கோதண்டண்டராம சுவாமி கோவில் என்னும் ஆதித்தேஸ்வரம்: பள்ளிப்படை கோவில்

சோழர் கட்டிய பள்ளிப்படைக் கோயில்

கோதண்டண்டராம சுவாமி கோவில் என்னும் ஆதித்தேஸ்வரம்: பள்ளிப்படை கோவில் ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி மண்டலத்தில், புத்தூர் - திருக்காளத்தி செல்லும் பாதையில் திருக்காளத்திக்கு முன்னதாக அருகில் உள்ள தொண்டமானாற்றூர் (தொண்டமானாடு எனும் கிராமம் மிக அருகிலுள்ளது) பக்கத்தில் உள்ள பொக்கசம் பாளம் (தெலுங்கு: బొక్కసం పాలెం) கிராமத்தில் அமைந்துள்ள இந்து சமயக் கோவிலாகும். இவ்வூர் திருக்காளத்தியிலிருந்து 6 மைல் (9.66 கி.மீ.) தொலைவில் உள்ளது. இக்கோயில் ஒரு பள்ளிப்படைக் கற்றளி ஆகும். தொண்டமானாற்றூரில் இறந்த ஆதித்த சோழனின்[1] அஸ்தியை புதைத்து அந்த இடத்தில் அவரது மகன் பராந்தக சோழனால் கட்டப்பட்ட பள்ளிப்படை இதுவாகும். இது தற்காலத்தில் கோதண்ட இராமேசுவரம் என்றும் ஆதித்தீசுவரம் என்றும் அழைக்கப்படுகிறது [2] ஆந்திரப் பிரதேச அரசின் தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் துறையால் பராமரிக்கப்பட்டுவரும் இக்கோவில் ஒரு நினைவுச்சின்னம் ஆகும்.

கோவில் அமைப்பு

தொகு

ஊரின் நடுவே, கிழக்குப் பார்த்தவாறு அமைந்துள்ள, இக்கோவிலின் மூலவர் கோதண்டராம சுவாமி, அம்பிகை காமாட்சி அம்மை ஆவார். மூலவர் சிவலிங்கம் சதுர வடிவம் கொண்ட தனிக் கருவறையில் நிறுவப்பட்டுள்ளது. மூலவர் கோவில் விமானம், உபானம் முதல் பிரஸ்தாரம் வரையிலான உறுப்புகள் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளன. சிகரம் உள்ளிட்ட மேற்கட்டுமானம் செங்கல் மற்றும் சுண்ணாம்புக் காரையில் கட்டப்பட்டுள்ளன. கருவறை அர்த்தமண்டபம் கொண்டு அமைந்த கட்டுமானம். வடபுறத்தின் திரிபட்ட குமுதப்படையில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. காமாட்சி அம்மன் சன்னதி, மூலவர் சன்னதிக்கு இடது புறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இது பிற்கால கட்டுமானம் ஆகும். அருகில் நவக்கிரக மேடை உள்ளது. விசாலமான இக்கோவில் வளாகம் செவ்வக வடிவச் சுற்று மதிற்சுவர் சூழ அகன்ற திருச்சுற்றுடன் காணப்படுகிறது. மூன்று நிலைகளுடன் கூடிய இராஜகோபுரம், பலிபீடம், நந்தி மண்டபம், கொடிமரம் எல்லாம் ஒரே நேர் கோட்டில் அமைந்துள்ளன.

வரலாறு

தொகு

விஜயாலய சோழனின் (கி.பி.846-881) மகனாகிய முதலாம் ஆதித்த சோழன் (கி.பி.871-907) கி.பி. 907 ஆம் ஆண்டு தொண்டமானாற்றூர் என்னுமிடத்தில் இறந்து போனார்.[3] சோழ மன்னனின் மரணம் குறித்து “தொண்டைமானரூர் துஞ்சின உடையார்” என்ற அடைமொழியுடன் (epithet) உத்தம சோழனின் திருமால்புரம் (திருமால்பேர்) கல்வெட்டு (S.i.i. vol 3 no 142) பதிவு செய்துள்ளது.[4] முதலாம் ஆதித்த சோழனின் அஸ்தியின் மீது முதலாம் பாரந்தக சோழன் தொண்டமாநாட்டில் எடுப்பித்த பள்ளிப்படைக் கோவிலாகும். இது முதலாம் ஆதித்த சோழன் என்ற கோதண்டராமனின் நினைவாக எழுப்பப்பட்டது. தொல்லியல் ஆய்வாளர் திரு. வெங்கய்யா இந்தத் தொண்டமானாற்றூரை ஸ்ரீ காளஹஸ்திக்கு அருகில் உள்ள தொண்டமாநாடு என்று அடையாளம் கண்டுள்ளார். இவ்வூரை "திருவேங்கடக் கோட்டத்து ஆற்றூர் நாட்டு தொண்டமான் பேராற்றூர்' என்று கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.

பள்ளிப்படைக் கோவில்கள் பற்றிப் பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி கூறியுள்ள கருத்து இங்கு குறிப்பிடத்தக்கது.

“ஆதித்தீஸ்வரா தொண்டமாநாட்டில், முதலாம் பரந்தகனால் அவரது தந்தைக்குப் பள்ளிப்படையாக எழுப்பப்பட்டது; அரிஞ்சிகை ஈஸ்வரா மேல்பாடியில் முதலாம் இராஜராஜனால், ஆற்றூரில் மரணமடைந்த அரிஞ்சய சோழனை நினைவூட்டுவதற்காகக் கட்டப்பட்டது; இராமநாதன் கோயிலில் உள்ள பஞ்சவன்மாதேவீஸ்வரா முதலாம் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. இவையெல்லாம் கவனத்தைக் கவர்கிற எடுத்துக்காட்டுகளாகும்.” [5]

கல்வெட்டு

தொகு

பிற்காலச் சோழர்கள் காலத்தில் ஸ்ரீ காளஹஸ்தி, தொண்டைமண்டலம் (ஜெயம்கொண்ட சோழமண்டலம்), திருவேங்கட கோட்டம், பெரும்பாணப்பாடி நாடு ஆற்றூர் வருவாய் பிரிவில் அடங்கிய ஊராக இருந்து வந்துள்ளது. இவ்வூர் வடபகுதி ஜெயம்கொண்ட சோழமண்டலத்தின் கஜானாவாகவும் திகழ்ந்துள்ளது. இதன் காரணமாகவே இவ்வூருக்கு பொக்கிஷம்பாளையம் என்ற பெயர் வந்ததாகத் தெரிகிறது. வசூலிக்கப்பட்ட வரியை வாங்கிச் செல்வதற்கு இங்கு வந்த முதலாம் ஆதித்த சோழன் காய்ச்சல் கண்டு கி.பி. 907 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் கேட்டை நட்சத்திரத்தன்று இறந்துவிட்டான். ஆதித்த சோழனின் நினைவாக அவனது அஸ்தியின் மீது முதலாம் பராந்தக சோழனால் எழுப்பப்பட்டதுதான் இந்த கோதண்டராமேஸ்வரம் என்னும் ஆதித்தேஸ்வரம் என்ற பள்ளிப்படைக் கோவிலாகும்.[6]

கோண்டராமேஸ்வர சுவாமி கோவில் மூலவர் விமானத்தின் வடபுறத்தின் திரிபட்ட குமுதப்படையில் முதலாம் பராந்தக சோழனின் விரிவான 34 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (=கி.பி. 941) ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.[7]

ஆதித்த சோழன் பிறந்த நட்சத்திரம் சதயம் ஆகும். எனவே சதய நட்சதிரத்து நாளிலும் ஒரு விழா எடுக்க வகை செய்யப்பட்டிருந்தது. கி.பி. 940 ஆம் ஆண்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆதித்தன் மறைந்த கேட்டை (18 ஆவது நட்சத்திரம் முதல்) ஆதித்தன் பிறந்த சதயம் (24 ஆவது நட்சத்திரம் வரை) ஏழு நாட்கள். ஸ்ரீ கோதண்டராமீஸ்வரமாகிய ஆதித்தீஸ்வரத்து மூலவருக்கு புரட்டாசி மாதம் (தமிழ்) கேட்டை நட்சத்திரம் தொடங்கி சதய நட்சத்திரம் வரை திருவிழா எடுப்பதற்கும் ஏழு நாட்களுக்கு உணவு அளிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியை முதலாம் பராந்தகனின் கல்வெட்டு பதிவு செய்துள்ளது. இக்கல்வெட்டு இந்த ஏழு நாள் விழாவை, தேவர்களின் தலைவனும், இடி மற்றும் மழையின் கடவுளுமான, இந்திரனுக்கு அர்ப்பணிக்குமாறு அறிவுறுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 3.2 சோழப் பேரரசர்கள் - முதல் ஆதித்தசோழன் (கி.பி.871-907)
  2. "மீண்டும் உயிர்த்தெழுகிறான் ஆதித்தன்". கட்டுரை. http://www.varalaatrupudhayal.in. பார்க்கப்பட்ட நாள் 16 சனவரி 2017. {{cite web}}: External link in |publisher= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Balasubrahmanyam, S. R. (1960). Early Chola Temples: Parantaka I to Rajaraja I, 907-985. Bombay: Asia Publishing House. p. 92. {{cite book}}: |access-date= requires |url= (help)
  4. Krishna Sastry, H (1987). South Indian Inscriptions. vol III Part - III Miscellaneous Inscriptions From the Tamil Country. New Delhi: Archaeological Survey of India. p. No. 142. {{cite book}}: |access-date= requires |url= (help)
  5. Nilakanta Sastri, KA (1984). The Colas. Madras: The University of Madras. p. 106. {{cite book}}: |access-date= requires |url= (help)
  6. நாகசாமி., இரா. "இறந்தும் இறந்திலான்". தமிழ் ஆர்ட்ஸ் அகாடமி. Archived from the original on 2 அக்டோபர் 2019. பார்க்கப்பட்ட நாள் 11 April 2022.
  7. Subramaniya Aiyar, KV (1937). South Indian inscriptions Vol. 8, Miscellaneous inscriptions from the Tamil, Malayalam, Telugu and Kannada countries. Madras: Superintendent Government Press,: Archaeological Survey of India. p. 268 (Vol. VIII, No. 529 (A.R. No. 230 of 1903). {{cite book}}: |access-date= requires |url= (help)CS1 maint: extra punctuation (link)