கொல்லன் அழிசி

கொல்லன் அழிசி சங்ககாலப் புலவர்களில் ஒருவர். 4 பாடல்கள் இவர் பாடியனவாகச் சங்கநூல் தொகுப்பில் உள்ளன. அவை: குறுந்தொகை 26, 138, 145, 240.

இரும்புக் கருவிகள் செய்பவரையும், பொன்னணிகள் செய்பவரையும் கொல்லன் என்பர். அழிஞ்சி என்பது சுண்டைக்காய்ப் பருமன் கொண்ட வெண்ணிறமுள்ள ஒரு பழம்.

இவர் சொல்லும் செய்திகள் தொகு

குறுந்தொகை 26 தொகு

  • திணை - குறிஞ்சி

காதலனை நினைத்துக் காதலியின் உடலும் உள்ளமும் இளைத்துப் போயின. தன் மகளின் இந்த நிலையைக் கண்டு செவிலித்தாயும் பெற்ற நற்றாயும் கட்டுவிச்சியை அழைத்துத் தன் மகள் இளைத்ததற்குக் காரணம் கேட்கின்றனர். அப்போது தோழி முந்திக்கொண்டு நிகழ்ந்ததைக் கூறுகிறாள்.

  • தோழி அறத்தொடு நிற்றல்

அரும்பு இல்லாமல் எல்லாமே பூத்துக் கிடக்கும் வேங்கை மரக் கிளையில் இருக்கும் மயில் பூப் பறிக்கும் பெண்மகள் போலத் தோன்றும் நாடன் அவன். அவன் தகாதவன் போலத் தோன்றினாலும் எந்தத் தீயதையும் வாயால்கூடச் சொல்லமாட்டான்.

இப்படி நான் கூறுவதை நீங்கள் பொய் என்று நினைக்கலாம். அன்று கொக்கு என்னும் மாவிலையைத் தின்றுகொண்டிருந்த வரையாட்டுக் குட்டியின் தந்தை அவனை அறியும். மாம்பழத்தைத் தின்றுகொண்டிருந்த ஆண்குரங்கு கடுவனும் அறியும் - என்கிறாள் தோழி.

குறுந்தொகை 138 தொகு

பகலில் குறியிடத்துக்கு வந்த தலைவன் தலைவியை அடையமுடியாமல் மீள்கிறான். பின்னும் வருகிறான். தோழி இரவில் வா என்று குறியிடம் சொல்கிறாள்.

ஊரே தூங்கிவிட்டாலும் நாங்கள் தூங்கமாட்டோம். எங்கள் வீட்டிலிருந்து ஏழு வீட்டுக்கு அப்பால் மயிலின் காலடி போன்று இலைகளைக் கொண்ட நொச்சி பூத்திருக்கிறது. அது ஆடும் ஓசை கேட்கிறதா என்று உற்றுக் கேட்டுக்கொண்டேயிருப்போம். (அங்கு வந்து நொச்சிச் செடியை ஆட்டு என்று குறியிடம் சொல்கிறாள் தோழி)

குறுந்தொகை 145 தொகு

திருமணக் காலம் தள்ளிக் கொண்டே செல்கிறது. தலைவி தன் தோழியிடம் சொல்லி வருந்துகிறாள்.

நான் வாழவேண்டிய ஊர் இது அன்று. அவர் ஊர். அவன் கானலஞ் சேர்ப்பன். அவன் திருமணம் செய்துகொள்ளாது காலம் கடத்திக் கொடுமைப்படுத்துகிறான். அதனால் எனக்கு அமைதி இல்லாத துயரம். இந்தத் துயரத்தோடு வருந்திக்கொண்டு நான் நள்ளிரவிலும் தூங்காமல் இருக்கிறேன். ஊரெல்லாம் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கிறது. இரவு எனக்கு மட்டுந்தான் நீண்டுகொண்டே போகிறது. என்ன செய்வேன்? - என்கிறாள் தலைவி.

குறுந்தொகை 240 தொகு

தலைவன் பிரிவைத் தலைவி பொறுத்துக்கொள்ள மாட்டாள் என்று கவலைப்படும் தோழியிடம் தலைவி சொல்லும் செய்திகள் இவை.

பனியில் காய்க்கும் அவரைக் காய் கிளியின் வாய் போலக் காய்த்துக் கிடக்கும் பனிக்காலம் வந்துவிட்டது. காட்டுப் பூனையின் பல்வரிசை போல் முல்லைப் பூக்கும் மாலை வேளையும் வந்துவிட்டது. இந்த வேளையில் அவரது மலையைப் பார்க்கிறேன். கடலில் செல்லும்போது மரக்கலம் (கப்பல்) மறைவது போல அவர் மலையும் என் கண்ணிலிருந்து மறைகிறது. - இதுதான் என் நிலை என்கிறாள் தலைவி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்லன்_அழிசி&oldid=3612217" இலிருந்து மீள்விக்கப்பட்டது