சகாப்தம் (இதழ்)

1977 இல் தமிழ்நாட்டில் இருந்து வெளியான சிற்றிதழ்

சகாப்தம் (பின்னர் மக்கள் சகாப்தம் என பெயர் மாற்றப்பட்டது) என்பது 1970 களில் வெளியான முற்போக்கு தமிழ் சிற்றிதழ் ஆகும். இது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டில் இருந்து மாதம் ஒருமுறை வெளிவந்தது. இது முதலில் இலவச இலக்கிய வெளியீடாக வெளியானது.

வரலாறு தொகு

சகாப்தம் இலக்கியப் பத்திரிகையான கணையாழியின் வடிவத்தில் 24 பக்கங்களோடு வெளிவந்தது. இதன் முதல் இதழ் 1977 செப்டம்பரில் வெளியானது. அச்சிட்டு வெளியிடுபவர் க. பாலசுப்பிரமணியன் என்று திருச்சி முகவரி அச்சிடப்பட்டிருந்த போதிலும், அனைத்து தொடர்புகளுக்கும் கலாமணி என்ற எழுத்தாளரின் சென்னை முகவரிதான் கொடுக்கப்பட்டது.

6ஆவது இதழ் முதல் இது 'மக்கள் சகாப்தம்' என்று பெயர் மாற்றம் பெற்று, 50 காசு விலையில், விற்பனைக்குரிய ஒரு பத்திரிகையாக வெளிவரத் தொடங்கியது. இதில் பெயர்பெற்ற எழுத்தாளர்கள் சிலரும், திறமையை நிரூபிக்க முயன்றுகொண்டிருந்த இளம் எழுத்தாளர்கள் பலரும் எழுதினார்கள். இதன் 10ஆவது இதழ் கவிதைச் சிறப்பிதழாகத் தயாராயிற்று.

சகாப்தம் இதழில் அவ்வப்போது புத்தக விமர்சனம், திரைப்பட விமர்சனம், இலக்கிய நிகழ்ச்சிகள் பற்றிய கருத்துகள் போன்றவற்றையும் வெளியிட்டது.

முதல் ஆண்டில் பத்து இதழ்களைக் கொண்டு வந்த சகாப்தம், இரண்டாம் ஆண்டின் முதலாவது இதழை 1978 ஏப்ரல் மாதம் வெளியிட்டபோது, அந்த ஆண்டில் மேலும் 4 இதழ்கள் மட்டுமே வெளியாகும் என்று மாதக் கணக்கிட்டு அறிவித்தது. ஆனால் அந்தத் திட்டம்கூட நிறைவேறவில்லை.[1]

குறிப்புகள் தொகு

  1. வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 168–174. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகாப்தம்_(இதழ்)&oldid=3380354" இலிருந்து மீள்விக்கப்பட்டது