சங்ககாலப் போர்முறை
தமிழர்களின் போர்முறை பற்றித் தொல்காப்பியம் புறத்திணையியல் பகுதி விளக்குகிறது. இதில் காட்டப்பட்டுள்ள செய்திகளை ஒருவகையில் மாற்றம் செய்து புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூல் விளக்கம் தருகிறது. புறப்பொருள் வெண்பாமாலை காட்டும் துறைகளில் பலவற்றுக்குப் பண்டைய இலக்கியங்களில் மேற்கோள் இல்லாமையால் அந்த நூலை இயற்றிய ஆசிரியர் தாம் வகுத்துக் காட்டும் துறைகளுக்குத் தாமே எடுத்துக்காட்டுப் பாடல்களையும் இயற்றி இணைத்துள்ளார். பொதுநோக்கில் பார்த்தால் இரண்டு நூல்களுமே இலக்கண நூல்கள்.
சங்க இலக்கியங்களில் காணப்படும் போர்முறைகள் அக்காலப் புலவர்களால் காட்டப்பட்டவை. இவையே நிகழ்ந்தவற்றைக் கூறும் வரலாறுகள்.
போர் எச்சரிக்கை
தொகுபோர் தொடங்குவதற்கு முன்னர் போரைப் பற்றி அறிவித்து, கொல்லக்கூடாத உயிரினங்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுமாறு எச்சரிக்கை விடப்பட்டது. இது போரின் அறத்தாறு எனக் குறிப்பிடப்படுகிறது – பசு, பசு போன்ற இயல்புடைய பார்ப்பனர், பெண்டிர், மரபுநோய் உள்ளவர், இறந்த முன்னோருக்குக் கடன் செலுத்தும் குழந்தைப்பேறு இல்லாதவர் ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள். இங்கே என் அம்பு பாயும் போர் நிகழவிருக்கிறது – என்று அறவழி கூறியபின் போரிடும் பாங்குடையவன் அரசன் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. புலவர் நெட்டிமையார் இந்தப் பாங்கைக் குறிப்பிடுகிறார்.[1]
சமாதான அறிவிப்பு
தொகுகோட்டையை முற்றுகையிட்டிருப்பவர்களுக்கு அறம் உணர்த்தும் வகையில் கோட்டைக்குள் இருப்போர் கரும்பு அம்பு எய்து காட்டுவர்.[2] சோழன் நலங்கிள்ளி இந்த நெறியைக் கடைப்பிடித்ததாக உறையூர்ப் புலவர் முதுகண்ணன் சாத்தனார் குறிப்பிடுகிறார்.
சமாதானப் பணி
தொகு- சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் ஐவர் படையும் நூற்றுவர் படையும் போரிட்டுக்கொண்டிருந்த காலத்தில் இருதிறப் படையினருக்கும் பாகுபாடு இல்லாமல் பெருஞ்சோறு (அரசுவிருந்து) வழங்கிப் போற்றினான்.[3]
போரைத் தடுத்தல்
தொகு- தலையாலங்கானப் போரில் வென்ற பின் தோற்ற மன்னர்களைக் கொல்ல வேண்டாம் என்று புலவர் கல்லாடனார் அரசன் நெடுஞ்செழியனுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்.[4] வளமான நாடு உனக்கு இருக்கும்பொது, உன் நாட்டு மக்கள் அவர்களுக்கு விருந்தளித்துக்கொண்டிருக்கும் நாட்டின்மீது போர் தொடுக்கலாமா என்று அவனை இடைக்காடனார் வினவுகிறார்.[5]
- உன்னைப் பாடும் பாணர்கள் நீ வழங்கும் பொற்றாமரை விருது அணிகலனைத் தலையில் சூடிக்கொள்கின்றனர். புலவர்கள் நீ வழங்கும் யானைமீதும் தேர்மீதும் ஏறிச் செல்கின்றனர். வெற்றியைக் குவிக்கும் ‘குடுமி’ வேந்தே! பிறர் மண்ணைக் கைப்பற்றும் கொடுமையைச் செய்து அங்குக் கிடைத்த பொருள்களைக் கொண்டு நீ விரும்புபவர்களுக்கு மட்டும் இன்பம் தரும் செயல்களைச் செய்தல் அறச்செயலோ எனப் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் வினவுகிறார் [6]
- நீர் வளம் மிக்க காவிர் நாடு போதாதா, பகைவர் நாட்டு அழுகுரலைக் கேட்க வேண்டுமா என்று கரிகாலனைப் கருங்குழலாதனார் வினவுகிறார்.[7]
நாணத்தக்க போர்
தொகு- அரசன் கிள்ளிவளவன் கருவூரை முற்றுகை இட்டிருந்தான். கருவூர் அரசன் தன் கோட்டைக் கதவுகளை அடைத்துக்கொண்டு உள்ளேயே இருந்தான். எதிர்க்காதவன் ஊரை முற்றுகை இட்டுக்கொண்டே இருத்தல் நாணத்தக்க செயல் என்று கூறுகிறார் புலவர் கோவூர் கிழார்.[8]
நகைப்புக்கு இடமளிக்கும் போர்
தொகு- நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகிய இரு சோழ அரசர்கள் தமக்குள் போரிட்டுக்கொள்வது பிற வேந்தரின் நகைப்புக்கு இடம் தரும் போர் என்று கோவூர் கிழார் குறிப்பிடுகிறார்.[9]
போரில்லா நாட்டின் பொலிவு
தொகுமக்கள் மகிழ்ச்சி
தொகு- தொங்கும் கை, பெருமித நடை, ஒலிக்கும் மணி, மேலே வளைந்து உயர்ந்திருக்கும் கொம்பு, பிறை போன்ற நெற்றி, சினம் கொண்ட பார்வை, விரிந்த காலடி, பருத்த கழுத்து, தேன் சிந்தும் மலை போல வண்டு மொய்க்க ஒழுகும் மதநீர், இரும்பைப் போன்ற தலை, வலிமை – ஆகியவற்றைக் கொண்ட உன் வாலிபக் களிறு அதன் நிலைகளத்தில் கட்டிக் கிடக்கிறது. *பால் ஒழுகும் நிலா போன்று மாலை தொங்கும் உன் வெண்கொற்றக் குடை காப்பு இல்லாமல் அதன் நிழலில் காப்போர் உறங்குகின்றனர்.
- நெல்லோடு வேயப்பட்ட நெல்லந்தாள் கூரை வீடும், கருப்பஞ்சருகு வேய்ந்த கூரை வீடுகளும் தனித்தனியே விழாக் கொண்டாடப்பட்ட களம் போலப் பொலிவுடன் காட்சி தருகின்றன. உலக்கையால் குற்றும் பாடல் ஒலி கேட்கிறது.
- போர் இல்லாததால் சினம் கொண்ட மக்கள் தும்பைப் பூவையும் பனம்பூவையும் சூடிக்கொண்டு குரவை ஆடி மகிழும் ஒலி கடலொலி போல முழங்கிக்கொண்டே இருக்கிறது.
- நீயோ வாயில் காப்பு இல்லாத பாசறையில் இருக்கிறாய். அங்கு வேந்தர்கள் உனக்குத் தந்த திறைப் பொருள்களை உன் அரசுச் சுற்றத்தாருக்கு வழங்கி மகிழ்கிறாய்.
- கொல்லிமலை நாட்டை வென்ற பின்னர் உனக்கு இந்த நிலை [10]
கவலையற்ற மக்கள்
தொகு- உன் ஆட்சிக்குடை நிழலில் வாழ்பவர்கள் உன் அறிவு, இரக்கம், உதவும் எண்ணம் (கண்ணோட்டம்) ஆகியவற்றை அறிவர்.
- அவர்களுக்குச் சோறாக்கும் தீ, வெயில் ஆகியவற்றின் சூடு அல்லது வேறு சூடு தெரியாது. (பகைவர் ஊரைக் கொளுத்துதல் இல்லை)
- வானவில் அல்லது (பகைவரின்) கொலைவில் தெரியாது.
- நிலத்தை உழும் கலப்பைப்படை அல்லது (பகைவர் தாக்கும்) கருவிப்படை தெரியாது.
- உன்னை எதிர்க்கும் படைத்திறம் அறிந்த வல்லாளரும், பகைவரும் தேயப் படைவர் மண்ணை நீ உண்டாய். ஆனால் உன் மண்ணைக் கருவுற்ற பெண்கள் உண்பதைத் தவிர வேறு யாரும் உண்டு அறியார்.
- உன் கோட்டையில் அம்புகள் வேலை இல்லாமல் தூங்குகின்றன.
- நாட்டில் செங்கோல் அறம் தூங்குகிறது.
- உன் நாட்டுக்குள் புதிய பறவைகள் வந்தாலும், பழைய பறவைகள் போனாலும் மக்கள் விறுவிறுப்பு காட்டாமல் பாதுகாப்பாக வாழ்கின்றனர்.
- இப்படியே நீ ஆட்சி புரிவாயாக![11]
போர்க் கொடுமைகள்
தொகுபோர்க்கள வேள்வி
தொகு- காற்றடித்துக் கடலில் செல்லும் பாய்மரக் கப்பல் போல களிறு சென்று போர்களத்தில் உள்ளவர்களை அகற்றிய இடத்தில் இலை போன்ற வேலை ஏந்திக்கொண்டு சென்று போரிட்டு அரசர்களை மிதித்து அவர்களது கொற்ற-முரசுகளைப் பிடுங்கி அவற்றைச் சோறாக்கும் பாத்திரமாகவும் அவர்களது முடி சூடிய தலைகளை அடுப்புக்கல்லாகவும் அவர்களது குருதியை உலைநீராகவும் அவர்களது தொடியணிந்த தோல்களை அகப்பையாகவும் கொண்டு போர்க்களச் சமையல் செய்தவன் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என அவனது தமிழ்சங்கத் தலைமைப் புலவர் மாங்குடி மருதனார் குறிப்பிடுகிறார்.[12]
- செயல்திறம் மிக்க குதிரைப்படை, மழைமேகம் போன்ற காலால்-படை ஆகியவை முறியும்படி போரிட்டான். அவர்களது விளைவயல்களில் தம் குதிரைகளை மேயவிட்டான். அவர்களது வீட்டு-மரங்களை எரிக்கும் விறகாக்கிக்கொண்டான். காவல் மிக்க அவர்களது நீர்த் துறைகளில் களிறுகளைக் குளிக்கும்படிச் செய்தான்.[13]
பகை நாட்டை அழித்தல்
தொகு- கொட்டகையில் (வெளிறு இல்லில்) கட்டப்பட்டிருப்பதை வெறுத்த யானை கலக்கிய நீர்த்துறை. நெடுஞ்செழியனின் படை கடம்பு சூடிப் போரிட்ட முருகனின் கூளியர் படை போல பகைநாட்டில் வேண்டிய அளவு உண்டது போக வீசி எறிந்திருக்கும் நிலம். படை கோடாரியால் வெட்டிச் சாய்த்த காட்டரண், படை எரி ஊட்டிய நகர்ப் பகுதி, இவற்றையெல்லாம் அந்த நாட்டு அரசர்கள் பார்த்து நாணி, நம்மால் நெருங்க முடியாத அந்தத் துணிவாளன் உலகம் நெளியக்கூடிய பெருபடையை நடத்தி இன்னும் வந்து இன்னது செய்வான் என நடுங்கும் நாட்டைக் கண்டு வந்தேன். ஆண்மான் புலிவாயில் பட்டதை எண்ணிப் பெண்மான் பூளாப் பூ நிறைந்த காட்டில் வேளைச் செடியின் வெள்ளைப் பூக்களைக் கறிக்கும் நாடாக இப்போது அவர்களின் நாடு உள்ளது. இது தலையாலங்கானப் போரின் விளைவு.[14]
- வெற்றி கண்ட உன் வாள் செவ்வானம் போலக் கறை பட்டுக் கிடக்கிறது. களம் கொண்ட உன் தாளிலுள்ள வீரக் கழல் கொல்லும் களிற்றின் தந்தம் போன்றன. மார்புக் கவசமாகிய தோல் அம்பால் துளைக்கப்பட்டு நிலையில்லாமல் மின்னும் விண்மீன் கொண்ட வானம் போன்றது. குதிரையின் வாய் கடிவாளம் சுண்டியதால் காளைமாட்டைக் கடித்த புலியின் வாயைப் போன்றன. யானையின் கொம்பு பகைவர் கோட்டைக் கதவைக் குத்தி நுனி மழுங்கி உயிர் உண்ணும் எமனைப் போன்று ஆயிற்று. நீ குதிரைகள் பூட்டிய தேரில் கடலில் தோன்றும் கதிரவனைப் போலக் காட்சி தருகிறாய். அரசன் இளஞ்சேட் சென்னியின் போர் இவ்வாறு இருந்ததாகப் பரணர் குறிப்பிடுகிறார்.[15]
- மலையமானை வென்ற சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானை மிதித்துக் கொல்ல செய்கையில் புலவர் கோவூர் கிழார் தடுத்து நிறுத்தி மக்களைக் காப்பாற்றினார்.[16]
அறத்தின் மண்டல்
தொகு- படையோடு படை மோதி அழிந்த பின்னர் இரு அரசர்களும் தனித்து மோதிக்கொள்ளும் போருக்கு அறத்தின் மண்டல் என்று பெயர். குடக்கோ நெடுஞ்சேரலாதன், பெருவிறற்கிள்ளி ஆகிய இரு அரசர்களும் இவ்வாறு அறத்தின் மண்டிப் போரிட்டுப் போர்க்களத்திலேயே மாண்டனர்.[17]
சில குறிப்புகள்
தொகு- வென்ற அரசன் சூடியிருந்த முடியின் பொன்னால் வென்ற மன்னன் தன் காலில் அணியும் வீரக்கழல் செய்துகொள்வான்.[18]
- போர் நடந்த இடத்தில் குருதி ஈரத்தில் கழுதை ஏர் பூட்டி உழுது வரகும் கொள்ளும் அரசன் அதியமான் விதைத்தான்.[19]
- ஊர் மன்றத்திலும் போர் நிகழ்ந்தது. போருக்குப் பின்னர் அந்த இடம் கழுதை மேயும் இடமாக மாறியது.[20]
- தேரோடிய தெருக்களை அழித்த அரசன் அங்குக் கழுதைகளை வரிசையாகக் கட்டிவைத்தான்.[21]
- தீ இட்டுக் கொளுத்திய இடங்களில் ஆண்டலைப் பறவைகள் (கழுகு இனம்) மேய்ந்தன.[22]
- கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் மோகூர் அரசனின் முரசைக் கைப்பற்றித் தனதாக்கிக் கொண்டதோடு, அவன் காவல்மரமான வேம்பை வெட்டி, அப்போரில் இறந்தவர்களின் மனைவிமார் கணவனை இழந்ததால் களைந்த கூந்தலைத் திரட்டிக் கயிறாக்கி, அந்தக் கயிற்றில் வெட்டிய மரத்துண்டைக் கட்டித் தன் யானைகளைக் கொண்டு இழுத்துவரச் செய்து புதிய முரசு ஒன்றும் தனக்குச் செய்துகொண்டான்.[23]
மேற்கோள் குறிப்பு
தொகு- ↑
'ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடையீரும், பேணித்
தென் புல வாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும்
பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும்,
எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின்' என,
அறத்து ஆறு நுவலும் பூட்கை - புறநானூறு 9 - ↑ :நீயே,
- புறஞ்சிறை மாக்கட்கு அறம் குறித்து, அகத்தோர்
- புய்த்து எறி கரும்பின் விடு கழை தாமரைப்
- பூம் போது சிதைய வீழ்ந்தென,- புறநானூறு 28
- ↑ :வான வரம்பனை! நீயோ, பெரும!
- அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ,
- நிலம் தலைக்கொண்ட பொலம் பூந் தும்பை
- ஈர் ஐம்பதின்மரும் பொருது, களத்து ஒழிய,
- பெருஞ் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய்! -புறநானூறு 2
- ↑
பிணியுறு முரசம் கொண்ட காலை,
நிலை திரிபு எறிய, திண் மடை கலங்கிச்
சிதைதல் உய்ந்தன்றோ, நின் வேல் செழிய!
முலை பொலி ஆகம் உருப்ப நூறி,
மெய்ம் மறந்து பட்ட வரையாப் பூசல்
ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர,
அவிர் அறல் கடுக்கும் அம் மென்
குவை இருங் கூந்தல் கொய்தல் கண்டே.- புறநானூறு 25 - ↑ புறநானூறு 42
- ↑ புறநானூறு 12
- ↑ புறநானூறு 7
- ↑ :கடி மரம் தடியும் ஓசை தன் ஊர்
- நெடு மதில் வரைப்பின் கடி மனை இயம்ப, 10
- ஆங்கு இனிது இருந்த வேந்தனொடு, ஈங்கு, நின்
- சிலைத் தார் முரசம் கறங்க,
- மலைத்தனை என்பது நாணுத் தகவு உடைத்தே.
- திணை வஞ்சி; துறை துணைவஞ்சி.
- ↑ புறநானூறு 45
- ↑ சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைக் குறுங் கோழியூர் கிழார் பாடியது. புறநானூறு 22
- ↑ சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைக் குறுங் கோழியூர் கிழார் பாடியது. புறநானூறு 20
- ↑
நளி கடல் இருங் குட்டத்து
வளி புடைத்த கலம் போல,
களிறு சென்று களன் அகற்றவும்,
களன் அகற்றிய வியல் ஆங்கண்
ஒளிறு இலைய எஃகு ஏந்தி,
அரைசு பட அமர் உழக்கி,
உரை செல முரசு வௌவி,
முடித் தலை அடுப்பு ஆக,
புனல் குருதி உலைக் கொளீஇ
தொடித் தோள் துடுப்பின் துழந்த வல்சியின்,
அடுகளம் வேட்ட அடு போர்ச் செழிய! - புறநானூறு 26 - ↑ சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப் பாண்டரங்கண்ணனார் பாடியது. புறநானூறு 16
- ↑
கல்லாடனார் பாடல்
'வெளிறு இல் நோன் காழ்ப் பணை நிலை முனைஇ,
களிறு படிந்து உண்டென, கலங்கிய துறையும்;
கார் நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல்,
சூர் நவை, முருகன் சுற்றத்து அன்ன, நின்
கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர்
கொள்வது கொண்டு, கொள்ளா மிச்சில்
கொள் பதம் ஒழிய வீசிய புலனும்;
வடி நவில் நவியம் பாய்தலின், ஊர்தொறும்
கடி மரம் துளங்கிய காவும்; நெடு நகர்
வினை புனை நல் இல் வெவ் எரி நைப்ப,
கனை எரி உரறிய மருங்கும்; நோக்கி,
நண்ணார் நாண, நாள்தொறும் தலைச் சென்று,
இன்னும் இன்ன பல செய்குவன், யாவரும்
துன்னல் போகிய துணிவினோன்' என,
ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை
ஆலங்கானத்து அமர் கடந்து அட்ட
கால முன்ப! - புறநானூறு 23 - ↑ சோழன் உருவப் பல் தேர் இளஞ் சேட்சென்னியைப் பரணர் பாடியது. புறநானூறு 4
- ↑ புறநானூறு 46
- ↑ பருந்து அருந்துற்ற தானையொடு, செரு முனிந்து,
அறத்தின் மண்டிய மறப் போர் வேந்தர்
தாம் மாய்ந்தனரே; குடை துளங்கினவே;
உரைசால் சிறப்பின் முரைசு ஒழிந்தனவே; (புறநானூறு 62)
திணை தும்பை; துறை தொகை நிலை.
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும், சோழன் வேற் பல் தடக்கைப் பெருவிறற்கிள்ளியும், போர்ப்புறத்துப் பொருது வீழ்ந்தாரைக் கழாத்தலையார் பாடியது. - ↑
நீயே, பிறர் ஓம்புறு மற மன் எயில்
ஓம்பாது கடந்து அட்டு, அவர்
முடி புனைந்த பசும் பொன் நின்
அடி பொலியக் கழல் தைஇய
வல்லாளனை; வய வேந்தே! -புறநானூறு 40 - ↑ :நிணம் படு குருதிப் பெரும் பாட்டு ஈரத்து
- அணங்குடை மரபின் இருங் களந்தோறும்,
- வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி,
- வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும்
- வைகல் உழவ! - புறநானூறு 392
- ↑ நின் படைஞர், சேர்ந்த மன்றம் கழுதை போகி, - பதிற்றுப்பத்து 25
- ↑ கடுந் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண், வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி, பாழ் செய்தனை - புறநானூறு 15
- ↑ அழல் ஆடிய மருங்கின், ஆண்டலை வழங்கும் -பதிற்றுப்பத்து 25
- ↑ :மோகூர் மன்னன் முரசம் கொண்டு,
- நெடுமொழி பணித்து, அவன் வேம்பு முதல் தடிந்து, 15
- முரசு செய முரச்சி, களிறு பல பூட்டி,
- ஒழுகை உய்த்தோய்! - பதிற்றுப்பத்து 44