரும் திறங்களும் பழுதடைவதாகக் கண்டுள்ளனர்.

காடிய பெர்மாங்கனேட்டுக் கரைசல்கள் ஏறத்தாழ எல்லா கரிமவேதியப் பொருள்களையும் ஆக்சைடாக்கும் வல்லமை கொண்டது. ஆக்சைடாக்கும் நிகழ்ச்சியில் வெளிப்படும் வெப்பத்தால் சில கரிமவேதியியற் பொருள்கள் தீப்ப்பற்றவும் கூடும்.

2005 ஆம் ஆண்டு வெளியிட்ட ஓர் ஆய்வின் ப,டி மாங்கனீசை உள்மூச்சால் உள்வாங்கும்பொழுது நரம்பு மண்டலத்தின் நடுத் தொகுதியில் நச்சுத்தன்மை எலிகளுக்கு ஏற்பட வாய்ப்புண்டு என்று அறிகின்றோம்[1]. குளிக்கையில் நீர்த்தூவியின் வழி வரும் நீரில் இயற்கையில் காணப்படும் மாங்கனீசால் நெடுநாளைய தாக்கத்தால் 8.7 அமெரிக்கர்களுக்கு தீவாய்ப்பு ஏற்படக்கூடும் என்னும் ஒரு கருதுகோள் உள்ளது

பார்க்கின்சன் நடுக்குவாதம் போன்ற ஒரு நரம்பிய சீர்குலைவு "மாங்கனிசம்" ("Manganism") என்னும் பெயரில் அறியபப்டுகின்றது. இது 19-ஆம் நூற்றாண்டில் மாங்கனீசச் சுரங்ங்களில் பணியாற்றிய பனியாட்களுக்கும் மாங்கனீச உருக்காலைகளில் பணியாற்றியவர்களுக்கும் இருந்ததாகக் கருதப்பட்டது. பற்றவைப்புத் தொழில் செய்வோருக்கும் இப்படியான மாங்கனீசத்ட் தாக்கம் இருக்கக்கூடும் என்று நினைக்கின்றார்கள். பாங்கனீசத்தோடு தொடர்பு ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் பரிந்துரைச் சட்டங்களும் உண்டு .[2]

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் குறிப்புகள் தொகு

  1. http://dx.doi.org/10.1016/j.mehy.2005.01.043
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-09-29. பார்க்கப்பட்ட நாள் 2007-09-23.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Manganese
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாங்கனீசு&oldid=3590943" இலிருந்து மீள்விக்கப்பட்டது