கோந்தைப்பிட்டி மீன்பிடித்துறைப் பிரச்சினை

கோந்தைப்பிட்டி மீன்பிடித்துறைப் பிரச்சினை என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் கோந்தைப்பிட்டி என்னும் இடத்தில் முஸ்லிம் மீனவர்களுக்கும், தமிழ் மீனவர்களுக்கும் இடையில் 2012 சூலை 16 முதல் இடம்பெற்று வரும் மீன்பிடித்துறை தொடர்பான சர்ச்சையைக் குறிக்கும்[1]

இலங்கையில் மன்னார் மாவட்டம்

பின்னணி

தொகு

கோந்தைப்பிட்டி என்பது மன்னார் நகரத்தை ஒட்டிய கடற்கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மீன்பிடித்துறையாகும். இத்துறையை மன்னாரில் உள்ள உப்புக்குளம் என்ற இடத்தைச் சேர்ந்த முஸ்லிம் மீனவர்கள் தமது தொழிலுக்குப் பயன்படுத்தி வந்தனர். ஆயினும், மன்னாரின் விடத்தல் தீவில் இருந்து போர்ச்சூழல் காரணமாக இடம்பெயர்ந்து மன்னார் நகரில் தங்கியிருந்த தமிழ் கத்தோலிக்க மீனவக் குடும்பங்கள் இங்கு தொழில் செய்வதற்கான அனுமதியை முஸ்லிம் மீனவர்கள் வழங்கியிருந்தார்கள்[1].

ஆனாலும், போர்ச்சூழலில் இடம்பெயர்ந்து புத்தளம் பகுதிக்குச் சென்றிருந்த முஸ்லிம் மீனவர்கள் திரும்பி மன்னார் வந்தபோது கோந்தைப்பிட்டி மீன்பிடி துறையைத் தம்மிடம் மீளத் தருமாறு கேட்டிருந்தனர். இதனை அடுத்து தமிழ் மீனவர்களுக்கென மன்னார் நகரில் இரண்டாம் கட்டைப் பகுதியில் வேறு இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த இடத்திற்கு தனியார் முஸ்லிம் ஒருவர் உரிமை கோரியதால், அங்கு அவர்கள் மீன் பிடிக்க முடியவில்லை. அவர்களை அங்கு மீன் பிடிக்கத் தடை செய்யக்கோரி அவர் வழக்குப் பதிந்திருந்தார். இந்த வழக்கு முடியும் வரையில் தமிழ் மீனவர்களை கோந்தைப்பிட்டியிலேயே தொழில் செய்ய அனுமதிக்குமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது[1].

முஸ்லிம் மீனவர்களும், ஊர் மக்களும் இணைந்து கோந்தைப்பிட்டிக்குச் சென்று அங்கிருந்த தமிழ் மீனவர்களின் மீன்வாடிகள், மீன்பிடி படகுகள் ௭ன்பவற்றை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்கள். இதனை அடுத்து தமிழ் மீனவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை அவர்களுக்குக் காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிமன்றம் 2012 சூலை 16 அன்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை முஸ்லிம் மீனவர்கள் ஏற்றுக் கொள்ளாமல், தமிழ் மீனவர்கள் உடனடியாகவே அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும் ௭னக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதிமன்றம் மீது தாக்குதல்

தொகு

சூலை 18 புதன்கிழமை காலை மன்னார் பாலத்தருகில் கூடிய முஸ்லிம் மீனவர்களும் மக்களும் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ௭திராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மன்னார் நகருக்கான பிரதான வீதி இதனால் தடைப்பட்டது. நீதிமன்றத்திற்கும் மன்னார் நீதவானுக்கு ௭திராகவும் அவர்கள் குரல் ௭ழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைக் கலைந்து செல்லுமாறு கூறிய காவல்துறையினர் அவர்களைக் கலைப்பதற்கு முற்பட்டார்கள். காவல்துறையினர் மீதும், நீதிமன்றக் கட்டிடத்தின் மீதும், வாகனங்கள் மீதும் கற்கள் வீசப்பட்டன. அப்போது அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த கலகம் அடக்கும் காவல்துறையினர் தடியடியைத் தொடங்கினர். இந்தக் கலவரத்தின்போது, மூன்று உயர் அதிகாரிகள் உட்பட ஆறு காவல்துறையினரும், பொதுமக்கள் சிலரும் காயமடைந்தனர். மன்னார் மேல் நீதிமன்றத்தின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனை அடுத்து இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசப்பட்டது[2].

அமைச்சர் மீது குற்றச்சாட்டு

தொகு

இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தவர்களுக்குப் பின்னணியில் இலங்கை அமைச்சர் ரிசாட் பதியுதீன் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது[3]. மன்னார் நீதவானை அமைச்சர் தொலைபேசியில் அழைத்து அவரது தீர்ப்பு பிழையானது ௭ன்றும், இதனால் மன்னார் பற்றி ௭ரியும் ௭ன்று தெரிவித்திருந்ததாகவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்[4]. ஆனால், இக்குற்றச்சாட்டை அமைச்சர் ரிசாட் பதியுதீன் மறுத்துள்ளார்.

நீதிமன்றங்களில் பணிப்புறக்கணிப்பு

தொகு

மன்னாரில் நீதிமன்றம் தாக்கப்பட்டமையைக் கண்டித்து 2012 சூலை 20 அன்று இலங்கை முழுவதிலும் உள்ள வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் இறங்கினார்கள்[5]. பல இடங்களிலும் வழக்கறிஞர்களும் ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டார்கள்.

இலங்கை அரசு நடவடிக்கை

தொகு

மன்னார் நீதவான் அச்சுறுத்தப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்[6]. மன்னார் நீதவான் செய்த முறைப்பாடு தொடர்பாக முறையான விசாரணை நடத்துமாறு காவல்துறை மா அதிபருக்கு அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்[7]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 செல்வரத்தினம் சிறீதரன், நீதித்துறையில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் கோந்தைப்பிட்டி மீன்பிடித்துறை விவகாரம், வீரகேசரி, சூலை 21, 2012
  2. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மீது மன்னாரில் கண்ணீர்ப்புகைப் பிரயோகம், தமிழ் மிரர், சூலை 18, 2012
  3. நீதவானுக்கு அச்சுறுத்தல்: நாடுமுழுவதும் நீதித்துறை முடங்கியது, பிபிசி, சூலை 20, 2012
  4. மன்னார் பிரச்சினைக்கு அமைச்சரவை அமைச்சர் ஒருவரே காரணம்: ஜோன் அமரதுங்க, தமிழ் மிரர், சூலை 20, 2012
  5. Sri Lanka lawyers boycott courts, பிபிசி, சூலை 21, 2012
  6. மன்னார் நீதவான் அச்சுறுத்தப்பட்டமைக்கு நீதி அமைச்சர் ஹக்கீம் கண்டனம், தமிழ் மிரர், சூலை 20, 2012
  7. மன்னார் நீதவானின் முறைப்பாடு தொடர்பாக விசாரணை நடத்த ஜனாதிபதி உத்தரவு, தமிழ் மிரர், சூலை 20, 2012