வண்ணை காமாட்சி அம்பாள் ஆலயம்

(நாச்சிமார் கோவில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நாச்சிமார் கோவில் என்று பொதுவாக அழைக்கப்படும் வண்ணை காமாட்சி அம்மன் ஆலயம் அல்லது வண்ணை ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம் இலங்கையின் வட பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண மாநகரின் வடக்கே, வண்ணார்பண்ணை என்ற ஊரில் காங்கேசன்துறை வீதியும் யாழ் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வீதியாகிய இராமநாதன் வீதியும் இணைகின்ற இடத்திலே அமைந்திருகின்றது.

வண்ணை காமாட்சி அம்மன் ஆலயம்
வண்ணை காமாட்சி அம்மன் ஆலயம் is located in இலங்கை
வண்ணை காமாட்சி அம்மன் ஆலயம்
வண்ணை காமாட்சி அம்மன் ஆலயம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்:9°41′0″N 80°1′0″E / 9.68333°N 80.01667°E / 9.68333; 80.01667
பெயர்
வேறு பெயர்(கள்):நாச்சிமார் கோவில்
பெயர்:வண்ணை ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம்
அமைவிடம்
நாடு:இலங்கை
மாகாணம்:வடக்கு
மாவட்டம்:யாழ்ப்பாணம்
அமைவு:வண்ணார்பண்ணை
கோயில் தகவல்கள்
மூலவர்:அம்பிகை
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
வரலாறு
கட்டப்பட்ட நாள்:1870

ஆரம்ப காலத்தில் மருத மரத்தடியில் ஆரம்பித்த தேவதை வழிபாடு, பெருவளர்ச்சியடைந்து, நாளடைவில் ஆகம வழிபாட்டைக் கொண்ட கோயிலாக மாற்றமடைந்து உள்ளது. இந்த ஆலயம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே “நாச்சிமார் கோவில்” என சிறப்பாக அழைக்கப்பட்டது.

ஆலய வரலாறு

தொகு

நாச்சிமார் கோவில் கி.பி 1870 ம் ஆண்டு, விஸ்வப்பிரம்மகுல சிற்பியாகிய கந்தர் என்பவரால் கல்லினால் கட்டப்பட்டதாக 1898 இல் யாழ்ப்பாண அரச அதிபரினால் வெளியிடப்பட்ட ஆலயங்கள் பற்றிய ஒரு அரசாங்கக் குறிப்பேட்டிலே காணப்படுகிறது. அத்துடன் அங்கு ஆண்டுதோறும் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்றன என்றும், இக்கோயில் விஸ்வப்பிரம்ம குலத்தவர்கள் வசம் காணப்பட்டதென்றும் பதிவேட்டுக் குறிப்பிலே குறிப்பிடப்படுள்ளது. அத்தோடு இக்கோயில் அமைந்துள்ள காணி குளங்கரை மருதடி எனவும் உறுதியில் கூறப்பட்டுள்ளது. இவ்வாலயத்தின் தல விருட்சம் மருத மரம் ஆகும்.

கங்கையார் சடையானைக் காசினியில் பூசனை செய்
மங்கையார் காமாட்சி மாதேவி மருவுமிடஞ்
செங்கையால் நாச்சிமார் சிறு விறகையொடித்தாளின்
கொங்கையாய்ந் தொளிர் வண்ணைக் குளங்கரை சார் மருதடியே

இப்பாடல் இந்த ஆலயம் உருவான விதம் பற்றி விஸ்வகுலதிலக உயர்நீதிமன்ற நியாயதுரந்தர் விஸ்வப்பிரம்மஸ்ரீ.நமசிவாயம் சிவக்கொழுந்து ஆச்சாரியார் என்பவரால் பாடப்பெற்றது.

கர்ணபரம்பரைக் கதை

தொகு

நாச்சிமார் கோவில் பற்றிய கர்ணபரம்பரைக் கதையொன்று இப்பிரதேச மக்களிடையே வழக்கில் காணப்படுகிறது.

ஆதிகாலத்தில் இப்பகுதியில் இருந்ததொரு குளத்தைச் சுற்றி நாவல் மரங்களும், மருத மரங்களும் சுற்றுப்புறங்களில் வயல்வெளிகளும் நிறைந்த மிகச்செழிப்பான பரந்த பிரதேசமாகக் காணப்பட்டது. இப்பகுதியில் தேவப்பிராமணர்களான விஸ்வப்பிரம்மகுல மக்களே மிகவும் செறிந்து வாழ்ந்தனர். இங்குள்ள பெண்கள் அருகிலுள்ள இடங்களுக்குச் சென்று விறகு சேகரிப்பது வழக்கம். இப்படியிருக்கையில் ஒருநாள் தன்னுடைய மாதவிடாய்க்காலத்தில் விறகு பொறுக்குவதற்காகச் சென்ற ஒரு கன்னிப்பெண், அப்பகுதியிலிருந்த ஒரு மருதமரத்தின் மறைவில் சென்று சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தாள். அவ்வேளையில் இந்தப் பெண், அந்த மருதமரத்திலிருந்து வந்த ஒரு தேவதை போன்ற ஒரு பெண்ணைக் கண்டதாகவும், அதேவேளையில் தன்னுடைய முலைகளை திருகுவதைப் போன்ற வேதனையையும் தான் உணர்ந்து உடனடியாக அவ்விடத்தை விட்டகன்று வீட்டிற்கு வந்து வீட்டாரிடமும், ஏனையோரிடமும் தனக்கு நடந்ததை கூறியிருக்கிறாள். இதனால் அந்தக்கிராம மக்கள் பெரிதும் பீதியடைந்தனர்.

இச்சம்பவத்தை கேள்வியுற்ற கண்ணாத்தை அம்மாள் என்னும் விஸ்வகர்மப்பிராமணகுல வயோதிப மாது மருதமரத்தடியில் கண்ட அந்தப்பெண் தெய்வத்தை சாந்தப்படுத்துவதற்காக அவ்விடத்தில் ஒரு கல்லை வைத்து விளக்கேற்றி நாச்சியார் எனப் பெயரிட்டு வழிபாடு செய்ய ஆரம்பித்தார். கண்ணாத்தையைப் பின்பற்றி அந்தக் கிராம மக்களும் நாச்சியாரை வழிபடத் தொடங்கினர். நாளடைவில் அயல் கிராமங்களிலுள்ள மக்களும் நாச்சியார் செய்யும் புதுமைகளைக் கேள்வியுற்று, இவ்விடத்திற்கு வந்து வழிபாடு செய்யத் தொடங்கினர். இவ்வழிபாட்டால் நாச்சியாரின் அருளையும் ஆசியையும் பெற்ற இம்மக்கள் அனைவரும் ஒன்றுகூடி, அவ்விடத்தில் ஆலயமொன்றை அமைத்து, விக்கிரக வழிபாட்டை மேற்கொள்ள எண்ணினார்கள். அதன்படி அவ்விடத்தில் சிறு கோவிலொன்றைக் கல்லினால் கட்டி, அங்கு மாரியம்மனை வைத்து வழிபாடு செய்துவர ஆரம்பித்தனர். ஆலயச் சுற்றாடலிலே வாழ்ந்த ஸுபர்னஸ ரிஷி கோத்திரத்தையும் ரௌப்யாயன சூத்ரத்தையும் பிரணவவேத சாகையையும் ஈசான பிரவரத்தையும் ஸ்வர்ண யக்ஞோபவீதத்தையும் அஷ்டகோண குண்டத்தையும் பொன் தண்டத்தையும் திரிபுண்டரகந்தாஷதை கந்தத்தையுமுடைய பௌருஷேய பிராமணர்களான பொற்கொல்லர்கள், காமாட்சியைக் குலதெய்வமாக வணங்கும் வழக்கமுடையவர்களாகக் காணப்பட்டனர். எனவே, இக்கோயிலில் காமாட்சியையே வைத்து வணங்கவேண்டும் என்று கூறினர். இவர்கள் கருத்து மேலோங்கியதால், விஸ்வப்பிரம்மஸ்ரீ. பூணூல் வைத்தியலிங்கப் பத்தர் என்பவர், தென்னிந்தியாவிற்குச் சென்று காஞ்சி காமாட்சியின் திருவுருவத்தைச் செய்வித்துக் கொண்டு யாழ்ப்பாணம் வந்தார்.

ஆலய வளர்ச்சி

தொகு

மாரியம்மன் வணக்கமுறை என்பது கிராமிய வழிபாடாகக் காணப்படுகிறது. இந்நிலையிலிருந்து ஆகம வழிபாட்டிற்கு மாற்றமுறும் போது, ஆகமவிதிப்படி கோயில் அமைவது அவசியமாகிறது. இந்நிலையைக் கருத்திற்கொள்ளும் போது பதிவேட்டுக் குறிப்பிலே காணப்படுவது, அக்காலகட்ட வளர்ச்சிப் படிமுறையைக் காட்டுவதாகவே காணப்படுகிறது. இவ்வளர்ச்சி நிலையின் அடிப்படையிலேயே ஆலயம் கற்கோயிலாக மாற்றம் பெற்று, திருவுருவச் சிலைகளைப் பிரதிஷ்டை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

கல்லால் கட்டப்பட்ட கோயில் பின்னர் படிப்படியாக வளர்ச்சி பெற்று மூலஸ்தானமும், அர்த்தமண்டபமும் புதிதாக அமைக்கப்பட்டபோது, மூலஸ்தானத்தில் அன்னை காமாட்சி விக்கிரகமும் நிறுவப்பட்டது. இதன் பின்னர் 1887 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. ஆலயம் விருத்தியடைய இதனைச் சரிவர நிர்வாகிக்கும் பொருட்டு, 1893 ஆம் ஆண்டில் ஆலய பரிபாலத்திற்கென அமைக்கப்பட்ட ஐவரைக் கொண்ட பஞ்சாயத்தும், 14 பேரைக் கொண்ட நிர்வாக சபையும் நிறுவப்பட்டது. இவர்கள் நிர்வாகத்தில் இக்கோவில் வளர்ச்சி கண்டது. இதன் பின்னர் சுற்றுப்புறப் பிரதேசங்களில் உள்ளவர்கள் மட்டுமன்றி நாட்டின் பல பாகங்களிலுமிருந்தும் இக்கோயிலுக்கு மக்கள் வர ஆரம்பித்தனர்.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் விஸ்வப்பிரம்மஸ்ரீ.நமசிவாயம் செல்லப்பா ஆச்சாரியார் என்பவர் இந்தியாவிற்கு தலயாத்திரை மேற்கொண்டார். அப்பொழுது சுவாமிமலையிலுள்ள சிற்பாச்சாரியாரைக் கொண்டு, விக்கிரகங்கள் பலவற்றைச் செய்வித்தார். பூமாதேவி, மகாலட்சுமி சமேத மகாவிஷ்ணு, இலக்குமி, வள்ளிநாயகி, தெய்வானை சமேத சுப்ரமணியசுவாமி, வைரவர், நவக்கிரகங்கள், சண்டேஸ்வரி ஆகிய விக்கிரகங்களை அவர் யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு வந்தார். இவ்விக்கிரகங்கள் இக்கோயிலில் பிரதிட்டை செய்யப்பட்டன. இவ்வேளையில் சுற்றுப்பிரகார மண்டபமும் அமைக்கப்பட்டு, 1926 ஆம் ஆண்டு குடமுழ்க்கு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கொடித்தம்பமும் அமைக்கப்பட்டு, கொடியேற்றம் முதல் தீர்த்தம் வரை பத்துத் திருவிழாக்கள் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

இக்கோயிலிலுள்ள மகாமண்டபம் விஸ்வப்பிரம்மஸ்ரீ. மு.முத்துவேலு பத்தரின் உபயமாகவும், கோயிலுக்கு முன்னால் வடக்குப் பக்கமாக அமைந்துள்ள திருக்குளம் விஸ்வப்பிரம்மஸ்ரீ. கந்தர் ஆச்சாரியார் (கந்தர் உடையார்) என்பவராலும் கட்டப்பட்டது. 1965 ஆம் ஆண்டிலே சப்பைரதமும் செய்யப்பட்டது. பல புனருத்தாரணப் பணிகளின் பின் 1967 ஆம் ஆண்டு, மீண்டும் குடமுழுக்கு நடைபெற்றது. அத்தோடு பத்து நாட்கள் நடைபெற்றுவந்த ஆண்டு மகோற்சவம், பதினைந்து நாட்களாக மாற்றம் பெற்றது. 1968 ஆம் ஆண்டு சிறு மஞ்சமும் செய்யப்பட்டது.

ஆலயத் தேர் உருவாக்கம்

தொகு

1971 ஆம் ஆண்டு இவ்வாலயத்திற்கென அழகிய சிற்பத்தேர் உருவாக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஸ்வப்பிரம்மஸ்ரீ. ஆ. தம்பித்துரை ஆச்சாரியார் இத்தேரை உருவாக்கினார். சித்திரத்தேரின் அடித்தளத்துச் சிற்பங்கள் சில இந்தியாவில் செய்யப்பட்டன. இத்தேரின் அடித்தளத்திலே ஆலயத்தோடு தொடர்பான கர்ணபரம்பரைக் கதைகளை அடிப்படியாகக் கொண்ட சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காமாட்சி அம்மன், இலக்குமி, விஸ்வப்பிரம்மம், சரசுவதி, பிள்ளையார், நவசக்திகள், ஆறுமுகன், அர்த்தநாரீசுவரர், தட்சணாமூர்த்தி, வைரவர், இராஜராஜேசுவரி, துர்க்கை, தனலட்சுமி, கஜலட்சுமி ஆகியோரின் வடிவங்களும், சரவணப் பொய்கையிலே முருகன் உற்பவம், திருக்கைலாயத்திலே பார்வதியின் கோலம், கம்பநதிக் கரையிலே பார்வதி லிங்கத்தை வழிபாடு செய்தமை முதலிய காட்சிகளும் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன.

ஆலய இராஜகோபுரம்

தொகு

இக்கோயிலின் இராசகோபுரம் சைவாகம விதிகளுக்கு அமைய நிர்மாணிக்கப்பட்டது. இராசகோபுரத்தை அமைக்கும் பணிகள் 1976 ஆம் ஆண்டிலே ஆரம்பமாகியது. இவ்வேலைகள் தமிழகச் சிற்பாச்சாரியாரான நாகலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அற்புதமான அமைப்பைக் கொண்ட இக்கோபுரம் 51.5 அடி உயரமும், 17.5 அடி விட்டமும் கொண்டது. இக்கோபுரத்திலே ஐந்து வாசல்களும், ஐந்து கலசங்களும் காணப்படுகின்றன.

கோபுரத்தின் அடித்தளத்திலே கோயிலோடு தொடர்புடைய ஐதீகங்கள் சிற்பவடிவிலே பேசுஞ்ச்சிற்பங்களாகக் காணப்படுகின்றன. சிவனும், சக்தியும் போட்டி போட்டு ஆடிய திருநடனக் கோலங்கள், திருக்கல்யாணக்கோலம், பிள்ளையார், முருகன், பிரம்மன் ஆகியோரின் சிற்பங்கள் ஆகியன எழிலுடன் வடிக்கப்பட்டுள்ளன. அமாவாசையைப் பௌர்ணமியாக்கி அபிராமிப்பட்டருக்குக் காட்டிய காட்சி, சமயக்குரவர்கள் நால்வரின் அற்புதத்தோற்றங்கள், சிவபிரானின் தவக்கோலம், விஸ்வப்பிரம்மாவின் வடிவம் முதலியன இக்கோபுரத்திலே சிற்பவடிவிலே காணப்படுகின்றன. கோபுரத்தின் மூன்றாவது தளத்திலே பழனி ஆண்டவர், விநாயகர், சிவபெருமான் ஆகியோரின் உருவங்களும், நான்காவது தளத்திலே உமாதேவியார் முருகப்பெருமானுக்குச் சக்திவேலைக் கொடுக்கும் காட்சி மற்றும் அர்த்தநாரீஸ்வரர், விஷ்ணு, பிள்ளையார், துவாரபாலகர்கள் போன்றோரின் உருவங்களும் ஐந்தாவது தளத்திலே சரஸ்வதி, மகாலட்சுமி, மாரியம்மன், விநாயகர், முருகன் ஆகியோரின் உருவங்கள் பேசும் சிற்பங்களாகக் கலைநயத்தோடு மிளிர்கின்றன. கோபுரத்தின் இரு பக்கங்களிலும் மணிக்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வலதுபுற மணிக்கோபுரம் 1985 ஆம் ஆண்டிலே கட்டப்பட்டது.

ஆலயத்தின் உள்ளமைப்பு

தொகு

கோபுரத்தைக் கடந்து சென்றதும் உள்ளே கொடித்தம்பம், நந்தி, பலிபீடம் ஆகியவற்றைத் தரிசிக்க முடிகின்றது. பலாமரத்தினால் செய்யப்பட்ட கொடித்தம்பம் செப்புத்தகட்டினால் சுற்றப்பட்டுள்ளது. கொடிமரத்தில் பிரமபாகம், விஷ்ணுபாகம், உருத்திரபாகம், துவஜத்தண்டு, பத்திரபீடம், விருஉறப்பீடம், இஷ்டிகை என்னும் பகுதிகள் உள்ளன.

நாச்சிமார் கோவிலின் அமைப்பு சங்கீர்ணாலயம் என்ற வகைக்குள் அடங்கும். இது தேவிக்கும், இறைவனுக்கும், பரிவார தேவர்களுக்கும் உரிய அமைப்பு வடிவத்தைக் கொண்டதாகும். கர்ப்பக்கிரகமும், அர்த்தமண்டபமும் அமைந்துள்ள கட்டிடத்தின் மேலே சிற்பவேலைகளுடன் கூடிய விமானம் காணப்படுகின்றது. இக்கோயில் விமானத்தின் தெற்கு நோக்கிய பகுதியில் பிள்ளையார், நடராசர், பதஞ்சலி, வியாக்கிரபாதர், அர்த்தநாரீஸ்வரர், மாரியம்மன் ஆகியோரின் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்குப் புறத்தில் வைரவர், நாகபூஷணி, அனுமார் ஆகியோரின் உருவங்களும், பரமசிவன் லிங்கத்திலிருந்து தோன்றி யமனைக் கொன்று மார்க்கண்டேயருக்கு அருள் வழங்கிய காட்சியும் அமைந்திருக்கின்றன. பிரம்மன், சரஸ்வதி, நாராயணி ஆகியோரின் தோற்றங்களும், மோகினி வடிவமான விஷ்ணுவைச் சிவன் ஆலிங்கனம் செய்யும் காட்சியும் விமானத்தின் வடபுறத்திலே காணப்படுகிறது.

நாச்சிமார் கோவில் கர்ப்பக்கிரகத்தில் மூலமூர்த்தியாக அமைந்துள்ள காமாக்ஷி அம்பாளின் வடிவம், ஸ்தானக நிலையிலே கருங்கல்லில் அமைக்கப்பட்டுள்ளது. அம்பாளின் இடக்கரங்களில் முல்லை, அசோகு, மா, நெய்தல், தாமரை ஆகிய ஐந்துவகை மலர் அரும்புகளும், வலக்கரங்களுள் ஒன்றிலே கரும்பு வில்லும், மற்றொன்றிலே அங்குசமும் காணப்படுகின்றன. கருவறையை அடுத்து அதனுடன் இணைந்தவாறே காணப்படுவது அர்த்தமண்டபம். அர்த்தமண்டபத்தின் வாயிலில் துவாரபாலகர்கள் காணப்படுவர். அர்த்தமண்டபத்தின் முன் இருப்பது மகாமண்டபம் என அழைக்கப்படும். இக்கோயிலில் மகாமண்டபத்திலே சிவன், சுக்கிரவார அம்மன், முருகன், பிள்ளையார், சண்டேஸ்வரி, நந்தனகோபாலர் ஆகியோரின் பித்தளை உருவச்சிலைகள் காணப்படுகின்றன. மகாமண்டபத்து வாசலிலே நந்தா, சகந்தா என்னும் துவாரபாலகர்களின் சிலைகள் காணப்படுகின்றன. அவை தற்போது (2006) ஆலயக் கோபுரவாசலின் இருமருங்கிலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. பிள்ளையார், பூமாதேவி, மகாலட்சுமி சமேத விஷ்ணு, இலக்குமி, வள்ளிநாயகி, தெய்வானை சமேத சுப்ரமணியசுவாமி, வைரவர், நவக்கிரகங்கள், சண்டேஸ்வரி ஆகியோர் இக்கோயிலில் கருங்கல்லில் பரிவார மூர்த்திகளாகவும் விஸ்வப்ரஹ்மபரசிவம் பஞ்சலோக விக்கிரகமாகவும் அமைக்கப்பட்டுள்ளனர். கோயிலின் உட்பிரகாரச் சுவர்களிலே சமயக்குரவர்கள், காமாக்ஷி அம்மன், மாரியம்மன், ஐம்முகங்கொண்ட விஸ்வப்பிரம்மபரசிவம் ஆகியோரின் உருவங்கள் அழகிய ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.

ஆலய பூசை முறை

தொகு

இவ்வாலயத்தில் சைவ ஆகம முறைப்படி கிரியைகள் யாவும் நடைபெற்று வருகின்றன. திருமுறைகளுக்கும், விராட்புருஷனாகிய சாட்ஷாத் பரப்ரஹ்மம் விஸ்வப்பிரம்மபரசிவத்திற்கும் பூசை செய்வது இக்கோயிலுக்கேயுரிய மரபாகக் காணப்படுகிறது.

இக்கோயிலில் நித்திய, நைமித்திக வழிபாடுகள் சீராகவும், சிறப்பாகவும் நடைபெறும். தினமும் ஐந்துகாலப் பூசை நடைபெறும். சில சமயங்களிலே சங்காபிஷேகமும் நடைபெறுவதுண்டு. வெள்ளிக்கிழமைகளில் சிறப்பான பூசைகள் நடைபெறும். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று, கன்னிகளும், சுமங்கலிகளும் நன்மை பெரும் பொருட்டு திருவிளக்குப்பூசை வழிபாடு நடைபெறுகின்றது. ஒவ்வொரு மாதமும் அந்தந்த மாதத்திற்குரிய சிறப்பான நாட்கள் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும்.

வருடாந்த மகோற்சவம்

தொகு

இக்கோயிலின் வருடாந்த மகோற்சவம் பதினைந்து நாட்களாக நடைபெற்று வருகிறது. வருடாவருடம் சித்திரை பௌர்ணமிக்கு தீர்த்தோற்சவம் நடைபெறும். மகாமாரியம்மன் ஊர்வலத்தோடு திருவிழா ஆரம்பமாகும். அதற்கடுத்து குளிர்த்தி, பிள்ளையார் பூசை, கிராமசாந்தி, கொடியேற்றம் என்பன நிகழும். தேர், தீர்த்தம், சண்டேஸ்வரி பூசை, பூங்காவனம், வைரவர்மடை ஆகியவற்றோடு மகோற்சவம் நிறைவுபெறும். திருவிழாக் காலங்களில் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். திருவிழாக்காலத்திலே அம்மனுக்குக் கட்டியங் கூறப்படும்போது,

“ மனு மய துவஷ்ட சில்பி விஸ்வக்ஞ வம்சகுல தேவாய
பரப்பிரம்ம விராட் விஸ்வப்பிரம்ம சமூக / சித்தே”
எனக் கூறப்படுகிறது.

வருடாந்த மகோற்சவமும் வலம்வரும் வாகனமும்
1 ம் நாள் பகல் கொடியேற்றம் (துவஜாரோகணம்)
இரவு கமல வாகனம் (விநாயகர் யாகாரம்பம்)
2 ம் நாள் இரவு சர்ப்ப வாகனம்
3 ம் நாள் இரவு யானை வாகனம்
4 ம் நாள் இரவு காராம்பசு வாகனம் (முருகன் யாகாரம்பம்)
5 ம் நாள் இரவு சிங்க வாகனம்
6 ம் நாள் இரவு கிளி வாகனம் (அம்பாள் யாகாரம்பம்)
7 ம் நாள் இரவு கேடகம் (லிங்கபூஜை)
8 ம் நாள் இரவு இடப வாகனம்
9 ம் நாள் இரவு பூந்தண்டிகை
10 ம் நாள் இரவு மஞ்சம்
11 ம் நாள் இரவு கைலாச வாகனம்
12 ம் நாள் இரவு சப்பை ரதம் (பெரிய சப்பறம்)
13 ம் நாள் இரவு குதிரை வாகனம்
14 ம் நாள் பகல் இரதோற்சவம் (சித்திரத்தேர்)
15 ம் நாள் பகல் தீர்த்தோற்சவம்
இரவு கொடியிறக்கம் (துவஜாவரோகணம்)
16 ம் நாள் இரவு சண்டேஸ்வரி உற்சவம்
17 ம் நாள் இரவு பூங்காவனம்
18 ம் நாள் இரவு வைரவர் மடை

ஆலயத்தின் பொதுப்பணிகள்

தொகு

இவ்வாலயத்தை ஆதாரமாகக் கொண்டு பல பொதுப்பணிகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 1950 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கருணைக்கழகம் என்ற அமைப்பு, கோயிலுக்கு வடக்கிலே வாசிகசாலையொன்றை நடத்தி வந்துள்ளது. 1951 ஆம் ஆண்டு “நாச்சிமார்கோயிலடி” என்ற உபதபாற்கந்தோர் ஒன்று திரு.வேலாயுதம் இராசையா என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு அப்போதைய எம்.பி. திரு. சிற்றம்பலம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 1958 ஆம் ஆண்டிலே அமைக்கப்பட்ட வண்ணை கந்தர்வகானசபா, இசைக்கலையை முன்னேற்றும் நோக்குடன், வகுப்புக்களை நடத்தி சங்கீத ஆர்வத்தை மக்களிடையே ஊக்குவித்தது. வண்ணை கலைவாணர் நாடகமன்றம் என்ற அமைப்பு, நாடகத்துறையிலே பல சேவைகளைப் புரிந்தது.

1960 ஆம் ஆண்டளவில் உருவாகிய வண்ணை ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் கூட்டுப்பிரார்த்தனை சபை, வெள்ளிக்கிழமை தோறும் பிள்ளைகள் திருமுறைகளைக் கற்க ஏற்பாடு செய்தது. இவற்றோடு திருக்குறள் வகுப்பு, சமய வகுப்புகளையும் நடத்தி இளந்தலைமுறையினரின் சமய ஊக்கத்திற்கு ஆதாரமாயிருந்தது. 1969 ஆம் ஆண்டிலிருந்து “ஸ்ரீ காமாட்சி சனசமூக நிலையம்” இயங்கி வருகிறது. 1986 ஆம் ஆண்டிலே அன்னதானசபை உருவாக்கப்பட்டது. திருவிழாக்காலங்களிலும், ஆலய விசேட தினங்களிலும் அன்னதானம், குளிர்த்தி ஆகியவற்றைச் செய்து வருகிறது. 1989 ஆம் ஆண்டிலே தோன்றிய ஆலயத் தொண்டர்சபை, ஆலயத் தொண்டுகளைச் செய்ய உதவி வருகின்றது. 2000 ஆம் ஆண்டிலிருந்து “ஸ்ரீ காமாக்ஷி முன்பள்ளி” இயங்கி வருகிறது.

கும்பாபிஷேகம்

தொகு

இவ்வாலயத்தில் 1887, 1926, 1967, 2006 ஆகிய ஆண்டுகளில் மகாகும்பாபிஷேகங்கள் நடைபெற்றிருக்கின்றன. 2005 ஆம் ஆண்டு பாலஸ்தாபனம் செய்யப்பட்டு கோயில் புனருத்தாரணம் செய்யும் பொழுது ஆலய சுற்றுப்புற வெளிச்சுவர்கள் யாவும் உயர்த்தப்பட்டு அழகான வேலைப்பாடுடனான சுவர்கள் அமைக்கப்பட்டன. தெற்குப்புற வாசலில் சிறிய கோபுரம் அமைக்கப்பட்டு அம்பிகையின் உருவம் பெரிதாக உருவமைத்து அழகுபடுத்தப்பட்டது. வசந்த மண்டபத்தின் நேராக தெற்குப்புறம் புதிதாக வாசல் அமைக்கப்பட்டு அதன் மேற்புறம் காமாட்சி லிங்கவழிபாடு செய்யும் காட்சி அழகுற அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேற்குப்புறமாகவும் ஒரு புதிய வாசல் அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் உட்புறத்தில் மகாவிஷ்ணுவிற்கும், மகாலட்சுமிக்கும், விஸ்வப்பிரம்மபரசிவத்திற்கும் புதிய கோயில்கள் விதிமுறைப்படி அமைக்கப்பட்டது.

2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கொடித்தம்பமும் புதிதாக பித்தளையினால் செய்யப்பட்டு அழகூட்டப்பட்டது. விஸ்வப்பிரம்மா கோயிலுக்கு பஞ்சலோகத்தினால் செய்யப்பட்ட விஸ்வப்பிரம்மபரசிவமும், பஞ்சப்ரஹ்ம ரிஷிகளான மனு, மய, துவஷ்டா, சில்பி மற்றும் விஸ்வக்ஞ ரிஷிகளும் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். வைரவர் கோயில் முன்பு இருந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டு புதிதாக கோயில் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. 2006 ஆம் ஆண்டில் வசந்த மண்டபத்திற்கு மேற்புறம் விமானம் அமைக்கப்பட்டு அதில் இராவணன் கைலாசமலையைத் தாங்கும் காட்சியும், பிள்ளையார், முருகன் போன்ற சிலைகள் அமைக்கப்பட்டு தங்கமுலாம் பூசப்பட்ட கலசங்கள் ஐந்து அமைக்கப்பட்டு அழகுறக் காட்சி அளிக்கின்றது. கேணி மடமும் புனரமைக்கப்பட்டு அழகு படுத்தப்பட்டுள்ளது. மாரியம்மன் கோயிலில் இருந்த கருங்கல் விக்கிர உருவத்தில் சிதைவு ஏற்பட்டமையால் புதிய கருங்கல் விக்கிரகம் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மாரியம்மன் கோயில் முன் அழகான சிங்கம் கருங்கல்லினால் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோயிலின் முன்புறம் மாரியம்மன் சிலையும் இருபுறமும் சிங்கம் இருக்கும் காட்சியும் மிக அருமையானது.

வெளி இணைப்புகள்

தொகு

துணை நூல்கள்

தொகு
  • வண்ணை ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேக சிறப்பு மலர் 2006
  • சித்திரத்தேர் மலர் 1971
  • விஸ்வகர்மப்பிராம்மணவம்சப்பிரகாஷிகை
  • யசுர்வேதம்
  • பிரணவவேதம்
  • ஐந்திரம்
  • வைசம்பாயனம்