கொடி (சின்னம்)

கொடி (Flag) என்பது ஒரு தனித்துவமான வடிவமைப்பு மற்றும் வண்ணங்களைக் கொண்ட துணியாகும். பெரும்பாலும் இது செவ்வக அல்லது நாற்கர வடிவில் இருக்கும். ஒரு சின்னமாக, ஒரு தகவல்தொடர்புக் கருவியாக அல்லது அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. கொடியில் பயன்படுத்தப்பட்டுள்ள வரைபடத்திற்கான வடிவமைப்பு விளக்கத்தை குறிக்கவும் கொடி என்ற சொல் பயன்படுகிறது. மேலும் கொடிகள் அடிப்படை சமிக்ஞை மற்றும் அடையாளங்களுக்கான பொதுவான கருவியாக உருவாகியுள்ளன, குறிப்பாக கடல் சூழல் போன்ற தகவல் தொடர்பு சவாலான சூழல்களில் கொடி பயன்படுத்தப்படுகிறது. இங்கு அணுகல் குறியீடாக கொடி பயன்படுத்தப்படுகிறது. கொடிகளை பற்றி படிக்கும் பிரிவு கொடியியல் எனப்படுகிறது. தேசியக் கொடிகள் என்பவை தேசபக்தியின் சின்னங்கள் ஆகும், அவை பரவலான மாறுபட்ட விளக்கங்களைக் கொண்டுள்ளன. பெரும்பாலும் வலுவான இராணுவக் குழுக்களின் தொடர்பை உள்ளடக்குகின்றன. ஏனெனில் அவற்றின் அசலான ஒரே நோக்கத்திற்காக தொடர்ந்து அவை பயன்படுத்தப்படுகின்றன.

கான்பெர்ரா பாராளுமன்றத்தில் பறக்க விடப்பட்டுள்ள பல கொடிகள்

செய்தி அனுப்புதல், விளம்பரம் அல்லது அலங்கார நோக்கங்களுக்காகவும் கொடிகள் பயன்படுத்தப்படுகின்றன. கொடிகளைப் பயன்படுத்தும் சில இராணுவ அலகுகள் "கொடிகள்" என்று அழைக்கப்படுகின்றன. கொடி என்பது அரபு நாடுகளில் உள்ள ஒரு படைப்பிரிவுக்கு சமம். எசுப்பானியாவில் கொடி என்பது எசுப்பானிய படையணியில் ஒரு படைப்பிரிவுக்கு சமமானதாகும்.

கொடி வகை தொகு

கொடிகள் பலவகைப்படும். ஒரு நாட்டின் அடையாளத்தை குறியீடாகக்கொண்டு அந்த நாட்டின் தேசியக் கொடியாக அந்தந்த நாட்டின் விதிமுறைப்படி பறக்கவிடப்படும். இதுதவிர அரசியல் கட்சிகள், தங்களது கட்சிகளை அடையாளப்படுத்தும் விதமாக தங்கள் கொடிகளைப் பயன்படுத்துவர். ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சிக்கான கொடியை ஒரே வண்ணத்தில் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வண்ணங்களில் கட்சியின் கொடியை வடிவமைத்துப் பயன்படுத்துவார்கள். கட்சிக்கொடியில் தங்களது சின்னங்களையும் பொறித்து வடிவமைப்பதும் உண்டு. ஆனால் கொடியின் மூலம் (origin) குறித்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.[1]

கொடி என்பது இப்படித்தான் என்று இன்று நாம் அடையாளப்படுத்துவது, ஒரு துண்டுத் துணியில் ஒரு நிறுவனத்தின் அல்லது ஒரு கட்சியின் குறிக்கோளைப் பிரதிநிதிப்படுத்துவது போன்ற குறியீடுகளுடன் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வண்ணங்களுடன் திகழுவதைத்தான் கொடி என குறிப்பிடுகிறோம். இந்தியத் துணைக்கண்டத்தில் அல்லது பண்டைய சீனா காலத்தில் கொடிகள் அறிமுகப்படுத்தப்பட்டது என்பர். சீனாவில் கொடிகள் பல வண்ணங்களுடன் கூடிய விலங்குகளைக் கொண்டதாக கொடிகள் அமைந்திருந்தனை.[2]

பதினேழாம் நூற்றாண்டில் கடல் வாணிகம் செழிப்புற்றிருந்தபோது கப்பல்கள் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவை என்பதைக் குறிக்கும் வகையில் கொடியைப் பறக்கவிட வேண்டும் என்று கடற்சட்டம் கொண்டுவரப்பட்டது. அதனடிப்படையில் நாவாய்கள், கப்பல்கள் கொடியுடன் கடலில் வலம் வந்தன. கடலில்மிதக்கும் கப்பல்கள் இந்தக் கொடிகளைப் பறக்கவிட்டதன் மூலம், அது எந்த நாட்டுக் கப்பல், அது வணிகக் கப்பலா, பயணிகள் செல்லும் கப்பலா, சர்வதேசப் போக்குவரத்துக் கப்பலா என்ற தகவல்களை அறிந்துகொள்ளும் விதமாக அமைந்தது.[3]

இந்திய தேசியக் கொடி தொகு

இந்திய நாட்டின் தேசியக் கொடி மூவர்ணங்களையுடையது. கிடைமட்டமாக மூன்று பட்டைகளைக் கொண்டு காவி வண்ணம் மேற்புறத்திலும், பச்சை வண்ணம் கீழ்ப் புறத்திலும் வெள்ளை வண்ணம் நடுவிலும் இருக்கும் வகையில் அமைந்துள்ளது. வெண்மை நிறத்தில் கடல் நீல வண்ணத்தில் 24 ஆரங்களையுடைய சக்கரம் தீட்டப்பட்டுள்ளது.[4] காவி வண்ணமானது தைரியம் மற்றும் தியாகத்தையும், வெண்மை நிறம், உண்மை மற்றும் அமைதியையும், பச்சை நிறம் நம்பிக்கை, பசுமை, விவசாய செழிப்பு போன்றவற்றை குறிப்பதாகவும் கற்பிக்கப்படுகிறது. கொடியின் மையப் பகுதியில் உள்ள அசோகச் சக்கரம் வாழ்க்கைச் சுழற்சியை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

தேசியக் கொடி சூரியன் உதித்த பின் தான் ஏற்றப்பட வேண்டும். அதே போல சூரியன் மறைவதற்குள் இறக்கப்பட வேண்டும். தேசியத் தலைவர்கள் மறைவின் போது தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும். தேசியக் கொடிக்கு எந்த வகையிலும் அவதூறு, அவமரியாதை ஏற்படாத வகையில் கொடியைக் கையாள வேண்டும்.

விதிமுறைகள் தொகு

தேசியக் கொடியை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற முடியாத நிலை 2002 ஆம் ஆண்டு வரை இருந்தது. அதன் பின் பொது மக்கள் எங்கு வேண்டுமானாலும் தேசியக்கொடியை ஏற்றிக் கொள்ளலாம் என இந்திய நடுவணரசு அனுமதி அளித்தது. தேசியக் கொடியை கையாளவும், அதற்கு உரிய மரியாதை செய்யவும் இந்திய தேசியக் கொடி சட்டம், 2002 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. பல்வேறு விதிமுறைகள் இதில் உள்ளன. தேசியக் கொடியை எந்த விளம்பரத்திற்கும் பயன்படுத்தக் கூடாது. பொது இடங்களில் தேசியக் கொடியினைக் கிழித்தல், எரித்தல், அவமதித்தல் போன்றவை தண்டனைக்குரிய குற்றமாகும். தேசியக் கொடியை நாம் அணியும் உடை, நாம் பயன்படுத்தும் கைத்துண்டுகள், நாம் பயன்படுத்தும் கைக்குட்டைகளில் பயன்படுத்தக் கூடாது. தேசியக் கொடி மண், தரை, தண்ணீரில் படும்படியாக பறக்கவிடக் கூடாது. தேசியக்கொடியை நைந்த, கிழிந்த நிலையிலோ, வண்ணம் மங்கிய நிலையிலோ ஏற்றக்கூடாது.[5]

மேற்கோள்கள் தொகு

  1. Inglefield, p. 39.
  2. Flag | heraldry. Encyclopedia Britannica. Retrieved February 15, 2019.
  3. Articles 90–94 of the UN Convention on the Law of the Sea
  4. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 23 January 2013. பார்க்கப்பட்ட நாள் 27 February 2016.{{cite web}}: CS1 maint: archived copy as title (link) Flag Code of India
  5. "Flag Code of India". Ministry of Home Affairs, Government of India. 25 January 2006. Archived from the original on 10 January 2006. பார்க்கப்பட்ட நாள் 11 October 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடி_(சின்னம்)&oldid=2881148" இலிருந்து மீள்விக்கப்பட்டது