கோளவுயிரி
கோளவுயிரி அல்லது கோளவுரு பாக்டீரியா அல்லது கொக்கசு (Coccus) எனப்படுவது கோள வடிவான உருவம் கொண்ட பாக்டீரியா ஆகும். பாக்டீரியாக்கள் உருவவியல் அடிப்படையில், மூன்று வகையாகப் பிரிக்கப்படும்போது, அவற்றில் ஒரு வகையாக இந்தக் கோளவுயிரி என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. ஏனைய இரு வகைகளும் கோலுயிரி, சுருளியுயிரி என்பனவாகும்.
எல்லா பாக்டீரியாக்களையும் போலவே ஒவ்வொரு தனித்த கோள வடிவான பாக்டீரியாவும் ஒரு தனித்த உயிரினமாகும். ஆனாலும் பல சமயங்களில் அவை ஒன்றாக இணைந்து கூட்டாகக் காணப்படும். அவை இணைந்திருக்கும் விதத்தைப் பொறுத்து, அவற்றிற்கு வெவ்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றது[1]. இரு கோளவடிவ பாக்டீரியாக்கள் இணைந்திருக்கையில் இருகூற்றுத் தொகுதி (டைப்ளோகொக்கசு - Diplococcus) என அழைக்கப்படும். இந்த வகையான பாக்டீரியாக்கள் வெவ்வேறு பேரினங்களில் காணப்படுகின்றது. நான்கு இணைந்திருக்கையில், அது நால்கூற்றுத் தொகுதி (டெட்ராட் - Tetrad ) என அழைக்கப்படும். சிலசமயம் எட்டு கோளவடிவான பாக்டீரியாக்கள் இணைந்து ஒரு கனசதுர வடிவில் காணப்படும். இது சார்சினா(Sarcina) என்று அழைக்கப்படும் பேரினத்தைச் சேர்ந்தவையாக இருக்கின்றன. ஸ்டிரெப்டோகோக்கசு(Streptococcus) என்றழைக்கப்படும் பேரினத்தைச் சேர்ந்தவை மணிமாலை போன்று சங்கிலி வடிவில் அமைந்திருக்கும். ஸ்டபைலோகோக்கசு(Staphylococcus) எனும் பேரினத்தைச் சேர்ந்தவை திராட்சைக் கொத்துப் போன்ற வடிவில் பல கோளவுரு பாக்டீரியாக்கள் இணைந்த தோற்றத்தைக் கொண்டிருக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Councilman, William Thomas. Disease and Its Causes. Project Gutenberg. பார்க்கப்பட்ட நாள் 27 March 2010.