கொடி சத்தியாகிரகம்
கொடி சத்தியாகிரகம் (Flag Satyagraha) 1923ல் பிரித்தானிய இந்தியாவில் நடைபெற்ற ஒரு போராட்டம். இந்திய விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதியான இதில் தேசியவாதக் கொடிகளையும் காங்கிரசு கட்சிக் கொடிகளையும் வீடுகளிலும், தனியார் கட்டிடங்களிலும் பறக்கவிடுவதற்கும் கொடியினை ஏந்து ஊர்வலமாகச் செல்வதற்குமான உரிமைகளை தேசியவாதிகள் போராடிப் பெற்றனர்.
1923ல் நாக்பூரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. அதில் இந்திய தேசியக் கொடியும் காங்கிரசு கொடியும் பயன்படுத்தபப்ட்டன. மக்கள் தங்கள் வீடுகளிலும் கொடிகளைப் பறக்கவிட்ட்னர். இதனை விரும்பாத காலனிய ஆட்சியாளர்கள், தேசியக் கொடியைப் பறக்கவிடுவதற்குத் தடை விதித்தனர். இதற்கு பதிலடியாக ஏப்ரல் 6-13 வரை ஜாலியன்வாலா பாக் படுகொலையை நினைவு கூறும்வண்ணம் ஒரு தேசிய கொடி வாரம் விடுதலை இயக்கத்தினரால் கடைபிடிக்கப்பட்டது. ஏப்ரல் 13ம் தேதி அவர்கள் நடத்த எண்ணியிருந்த கொடி ஊர்வலம் ஆட்சியாளர்களால் தடை செய்யப்பட்டது. தடையை மீறி ஜம்னாலால் பஜாஜ் தலைமையில் நூற்றுக்கணக்கான விடுதலை இயக்கத்தினர் கொடி ஊர்வலத்தை நடத்தினர். ஊர்வலம் நாக்பூர் அரசு அதிகாரிகள் குடியிருப்பை (civil lines) அடைந்த போது காவல்துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்தி ஊர்வலத்தைக் கலைத்தனர். பஜாஜ் உட்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அடுத்த சில வாரங்களில் நாக்பூர் விடுதலை இயக்கத்தினருக்கு ஆதரவாக இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து விடுதலை இயக்கத்தினர் நாக்பூருக்கு வந்து கொடி ஊர்வலங்களை நடத்தினர். அவர்களும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். பிற ஊர்களிலும் கொடி ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. வினோபா பாவே, வல்லபாய் படேல், சி. ராஜகோபாலாச்சாரி போன்ற தலைவர்கள் இந்த ஊர்வலங்களுக்கு தலைமை தாங்கி ஏற்பாடு செய்தனர். 109 நாட்கள் நடைபெற்ற இப்போராட்டத்தில் 1850 பேர் கைது செய்யப்பட்டனர். ஆகஸ்ட் மாதம் காலனிய ஆட்சியாளர்களுக்கும் விடுதலை இயக்கத்தினருக்கு இணக்கமான உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி கொடி ஊர்வலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு கைது செய்தவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.