மீசாலை யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரிவில், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் வடக்கு எல்லையில் சரசாலை, மந்துவில் ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் அல்லாரையும், தெற்கில் சங்கத்தானையும், மேற்கில் மட்டுவில், சரசாலை, கல்வயல் ஆகிய ஊர்களும் உள்ளன. இவ்வூர் மீசாலை வடக்கு, மீசாலை தெற்கு, மீசாலை மேற்கு என மூன்று கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மீசாலை
கிராமம்
நாடுஇலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்யாழ்ப்பாணம்
பி.செ. பிரிவுசாவகச்சேரி

யாழ்ப்பாணம் - கண்டி வீதி இவ்வூரின் ஊடாகச் செல்கிறது. இவ்வீதியின் வழி சாவகச்சேரியில் இருந்து இவ்வூர் சுமார் 3 கிலோமீட்டர்கள் தொலைவிலும், கொடிகாமத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர்கள் தொலைவிலும் உள்ளது. இவ்வீதிக்கு இணையாக ஒரு தொடருந்துப் பாதையும் தொடருந்து நிலையமும் அமைந்துள்ளன.

வரலாறு தொகு

 
வீதி

யாழ்ப்பாண மாவட்டத்தின் கிராமச்சங்கங்கள் 03.02.1928ம் திகதியில் இருந்து அரசினால் அங்கிகரிக்கப்பட்டு 08.06.1928ம் திகதி 7647ம் இலக்க வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டு அமைக்கப்பட்டது. இவை 1928 ல் கிராமச்சங்கமாக ஆரம்பிக்கப்பட்டது. இதில் மீசாலையின் தென்பகுதி உள்ளடங்கலாக சாவகச்சேரிப் பகுதி சாவகச்சேரி கிராமசபையாக மாற்றம் பெற்று 22.03.1941ல் கிராமசபையாக அனுமதிக்கப்பட்டு 1941.03.28 ம் திகதி 8730 இலக்க வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது. 1949.01.01 ம் திகதி மீசாலைப்பகுதி ஓர் வட்டாரமாக உள்ளடங்கிய பட்டினசபையாக தரம் உயர்த்தப்பட்டு மாற்றம் பெற்றது. பின் 1964 ல் மீசாலையின் தெற்குப்பகுதி உள்ளடங்களாக நகரசபையாக தரம் உயர்த்தப்பட்டது. மீசாலையின் மீதிப்பகுதி பட்டினசபைக்குள் உள்ளடக்கப்பட்டு இருந்தது.பின் அவை மாற்றம் பெற்று சாவகச்சேரி பிரதேசசபையாக விளங்கி வருகின்றது. அந்தவகையில் மீசாலைக்கிராமமானது தென்பகுதி சாவகச்சேரி நகரசபைக்குட்பட்டதாகவும், வடபகுதி சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்டதாகவும் அமைந்துள்ளது. இவை அனைத்தும் தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்டதாக அமைந்துள்ள போது தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவின்  நடுப்பகுதியானது சாவகச்சேரி நகரசபைக்குட்பட்டதாகவும் சுற்றியுள்ள பகுதிகள் சாவகச்சேரிப் பிரதேச சபைக்குட்பட்டதாகவும் அமைந்துள்ளது. அந்த வகையில் தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவானது 232.19 சதுரகிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டதாக அமைந்துள்ளது. அதில் சாவகச்சேரி நகரசபையானது 31.29 சதுரகிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டதாக அமைந்துள்ளது. அதில் மீசாலையின் கிழக்குப்பகுதி 3.84 சதுரகிலோ மீற்றர் பரப்பளவையும் மீசாலையின் மேற்குப்பகுதி 3.84 சதுரகிலோ மீற்றர் பரப்பளவையும் கொண்டதாக் 7.68 சதுரகிலோ மீற்றர் நகரசபைக்குட்பட்டதாகவும் மீசாலையின் மீதிப்பகுதி சாவகச்சேரி பிரதேசசபைக்குட்பட்ட பகுதியாகவும் அமைந்துள்ளது. அதே வேளை தென்மராட்சிப்பகுதியானது யாழ்ப்பாண மாவட்டத்தில் மிகப்பெரிய பரப்பளவைக் கொண்ட பிரதேச செயலகமாக விளங்குகிறது. இப்பிரதேச செயலகமானது 60 கிராமசேவையாளர் பிரிவையும் 130 கிராமங்களையும் 21788 குடும்பங்களையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.

இந்த வகையில் ஆரம்பகாலத்தில் கிராமங்களை நிர்வகிக்க கிராமமட்டத்தில் அதிக அதிகாரங்களைக் கொண்டவராக கிராமந்தோறும் உடையார்கள் என நியமிக்கப்பட்டார்கள். அந்த வகையில் மீசாலைப் பகுதியை நிர்வகிக்க வீரவாகு உடையார் அவர்கள் நியமிக்கப்பட்டு வீரவாகுஉடையார் நிர்வகித்து வந்தார். உடையார் என்ற பெயரில் நிர்வகித்து வரும் போது ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் மாறிய போது கிராமங்கள் தோறும் கிராம விதானை என விதானைமார் நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் உடையார் அவர்களுடன் இணைந்து செயற்பட்டு பின் உடையார் பதவி அற்றுப்போக கிராம விதானைமார். நிர்வகித்து வந்தார்கள். கிராம விதானைமாரை மேற்பார்வை செய்ய D.R.O    என்ற அதிகாரியை நியமித்து அவரின் மேற்பார்வையில் கிராம விதானைமார் செயற்பட்டு வந்தார்கள். அப்போது மீசாலையின் முதல் கிராம விதானையாராக பரமு வேலுப்பிள்ளை விதானையார் அவர்கள் 1930 ம் ஆண்டு காலப்பகுதியில் பொறுப்பேற்றுக் கொண்டார். வேலுப்பிள்ளை விதபனையாரின் சுகயீனம் காரணமாக 1944ம் ஆண்டளவில் மீசாலை தெற்கு, மீசாலை வடக்கு எனவும் மீசாலை தெற்குப் பகுதிக்கு  கிராம விதானையாராக கனகசபை சதாசிவம் அவர்களும், மீசாலை வடக்கிற்கு இராசையா அவர்களும் கிராம விதானையாக நியமிக்கப்பட்டார்கள்.

அந்தக்காலத்தில் D.R.O  என அழைக்கப்பட்டு நிர்வகித்து வந்த காரியாலயமானது பின்பு பெயர் மாற்றம் பெற்று உதவி அரசாங்க அதிபர் பணிமனை எனவும் உதவி அரசாங்க அதிபர் எனவும் மாற்றம் பெற்று  பின் பிரதேச செயலகம் எனவும் பிரதேச செயலர் எனவும் பெயர்மாற்றம் பெற்று தற்போது செயற்பட்டு வருகின்றது. இந்த பணிமனையானது அதன் பகுதிக்குட்பட்ட அரச நிர்வாகம் மற்றும் சகல நடவடிக்கைகளையும் செயற்படுத்தவும் கட்டுப்படுத்தவும் கூடிய அதிகாரங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. அந்த வரிசையில் முதல் D.R.O  .திரு.இ.சிதம்பரப்பிள்ளை அவர்களும் பின்  AGA ஆக திரு.முருகவேள் அவர்களும் திரு.க.துரைராசா அவர்களும், திரு.பு.சுந்தரம் பிள்ளை அவர்கள்   AGA ஆக இருக்கும் போது DS என மாற்றம் பெற்று பிரதேச செயலர் எனவும் திரு. சுந்தரம் பிள்ளை அவர்கள் 15 வருடங்கள் வரை கடமை ஆற்றினார். பின் 2003 காலப்பகுதியில் திரு. க.கேதீஸ்வரன்; அவர்கள் கடமை ஆற்றும் போது 2003 பிற்பகுதியிலிருந்து 2010 வரை திரு.செ.சிறினிவாசன் அவர்களும் 2010 ல் இருந்து திருமதி.அஞசலிதேவி சாந்தசீலன் அவர்களும் பிரதேச செயலராக செயலாற்றுகின்றார்கள்.

தற்போது மீசாலைப் பகுதியானது காலத்தின் தேவைக்கு ஏற்ப பிரிப்புக்கள்  இணைப்புக்கள் செய்யப்பட்டு மீசாலை கிழக்கு-J/318, மீசாலை மேற்கு-J/319, மீசாலை  வடக்கு-J/321 கிராம அலுவலர் பிரிவுகளை  மையமாகக் கொண்டு அமைந்துள்ளது.

கல்வி வளர்ச்சி தொகு

 
மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம்

கல்வி வளர்ச்சியின் பாதையில் ஆரம்ப காலத்தில் மீசாலைக்கிராமத்தில் மீசாலை விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம், மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம், மீசாலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, மீசாலை கமலாம்பிகை வித்தியாலயம், மீசாலை அல்லாரை தமிழ் கலவன் பாடசாலை என மீசாலை கிராமத்தில் பாடசாலைகள் அமைந்துள்ளன. இவற்றில் மீசாலை விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம் ஆரம்பத்தில் சிறப்புமிக்கதாக அமைந்து வந்தது. அதை திரு.சி.கா.தம்பையா வாத்தியார் அவர்கள் அதிபராக வழிநடத்தி வந்தார். முன்பு மீசாலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையாக இருந்தது. தற்போது மாற்றம் பெற்று அந்த இடம் மீசாலை விக்கினேஸ்வரா மகா வித்தியாலய ஆரம்பபாடசாலையாக அமையப்பெற்றுள்ளது. ஆரம்ப காலத்தில் ஆசிரியராக இருந்த திரு.தம்பிப்பிள்ளை அவர்கள் அன்றைய தமிழ் கலாசாரத்திற்கமைய வேட்டி சால்வை மட்டும் அணிந்து பாடசாலை சென்று கடமையாற்றி வந்தார். திரு. நடராசர் ஆசிரியர் அவர்கள் ஆசிரியராக கல்வி கற்பிப்பதோடு நாட்டு வைத்தியராகவும் சேவையாற்றி வந்தார். RCTMS பாடசாலையின் அதிபராக திரு.S.K. செல்லையா அவர்கள் கடமையாற்றி வந்தார். பின் ஐயாக்குட்டி மாணிக்கம் வாத்தியார் அவர்கள் கடமையாற்றினார். இது கேணியடி பாடசாலை எனவும் அழைக்கப்பட்டு வந்தது.

மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்தை வீரசிங்கனார் அவர்கள் நிறுவினர்.அதே போல மீசாலை கமலாம்பிகை வித்தியாலயத்தை பரியாரியார் பரமுவீரசிங்கம் அவர்கள் நிறுவினார்.இவற்றை எல்லாம் சிறப்பிக்க எமது பகுதி பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் எமது மீசாலை மண்ணைச்சேர்ந்த ஆசிரியர்களாக சின்னத்தம்பி வாத்தியார், காந்திகேசு வாத்தியார், பரிமளம் ரீச்சர், கனகம்மா ரீச்சர், பேபி ரீச்சர், பதஞ்சலிவாத்தியார், சங்கீதம் குமாரசாமி வாத்தியார், ஆச்சிப்பிள்ளை ரீச்சர், சங்கீதம் ஏரம்பு வாத்தியார், பூமணி ரீச்சர், வித்துவான்ஆறுமுகம் வாத்தியார், S,Xகுமாரவேலு வாத்தியார், பண்டிதர் கந்தையா வாத்தியார், சுவாமிநாதன் வாத்தியார், எனவும் மேலும் அக்காலப்பகுதியில் ஆங்கில மொழி மூலம் கற்று சிறந்த ஆங்கில ஆசிரியர்களாக மகாதேவ மீனாட்சி, செல்லையா யோகரத்தினம், பரமு வேலுப்பிள்ளை இராசரத்தினம், மார்க்கண்டு இராசபூபதி, சதாசிவம் நவநீதவல்லி, வேலுப்பிள்ளை கனகம்மா, ஆறுமுகம் தில்லைநாதன், என்றவரிசையில் சிறந்து விளங்கினார்கள். மேலும் எமது மண்ணிற்கு பெருமை சேர்க்கும் வகையில் அதிபர்களாக கல்வி அதிகாரிகளாக திருமதி.புஸ்பா கனேசலிங்கம், திரு.அ.பொ.செல்லையா, திரு.த.இராமலிங்கம், திரு.கு.சிவானந்தம் திரு.கே.கைலாயபிள்ளை, எனவும் சிறந்து விளங்கினர். மீசாலையை வதிவிடமாகக் கொண்ட திரு.கனகசபை அருணாசலம் அவர்கள் தமிழ்த்துறைப் பேராசிரியராக சிறந்து விளங்கினார். மீசாலை மண்ணிற்கு பெருமை சேர்க்கும் வகையில் செம்பர் என அழைக்கப்படும் கந்தையாவினதும் சின்னம்மாவினதும் மகன் கிருஷ்ணன் அவர்கள் முதன் முதலாக பல்கலைக்கழகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.

வணக்கத்தலங்களும் கேந்திர நிலையங்களும் தொகு

எமது கிராமத்தின் வணக்கத்தலங்களாக திருநீலகண்ட வெள்ளை மாவடிப் பிள்ளையார் கோவில், மண்டுவில் அம்மன் கோவில் (சோலை அம்மன் ), காட்டுவளவு கந்தசாமி கோவில்(நெல்லியடி முருகன்), கரும்பி மாவடி கந்தசாமி கோவில்,நடராச வீரகத்திப்பிள்ளையார் கோவில், பூதவராயர் கோவில், கலட்டிப்பிள்ளையார் கோவில், தட்டான்குளம்பிள்ளையார் கோவில் என சிறந்து விளங்குகின்றன. மீசாலைப்பகுதியில் சீயோன் தேவாலயம், இரட்சானிய சேனை இல்லம் என்பன  அமைந்துள்ளது. வள்ளளார் ஆச்சிரமமும் அமையப்பெற்றுள்ளது.

மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பலநோக்குக்கூட்டுறவுச் சங்கக் கிளைகள் கிராமம் தோறும் அமைந்துள்ளது. மீசாலையின் மத்தியில் தபால் நிலையம்,புகையிரத நிலையம், மத்திய நூல் நிலையம் , பழ உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை நிலையம், என்பனவும் இலங்கையின் எந்தப்பகுதிக்கும் செல்லக்கூடிய முக்கிய பிரதான வீதியான A9 வீதி எமது கிராமத்தின் ஊடாக செல்கிறது. அத்துடன்  பிரதான புகையிரத பாதையும் எமது கிராமத்தின் ஊடாக செல்கிறது. அத்துடன் புகையிரத நிலையமும் அமைந்துள்ளது.    மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யும் வகையில் மையவாடி(மயானம்) அமைந்துள்ளது. கிராமங்களின் அபிவிருத்தியை கருத்தில் கொண்டு கிராமங்கள் தோறும் மீசாலை வடக்கு , மீசாலை கிழக்கு, மீசாலை மேற்கு என் கிராம அபிவிருத்திச்சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மீசாலை வடக்கு சனசமூகநிலையம் சுடர் ஒளி சனசமூகநிலையம் சிறீ முருகன்  சனசமூகநிலையம் மதுவன் வாசிகசாலை, வீனஸ் வாசிகசாலை என சனசமூகநிலையங்களும் மேலும் தாய் சேய் நிலையங்களும் அமைந்துள்ளது. கமநலச்சேவை நிலையமும் , கடந்த காலத்தில் ஓர் சந்தையானது மீசாலை புதுச்சந்தை என்ற பெயருடன் நடைபெற்று வந்தது. தும்புத்தொழிற்சாலையும் அமைந்திருந்தது. தற்போது மக்களின் சகல தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் விற்பனை நிலையங்களும், தொழில் சார் நிலையங்களும் கொண்டதாக மீசாலைப் பகுதியானது அமைந்துள்ளது.

மண்ணின் மகிமை தொகு

 
மீசாலை புகையிரத நிலையம்

ஈழத்திரு நாட்டின் வடபால் யாழ் குடாநாட்டில் தென்மராட்சிப்பகுதியில் சகல வளங்களும் நிறைந்து சைவமும்இனிய தமிழும், பழங்களும் கமழும் ஊராக மீசாலை ஊர் அமைந்துள்ளது. அந்த வகையில் மீசாலை ஊரானது தரமான மாம்பழம், பலாப்பழம், என்பவற்றிற்குபெயரும் புகழும் பெற்றுள்ளது. இக்கிராமத்தில் மா, பலா, வாழை, பனை, தென்னை, வேம்பு, தேக்கு, நாவல், மஞ்சலுண்ணா, போன்றவை பயன்தரு மரங்களாக உள்ளது. இதில் மாமரத்தின் இனங்களாக கறுத்தைக்கொழும்பான்,வெள்ளைக்கொழும்பான், அம்பலவி, செம்பாட்டான், விலாட்டு, பாண்டி, சேலம், கழைகட்டி, பச்சைத்தின்னி, வாழைக்காய்ச்சி, நாட்டான் என பல வகைப்பட்ட இனங்கள் காணப்படுகின்றன. இந்த வகையில் இக்கிராமம் மாசாலை எனவும் அது மருவி பின் மீசாலை என வந்ததாகவும் கூறுகின்றார்கள். மீசாலை மாம்பழமானது தரத்தாலும்இ சுவையாலும் பெயர் பெற்று விளங்குகிறது.அதில் கறுத்தைக்கொழும்பான் மாம்பழமானது மிகச் சுவையானதும் பெறுமதி வாய்ந்ததாகவும் அமைந்துள்ளது. அதே சமயம் மாம்பழங்களானது ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிச்சுவையைப் பெற்றதாக அமைந்துள்ளது. எது எப்படி இருந்தாலும் மாம்பழமானது நன்றாக முற்றியதாகவும் இயற்கையாக பழுக்க வைக்கப்பட்டதாகவும் கனிந்து பழுத்த மாம்பழமானது ஒன்றை ஒன்று விட்டு கொடுக்காததாகவும் அமைந்துள்ளது. இந்த மாம்பழங்களை நாம் பறிக்கும் போது நிலத்தில் வீழ்ந்து காயம் ஏற்பட்டு பழுதுகள் ஏற்படாது இருக்க அத்தாங்கு என்று அழைக்கப்படும் உபகரணத்தைப் பாவிக்கப்படுகின்றது.இது ஒரு நீளமான தடியின் ஒரு பக்கத்தில் ஓர் கூடை  அல்லது பை இணைக்கப்பட்டு  மாம்பழத்தை மரத்தில் இருந்து பறிக்கும் போது கூடைக்குள் அல்லது பைக்குள் விழக்கூடியதாகவும் நிலத்தில் விழாததாகவும் அமைந்திருக்கும். இது மாமரத்திற்கும் எல்லோரது பாவணையிலும் இருக்கும். மாம்பழத்தை நாம் தோலைச்சீவி வெட்டிச்சாப்பிடுவது வழக்கம். இருந்தும் இயற்கையாகப் பழுத்த மாம்பழத்தை ஒருசிலர் தோல் சீவாது முழுமையாக எடுத்து ஒரு பக்கத்தில் கடித்து சிறுதுவாரத்தை ஏற்படுத்தி சூப்பிச்சாப்பிடுவதுவழக்கம். இது ஓர் தனிச்சுவையாக இருக்கும்.  இதை மாங்கொட்டை சூப்பிகள் என சிறப்பாகவும் செல்லமாகவும் அழைப்பார்கள்.

எமது கிராமமானது மணல் பிரதேசமாக அமைந்துள்ளது. இந்தப்பிரதேசத்தில் உற்பத்திசெய்யப்பட்ட மாம்பழம் பலாப்பழம் வாழைப்பழம் என்பனவற்றின் சுவையானது தனிச்சிறப்பைக்  கொண்ட சிறப்பைப் பெற்றுள்ளது. மீசாலை மாம்பழம் பலாப்பழமானது எந்தப்பகுதியிலும் விட்டுக்கொடுக்காத தனிச்சிறப்பைக் கொண்டுள்ளது. அத்துடன் இந்த மண்ணும், மண்ணில் வசிப்பவர்களும் எல்லோருடனும் அன்பு கொண்டவர்களாகவும், வந்தோரை வரவேற்று அரவணைக்கும் பெருந்தன்மை கொண்டதாகவும் உள்ள மகிமையைக் கொண்டுள்ளது.

இப்படியான மகிமையைக் கொண்ட மண்ணில் எமது கிராமத்தைச் சிறப்பிக்கும் வகையில் கிராம உடையராக வீரவாகுஉடையார்,கிராமவிதானையாக வேலுப்பிள்ளை விதானையார், சதாசிவம் விதானையார், கல்விசார் கல்வியாளர்கள், சாவகச்சேரி நகரசபைத்தலைவராக மீசாலையைச் சேர்ந்த திரு.சு.கனகரத்தினம் அவர்கள் 1968ல் இருந்து 1979ம் ஆண்டு இடம் பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் எமது தமிழ்க்கட்சியைச் சார்ந்தவர்கள் தமது ஆதிக்கத்தை விட்டுக்கொடுக்க மறுத்த வகையில் இனம் சமுதாயத்தைச் சார்ந்த இளைஞ்ஞர்களின் பெரும்பான்மை இனத்தை தலைமையக கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஐக்கிய தேசியக்கட்சி சார்பாக சாவகச்சேரி நகராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு சாவகச்சேரி நகராட்சி மன்றத்திற்கு ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினராக இரு ஆசனங்களைப் பெற்று திரு.தர்மேந்திரன் அவர்களும் மீசாலையைச் சேர்ந்த திரு. இராசரத்தினம் அவர்களும் உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மேலும் நகர சபைச் செயலாளராக மீசாலையைச் சேர்ந்த திரு.மு.காங்கேத அவர்களும், திரு.மு.தாமோதரம் பிள்ளை அவர்களும் சேவையாற்றி உள்ளார்கள். பிரதேச சபைச் செயலாளராக திரு. பாலச்சந்திரன் அவர்கள் செயலாற்றியுள்ளார்கள். மீசாலையில் தபாலகம் அமைக்கப்பட்ட நாளில் இருந்து முதல் தபாலதிபராக திரு.சா.தில்லையம்பலம் அவர்கள் நீண்ட காலமாக கடைமையாற்றினார். பின் திரு.சா.ரவீந்திரன் அவர்கள் தபாலதிபராக கடைமையாற்றினார். மீசாலை புகையிரத நிலைய  அதிபராக மீசாலையைச் சேர்ந்த திரு.வேலாயுதப்பிள்ளை அவர்கள் நீண்ட காலமாக கடைமையாற்றினார். புகையிரதம் வட பகுதிக்கு வருவது தடைப்பட்டதும்  அவரது கடமையும்   நிறைவடைந்தது  .மேலும் எமது கிராமத்தில் மக்களின் அரும் பெரும் சேவையான வைத்திய சேவையை வருமானத்தை மட்டும் எதிர்பாராது  மக்களுக்கு  சேவை செய்ய வேண்டும் என்றும் ,  தங்கள் திறமையை  மக்கள் அனுபவிக்க வேண்டும் என்ற என்ற எண்ணத்துடன் ஆயுள்வேத உள்நாடு  வைத்தியர்களாக திரு.நடராசா வைத்தியர் , திரு.கார்த்திகேசு அவர்கள் , தொடர்ந்து திரு கந்தசாமி அவர்கள் , திரு விகலர் அவர்கள் , திரு . வீரசிங்கம் ( வீரர் ) அவர்கள்  ,கண்  வைத்தியர்களாக திரு.குஞ்சுதம்பி அவர்கள் , விசேஷ வைத்தியராக   திரு நல்லதம்பி அவர்கள்,  முறி சொறி வைத்தியராக திரு கதிரன் அவர்களை தொடர்ந்து , கிட்டினன்  அவர்கள் ,ஆயுர்வேத வைத்தியராக திரு கதிர்காமநாதன் அவர்கள் ,திருமதி ராசபூபதி  அவர்கள் ,திருமதி சண்டிகா பரமேஸ்வரி அவர்கள் என தொடர்கிறது . மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மீசாலைப்  பகுதியில் தொழில் அதிபர்  திருமதி சுப்பிரமணியம் அவர்களால் ஜெயலட்சுமி மில்  என்ற பெயரில் நெல்  குற்றும் மா ஆலைகள் அமைத்து நெல் அவித்தல் போன்ற பல வகைகளையும் கொண்ட அரிசி ஆலைகள் நீண்ட காலமாக இயங்கி வந்ததது .திரு ஆறுமுகம் அவர்களால் புது சந்தைப் பகுதியில் கூட்டுறவு சங்ககிளைக்கு  என ஓர் கட்டிடம் கட்டி கூட்டுறவு சங்க விற்பனை நிலையம் செயற்பட்டு  வருகிறது . தனியார் வர்த்தக நிலையங்களும்  ஆங்காங்கு அமையப்  பெற்றுள்ளது . எமது கிராமத்தில்  புகழ் படைத்தவர்களாக முதன்முதலாக    திரு  மு .தா ,சுப்பிரமணியம் அவர்கள் சமாதான நீதவானாக நியமனம்  பெற்றார் .தொடர்ந்து திரு வேலன்  மார்க்கண்டு அவர்கள் சமாதான நீதவானாக நியமனம்  பெற்றார் . தொடர்ந்து 2003ம் ஆண்டு பகுதியில் அகில இலங்கை சமாதான நீதவானாக திரு மார்க்கண்டு மகேந்திரன் அவர்களும் திரு பா .வே இராசரத்தினம் அவர்களும் நியமனம்  பெற்றார்கள் .தொடர்ந்து திருமதி  பத்மநாதன்  மஹாலக்சுமி அவர்களும், திரு இராசரத்தினம் அவர்களும் சமாதான நீதவானாக நியமனம் பெற்றார்கள் . தொடர்ந்து திரு  ஆறுமுகம் தில்லைநாதன் அவர்களும் சமாதான நீதவானாக நியமனம் பெற்று தொடர்கிறது . இந்த வரிசையில் கிராமத்தை  சிறப்பித்தவர்களும் மக்கள் சேவையாளர்களுமாக இருந்தவர்கள் வரிசையில் வேலுப்பிள்ளை விதானையார் ,சதாசிவம் விதானையார்,திரு ராசையா விதானையார் ,திரு வீரபாகு உடையார், திரு சு . கனகரத்தினம் சேமன் ,திரு மு .தா .சுப்பிரமணியம் , திரு .இ கா .மார்க்கண்டு கிளாக்கர்  ,திரு சு ஆறுமுகம் ,திருமதி சுப்பிரமணியம் (பூரணக்கா) திரு .மு தாமோதரம்பிள்ளை செயலாளர் ,திரு ஆ  குணநாயகம் சக்கடித்தார் ,திரு சதாசிவம் சக்கடித்தார் , திரு சிவசம்பு பெருமாள் ,திரு சதாசிவம் ஆசிரியர் ,திரு தம்பிபிள்ளை , திரு அருளம்பலம்  ,திரு பொன்னையார் ,திரு சதா நடராசா ,திரு மார்க்கண்டு  பனை தென்னை அபிவிருத்தி கிளை தலைவர் , திரு சோமசுந்தரம் (சின்னர்) என தொடர்கிறது . இப்படியாக எமது கிரமானது சகல வளங்களையும் ,சகல அமைப்புகளையும் ,வணக்கஸ்த்தலங்களையும் , கல்விமான்களையும் , புகழ் படைத்தவர்களையும் கொண்டதாகவும் பரந்த பிரதேசங்களை கொண்டதாகவும் மக்கள் செறிந்ததாகவும் அமைந்த்துள்ளமை பெருமைக்குக்கும் சிறப்புக்கும் உரியதாகும்[1]

இவற்றையும் பார்க்கவும் தொகு

  1. நேர்காணல்15.12.2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீசாலை&oldid=3630189" இலிருந்து மீள்விக்கப்பட்டது