கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்

கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். புறநானூறு 54[1], 61[2], 167, 180, 197, 394 ஆகிய ஆறு பாடல்கள் இவரால் பாடப்பட்டவை.

பாடல் பாடப்பட்டவர்
புறநானூறு 54 சேரமான் குட்டுவன் கோதை
புறநானூறு 61 சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி
புறநானூறு 167 ஏனாதி திருக்கிள்ளி
புறநானூறு 180 ஈந்தூர் கிழான் தோயன்மாறன்
புறநானூறு 197 சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்
புறநானூறு 394 சோழிய ஏனாதி திருக்குட்டுவன்

பாடல் சொல்லும் செய்திகள்

தொகு

கவிகை வண்மைக் கடுமான் கோதை

தொகு

கோதையின் நாளவைக்குள் புகுதல் இரவலர்களுக்கு எளிதாம். மாரி போல் வழங்குதல் கோதைக்கு அதைவிட எளிதாம். ஆட்டிடையன் அந்தப் பக்கமே செல்லாத புலிக்குகைப் போலப் பகைவர்கள் இவன் நாட்டுப்பக்கமே செல்லமாட்டார்களாம். (புறம் 54)

இயல்தேர்ச் சென்னி

தொகு

இவனோடு மலைந்தோர் வாழக் கண்டதும் இல்லையாம். வணங்கியோர் வருந்தக் கண்டதும் இல்லையாம். (புறம் 61)

கடுமான் கிள்ளி

தொகு

கிள்ளி! நீ படையை விலக்கிக்கொண்டு எதிர்நிற்றலின் உன் உடலில் வாள் காயங்கள் பட்ட தழும்புகள் மிகுதி. அதனால் நீ கேட்பதற்கு இனியவன், காண்பதற்கு இன்னாதவன். உன் பகைவர் உன்னிடம் புறங்கொடுத்து ஓடலின் உடலில் காயம் படாதவர்கள். அதனால் அவர்கள் காண்பதற்கு இனியவர், கேட்பதற்கு இன்னாதவர். நீயும் ஒன்று இனியை, அவரும் ஒன்று இனியர். அப்படி இருக்கையில் அவரை விட்டுவிட்டு உன்னை மட்டும் உலகம் போற்றுகிறதே! ஏன்? - என்கிறார் புலவர். (புறம் 167)

பாண் பசிப் பகைஞன்

தொகு

வறுமை தீரக் கொடுக்கும் செல்வமும் அவனிடத்தில் இல்லை. இல்லை என மறுக்கும் சிறுமைக் குணமும் அவனிடத்தில் இல்லை. அவனிடம் சென்றால் அவன் பசியோடிருக்கும் தன் வயிற்றைக் காட்டிவிட்டுத் தன் வேலை வடித்துத் தருமாறு கொல்லனை இரப்பானாம். (புறம் 180)

வியக்கப்படுவோர்

தொகு

குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் (கரிகாலன் அல்லன்) பரிசில் வழங்கக் காலம் நீட்டித்தபோது புலவர் பாடிச்சொல்லும் செய்திகள் இவை.

காற்றைப்போல் செல்லும் குதிரைப்படை, கொடி பறக்கும் தேர்படை, கடல் போல் மறவர்படை, மலையோடு மோதும் களிற்றுப்படை, இடிபோல் முழங்கும் முரசு, இவற்றைக்கொண்டு குவித்த வெற்றிகள் - இப்படிப்பட்ட வெண்குடைச் செல்வம் உடைய வேந்தரைக் கண்டு நான் வியப்பது இல்லை.

தன் வேலியில் படர்ந்த முஞ்ஞைக் கொடியை ஆட்டுக்குட்டி மேய்ந்த பின் அதில் துளிர்க்கும் கீரைக் கடைசலும் வரகஞ்சோறும் உண்பவராயினும் என் பெருமையை உணர்ந்து என்னை நாடும் நல்லறிவுடையோரின் நல்குரவை எண்ணி வியக்கிறேன். மிகப் பெருஞ்செல்வம் உடையவராயினும் உணரச்சி இல்லோர் உடைமையை நினைத்தும் பார்ப்பதில்லை - என்கிறார் புலவர். (புறம் 187)

துன்னரும் பரிசில்

தொகு

சோழிய ஏனாதி திருக்குட்டுவனின் தந்தை இப்பாடலில் இவனது 'இயல்தேர்த் தந்தை' என்று சுட்டப்படுகிறான். இந்தத் திருக்குட்டுவன் வெண்குடை என்னும் நாட்டின் தலைவன். புலவர் இவனது தந்தையின் வஞ்சி நகர்ப் பெருமையைப் பாடினார். அதனைக் கேட்ட திருக்குட்டுவனுக்குப் பெருமகிழ்ச்சி. தன் களிறு ஒன்றைப் புலவருக்குப் பரிசாக நல்கினான். அது போரில் பகைவர்களைக் குத்திய கோட்டுடன் சினம் தணியாத நிலையில் இருந்தது. அதனைக் கண்டு அஞ்சிய புலவர் அதனைப் பெற்றுக்கொள்ளாமல் விலகினார். திருக்குட்டுவன் புலவர் விலகியதை வேறு வகையாக எண்ணிக்கொண்டான். பரிசில் போதவில்லை என்று விலகுவதாக எடுத்துக்கொண்டான். எனவே இன்னுமொரு களிற்றை நல்கினான். அதுமுதற்கொண்டு புலவர் குடும்பம் வறுமையில் பெருந்துன்பம் உற்றாலும் இப்படிப்பட்ட பரிசில் தருவான் என்று திருக்குட்டுவனிடம் பரிசில் வேண்டுவதில்லையாம். (புறம் 394)

வெளி இணைப்புகள்

தொகு
  1. கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடல் 54
  2. கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடல் 61