கோப்பாய் வீரபத்திரர் கோயில்

(கோப்பாய் வீரபத்திர சுவாமி ஆலயம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கோப்பாய் வீரபத்திர சுவாமி ஆலயம் (Kopay Veerapatra Swamy Temple) தென் கோவை என ஈழத்துப் புலவர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட, இலங்கை, யாழ்ப்பாணம், கோப்பாய் தெற்கில் அமைந்துள்ளது. சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கோப்பாய் பழைய வீதியிலிருந்து இருபாலை செல்லும் தெருவில் ஆலயம் அமைந்துள்ளது.

கோப்பாய் வீரபத்திரர் கோயில்
பெயர்
பெயர்:கோப்பாய் வீரபத்திர சுவாமி ஆலயம்
அமைவிடம்
அமைவு:கோப்பாய், யாழ்ப்பாணம்
ஆள்கூறுகள்:9.702374N 80.065541E
கோயில் தகவல்கள்
மூலவர்:வீரபத்திரர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:ஆகமம்

ஆதி வரலாறு

தொகு

தெரிந்த வரலாற்றின் படி, 1820 ஆம் ஆண்டளவில் சிவசுவாமி ஐயர் என்பவர் இந்த ஆலயத்தின் நிறுவன குருவாக இருந்தார். "ஒற்றைப் பனையோலை" என அழைக்கப்பட்ட காணியில் ஒரு சிறு குடிலில் ஆலயம் இருந்தது. வீரபத்திரர் ஆலயம் என அழைக்கப்பட்டாலும் அக்காலத்தில் ஒரு வேல் மட்டுமே பிரதிட்டை செய்யப்பட்டிருந்தது. காணிக்குச் சொந்தக்காரரான ஒரு மூதாட்டி தனக்கு சந்ததி இல்லாத காரணத்தால் அதனை கோயிலுக்கே அன்பளிப்பாக கொடுத்துவிட்டார்.

சிவசுவாமி ஐயரின் பெண்வழிப் பேரனான முத்துக்குமாரசாமி ஐயர் கோயிலை மேம்படுத்தினார். கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம் ஆகியவற்றை கற்களால் கட்டுவித்தார். மகாமண்டபம், எழுந்தருளி சந்நிதி, உள்மண்டபம், வெளிமண்டபம், வசந்த மண்டபம், யாகசாலை, மடைப்பள்ளி, களஞ்சியம் என்பவற்றை கட்டியதுடன் திருமஞ்சனக்கிணறு எடுத்து அதனையும் கற்களால் கட்டுவித்தார். உட்பிரகாரத்தைச் சுற்றி மதிற்சுவரும் அமைக்கப்பட்டது.

இந்தக் கட்டுமானப் பணிகள் நிறைவேறியதும் வீரபத்திர சுவாமி தாமிர விக்கிரகத்தை வார்ப்பித்து மூலவர் சந்நிதியில் பிரதிட்டை செய்தார். அவ்வாறே எழுந்தருளி சுவாமியையும் தாமிரத்தால் செய்து எழுந்தருளி சந்நிதியில் பிரதிட்டை செய்தார். அத்துடன் கோயில் பூசைக்குத் தேவையான தீபங்கள், கலசங்கள் போன்ற உபகரணங்களையும் செய்வித்தார். சுவாமி திருவிழாவின் போது வீதியுலா வர குதிரை வாகனம் ஒன்று செய்து வைத்தார்.

கோயில் அயலில் வசித்த இரத்தினம் - பொன்னம்மா தம்பதியினர் ஒரு அசையாமணி செய்து கொடுத்தனர்.

பிற்கால வரலாறு

தொகு

முத்துக்குமாரசாமி ஐயரின் பேரனான சண்முகநாத குருக்கள் 1954 ஆம் ஆண்டளவில் ஆலயத்தை மேலும் மேம்படுத்தினார். ஆலயம் அமைந்திருந்த காணியை நன்கொடையாகக் கொடுத்த மூதாட்டியின் உறவுமுறைப் பேரனான கந்தையா வைத்தியநாதன் அப்போது திருக்கேதீச்சரம் கோயில் புனருத்தாபன பணியில் ஈடுபட்டிருந்தார். சண்முகநாத குருக்கள் அவரை அணுகி, ஆலய வரலாற்றை அவருக்கு எடுத்துரைத்து, வீரபத்திர சுவாமி ஆலயத்தையும் புனரமைக்க உதவுமாறு கேட்டார். கந்தையா வைத்தியநாதன் சம்மதித்து ஏற்ற ஒழுங்குகள் செய்து கொடுத்தார்.

பாலத்தாபனம் செய்யப்பட்டு கோயில் புனரமைக்கப்பட்டது. உள் மண்டபம் விசாலமாக்கப் பட்டது. வெளிமண்டபம், வசந்த மண்டபத்தையும் உள்ளடக்கக் கூடியதாக விஸ்தரிக்கப்பட்டது. எழுந்தருளி சந்நிதி அம்மன் சந்நிதியாக மாற்றப்பட்டு அச்சந்நிதிக்கும் வெளிமண்டபம் அமைக்கப்பட்டது. பரிவார மூர்த்திகளாக பிள்ளையார், முருகன், சூரியன், பைரவர் சந்நிதிகள் உட்பிரகாரத்தில் கட்டப்பட்டன. இவற்றிற்கான சிலாவிக்கிரகங்கள் தமிழ் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டன. கோபுர வாசலுக்கு கதவு போடப்பட்டது. வசந்த மண்டபம், யாகசாலை, மடைப்பள்ளி, களஞ்சியம் ஆகியவை புதுப்பித்துக் கட்டப்பட்டன. சுற்று மதிட்சுவர் மீள்மைக்கப்பட்டு உயர்த்திக் கட்டப்பட்டது.

கோயில் மேற்கு வீதியில் வசித்த செல்லப்பா என்பவர் காளை வாகனம் ஒன்றும், சகடை ஒன்றும் செய்வித்துக் கொடுத்ததுடன் வாகனசாலையையும் புதுப்பித்தார். அத்துடன் வெளி மண்டப கூரைக்கு ஓடு வேயும் பணியையும் இவரே பொறுப்பேற்று செய்வித்தார்.

இன்னொரு அன்பரான சடாசிவம் (அவரின் பெயர் சதாசிவம், ஆனால் சடாசிவம் என்றே அவரை அழைப்பார்கள்) என்பவர் ஊர் மக்களின் உதவியுடன் ஆட்டுக்கடா வாகனம் ஒன்று செய்து கொடுத்தார்.

கோயில் கர்ப்பக்கிருகத்துக்கு மேல் அமைந்த பண்டிகையில் தமிழ் நாட்டிலிருந்து வந்த சிற்பி ஒருவரால் நான்கு திசைகளிலும் சிற்பங்கள் அமைக்கப்பட்டன.

புனருத்தாபன வேலைகள் முடிவடைந்து 1955 ஆம் ஆண்டு தை மாதம் கும்பாபிசேகம் நடைபெற்றது. அச்சுவேலி குமாரசுவாமி குருக்கள் தலைமையில் உடுவில் அம்மன் கோவில் சிவகடாட்ச குருக்கள் மற்றும் கோப்பாய் வெள்ளெருவைப் பிள்ளையார் கோவில் நிறுவனகுரு சச்சிதானந்தேசுவரக் குருக்கள் ஆகியோருடன் சண்முகநாதக் குருக்களும் சேர்ந்து கும்பாபிசேகத்தை நடாத்தினர்.

இப்போது முத்துக்குமாரசாமி ஐயரின் பெண் வழி கொள்ளுப்பேரனான பிரம்மஸ்ரீ சோ. இ. பிரணதார்த்திகரக் குருக்கள் (ஹரன் குருக்கள்) இவ்வாலயத்தின் பிரதம குருவாக உள்ளார்.[1]

கோவில் விழாக்கள்

தொகு

இக் கோயிலின் மகோற்சவம் ஆனி உத்தரத்தை தீர்த்த நாளாகக் கொண்டு பத்து நாட்களுக்கு நடைபெறுகின்றது. இக் கோயிலுக்கென ஒரு புதிய சித்திர தேர் 2007ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. மதுரம் கல்வி நிறுவனத்தின் ஆண்டு விழாவும்,“தேமதுரம்” மலர் வெளியீடும்!
  2. "கோப்பாய் வீரபத்திர சுவாமி ஆலயம்". Archived from the original on 2014-04-27. பார்க்கப்பட்ட நாள் 2013-11-12.

வெளி இணைப்புகள்

தொகு