தேசியக் கொடி

தேசியக் கொடி என்பது நாடொன்றிற்குக் குறியீடாக அமையும் ஒரு கொடியாகும். இது அந்நாட்டுக் குடிமக்களால் பறக்கவிடப்படக்கூடியது. வழக்கமாக இதே கொடியே அந்த நாடுகளை வெளிநாடுகளில் பிரதிநிதித்துவப்படுத்தவும் பயன்படுகிறது.

பாடசாலைகள், நீதிமன்றங்கள், பல்வேறு அரசுக் கட்டிடங்கள் போன்ற பொதுக் கட்டிடங்களில், தேசியக் கொடிகளை அவற்றின் மிகவுயர்ந்த இடங்களிலோ அல்லது அவற்றின் முன்றலில் அமைக்கப்படுகின்ற பிரத்தியேகமான கொடித் தம்பங்களிலோ பறக்கவிடுவது வழக்கம். முக்கியமான தனியார் கட்டிடங்களிற்கூட இவ்வழக்கம் பின்பற்றப்படுவதுண்டு.

கப்பல்களும் தேசியக் கொடிகளை அவற்றின் அதியுயர் புள்ளிகளிலிருந்து பறக்க விடுகின்றன. சிறிய கலங்களும், படகுகளும் கூட, விசேடமாக, அதிகாரப்பூர்வ சேவையில் ஈடுபட்டிருக்கும் போது இக் கொடியைப் பறக்கவிடுகின்றன.

இராஜதந்திர வாகனங்களும் சிறிய அளவிலான தேசியக் கொடியொன்றை அவற்றின் முன்பகுதியில் இணைக்கப்படுகின்ற தண்டொன்றில் பறக்கவிடப்படுவது வழக்கம். இராஜதந்திரப் பாதுகாப்பையும், அவற்றுக்குரிய சிறப்பு சட்ட நிலையையும் காட்டுவதற்காக இவ்வாறு செய்யப்படுகின்றது.

குறிப்பிட்ட நாடுகள் இயக்கும் விமான சேவைகளைச் சேர்ந்த விமானங்களிலும் தேசியக் கொடியின் படம் அவற்றின் முன் பகுதியில் பொறிக்கப்படுவதுண்டு. (விண்வெளி ஓடம் இதற்குச் சிறந்ததொரு உதாரணமாகும்.)

ஆயுதப்படைப் பிரிவுகள் வழமையாகத் தேசியக் கொடிகளைப் பயன்படுத்துவதில்லை. பதிலாக, பிரிவுகளின் கொடிகளையோ அல்லது அவ்வாயுதப் படைச் சேவைக்குத் தனித்துவமான வேறு சிறப்பான கொடிகளையோ பயன்படுத்துவார்கள். எனினும், இக் கொடிகள் வழக்கமாகச் சம்பந்தப்பட்ட தேசியக் கொடிகளை அடியொற்றியே வடிவமைக்கப்படுகின்றன. படைத் தளங்களில்பொதுவாகத் தேசியக் கொடிகளே பறக்கவிடப்படுகின்றன.

தேசியக் கொடிகளின் முறையான காட்சிப்படுத்தலில் பல வைபவரீதியான அம்சங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, ஐக்கிய அமெரிக்காவின் கொடியைப் போல, சில தேசியக் கொடிகள், உதவிக்கான அழைப்பு மற்றும் அடையாளம் காணப்படக்கூடிய அபாயச் சைகைகளாகவன்றி, தலைகீழாக ஒருபோதும் பறக்கவிடக்கூடாது.

தேசியக் கொடிகளைக் காட்சிப்படுத்துவது தொடர்பாகப் பல விதிகள் உள்ளன. பின்வருவது தென்னாபிரிக்காவிலிருந்து பெறப்பட்டதாயினும், இது பல நாடுகளும் பின்பற்றும் மாதிரியை ஒத்ததேயாகும்.

தேசியக் கொடிகளை

  1. வேறு கொடிகளுடன் ஏற்றும்போது, முதலில் ஏற்றப்பட்டு, இறுதியாக இறக்கப்பட வேண்டும்;
  2. மற்ற நாடுகளின் தேசியக் கொடிகளுடன் ஏற்றப்படும்போது, எல்லாக் கொடிகளும் சம அளவினதாக ஒரே உயரத்தில் பறக்கவிடப்பட வேண்டும், அத்துடன் தென்னாபிரிக்காவின் தேசியக்கொடி, கட்டிடத்தின் அல்லது மேடையின் வலது பக்கத்தில் பறக்கவிடப்பட வேண்டும். (அதாவது, பார்வையாளர்களுக்கு இடதுபக்கத்தில் இருக்கவேண்டும்);
  3. தேசியக் கொடிகளல்லாத வேறு கொடிகளுடன், தனிக்கம்பங்களில் ஏற்றப்படும்போது, நடுவில் அல்லது பார்வையாளருக்கு இடது பக்கத்தில் அல்லது மற்றவற்றிலும் உயரமாக ஏற்றப்பட வேண்டும்;
  4. வேறு கொடிகளுடன் ஒரே கம்பத்தில் ஏற்றப்படும்போது, இது மேலே இருக்கவேண்டும்;
  5. வேறு கொடிகளுடன் குறுக்குக் கம்பங்களில் ஏற்றப்படும்போது, தேசியக்கொடி பார்வையாளருக்கு இடப்பக்கத்திலும் இருப்பதுடன், அத கம்பம் மற்றதற்கு முன்னும் இருக்கவேண்டும்; மற்றும்
  6. மற்றக் கொடிகள் அல்லது கொடிகளுடன் ஊர்வலத்தில் கொண்டுசெல்லும்போது, தேசியக்கொடி வலப்பக்கத்தில் செல்லவேண்டும். ஒரு கொடி வரிசை இருந்தால், மேலேயுள்ள (c) பயன்படுத்தப்பட வேண்டும்.

தேசியக் கொடிகளின் பட்டியலுக்கு தேசியக் கொடிகளின் பட்டியலைப் பார்க்கவும்.

பின்வருவனவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசியக்_கொடி&oldid=3217339" இலிருந்து மீள்விக்கப்பட்டது