யாழ்ப்பாணத்துச் சாதியமைப்பு

உயர் சாதியிணர் சிறுப்பிட்டியில் பரவலாக இருந்ததாக செவி வழி கதைகள் கூறுகின்றது

இலங்கையின் வட பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் குடாநாடு ஒப்பீட்டளவில் மிகவும் சிறியது. எனினும் மக்கள் செறிந்து வாழும் ஒரு பகுதியாக இது உள்ளது. இங்கே வாழ்பவர்கள் 90 விழுக்காட்டுக்கு மேற்பட்டவர்கள் தமிழர்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் சைவ சமயத்தைக் கடைப்பிடிப்பவர்கள். இவர்களுக்குத் தென்னிந்தியத் தமிழர்களுடன் விரிவான பண்பாட்டுத் தொடர்புகள் பல நூற்றாண்டுகளாகவே இருந்து வருகின்றன. அத்துடன் இலங்கையிலும் அந்நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணம் முழுவதிலும் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆனாலும் யாழ்ப்பாணத்துச் சாதியமைப்பு, தமிழ் நாட்டிலும், இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் உள்ள சாதியமைப்புக்களிலிருந்து வேறுபட்டுத் தனித்துவமான பண்புகளைக் கொண்டு விளங்குகிறது.

மேலோட்டமாகப் பார்க்கும்போது யாழ்ப்பாணத்தின் சாதியமைப்பின் உருவாக்கத்திலும், அதனைக் கட்டிக் காப்பதிலும் இந்து சமயக் கோட்பாடுகளின் தாக்கம் முன்னணியில் இருந்தபோதும், அதன் முக்கிய வெளிப்பாடுகளில் ஒன்றான பிராமண மேலாதிக்க நிலை யாழ்ப்பாணத்தில் முற்றாகவே இல்லாமல் இருப்பது கவனிக்கத் தக்கது. மதரீதியான பணிகளை செய்வதனால் பிராமணர்கள் உயர்வாகக் கருதப்பட்டாலும் சாதிய அமைப்பில் அவர்கள் நிலவுடமை சாதிகளில் தங்கி வாழ்பவர்களாகவே இருப்பதால் சாதியப்படி நிலையில் அவர்களுக்கு உயர்வுநிலை இல்லை. அதிகாரப் படிநிலையில் வெள்ளாளர் (வேளாளர்) சமூகத்தினரே உயர் நிலையில் உள்ளார்கள். யாழ்ப்பாண வரலாறு கூறும் யாழ்ப்பாண வைபவமாலை என்னும் நூலின் படி, யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆரம்ப காலத்தில் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டு அடிமை குடிமைகளுடன் குடியேற்றப்பட்ட பிரபுக்களுள் மிகப் பெரும்பாலானோர் வெள்ளாளர்களே என்பதைக் காண முடியும். இது வெள்ளாளர்களின் உயர் நிலைக்குக் காரணம் அவர்களுடைய ஆரம்பகால அரசியல் பலமே என்பதைக் காட்டுகின்றது.

யாழ்ப்பாணத்துச் சாதிகள்

தொகு

யாழ்ப்பாண வைபவமாலை பல்வேறு பட்ட சாதியினரின் யாழ்ப்பாணக் குடியேற்றம் பற்றிக் கூறுகின்றது. பிராமணர், வெள்ளாளர், நளவர், பள்ளர், சான்றார், கோவியர், சிவியார் ஆகிய சாதிகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. ஒல்லாந்தர் ஆட்சியின்போது 1697 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட அறிக்கையொன்று யாழ்ப்பாணக் குடிகளிடையே 40 சாதிப்பிரிவுகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருப்பது பற்றி க. வேலுப்பிள்ளை [1] குறிப்பிட்டுள்ளார். ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் [2] என்னும் நூலில், ஒல்லாந்தர் ஆட்சியின் இறுதிப்பகுதியில் 1790 ஆண்டில் தலைவரி வசூலிப்பதற்காக எடுத்த சாதிவாரியான கணக்கெடுப்புப் பட்டியலொன்று தரப்பட்டுள்ளது இதில் 58 சாதிப் பிரிவுகளும் அச் சாதிகளைச் சேர்ந்த 16 முதல் 70 வயதுக்குட்பட்ட ஆண்களின் தொகையும் கொடுக்கப்பட்டுள்ளன.[சான்று தேவை]

- சாதி தொ. - சாதி தொ. - சாதி தொ.
1 வேளாளர் 15,170 21 கயிற்றுச்சான்றார் 36 41 சாயவேர்ப்பள்ளர் 53
2 பரதேசிகள் 1,949 22 கரையார் 3,009 42 தம்பேறுநளவர் 66
3 மடைப்பள்ளியார் 5,528 23 முக்கியர் 1,159 43 தம்பேறு பள்ளர் 91
4 மலையகத்தர் 1,240 24 திமிலர் 576 44 குளிகாரப் பறையர் 7
5 செட்டிகள் 1.667 25 கோட்டைவாயில் நளவர் 265 45 பறங்கி அடிமை 18
6 பிராமணர் 639 26 கோட்டைவாயிற் பள்ளர் 20 46 கொல்லர் 407
7 சோனகர் 492 27 மறவர் 49 47 தவசிகள் 192
8 தனக்காரர் 388 28 பாணர் 7 48 அம்பட்டர் 510
9 குறவர் 187 29 வேட்டைக்காரர் 6 49 கோவியர் 1429
10 பரம்பர் 8 30 வலையர் 7 50 தமிழ்வடசிறை 289
11 சிவியார் 660 31 வர்ணகாரா 27 51 நளவர் 2137
12 பள்ளிவிலி 196 32 வண்ணார் 857 52 பள்ளர் 1,359
13 செம்படவர் 14 33 தந்தகாரர் 21 53 பறையர் 767
14 கடையர் 351 34 சாயக்காரர் 118 54 துரும்பர் 61
15 பரவர் 34 35 தச்சர் 536 55 எண்ணெய்வணிகர் 2
16 ஓடாவி (சிங்கள) 1 36 சேணியர் 100 56 சாயவேர்ப் பள்ளர் 367
17 சான்றார் 137 37 கைக்கோளர் 379 57 சாயவேர்ப் பறையர் 208
18 கன்னார் 63 38 குயவர் 186 58 அர்ச்கோயில்பறையர் 3
19 தட்டார் 337 39 கடையற்காரர் 16 - - -
20 யானைக்காரச் சான்றார் 70 40 குடிப்பள்ளர் 115 - - -

வேறுசில, தொழில் வேறுபாட்டால் உருவான சாதிகளின் உட் பிரிவுகளாக இருக்கின்றன. இதிலுள்ள பெரும்பாலான சாதிகள் தமிழ் நாட்டுச் சாதிகளை ஒத்தவை. நளவர், கோவியர் ஆகிய இரு சாதிப்பிரிவுகள் மட்டும் யாழ்ப்பாணத்தில் மட்டுமே காணப்படுபவை.

சாதிகளும் தொழில்களும்

தொகு

முக்கியமான சாதிகள் அனைத்தும் தொழில் அடிப்படையில் அமைந்தவை. சில சாதியினர் தொன்று தொட்டு ஒரே தொழிலையே செய்துவர, வேறு சில சாதிகள் கால ஓட்டத்தில் தொழில்களை மாற்றிக்கொண்டு வந்ததையும் அறிய முடிகின்றது. ஆரம்ப காலத்தில் சான்றார் என்னும் சாதியினரே பனைமரம் ஏறும் தொழிலை மேற்கொண்டிருந்தனர். பின்னர் நளவர் எனும் சாதியாரும், சிலவிடங்களில் விவசாயத் தொழில் செய்த பள்ளரும் இத்தொழிலில் ஈடுபடவே, சான்றார் செக்கு ஆட்டி எண்ணெய் எடுக்கும் தொழிலை மேற்கொண்டதாகக் கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணத்துச் சாதிகளில் முக்கியமானவற்றின் தொழில்கள் பின்வருமாறு:[சான்று தேவை]

சாதி தொழில்
பிராமணர் கோயில்களில் பூசை செய்தல், குறிப்பிட்ட சில சாதியினரின் வீடுகளில் நடைபெறும் கிரியைகளை நடத்துதல்.
வெள்ளாளர் நில உடைமையாளர் / வேளாண்மை
செட்டிகள் வணிகம்
சிவியார் பல்லக்குக் காவுவோர்,[3] சிலர் இவர்கள் முற்காலத்தில் அரசகருமத்தில் ஈடுபட்டவர்கள் எனக் கருதுகின்றனர்.[4]
செம்படவர் மீன் பிடித்தல்
சான்றார் எண்ணெய் உற்பத்தி
கன்னார் பித்தளைப் பாத்திரங்கள் செய்தல்.
தட்டார் பொன் அணிகள் செய்தல்
கரையார் மீன்பிடித்தல், கப்பலோட்டுதல்
முக்கியர் கடலில் மூழ்கி முத்தெடுத்தல்
திமிலர் மீன்பிடி வள்ளம் கப்பல் செய்தல்
வண்ணார் துணி வெளுத்தல்
தச்சர் மரவேலை
சேணியர் துணி நெய்தல்
குயவர் மட்பாண்ட உற்பத்தி
கொல்லர் இரும்பு வேலை
அம்பட்டர் முடி வெட்டுதல்
கோவியர் கோவில் வேலைக்காரர்
நளவர் மரம் ஏறுதல், கள் உற்பத்தி
பள்ளர் பண்ணை தொழிலாளர்
பறையர் மறை ஓதுதல்

உரிமைகளும் கட்டுப்பாடுகளும்

தொகு

யாழ்ப்பாண அரசர் காலத்திலும், பின்னர் ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சிக் காலத்திலும்கூட வெவ்வேறு சாதிகளுக்கான வேறுபட்ட உரிமைகளும் கட்டுப்பாடுகளும் இருந்தன. இவை வாழிடம், ஆடை அணிகள், தலை அலங்காரம், மண நிகழ்வு, மரண நிகழ்வு போன்ற பலவற்றையும் தழுவி அமைந்திருந்தன.

வாழிடம் தொடர்பில், யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக விளங்கிய நல்லூர் நகர் பற்றி ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை பின்வருமாறு கூறுகிறார்:

நல்லூர் நகரத்திலே ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு வீதியிருந்ததென்பது தெரிகின்றது. அந்தணர்க்குகொரு தெருவும், செட்டிகளுக்கொரு தெருவும், வேளாளர்க்கொரு தெருவும், கன்னாருக்கொரு தெருவும், தட்டாருக்கொரு தெருவும், கைக்கோளர்க்கொரு தெருவும், சாயக்காரருக்கொரு தெருவும், உப்புவாணிகருக்கொரு தெருவும்,பள்ளருக்கொரு தெருவும் , சிவிகையார்க்கொரு தெருவுமாக இப்படி அறுபத்துநான்கு தெருக்களிருந்தன. இந்நகரத்தினுள்ளே ........ அம்பட்டர், வண்ணார், நளவர், பறையர், துரும்பர் முதலியோர்க்கு இருக்கையில்லை. அவரெல்லாம் புறஞ்சேரிகளிலேயே வசித்தார்கள்.

மணவீடு, மரணவீடு போன்றவற்றில் வெவ்வேறு சாதிகள் பயன்படுத்த உரிமையுள்ள இசைக்கருவிகள் பற்றியும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இது பற்றிய விபரங்கள் கீழே தரப்படுகின்றன:[சான்று தேவை]

சாதி மணவீடு மரணவீடு -
பிராமணர் மேளவாத்தியம் - -
வெள்ளாளர் மேளவாத்தியம் பறைமேளம் நிலபாவாடை, சங்கு, தாரை, குடமுழவு, மேற்கட்டி என்பவற்றுக்கும் உரிமையுண்டு
செட்டிகள் மேளவாத்தியம் பறைமேளம் நிலபாவாடை, சங்கு, தாரை, குடமுழவு, மேற்கட்டி என்பவற்றுக்கும் உரிமையுண்டு
கோவியர் மேளவாத்தியம் பறைமேளம் -
மறவர் மேளவாத்தியம் பறைமேளம் -
அகம்படியர் மேளவாத்தியம் பறைமேளம் -
இடையர் மேளவாத்தியம் பறைமேளம் -
சிவியார் மேளவாத்தியம் சேமக்கலமும், சங்கும்| -
ஆண்டிகள் - சங்கு -
முக்கியர் - ஒற்றைச்சங்கு -
கரையார் - சேமக்கலமும், சங்கும் -
கம்மாளர் - சேகண்டி, குடமுழவு -
பள்ளர் - குடமுழவு -
குயவர் - குடமுழவு -
அம்பட்டர் - தாரை -
வண்ணார் - தாரை -

சாதிகளுக்கு இடையேயான தொடர்புகள்

தொகு

யாழ்ப்பாணத்துச் சாதிகள் தொழில் அடிப்படையில் அமைந்திருந்ததால், அவற்றுக்கிடையேயான பொருளாதாரத் தொடர்புகள் முதன்மையானவை. இதன் அடிப்படையில் யாழ்ப்பாணத்துச் சாதிகளை நான்கு பிரிவுகளாக வகுக்கமுடியும் என கென்னத் டேவிட் என்பவரை மேற்கோள் காட்டி சிவத்தம்பி [5] எழுதியுள்ளார். அப்பிரிவுகள் பின்வருமாறு:

கட்டுள்ள சாதிகள் (bound castes)

பிராமணர், வெள்ளாளர், கோவியர், அம்பட்டர், வண்ணார், நளவர், பள்ளர், பறையர் முதலானோர்.

கட்டற்ற சாதிகள் (unbound castes)

செட்டிகள், தட்டார், கைக்குளர், சேணியர், முக்கியர், திமிலர் முதலானோர்.

பிரதானமாகக் கட்டுள்ள கலப்பு நிலையிலுள்ள சாதிகள்

பண்டாரம், நட்டுவர்

பிரதானமாகக் கட்டற்ற கலப்பு நிலையிலுள்ள சாதிகள்

கரையார், கொல்லர், தச்சர், குயவர்

கட்டுள்ள சாதிகளைச் சேர்ந்த குடும்பங்கள், நில உடைமையாளரான வெள்ளாளரின் கீழ் அவர்களுக்குச் சேவகம் செய்து வாழுகின்ற ஒரு நிலை இருந்தது. இது குடிமை முறை என அழைக்கப்பட்டது. இம் முறையின் கீழ் பணம் படைத்த வெள்ளாளர் குடும்பங்கள், தங்களுக்குக் கீழ் கோவியர், அம்பட்டர், வண்ணார், நளவர், பறையர் போன்ற சாதிகளைச் சேர்ந்த குடும்பங்களைத் தங்கள் மேலாண்மையின் கீழ் வைத்து வேலை செய்வித்தனர். இக் குடும்பங்கள் குறித்த வெள்ளாளக் குடும்பங்களின் சிறைகுடிகள் எனப்பட்டன.

இவற்றையும் பார்க்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. வேலுப்பிள்ளை, க., யாழ்ப்பாண வைபவ கௌமுதி, 1918, யாழ்ப்பாணம் (மறுபதிப்பு: Asian Educational Services, Delhi, 2002)
  2. முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ., யாழ்ப்பாணச் சரித்திரம், 1912, யாழ்ப்பாணம்: நாவலர் அச்சகம் (நான்காம் பதிப்பு, 2000, சென்னை: Maazaru DTP)
  3. Chitty, Simon. Casie., Ceylon Gazetteer, Cotta Church Mission Press, 1834, p. 55.
  4. தைரியர், இ. ம. (குருகுலசேகர தைரியமுதலியார்) (1967). வருண நிலை. சுண்டிக்குளி, யாழ்ப்பாணம்.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  5. சிவத்தம்பி, கா., யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை, 2000, கொழும்பு